World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

G8 calls for peace talks to provide cover for US war preparations against Syria

G8 உச்சிமாநாடு சிரியாவிற்கு எதிரான அமெரிக்க போர்த் தயாரிப்புகளுக்கு மறைப்பளித்து சமாதானப் பேச்சுக்களுக்கு அழைப்புவிடுகிறது

By Chris Marsden
19 June 2013

Back to screen version

பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் காமரோன் சிரியாவிற்காக வரைந்த 5-அம்சத் திட்டம் சக்தியில்லாத ஒரு கடிகாரத்தைப் போல் முடிவடைந்தது. 

G8 இன் 39வது உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டீன், ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், ஜப்பானியப் பிரதம மந்திரி ஷின்சோ ஏப், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், இத்தாலிய பிரதம மந்திரி என்ரிகோ லெட்டா, கனேடிய பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்ப்பர், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஹெர்மன் வான் ரொம்பி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் ஜோஸ் மானுவல் பரோசோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் இரத்தம் சிந்தும் உள்நாட்டுப் போருக்கு பேச்சுக்கள் மூலம் முடிவுகாண முன்னிபந்தனையாக சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத் அகற்றப்பட வேண்டும் என்பதில் கையெழுத்திட புட்டீன் மீது மிக அதிக அழுத்தத்தை கொடுக்க காமெரோன் இரண்டு நாட்கள் முற்பட்டார். இது சிரிய ஆட்சியால் நிராகரிக்கப்படும், பின்னர் அது ஜெனீவா உச்சிமாநாட்டை புறக்கணிக்க வழிவகுக்கும்; அதையொட்டி முழு அளவு இராணுவத் தலையீட்டிற்குப் போலிக் காரணம் கிடைக்கும்.

இத்தீர்மானத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுதல் கண்டிக்கப்படுதலும் அடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது; இதில் சிரியப் படைகள் அவ்வாறு செய்தன என்னும் நிரூபிக்கப்படாத வலியுறுத்தல்களும் உள்ளன. ஒபாமா நிர்வாகம் “பெரிய பொய்”உத்தியைப் பயன்படுத்தி, அத்தகைய ஆயுதங்களை சிரியா பயன்படுத்தியது என்பதை மேற்கோளிட்டு அசாத் “சிவப்புக் கோட்டைக்” கடந்துவிட்டார் எனக் கூறவும், வாஷிங்டன் வெளிப்படையாக சிரிய எதிர்த்தரப்பிற்கு ஆயுதங்களை கொடுக்கும் முடிவை நியாயப்படுத்தியுள்ளது.

இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற கூற்றை ரஷ்யா நிராகரித்து, அமெரிக்கா எந்த அடிப்படையில் அதன் குற்றச்சாட்டுக்களைக் கொண்டுள்ளது என்பதற்கான சான்றுகளையும் கோரியுள்ளது. மற்றொரு திட்டமிடப்பட்ட கருத்து அல் கெய்டா தொடர்புடைய கூறுபாடுகள், சிரியாவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதை எதிர்ப்பதாகும்; இது எதிர்த்தரப்பில் இஸ்லாமியவாத ஜிஹாதிஸ்ட் படைகளின் ஆதிக்கம் இருக்கிறது என்னும் கவலை குறித்து விவாதிக்கவும் உதவும்.

இதைத்தவிர இத்திட்டம் “முதலாவது நாள் திட்டம்” என்று புதிய அரசாங்கம் நிர்வாக அதிகாரத்துடன் இடைக்காலத்திற்கு செயல்படுதவதற்காக முன்வைக்கப்பட்டது.

இக்கோரிக்கைகளுக்கு புட்டீன் உடன்பட மறுத்தது, காமெரோன் மற்றும் ஒபாமா இயற்றிய திட்டத்தை ஏமாற்றத்திற்கு உட்படுத்தியது. ஆனால் இப்பொழுது போருக்காக நடக்கும் தயாரிப்புக்களை நிறுத்த உதவாது.

G8 வெளியிட்ட அறிக்கையில் விரைவில் சமாதானப் பேச்சுக்களுக்கு அழைப்பு விடுகிறது; ஆனால் அசாத்தின் விதி பற்றிக் குறிப்பிடவில்லை. விந்தையான அளவில் அது சிரிய அதிகாரிகளையும் எதிர்த்தரப்பையும் அல் கெய்டாவுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புக்களையும் அழிக்க உத்தரவாதம் தருமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

உச்சிமாநாட்டிற்கு முன்னதாக காமெரோன் புட்டீனை 10 ஆம் இலக்க டௌனிங் தெருவில் சந்தித்தார்; அங்கு ரஷ்ய பிரதமர், சிரிய எதிர்த்தரப்பிற்கு ஆயுதமளிக்கும் அமெரிக்க முடிவைக் கண்டித்தார். ஒபாமாவுடனான பேச்சுக்களும் காரசாரமாகத்தான் இருந்தன.

வெள்ளியன்று மாலை, வெள்ளை மாளிகை சிரிய எதிர்த்தரப்பின் தலைமை இராணுவக் குழுவிற்கு ஆயுதங்கள் வழங்க இருப்பதாக அறிவித்தது; அசாத்தின் துருப்புக்கள் நரம்பு மண்டலத்தை தாக்கும் சரினைப் பயன்படுத்தியது குறித்து “அதிக அளவு உறுதி” ஏற்பட்டிருப்பதால் இந்த முடிவு என்றும் கூறியது. வடக்கு அயர்லாந்தில் Lough Erne உச்சிமாநாட்டிற்குச் செல்வதற்கு முன்பு ஒபாமா தொலைக்காட்சிகளுக்கு கொடுத்த பேட்டிகளில் அமெரிக்கா இஸ்லாமியவாத தொடர்புடைய அல் கெய்டா இன்னும் பிறவற்றிற்கு ஆயுதங்களை வழங்க இருக்கும் உண்மையை மறைத்தார்; இது சிரியப் போரில் ஒரு மிருகத்தன குறுங்குழுவாத மோதல்களை நிரந்தரப்படுத்தும்.

ஈராக்குடனான ஒப்புமைகளை, ஒபாமா விளக்கமும் கொடுக்காமல் நிராகரித்தார்; ஆனால் “இதில் உண்மை என்னவென்றால் நமக்கு சிரியாவில் தீவிர நலன்கள் உள்ளன... இஸ்ரேல் எல்லையில் இருக்கும் ஜோர்டான் போன்ற முக்கிய நாட்டிற்கு அருகில் பெரும் குழப்பம் இருக்கும் நிலையை நாம் தொடர விரும்பவில்லை. சட்டநெறியான போருக்கு வாய்ப்பு உள்ளது, ஈடுபாடு கொள்ள வாய்ப்பு உள்ளது” என்று வலியுறுத்தினார்.

ஷியா, சுன்னி மதப் போரில் எந்தப் பக்கத்திற்கும் நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

உண்மையில், அமெரிக்காதான் வேண்டுமென்றே குறுங்குழுவாத உள்நாட்டுப் போரைத் தூண்டுவதற்கு பொறுப்பு கொண்டுள்ளது; இப்பொழுது அது தோற்றுவித்துள்ள இறப்பையும் பெரும் குழப்பத்தையும் போலிக்காரணமாக பயன்படுத்தி இராணுவத் தலையீட்டிற்கு முயல்கிறது.

வெளிப்படையாக மாஸ்கோ மீது குறைகூறிய ஒபாமா, மேலும் கூறினார்: “இக்கட்டத்தில் அசாத், ஓரளவு ஈரான் மற்றும் ரஷ்யாவுடைய ஆதரவு இருப்பதால்—அரசியல் மாற்றத்தில் ஈடுபட வேண்டியதில்லை என நம்புகிறார், பாதிக்கும் மேலான மக்களை வன்முறையில் அடக்கி ஆட்சியில் நீடிக்கலாம் என நம்புகிறார்.”

அமெரிக்க ஜனாதிபதி, அசாத் அதில் இருந்து அகற்றப்படப்போகிறார் என்றால் எதற்காக அரசியல் மாற்றம் குறித்து ஈடுபாடு கொள்ள வேண்டும் என்பதை விளக்கவில்லை.

ஒபாமாவும் புட்டீனும் திங்களன்று ஒரு மணி நேரம் சந்தித்தனர்; இது இந்த ஆண்டு அவர்கள் நேரடியாகச் சந்திப்பது முதல் தடவையாகும். பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தினர். “ஆம், எங்கள் கருத்துக்கள் இயைந்து இருக்கவில்லை” என்றார் புட்டீன், ஒபாமா தானும் புட்டீனும் சிரியா குறித்து “மாறுபட்ட முன்னோக்குகளைக் கொண்டுள்ளதாக” தெரிவித்தார்.

காமெரோன் அன்று மாலையே, அனைவரும் தடையின்றிப் பேச அனுமதிக்கும் வகையில் அரசாங்கத் தலைவர்கள் மட்டும் கலந்து கொண்ட ஒரு தனி இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் சூழலில் ஐயத்திற்கு இடமின்றி அமெரிக்க தேசியப்பாதுகாப்பு நிறுவனத்தின் தகவல் வெளிவிட்ட எட்வார்ட் ஸ்னோவ்டென் பிரித்தானியா முறையாக இத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ளபவர்களை உளவு பார்க்கிறது என வெளிப்படுத்தியிருப்பது அங்கே சூழ்ந்திருந்தது.

காமெரோன், புட்டீன் தன் ஐந்து அம்சத் திட்டத்தில் கையெழுத்திடாவிட்டால் மற்ற G8 இன் ஏழு உறுப்பினர்களும்  தத்தம் அறிக்கையை வெளியிடுவர் என அச்சுறுத்தினார். ஆனால் ரஷ்ய அதிகாரிகள் தெளிவாக உடன்பாடு இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினர்.

துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியப்கோவ் முன்னதாக ரஷ்யா அசாத்தின் தலைவிதி குறித்து அறிக்கையில் எக்குறிப்பையும் ஏற்கத்தயராக இல்லை என்று மறுத்துவிட்டார். “ரஷ்யாவிற்கு இது ஏற்கத்தக்கது அல்ல; ஏனெனில் அது முற்றிலும் தவறு என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் தீமை பயக்கும்; அரசியல் சமநிலையை முற்றிலும் பாதித்துவிடும்” என்றார் அவர்.

வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், குவைத்தில் பேசுகையில், “மாநாடு சிரிய அரசாங்கத்தின் பிரதிநிதி நிபந்தனையற்று பொதுச் சரணடைவதற்கும், அதைத்தொடர்ந்து அதிகாரம் எதிர்தரப்பிற்கு ஒப்படைக்கப்படும் என்னும் கூற்றுக்களுக்கு முற்றிலும் எதிராக நாங்கள் உள்ளோம்” என்றார்.

எந்த அளவிற்கு அழுத்தம் வெடிப்புத் தன்மை கொண்டுள்ளது என்பதற்கு அடையாளமாக, ஹாலண்ட் பகிரங்கமாக, “நாம் எப்படி ரஷ்யா தொடர்ந்து அசாத் ஆட்சிக்கு ஆயுதங்களை வழங்குவதை அனுமதிக்க முடியும், எதிர்த்தரப்பு மிகவும் குறைவாகப் பெறும்போது—கொலை செய்யப்படும்போது” என்று பகிரங்கமாகக் கூறினார்.

செவ்வாயன்று சிரியா பற்றி திட்டமிடப்படாத ஒரு இறுதித் தொடருக்குப்பின், பயங்கரவாதம் பற்றிய விவாதம் என்னும் போலிக் காரணம் கூறப்பட்டு, நீர்த்த இறுதி அறிக்கை வெளியிடப்பட்டது. ரஷ்யாவும் அமெரிக்காவும் இவ்வகையில் அடுத்த மாத ஜெனீவா “சமாதான” மாநாட்டிற்கு முறையாக ஒத்துக்கொண்டன; ஆனால் பெரும்பாலான விமர்சகர்கள் ஆகஸ்ட் வரை அத்தகைய கூட்டத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறிவிட்டனர்.

பிரித்தானிய ஆதாரங்களை மேற்கோளிட்டு கார்டியன் ஆனது புட்டீன் தனிப்பட்ட முறையில் அசாத்திடம் தனக்குச் சொந்த அபிமானம் கிடையாது, அவர் இல்லாமல்  இடைக்கால அரசாங்கத்தை ஏற்கத் தயார் எனக்கூறினார், ஆனால் அதிகார வெற்றிடம் கூடாது, புதிய அரசாங்கத்தில் தற்போதைய ஆட்சி, அற்றும் இராணுவத்தின் நம்பிக்கைக்கு உரிய பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளது. புட்டீன் என்ன கூறியிருந்தாலும், கூறாவிட்டாலும், இது ஒரு தந்திரோபாய முறையில் பாத்திஸ்ட் ஆட்சியைப் பாதுகாக்கும் வேளையில் அசாத்தை அகற்ற சதி செய்வதற்கான அழைப்பு ஆகும்,.

இராஜதந்திர முன்னணியில் அடுத்து என்ன நடந்தாலும், இராணுவ அரங்கில் விடயங்கள் வேகமாகத்தான் நடைபெறும். எத்தகைய ஆயுதங்கள், விவாதங்கள், பிற நடவடிக்கைகள் அசாத்தின் எதிர்த்தரப்பிற்கு ஆதரவாக “சமநிலையை மாற்றும்” என்பது குறித்து வாஷிங்டன் ஈடுபாடு கொள்ளும்.

ஆயுதங்கள் வழங்குவதை ஒபாமா வலிநீக்கும் வகையில் சித்தரிப்பார்—சிறு ஆயுதங்கள், சிரிய இராணுவத்தின் முன்னேற்ற ஆயுதங்களுக்கு “இணையானவை அல்ல” என. அதே நேரம் பிரான்ஸ் சௌதி அரேபியாவுடன இணைந்து “எழுச்சியாளர்களுக்கு” விமான எதிர்ப்பு ஆயுதமான தரையிலிருந்து வானுக்குச் செலுத்தும் மிஸ்ட்ரல் வகுப்பு MANPADS, மற்றும் டாங்கு எதிர்ப்பு ஆயுதங்களை அளிக்கிறது.

இதைத்தவிர ஒபாமா பகிரங்கமாக பறக்கக்கூடாது  பகுதியின் திறன் பற்றியும் விவாதிப்பார்; இப்பொழுது ஒன்று தீவிரத் தயாரிப்பில் உள்ளது.

அமெரிக்கா ஏற்கனவே சிரியாவில் ஒரு பறக்கக்கூடாது பகுதியை நிறுவ ஆய்வு நடத்துகிறது; இது ஜோர்டான் தெற்கு எல்லைக்கு அருகே இருக்கும் என்று, இரு மூத்த மேற்கத்தைய இராஜதந்திரிகள் துருக்கியிலும் மூன்றாவது பிராந்திய இராஜதந்திரியும் கூறியுள்ளனர். சனிக்கிழமையன்று, அமெரிக்க பாதுகாப்பு மந்திரி சக் ஹேகெல் ஜோர்டான் கேட்டிருக்கும் F-16 போர் விமானங்கள் மற்றும் பாட்ரியட் ஏவுகணைகள் இந்த வாரக் கூட்டுப் பயிற்சிக்குப் பின் நாட்டில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் எனக் கேட்டிருப்பதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார். பாட்ரியட் ஏவுகணைகளின் மின்கலங்கள் ஏற்கனவே துருக்கிய எல்லையில் நிலைகொண்டுள்ளன.

தங்கள் பங்கிற்கு காமெரோன், ஹாலண்ட் அரசாங்கங்கள் ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் அமெரிக்காவுடன் வெளிப்படையாக எதிர்த்தரப்பிற்கு ஆயுதம் கொடுப்பதில் சேர்ந்து கொள்ளுமா என தங்களுடைய கலந்துரையாடல்களை தொடங்கும்.

சிரியப் போர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும்பாலான உழைக்கும் மக்களால் எதிர்க்கப்படுகிறது. அமெரிக்கர்களில் 70 சதவிகிதம் பேர்கள் எதிர்த்தரப்பிற்கு ஆயுதம் கொடுப்பதை எதிர்க்கிறனர் என்று Pew Research கூறுகிறது; அதே நேரத்தில் ஐக்கிய இராச்சியத்தில் 17 சதவிகிதம் பேர்தான் அமெரிக்க முன்முயற்சிக்கு ஆதரவு கொடுக்கின்றனர். ஆனால் மூடிய கதவுகளுக்குப் பின் முடிவெடுத்த திட்டங்களின்படி தொடரும்; அதையொட்டி பெரும் சக்திகள் மத்திய கிழக்கில் இருக்கும் எண்ணெய் வளங்களை தங்கள் விருப்பப்படி பிரித்துக்கொள்ளும்.