World Socialist Web Site www.wsws.org |
No to war in Syria! சிரியாவில் போர் வேண்டாம்!Bill Van Auken மேற்கத்திய ஆதரவுடன் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரை நடத்தும் வலதுசாரி இஸ்லாமியவாத கூலிப்படையினருக்கு நேரடியாக ஆயுதம் அளிக்கும் ஒபாமா நிர்வாகத்தின் முடிவை உலக சோசலிச வலைத் தளம் வன்மையாகக் கண்டிக்கிறது. வடக்கு அயர்லாந்தில் நடக்கும் G8 பிரதான வல்லரசுகளின் தலைவர்களின் கூட்டத்தை, சிரியாவை சிதைக்க திட்டமிடும் குற்றவியல் தன்மை கொண்ட போர் வெறியர்களின் கூட்டம் என நாம் கண்டிக்கிறோம். லிபியாவைப்போல், அதற்கும் முன் ஈராக், ஆப்கானிஸ்தான் போல், சிரியத் தலையீடும் முன்னாள் காலனித்துவ நாட்டை ஏகாதிபத்தியத்தின் மூலோபாய, இலாப நலன்களுக்காக அடிமைப்படுத்தும் வன்முறை நிறைந்த கொள்ளையிடும் போராகும். ஒபாமாவின் வெள்ளை மாளிகை மற்றும் பெருநிறுவனச் செய்தி ஊடகங்களின் தங்குதடையற்ற பொய்களான, சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் அரசாங்கம் உள்நாட்டுப் போரில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது எனக் கூறுவது எவரையும் நம்பவைக்கவில்லை. இது ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஈராக்மீது படையெடுக்க போலிக் காரணமாகப் பயன்படுத்தப்பட்டு பின்னர் மதிப்பிழந்த, “பேரழிவு ஆயுதங்கள்” பிரச்சாரத்தை பிழைக்கிடமின்றி இது எதிரொலிக்கிறது. ஆயினும் ஒரு வேறுபாடு உள்ளது. 2003ல் புஷ் நிர்வாகம், அதன் போலிக் குற்றச்சாட்டுக்களான பேரழிவு ஆயுதங்கள், பாக்தாத்திற்கும் அல்குவேடாவிற்கும் இடையே உறவுகள் என்பவற்றால் அமெரிக்கா தாக்குதல் அச்சுறுத்தலை கொண்டுள்ளது, எனவே தற்காப்பிற்காக தவிர்க்க முடியாத முன்கூட்டிய தாக்குதலில் ஈடுபடுகிறது என கூறப்பட்டது. இன்று சிரியா, அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலைக் கொடுக்கிறது என்ற கருத்துக் கூட இல்லை. உண்மையில் டமாஸ்கஸில் இருக்கும் பிற்போக்குத்தன ஆட்சி- சிரிய அரசாங்கம் அமெரிக்காவுடன் அதன் “பயங்கரவாதத்தின் மீதான போரில்” ஒத்துழைத்தது என்பது ஒரு பெருமையல்ல. அமெரிக்கத் தலையீடு முற்றிலும் வாஷிங்டனின் மூலோபாய நலன்களால் உந்துதல் பெறுகிறது, எனவே, சர்வதேச சட்டத்தின் ஒவ்வொரு கொள்கைப்படியும் முற்றிலும் ஆக்கிரமிப்பு தன்மை கொண்ட குற்றவியல் நடவடிக்கை ஆகும். தலையீட்டிற்கான உத்தியோகபூர்வ விளக்கங்கள் நகைப்பிற்குரிய முரண்பாடுகளை கொண்டுள்ளன. அமெரிக்கா, துருக்கிய அரசாங்கத்துடன் இணைந்து “ஜனநாயகத்தை” பாதுகாப்பதாக கூறப்படுகிறது; துருக்கியே மக்கள் எதிர்ப்பை அடக்குவதில் மிருகத்தனமான வன்முறைக்கு நடுவே உள்ளது. “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் தலையீடுகளை நியாயப்படுத்தினாலும், சிரியாவில் அல் குவேடா சக்திகள் தலைமையில் நடக்கும் அமெரிக்க உந்துதலைக் கொண்டுள்ள கிளர்ச்சியில் வாஷிங்டன் தலையீடு செய்கிறது. அமெரிக்கா, மத்திய கிழக்கில் வலதுசாரி சுன்னி சக்திகளை அதன் பினாமிகளாக பயன்படுத்துகிறது. துருக்கிய, எகிப்திய இஸ்லாமிய ஆட்சிகளுடனும், சௌதி அரேபியா வளைகுடா எண்ணெய் எமிரேட்டுக்கள் முடியாட்சிகளுடனும் நெருக்கமாக ஒத்துழைத்து அப்பிராந்தியத்தில் ஷியா மக்களுக்கு எதிரான ஒரு ஜிஹாத் என்று சொல்லக்கூடிய நடவடிக்கைகளுக்கும் ஆதரவைக் கொடுத்துள்ளது. மிருகத்தனமான குறுங்குழுவாத பிளவுகளைத் தூண்டிவிடும் இம் மூலோபாயம், வாஷிங்டனிலுள்ள சக்திகள் ஆதரிப்பவை அதிகாரத்திற்கு வந்தால் சிரியத் தலையீட்டை முழு அளவு இன-மத படுகொலையாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது. இது ஒன்றும் ஒரு புதிய கொள்கை அல்ல. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் வாஷிங்டன், மத்திய கிழக்கில் இடது தேசியவாத, சோசலிச செல்வாக்குகளின் வளர்ச்சிக்கு எதிராக வலது-சாரி இஸ்லாமியவாத சக்திகளை ஆதரித்தது. இந்தோனிசியாவில் அது அச் சக்திகளை அதன் அதிர்ச்சித் துருப்புக்களாக 1965ல் நடைபெற்ற CIA ஆதரவுடைய இராணுவ ஆட்சி மாற்றத்தில் பயன்படுத்தியது, அது அரை மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் முடிவுற்றது. சிரியாவிற்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்பு கொள்கையை செயல்படுத்துகையில், ஒபாமா நிர்வாகம் அமெரிக்க இராணுவ, உளவுத்துறை, அரசியல் வட்டங்கள் விரிவாக்கியுள்ள திட்டங்களையே தொடர்கிறது. அதேபோல்தான் வாஷிங்டனின் முக்கிய நேட்டோ நட்பு நாடுகளான பிரித்தானியாவும், பிரான்ஸும். இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடைபெறுகிறது. 1997லேயே, புதிய அமெரிக்க நூற்றாண்டுத் திட்டத்தில் (New American Century -PNAC), டிக் ஷேனே, டோனால்ட் ரம்ஸ்பெல்ட் இன்னும் பல நபர்கள் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்புப் போரில் முக்கிய தலைமைப் பங்கை பின்னர் கொள்ள இருப்பவர்களால் நிறுவப்பட்ட வாஷிங்டன் உடைய சிந்தனைக்குழு, சிரியாவிலும் “ஆட்சி மாற்றம்” தேவை என அழைப்பு விடுத்திருந்தது. 2004ம் ஆண்டிலேயே, காங்கிரஸ் சிரிய பொறுப்புச் சட்டத்தை இயற்றி (Syria Accountability Act), நாட்டின்மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது; அந்நாட்டு அரசாங்கம் “தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, அமெரிக்கப் பொருளாதாரம் ஆகியவற்றிற்கு அசாதாரண அச்சுறுத்தல்” என்றும் அறிவித்தது. அதே ஆண்டு, மூலோபாய, சர்வதேச ஆய்வுகளின் மையத்தின் (Center for Strategic and International Studies -CSIS) ஏடான Washington Quarterly, “பஷர் அல்-அசாத்: புதிய உலக அமைப்பிற்குள்ளேயா, வெளியேயா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. “பயங்கரவாதத்தின் மீதான போரில்” சிரிய ஒத்துழைப்பை ஒப்புக் கொண்டாலும்கூட, அது அசாத் “அமெரிக்காவுடன் சரிந்துவரும் உறவுகளை கடக்க முடியாது, அமெரிக்கா சிரிய ஆட்சியை மத்திய கிழக்கில் தான் சாதிக்க விரும்பும் அனைத்திற்கும் எதிராகக் காண்கிறது” என கணித்தது. அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் எண்ணெய் வளம் மிக்க பிராந்தியங்களில் தன் மேலாதிக்கத்தை வன்முறையாக சுமத்துவதின் மூலம் “அடைய முற்படுகிறது”. சிரிய ஆட்சி, மாஸ்கோ, ஈரான், லெபனானில் ஹெஸ்போல்லா ஆகியவற்றுடன் தன் உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டுமென இது கோரியது; ஈராக்கில் அமெரிக்கப் போருக்கு நிபந்தனையற்ற ஆதரவையும், இஸ்ரேலின் உந்துதலான கோலான் குன்றை இணைத்தல், தெற்கு லெபனானை இணைத்தல் இவற்றிற்கு நிபந்தனையின்றிச் சரணடையுமாறும் கோரியது. வேறுவிதமாகக் கூறினால், சிரியாவை ஒரு அரை-காலனித்துவ அமெரிக்கப் பாதுகாப்பு நாடாக மாற்ற ஒப்புக் கொள்ள வேண்டும். இக்கோரிக்கைகளை அசாத் ஏற்க இயலவில்லை; அரசியலிலும் உண்மையிலும் இது தற்கொலை செய்து கொள்வதற்குத்தான் ஒப்பாகும். இன்னும் சமீபத்தில் முன்னாள் பிரெஞ்சு வெளியுறவு மந்திரி ரோனாலட் டுமா பிரான்சின் பாராளுமன்ற தொலைக்காட்சி இணையமான LCP க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், சிரியாவில் வன்முறைக்கு முன் தான் பிரித்தானியாவில் வேறு விடயங்களுக்கு சென்றதை நினைவு கூர்ந்தார். “நான் உயர்மட்ட பிரித்தானிய அதிகாரிகளைச் சந்தித்தேன்; அவர்கள் சிரியாவில் பெரிதாக ஒன்றைத் தயாரித்து வருவதை ஒப்புக் கொண்டனர்.” அவர் தொடர்ந்தார்: “இது பிரித்தானியாவில், அமெரிக்காவில் இல்லை. பிரித்தானியா எழுச்சியாளர்களின் படையெடுப்பை சிரியா மீது நடத்த ஏற்பாடு செய்கிறது.” மத்திய கிழக்கில் அமெரிக்க மூலோபாயம் இயற்றுபவர்களில் மிக இரக்கமற்றவரான ஆன்டனி கோர்ட்ஸ்மன், அமெரிக்கத் தலையீட்டின் உண்மை நோக்கங்களை CSI சிந்தனைக் குழுவின் இணைய தளத்தில் ஜூன் 14 அன்று வெளியிட்ட கட்டுரையில் கூறியுள்ளார். சிரியாவின் நட்பு நாடும் வாஷிங்டனுடைய பிராந்தியப் போட்டி நாடுமான ஈரான் மீது தோல்வியை திணிக்க போர் ஒன்று அவசியம் என கோர்ட்ஸ்மன் வாதிட்டுள்ளார். அதுதான் ஈராக்கிற்கு பின்னர் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள சங்கடம் என்னும் கருத்தை மாற்றும்; “ஒரு நலிந்த அமெரிக்கப் பொருளாதாரம், தேசிய நிதிய நெருக்கடி, போர் களைப்பு, பாதுகாப்பு வெட்டுக்கள்” என்பதை மாற்றும்; வாஷிங்டன் “தோற்கிறது”, ஈரான் “ஆதாயம் அடைகிறது” என்பதை மாற்றும். “இப்பொழுது லெவன்ட் மற்றும் வளைகுடாவுடன் உள்ள உறவுகளைப் பிணைப்பதற்கான பரந்த போராட்டத்தில், சிரியாவில் பெரும் குருதி கொட்டுவது தேவைப்படுகிறது” என்று அவர் எழுதியுள்ளார். கோர்ட்ஸ்மன் தெளிவாக்கியுள்ளது போல், நேரடியாக ஆயுதம் வழங்குவது முதல் கட்டம், இதன் பின் சிரியாவிற்குள் CIA மற்றும் சிறப்புப் படைகள் நிலைப்பாடு கொள்ளும், அதன் பின் “பறக்கக் கூடாது” பகுதி சிரிய வான் எல்லையில் சுமத்தப்படும், அரசாங்க சார்பு சக்திகளுக்காக நாடு “நகர முடியாத பகுதி” என மாற்றப்படும், -- இந்த நடவடிக்கைகளுக்கு இடைவிடா குண்டுத் தாக்குதலும் இறப்புக்களில் அதிக எண்ணிக்கையும் தேவை. இங்கு கோடிட்டுக் காட்டப்படுவது ஒரு பாரிய போர்க் குற்றம் ஆகும்; கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டு நிறைவேற்றிய ஆக்கிரமிப்புப் போர்களை ஒத்துள்ளதாகும். இதில் எந்த தவறும் இருக்கப்போவதில்லை. சிரியாவில் தலையீடு என்பது இன்னும் பெரிய, பேரழிவுப் போர்களுக்கு முன்னுரையாகத்தான் இருக்கும்; முதலில் ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு வகை செய்யப்படும். அது ரஷ்யாவில் இனவழி வெறியை தூண்டுவதற்குத் தயாரிப்புக்களைத்தரும். மாஸ்கோதான் வாஷிங்டனுடைய விரோத சக்தி, புட்டினிடம் இருந்து எந்த சலுகைகள் G8 கூட்டத்தில் பெறப்பட்டாலும் அவை நாளை ரஷ்யாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பில் உதவப் பயன்படுத்தப்படும். பத்து ஆண்டுகளுக்கு சற்றே கூடிய காலத்தில் நான்காவது முறையாக, அமெரிக்க ஒரு புதிய போரை தொடங்க உள்ளது. இது உலக நலன்களைத் தொடர்வதற்கு மட்டும் அல்ல. மாறாக முடிவிலாப் போர் என்பது அமெரிக்காவிற்குள் முதலாளித்துவ ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முக்கிய வழிவகையாகி விட்டது; அமெரிக்க சமூகத்தின் பாரிய வெடிப்புத்தன்மையுடைய முரண்பாடுகளை வெளியே இராணுவ வன்முறையாக மாற்றும் தன்மையில் நடத்தப்படுகிறது. இக்கொள்கைக்கு இரு கட்சிகளும் முற்றிலும் ஆதரவைக் கொடுத்துள்ளன; இரு கட்சியிலும் குறிப்பிடத்தக்க எந்தப் பிரிவும் எதிர்ப்பைக் காட்டவில்லை. இக்குற்றத்திற்கு போலி இடது குழுக்களான அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு (ISO), பிரித்தானியாவில் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி ஆகிய அடுக்குகளின் ஆதரவு உண்டு. இந்த அமைப்புக்கள் அமெரிக்க ஆதரவுடைய இஸ்லாமியவாதிகளின் வன்முறையை “புரட்சி” எனச் சித்தரிப்பது இழிவானதாகும். இக்குழுக்களும் அவற்றின் நிழலைப்போன்ற தலைவர்களும் பென்டகன் மற்றும் CIA தயாரிக்கும் சட்டவிரோதப் போரை விற்க, அரச பிரச்சாரத்தின் இடைக்கருவிகளாக செயல்படுகின்றன. இப்போருக்கு அமெரிக்க உழைக்கும் மக்கள் அதேபோல் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களும் பெரிதும் விரோதப் போக்கை காட்டுகின்றனர். சிரியாவில் அமெரிக்கத் தலையீட்டை எதிர்க்கும் அனைவரையும் போருக்கு எதிரான சக்திவாய்ந்த இயக்கத்தை கட்டமைக்க எங்களுடன் இணையுமாறு அழைப்பு விடுகிறோம். |
|