தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
This week in history: June 10-16வரலாற்றில் இந்த வாரம்: ஜூன் 10-1610 June 2013use this version to print | Send feedback வரலாற்றில் இந்த வாரம், இந்த வாரத்தில் ஆண்டு நிறைவை அடையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய சிறிய பொருட் சுருக்கத்தை வழங்குகிறது 25 ஆண்டுகளுக்கு முன்னர்: சோவியத் அரசாங்கம் மாஸ்கோ விசாரணைகளில் கொல்லப்பட்ட 33 பேருக்கு புனர்வாழ்வு அழித்தது1988 ஜூன் 13 அன்று, சோவியத் ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம், 1936-37ல் நடந்த மொஸ்கோ விசாரணைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட “பழைய போல்ஷிவிக்” தலைவர்களில் பலருக்கு புனர்வாழ்வு அழிப்பதாக அறிவித்தது. கிரிகோரி சினோவியேவ், லேவ் கமனேவ், யூரி பியடகோவ் ஆகியோர் ஜோசப் ஸ்ராலினின் கட்டளையின்படி கொல்லப்பட்ட 33 பிரதிவாதிகளில் அடங்குவர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களே நீக்கப்பட்டன.
1936ல் ஆரம்ப மூன்று மாஸ்கோ விசாரணைகளை அடுத்து அவர்கள் கொல்லப்பட்ட பின்னர், முதல் தடவையாக சோவியத் பத்திரிகைகளில் சினோவியேவ் மற்றும் கமனேவின் அரசியல் பங்களிப்புகளுக்கு சாதகமான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்த இருவரும் 1917 அக்டோபர் புரட்சிக்கு முந்தைய தசாப்தத்தில் லெனினுடன் நெருக்கமாக செயற்பட்டிருந்ததோடு சோவியத் அரசின் ஆரம்ப வரலாற்றில் முக்கிய புள்ளிகளாகவும் இருந்தனர். அரச பத்திரிகையான இஸ்வெஸ்டியா (Izvestia) தெரிவித்ததாவது, “அவர்கள் எதிரிகள் அல்ல, அவர்கள் சட்டத்தின், அரசின் அல்லது மக்களின் முன் குற்றவாளிகள் அல்ல என்பது இப்போது தெளிவு. 70 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் உருவாக்க உதவிய அரசு, அவர்களது கௌரவத்தையும் அவர்களது பெயர்களையும் அவர்களுக்குத் திரும்ப வழங்குகிறது.” உயிரிழந்த பின்னர் குற்றச்சாட்டுக்களை இரத்து செய்து, பிரதிவாதிகள் சகல குற்றங்களில் இருந்தும் அப்பாவிகள் என ஏற்றுக்கொண்டதில், உயர் நீதிமன்றமானது சோடிக்கப்பட்ட மாஸ்கோ விசாரணைகளின் பிரதான இலக்காக இருந்த, அக்டோபர் புரட்சியின் துணைத் தலைவரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி, வரலாற்றில் மிகவும் மோசமான அவதூறு மற்றும் பொய்மைப்படுத்தல் பிரச்சாரத்தினால் பாதிக்கப்பட்டவர் என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பானது ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது மகன் லியோன் செடோவ்வை ஸ்ரானிச அவதூறு அலையில் இருந்து விடுவிப்பது ஒருபுறம் இருக்க, அவர்களது பெயர்களைக் கூட குறிப்பிடத் தவறியமை, அவரது பெயர் சோவியத் அதிகாரத்துவத்துக்குள் இன்னமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதற்கான ஒரு அறிகுறியாகும். பொய்களை “ஒரு பரம்பரையில் இருந்து இன்னொன்றுக்கு” பரப்புவதை நிறுத்துவதன் பேரில், 53 மில்லியன் சோவியத் பாடசாலை மாணவர்களின் சகல இறுதி வரலாற்றுப் பரீட்சைகளையும் இரத்து செய்வதற்கான முடிவை இஸ்வெஸ்டியா அறிவித்து மூன்று நாட்களின் பின்னரே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. “இன்று எமது சொந்த நெறிபிறழ்வின் கசப்பான பழங்களை அறுவடை செய்துகொண்டிருக்கின்றோம். நாம் ஒத்துப் போதலுக்கு சரணடைந்து அதனால் சகலதுக்கும் மௌனமாக அங்கீகாரம் அளித்தமைக்கு இன்று விலை கொடுக்கின்றோம். அவை இன்று எமது முகங்களில் வெட்கத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு அவை பற்றிய கேள்விகளுக்கு எமது பிள்ளைகளுக்கு நேர்மையாக பதிலளிக்க தெரியாதவர்களாக இருக்கின்றோம்,” என அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னர்: மெட்கர் எவர்ஸ் கொல்லப்பட்டார்
1963 ஜூன் 12 அன்று, சிவில் உரிமைகள் தலைவர் மெட்கர் எவர்ஸ், மிஸிஸிப்பி, ஜக்ஸனில் உள்ள அவரது இல்லத்தின் வண்டிப் பாதையில் வைத்து பின்னால் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டார். இரண்டாம் உலக யுத்தத்தின் அனுபவசாலியான எவர்ஸ், கொலோரோட் மக்களின் முன்னேற்றத்துக்கான தேசிய சங்கத்தின் (NAACP) மிஸிஸிப்பி கள ஊழியராக இருந்தார். அவர் மிஸிஸிப்பி டெகேசரில் ஒரு பலகை ஆலைத் தொழிலாளியான ஜேம்ஸ் எவர்ஸின் மகனாகப் பிறந்தார். அவரது தாய் ஜெஸ்ஸி ரைட் ஒரு குடும்பப் பெண். எவர்ஸ் தனது மனைவி மைர்லை மற்றும் மூன்று பிள்ளைகளையும் விட்டுச் சென்றபோது அவருக்கு 37 வயது. உர விற்பனையாளனான கொலையாளி பைரோன் டி லா பெக்வித், பாசிச வெள்ளைப் பிரஜைகள் பேரவையின் உறுப்பினராவான். பின்னர் கு க்ளஸ் க்ளன் (Ku Klux Klan) உடன் இணைந்துகொண்ட பெக்வித், அனைவரும் வெள்ளையர்களாக இருந்த ஜூரியின் கீழான இரு வேறு வழக்குகளிலும் குற்றத்துக்கு தண்டனை பெறவில்லை. அதன் பின்னர் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் 1994ல் கடைசியாக அவன் குற்றம் சாட்டப்பட்டான். பல ஆண்டுகளாக, பரீட்சியமுள்ளவனாக காட்டிக்கொள்ள இந்தக் கொலை பற்றி தானே பெருமளவில் மிகைப்படுத்திக்கொண்டான். முதல் நாள், 1963 ஜூன் 11 அன்று, சிவில் உரிமைகள் இயக்கத்தில் இரு பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன. காலையில், அலபாமாவின் ஆளுனர் ஜோர்ஜ் சி. வல்லஸ், சமஷ்டி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறுவதாக தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதோடு டஸ்கலூஸாவில் உள்ள அலபமா பல்கலைக்கழகத்திற்கு இரு ஆபிரிக்க அமெரிக்க மாணவர்கள் பிரவேசிப்பதை தனிப்பட்ட முறையில் தடுத்தார். உதவி அமெரிக்க சட்டமா அதிபர் நிக்கலஸ் கட்ஸென்பெச் விடுத்த வேண்டுகோளையும் வல்லஸ் செய்திக் கமராக்கள் முன்னிலையிலேயே மறுத்தார். அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ரொபர்ட் மெக்நமாராவின் கட்டிப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்த, அலபாமா தேசிய காவல் படையின் ஜெனரல் ஹென்றி கிரஹம்மினால் கைது செய்யப்படும் அச்சுறுத்தல் இருந்தபோதும், வல்லஸ் கட்டிடத்தை விட்டு இறுதியாக வெளியேறினார். அலபாமாவில் நிகழ்வுகளுக்கு பிரதிபலிப்பாக, பின்னர் அதே தினம், அமெரிக்க ஜனாதிபதி ஜோன் கென்னடி ஒரு உரையை நிகழ்த்தினார். அந்த உரை, ஒரு நூற்றாண்டுக்கும் முந்தைய ஆபிரகாம் லிங்கனின் நிர்வாகத்தின் பின்னர் முதற் தடவையாக, சம உரிமைக்கான ஜனாதிபதியின் ஆதரவை நடைமுறையில் தெரிவித்தது. “பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கூடிய அமைதியின்மையின் அதிகரிப்புக்கு” வழிவகுக்கும் சமூகப் பதட்டங்களின் வளர்ச்சியைப் பற்றி கென்னடி எச்சரித்ததோடு அந்த இனவாத ஒடுக்குமுறைகள், வெளிநாடுகளில் ஜனநாயகத்தின் வழிகாட்டி என்ற அமெரிக்காவின் பாசாங்குக்கு குழிபறிக்கும் என்ற கவலையையும் வெளியிட்டார். “நாம் உலகம் பூராவும் சுதந்திரத்தினை உபதேசிக்கின்றோம், அதை மனதிற் கொள்கிறோம் மற்றும் இங்கு உள்நாட்டில் எமது சுதந்திரத்தை பேணுகிறோம். ஆனால், கறுப்பினத்தவர்கள் அல்லாதவர்களுக்கு எமது நாடு சுதந்திரமானது; நீக்கிரோக்கள் தவிர எங்களிடம் இரண்டாம் தரப் பிரஜைகள் இல்லை; நீக்கிரோக்கள் தவிர எங்களுக்கு வேறு வர்க்க அல்லது சாதி முறைமை இல்லை, ஒதுக்கி வைக்கப்பட்ட குழு இல்லை, ஆளும் இனம் இல்லை என நாம் உலகுக்கு, மிகவும் பெருமையாக, ஒருவருக்கொருவர் சொல்லப் போகிறோமா?” என கென்னடி கேட்டார். “அடுத்த வாரம், இந்த நூற்றாண்டில் முழுமையாக செய்யப்பட்டிராத ஒரு அர்ப்பணிப்பை, அதாவது அமெரிக்க வாழ்வில் அல்லது சட்டத்தில் இனத்துக்கு இடம் இல்லை என்ற புதுக் கருத்துக்கு அமெரிக்க சட்டத்தில் இடமளிக்குமாறு நான் காங்கிரஸிடம் கோருவேன்,” என கென்னடி கூறி முடித்தார். 75 ஆண்டுகளுக்கு முன்னர்: “சமூக விரோத சக்திகளை” நாஸிகள் சுற்றி வளைத்தனர்
யூதர்களையும் மற்றும் “சமூக-விரோத சக்திகள்” என ஜேர்மன் பாசிசம் முடிவு செய்த ஏனைய சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் ரோம மற்றும் சிந்தி இனத்தவர்களையும் 1938 ஜூன் 12-18ம் திகதிகளில் பெருந்தொகையாக அது கைது செய்தது. ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டதோடு அநேகமானவர்கள் நேரடியாக செறிவான முகாம்களுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். முந்தைய ஆண்டின் கடைப் பகுதியில் வழங்கப்பட்ட இரகசிய அதிகாரகளின் கீழ், ரைஹ் குற்றவியல் பணியகத்தால் இந்த வெகுஜனக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அதிகாரங்களின் கீழ் சட்ட விதிகளின் வழமையான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் இன்றி அதிகாரிகளால் எவரையும் “முன்கூட்டியே கைது” செய்ய முடியும். ஜேர்மன் தலைநகர் பேர்லினில், இந்தக் கைதுகளில் கைது செய்யப்பட்டவர்கள் முற்றிலும் யூதர்களாகவும் மற்றும் பாசிச அரசின் அரசியல் விரோதிகளாகவுமே இருந்தனர். ஜூன் 13 அன்று, சுமார் 700 ஆஸ்திரிய யூதர்களையும் அரசியல் கைதிகளையும் கொண்ட ஒரு இரயில், வியன்னா எல்லையில் உள்ள டச்சு தடுப்பு முகாமுக்குப் புறப்பட்டது. கிராமப்புற பிரதேசங்களில், ஜேர்மன் மாகாண அதிகாரிகள், கணிசமானளவு எண்ணிக்கையில் யூதர்கள் இல்லாத நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட கைது ஒதுக்கீட்டை நிரப்புவதற்காக ரோமாக்களையும் சிந்தி சிறுபான்மையினரையும் கைது செய்தனர். யூதர்களோடு சேர்த்து, ஐரோப்பிய “குறவர்களும்” நாஸி நூரம்பேர்க் சட்டத்தினால் ஆரியர்கள் அல்லாதவர்களாக பிரகடனப்படுத்தப்பட்டனர். ஜூன் 14 அன்று, யூதர்கள் பிறப்பிலும், குடியுரிமையிலும் அல்லது திருமணத்திலும் ஜேர்மன் பிரஜைகளாக ஆவதை தடுக்க சட்டங்களைக் கொண்டுவருமாறு ஜேர்மன் இராஜாங்கச் செயலாளர் கேட்டுக்கொண்டார். ஜேர்மனியில் இருந்து யூதர்கள், தமது இனத்தவர்களை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட போதிலும், புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின் அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு பிரஜா உரிமை மறுக்கப்பட்டதோடு அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். 1933 பெப்பிரவரி 1 மற்றும் 1936 மார்ச் 31க்கும் இடையில், யூதர்களின் பிரச்சினைகள் சம்பந்தமான கற்கைக்கான நாஸி நிறுவனத்தின் படி, சுமார் 100,000 ஜேர்மன் யூதர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதோடு; ஊடகங்களின் படி, சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் பாலஸ்தீனத்துக்கு இடம்பெயர்ந்தனர். 100 ஆண்டுகளுக்கு முன்னர்: பிலிபைன்சில் பெக்சக் மோதல்
1913 ஜூன் மாதம் இந்த வாரம், தென் பிலிபைன்சில் சுலு மாகாணத்தில் ஜொலோ தீவில் அமெரிக்கத் துருப்புக்களும், பிலிப்பைன் பொலிசும் மற்றும் உளவுப்படையும் ஒரு கொடூரத் தாக்குதலை முன்னெடுத்தன. சரண்டைய மறுத்த சுமார் 500 மொரோ போராளிகளே இந்த தாக்குதலின் இலக்காகும். ஜூன் 11 தொடங்கி ஜூன் 15 வரை நடந்த இந்த மோதல், 1898ல் பிலிப்பைன் மீதான அமெரிக்கப் படையெடுப்பை அடுத்து, அமெரிக்க காலனியாக்கத்துக்கு எதிராக, தென் பிலிபைன்சில் மிகப் பெருமளவில் வாழ்ந்த முஸ்லிம்களான மொரோஸ்களின் கிளர்ச்சி சூழ்நிலையிலேயே இடம்பெற்றது. காணி கையகப்படுத்தலுக்கு சமமான விளைவைக் கொண்ட, “குடியிருக்கப்படாத நிலங்களை” பொது நிலங்களாக மாற்றும் கொள்கையினாலேயே இந்த மொரோ எதிர்ப்பு தூண்டி விடப்பட்டது. மோதலுக்கு முன்னதாக, மொரோ மக்களை நிராயுதபாணிகளாக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் கட்டளையிட்டனர். 1913 ஆரம்பத்தில், ஆயிரக்கணக்கான மொரோ மக்கள் பக்ஸ்க் மலையில் தங்களுக்கு அரண் அமைத்துக்கொண்டனர். பேச்சுவார்த்தைகளின் விளைவாக அவர்களில் அநேகமானவர்கள் மலையை விட்டு வெளியேறிய அதேவேளை, சுமார் 500 பேர் இன்னமும் எதிர்த்து நின்றனர். அமெரிக்க படைகள் ஜூன் 11 அன்று தமது தாக்குதலை தொடுத்தன. அமெரிக்கத் துருப்புக்கள் கனமாக ஆயுதபாணிகளாக இருந்த அதேவேளை, மொரோ போராளிகள் ஈட்டி, ஏனைய பாரம்பரிய ஆயுதங்கள் மற்றும் சில எண்ணிக்கையிலான துப்பாக்கிகளுடன் போராடினர். பிரிகேடியர் ஜெனரல் ஜோன் ஜே. பேர்ஷிங்கின் கட்டளையின் கீழ் அமெரிக்க துருப்புக்களும் மற்றும் பிலிப்பினோ படைகளும் மொரோ பொதுமக்களை கண்மூடித்தனமாக படுகொலை செய்தன. செய்திகளின் படி, பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக சுமார் 2,000 மொரோ மக்கள் கொல்லப்பட்டதோடு அமெரிக்கத் துருப்புக்கள் காயமடைந்த மொரோ போராளிகளுக்கு கொஞ்சமும் கருணை காட்டவில்லை. கிட்டத்தட்ட 15 அமெரிக்கத் துருப்பினர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதோடு மேலும் 25 பேர் காயமடைந்திருந்தனர். மொரோ போராளிகளின் தோல்வியானது காலனித்துவ ஆட்சிக்கான எதிர்ப்பை நசுக்கியது. வாஷிங்டனில் இந்த மோதல் சம்பந்தமாக ஒரு உத்தியோகபூர்வ விசாரணை இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட போதிலும், அரசாங்க பிரதிநிதிகள் பேர்சிங்குடன் உடன்பட்டதோடு அமெரிக்க துருப்புக்கள் எதும் பிழை செய்துவிட்டதாக சந்தேகிக்கப்பட மாட்டார்கள் என உறுதிப்படுத்திய அதேவேளை, நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை மொரோ மக்களை “வெறியர்கள் கும்பல்” என கண்டனம் செய்தது. பேர்ஷிங் ஒரு கௌரவுத்துக்கான அடையாளத்துக்கு பரிந்துரைக்கப்பட்டதோடு, மெக்ஸிக்கன் புரட்சிக்கு எதிரான அமெரிக்கத் துருப்புக்களுக்கு தலைமை வகிக்கவும் செல்லவிருந்ததுடன், முதலாம் உலக யுத்தத்தில் கூட்டு விரைவுப் படைகளையும் இயக்கினார். |
|
|