World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் France: How the Workers’ Struggle group is helping to shut down the Aulnay car plant பிரான்ஸ்: தொழிலாளர் போராட்டம் குழு எப்படி ஒல்னே கார்த்தயாரிப்பு ஆலையை மூட உதவுகிறதுBy Antoine Lerougetel and Pierre Mabut
மே 17 அன்று, பாரிசுக்கு அருகே இருக்கும் ஒல்னே சூ புவா PSA கார்த்தயாரிப்பு ஆலைக் கிளையின் CGT (தொழிலாளர் பொதுக்கூட்டமைப்பு) உடைய செய்தித் தொடர்பாளர் Jean-Pierre Mercier ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டார், இது 2014ல் ஆலை மூடலுக்கும், தேசிய அளவில் PSA இல் 11,200 வேலைகளை அகற்றுவதற்கும் முத்திரையிடுகிறது. மேர்சியே போலி இடது Lutte Ouvrière (LO, தொழிலாளர் போராட்டம்) இன் முக்கிய உறுப்பினர் ஆவார். PSA இல் தேசிய அளவில் பிரதிநிதித்துவம் செய்யும் மற்ற தொழிற்சங்கங்கள் –FO (தொழிலாளர் சக்தி), CFTC (கிறிஸ்துவ ஒன்றியம்), CFE-CGC (நிர்வாகத்துறைத் தொழிலாளர்கள்), மற்றும் CFDT (பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு—சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானது) ஆகியவை ஏற்கனவே PSA உடைய பிரான்ஸ் முழுவதற்குமான பணிநீக்க திட்டத்திற்கு ஏப்ரல் 29 அன்றே கையெழுத்திட்டுவிட்டன. இத்திட்டத்தில் ஒல்னேயில் 2,500 மற்றும் ரென் ஆலையில் 1,400 வேலை இழப்புக்கள் உள்ளன. பிரான் சில், நிறுவனத்தின் வெவ்வேறு பிரிவுகளில் 1,850 வேலைகள் ஒல்னே தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்று PSA கூறியுள்ளது. இதில் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள Poissy இல் 1,090 வேலைகளும் அடங்கும்; அங்கு உள்ள தற்காலிக தொழிலாளிகள் அகற்றப்பட்டு ஒல்னே தொழிலாளர்கள் சேர்க்கப்படுவர். இன்னும் 300 வேலை வாய்ப்பு SNCF இரயில் நிறுவனம், பாரிஸ் விமான நிலையம் மற்றும் பாரிஸ் நிலத்தடி போக்குவரத்து அமைப்பு ஆகியவற்றில் “அடையாளம்” காணப்பட்டுள்ளன. மற்றவை தன்னார்வ பணிநீக்கங்கள் என அழைக்கப்படும். ஆனால் CGT, 14,000 Citroen C3 கார்த்தயாரிப்பு இழப்புக்களை ஏற்படுத்திய ஒரு நான்கு மாத 200 ஒல்னே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கியது. அந்த வேலைநிறுத்தம், CFDT யினாலும் ஆதரவு கொடுக்கப்பட்டது, ஆலை மூடலை எதிர்க்கிறது என்னும் உணர்வை தோற்றுவிக்கும் நோக்கத்தைக் கொண்டது; உண்மையில் அது ஆலை மூடலை மேம்படுத்தத்தான் பயன்பட்டது. தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள், வேறு இடங்களுக்கு அனுப்பப்படும் அனைத்து தொழிலாளர்களுக்கும், CDI எனப்படும் உத்தரவாத நிரந்தர ஒப்பந்தம் தேவை, 55 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு முன்கூட்டிய ஓய்வும் 130,000 யூரோக்கள் (அமெரிக்க $175,000) பணிநீக்க ஊதியம் என்பவையும் ஆகும்; இவை எதுவும் பெறப்படவில்லை. உண்மையில் தொழிற்சாலை CGT யின் செயலரும் மற்றும் LO வின் இன்னொரு தலைவருமான பிலிப் ஜூலியான் தெளிவாக்கியபடி, வேலைநிறுத்தத்தின் நோக்கம் “பணிநீக்கத் திட்டத்தை விரைவுபடுத்தும் பேச்சுக்களில் செல்வாக்கு செலுத்துவதுதான்”. LO தலைவர் நத்தலி ஆர்த்தோ மோசடித்தனமாக “வெற்றி” என விவரித்த வேலைநிறுத்தத்தின் அடிப்படை நோக்கம், இப்பொழுது தெளிவாகியுள்ளது. இந்த எதிர்ப்பு, ஆலை மூடலுக்கு எதிராக அல்ல, அதை விரைவுபடுத்துவதற்குத்தான். மே 17ல் மேர்சியே கையெழுத்திட்டிருப்பதில் தெளிவாகியுள்ளது போல், வேலைநிறுத்தம், போராட்டம் போல் தோற்றத்தைக் காட்டி உண்மை எதிர்ப்பை தடுப்பதாகும், அதன் பின் தொழிலாளர்களை தங்கள் வேலைகளை அற்ப ஈட்டிற்கு விற்கத் தூண்டுதல் அளிப்பதாகும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 130 தொழிலாளர்களுக்கு அவர்கள் மே 31 இல், அதாவது உடனடியாக வேலையைக் கைவிட்டால், 20,000 யூரோக்கள் இழப்புத் தொகையை கூடுதலாக கொடுக்க முன்வந்தது. இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டதில் இருந்து, LO மற்ற தொழிலாளர்களிடமும் அவர்களும் இதே நிலைமையைப் பெற ஏதேனும் நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க வேண்டும் என நம்பவைக்க முற்பட்டுள்ளது—அதாவது தங்கள் வேலைகளை அற்ப தொகையான 20,000க்கு விற்றுவிட வேண்டும் என. Lutte Ouvrière வலைத் தளத்தில் ஜூன் 7 அன்று வெளியிட்ட கட்டுரையில்: “கடந்த இரு வாரங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத தொழிலாளர்களுக்கும் முழுநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடாதவர்களுக்கும் இடையே நூற்றுக்கணக்கான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் அவர்களுக்கும் இதேபோன்ற நிலைமையை பெறுவதற்கு திரண்டு செயலில் ஈடுபட வேண்டும்” என்று விளக்கியுள்ளது. நிர்வாகம் இறுதியில் பணிந்தது என LO வெற்றிகரமாக கூறி, “புதன் மே 29 அன்று நெரிக்கப்பட்ட குரலில் உடன்பாடு அனைவருக்கும் பொருந்தும் என்றும், தன்னார்வ தொழிலாளர்கள் ஜூன் 3 திங்கள் வரை உடன்பாட்டில் கையெழுத்து இடலாம் என்றும், பணிநீக்கம் பெற்று அதிகப்பணம் பெறலாம்” என்றும் தெரிவித்தது. LO கருத்துப்படி, “தொழிலாளர்களுக்கு இரண்டு தீர்வுகள்தான் உண்டு: உடனடியாக பணிநீக்கம் பெற்று, ஒரு சில ஆயிர யூரோக்களை பெறுதல் —கிட்டத்தட்ட 100,000 யூரோக்கள், பணி ஆண்டுகளை பொறுத்து— அல்லது PSA உடைய மாற்றீட்டு வேலைகள் குறித்த உறுதிமொழிகளை நம்புதல், இறுதியில் ஆலை மூடலின்போது குறைந்தப்பட்ச பணத்துடன் வெளியேற்றம்தான் கிடைக்கும். விருப்பத் தேர்வு விரைவில் எடுக்கப்பட வேண்டும்!” PSA இன் நிர்வாகப் பிரிவில் இருக்கும் முதலாளிகள் இதை பேரானந்தத்துடன் படித்திருக்க முடியும். நீண்டகாலமாக தொழிலார்களுடைய பக்கம் உள்ளது என புகழ் பெற்ற LO, ஒல்னே தொழிலாளர்களை தன்னார்வத்துடன் “உடனடிப் பணிநீக்கம் பெறுக” என அழைப்பு விடுகிறது. இன்னும் பல ஆலைகள் மூடப்பட உள்ள நிலையில் இது ஆலை மூடலுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாதிருக்க வகை செய்கிறது. இதுவும்கூட, குறிப்பாக கார்த்தயாரிப்புத் துறையில் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களும் மற்றும் பிரான்ஸ், ஐரோப்பா முழுவதும் அதற்கு எதிரான வர்க்க எதிர்ப்பும் பெருகுகையில். ஒல்னே ஆலை மூடப்படுவது இப்பிராந்தியத்திற்கு பேரழிவைத் தரும். WSWS நிருபர்கள் மே 31 அன்று ஆலை வாயில்களுக்கு சென்றனர். CGT அதிகாரத்துவத்தினர் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தி கூக்கூரலிட்டு, ஒருவரை ஒருவர் தழுவி, பட்டாசுகள் வெடித்தபோது, 20 ஆண்டுக் காலம் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் இவர்களைச் சற்று தூரத்தில் இருந்த பார்த்து வந்தவர் கூறினார்: “இது ஒன்றும் வெற்றித் கொண்டாட்டம் அல்ல, தோல்வி. வெட்ககரமானது. பணம்தான் சக்தி உடையது.” மற்றொருவர் கூறினார்: “அவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு செல்கின்றனர்.” ஆலையில் இருந்து வெளிவந்த ஒரு பெண்மணி கூறினார்: “இது 93 Seine-Saint-Denis பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு பேரழிவு ஆகும்.” முன்பாக WSWS நிருபர்கள் அருகில் உள்ள “Cité des 3000” த்தில், நகரவை வீடுகள் பகுதியில் இருந்து சந்தைக்கு வந்தவர்களிடம் பேசினர். அவர்கள் அனைரும் தங்கள் பகுதிக்கு இம்மூடல் பேரழிவு என்றும் ஏற்கனவே இப்பகுதி வேலையின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர். 18 முதல் 25 வயது வரை இருப்பவர்களில் 40%க்கும் அதிகமானவர்கள் வேலையில் இல்லை. ஒரு வயதான மனிதர் சுட்டிக் காட்டினார்: “வெளிப்படையாக இந்தப் பகுதியில் 6 பேர் ஒரு சம்பளத்தை நம்பியுள்ளனர். முழுக்குடும்பங்கள் ஒரு தொழிலாளியை நம்பியுள்ளன; அவர் இங்கு வீட்டை பராமரிப்பதோடு தனது சொந்த நாட்டு உறவுகளுக்கும் பணம் அனுப்ப வேண்டும். PSA மூடப்பட்டால், அவர்கள் வாழ வழியில்லை. உள்ளூர் வரிகளும் அதிகமாகும், குழந்தைகளுக்கு பள்ளியோ, விளையாட்டுக்களோ, இருக்காது.” நீண்ட காலமாக LO வைக் கவனித்து வருபவர்களுக்கு, ஒல்னேயில் அதன் வெறுக்கத்தக்க பங்கு வியப்பை அளிக்கவில்லை. இடதுசாரியாக பாசாங்கு செய்தும், ஏன் ட்ரொட்ஸ்கிச அமைப்பு என பல தசாப்தங்களாகவும் கூறி வரும் இந்த குட்டி முதலாளித்துவ அமைப்பு பொருளாதார நெருக்கடி ஆழ்ந்திருக்கையில் இன்னும் நெருக்கமாக தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனும் முதலாளித்துவ முகாமுடனும் சென்றுள்ளது. இப்பொழுது அவர்கள் சமூக வெடிப்பு அச்சுறுத்தல் ஒன்றினால் அச்சப்படுகின்றனர், தொழிலாளர்களை ஊழல் மிகுந்த அதிகாரத்துவத்துடன் பிணைக்க அனைத்தையும் செய்கின்றனர். மற்றும் ஒரு முக்கிய உந்துதல் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிச அரசாங்கத்தைப் பாதுகாப்பதாகும், இதுவோ பெரிதும் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது; அதன் வலதுசாரித்தன, தொழிலாள வர்க்க விரோதக் கொள்கையினால் ஆதரவை விரைவில் இழந்து கொண்டிருக்கிறது. LO எப்படியும் ஹாலண்டும் அவருடைய அரசாங்கமும் முன்கூட்டி இராஜிநாமா செய்யப்படுவதை தடுக்க முற்படுகிறது. செப்டம்பர் 2012ல், ஹாலண்ட், ஒல்னேயில் “சேதத்தைக் குறைக்கவும், வேலை வெட்டுக்களை குறைக்கவும்” தான் அனைத்தையும் செய்வதாக உறுதியளித்தார். ஒல்னே ஆலை மூடல் தடுக்கப்படுமென வேண்டுமென்றே உறுதியளிக்கவில்லை; ஆனால் அரசாங்கம், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் என முத்தரப்பு பேச்சுக்கள் இருக்கும் என உறுதியளித்தார். LO, அரசாங்கத்திடம் இருந்தும் PSA இடம் இருந்தும் தொழிலாளர்கள் இப்பொழுது சலுகைகளை பெறமுடியும் என்னும் பிரமைகளை தோற்றுவித்தது; இது ஏமாற்றுத்தனம் என இப்பொழுது அம்பலமானபின், அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் அணிதிரள்வை தடுக்க முற்படுகிறது. PS உடன் நீண்ட காலம் ஒத்துழைத்த வரலாற்றை LO கொண்டுள்ளது. 2008 நகரசபை தேர்தல்களில் LO, PS உடனும் PCF உடனும் கூட்டுப்பட்டியல்களில் 65 சிறுநகரங்களில் பங்கு பெற்றது; அவற்றில் 40% PS வேட்பாளர் தலைமையில் கொண்டிருந்தது. 2012 ஜனாதிபதித் தேர்தல் இரண்டாம் சுற்றில், LO செய்தித் தொடர்பாளர் Nathalie Arthaud ஹாலண்ட் வெற்றி தேவை என்பது குறித்துக் கூறினார்: “வெளிப்படையாக எந்த முழு நனவுடைய தொழிலாளியும் நிக்கோலோ சார்க்கோசிக்கு வாக்களிக்க மாட்டார்கள்; அவர் பணக்காரர்களின் ஜனாதிபதி, தன்னுடைய ஐந்து ஆண்டு காலத்தில் பெருவணிகம், மற்றும் வங்கியாளர்களின் விசுவாசமான ஊழியராக இருந்தார். என்னுடைய வாக்காளர்களில் சிலர், தொழிலாளர்களின் வெளிப்படையான விரோதிக்கும் ஒரு தவறான நண்பருக்கும் இடையே விருப்பத் தேர்வு என்ற நிலையில் வெற்று வாக்கை அளிப்பர். மற்றவர்கள் சார்க்கோசியை அகற்ற பிரான்சுவா ஹாலண்டிற்கு வாக்களிப்பர்.” இவ்வகையில் மெலோஞ்சோனின் இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஆகியவற்றின் பிரச்சாரத்துடன் Arthaud சேர்ந்து கொண்டார்; இவை இரண்டும் ஹாலண்டிற்கு வாக்களிக்குமாறு கோரின. ஓருபால் திருமண இயக்கத்திற்கு விரோதமான வலதுசாரி நவ-பாசிச தேசிய முன்னணி, ஹாலண்டின் தொழிலாள வர்க்கக் கொள்கையினால் வளர்ச்சியடைந்து வருகிறது; குட்டி முதலாளித்துவ போலி இடது இன்னும் நெருக்கமாக அவருடைய முகாமிற்கு வருகிறது. இவை முற்றிலும் முதலாளித்துவக் கட்சிகள் என அம்பலப்படுத்தப்படுகின்றன. தொழிலாளர்கள் தங்களின் நலன்களைக் காக்க, உலகம் முழுவதும் தளத்தைக் கொண்ட ஒரு சோசலிச, சர்வதேசிய முன்னோக்கை வளர்க்க வேண்டும். அவர்கள் தொழிற்சங்கங்களில் இருந்தும் அவற்றின் போலி இடது அமைப்புக்களில் இருந்தும் முறித்துக் கொண்டு சுயாதீன நடவடிக்கை குழுக்களை நிறுவி, தொழிற்சாலைகள், தேசிய எல்லைகள் கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த வேண்டும்; அதன் நோக்கம் தொழிலாளர்களின் அரசாங்கங்கள் நிறுவப்படுதல் என்று இருக்க வேண்டும்; வங்கிகள், அடிப்படைத் தொழில்கள் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின்கீழ் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என இருத்தல் வேண்டும். |
|