World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Defend the housing rights of residents in Dambulla

தம்புள்ளை குடியிருப்பாளர்களின் வீட்டு உரிமையை பாதுகாப்போம்!

By Vilani Peris
14 June 2013

Back to screen version

ரங்கிரி தம்புள்ள விகாரைக்கு அருகில் புனித பூமியில் 44 வீடுகளை உடைத்து அகற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை எடுத்த முடிவுக்கு வீட்டு உரிமையாளர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

மே 27 அன்று, மாத்தளை மாவட்ட செயலாளர் மற்றும் தம்புள்ள பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர், நகர அபிவிருத்தி அதிகார சபை, குடியிருப்பாளர்களுக்கு 100,000 ரூபா கொடுப்பதாகக் கூறி, ஜூன் 26ம் திகதிக்கு முன்னர் வீடுகளை விட்டு வெளியேறுமாறு விடுத்த கட்டளையையும் அநேகமானவர்கள் நிராகரித்துள்ளனர். எனினும், ஜூன் 27ம் திகதி அனைத்து வீடுகளையும் உடைத்து அகற்றுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

100,000 ரூபா நட்ட ஈட்டைப் பெற்றுக்கொண்டு வீடுகளில் இருந்து வெளியேற விரும்பும் கடிதமொன்றில் 20 பேர் கைச்சாத்திட்டுள்ள போதிலும், அதற்காக கடைசியில் மூன்று பேர் மட்டுமே முன்வந்திருந்தனர். ஒரு இலட்ச ரூபாவில் மலசல கூடம் ஒன்றைக் கூட கட்ட முடியாது என ஒரு இளைஞர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். குடியேறுவதற்கு காணித் துண்டு ஒன்றைத் தருவதாக 2012 செப்டெம்பர் மாதத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபை எழுத்து மூலம் வாக்குறுதி அளித்திருந்தாலும், இப்போது அதையும் நிராகரித்துள்ளது.

2012 ஏப்பிரல் மாதத்தில் முஸ்லிம் எதிர்ப்பு இனவாத பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிம் பள்ளி வாசல் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதன் பின்னரே இந்த பிரதேசத்தில் வீடுகளை உடைக்கும் நடவடிக்கை ஆரம்பமானது. பள்ளிவாசலும் உடைக்கப்பட உள்ளதா என 27ம் திகதி கூட்டத்தில் மாத்தளை மாவட்ட செயலாளரிடம் ஒருவர் கேட்டபோது, அந்த அதிகாரி அவரைத் திட்டியுள்ளார். அவரது புகைப்படம் ஒன்றையும் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட அதிகாரிகள் பற்றி, தம்புள்ள பொலிசில் செய்த முறைப்பாடு பற்றி இதுவரை எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை. பள்ளிவாசலை உடைத்து அகற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளும் இதுவரை விசாரிக்கப்படவில்லை.

முதலாளித்துவ அரசு மற்றும் பிற்போக்குச் சக்திகளாலும் இனவாத பிளவுகளை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நிராகரித்து, பிரதேசத்தில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக அனைவரும் வீடுகளை பாதுகாக்கும் போராட்டத்தில் ஐக்கியப்பட்டுள்ளனர்.

வீடுகளை உடைப்பது புனித பூமி அபிவிருத்தி செயற் திட்டத்தின் கீழ் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. புனித பூமி அபிவிருத்தி செய்யும் மசோதா, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவாதத்தை கிளறிவிடும் பிரச்சாரத்தின் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.)அரசாங்கத்தால் 1982ல் கொண்டுவரப்பட்டது. அடுத்த ஆண்டில், யூ.என்.பீ. அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை தொடங்கியது. இப்போது முஸ்லிம் மதத்தவர்களுக்கு எதிராக இனவாத தாக்குதலைத் தொடுப்பதும், பிரதேசத்தில் உள்ள வறியவர்களை தம்புள்ள நகரில் இருந்து வெளியேற்றுவதும் இதந்த சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டே இடம்பெறுகிறது.

வீடுகளை உடைப்பது புனித பூமி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இடம்பெறுவதாக கூறப்பட்டாலும், அது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் முதலீட்டாளர்களையும் ஈர்த்துக்கொள்வதை குறிக்கோளாகக் கொண்ட அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தின் பாகமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர்கள் ஜூன் 5 அன்று வீடுகளை உடைப்பதற்கு எதிராக தம்புள்ள நகரில் பிரச்சாரம் ஒன்றில் ஈடுபட்டனர். ஒரு இலட்சம் ரூபாவை வாங்கிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்த ஒரு பெண், தனக்கு எந்தவொரு வருமானமும் இல்லாத நிலையில் அதற்கு உடன்பட்டதாகவும் அதனால் எந்த பயனும் இல்லை என்றும் கூறினார். எங்களுக்கு அரசாங்கத்திடம், வேறு அரசியல் கட்சியிடம் அல்லது அரச அதிகாரிகளிடம் இருந்து எந்தவொரு சலுகையும் கிடைக்காத நிலையில், அந்த தீர்மானத்துக்கு உடன்படத் தள்ளப்பட்டோம், என அவர் கூறினார்.

மேலும், வீடுகளில் மின் இணைப்பை துண்டிப்பதாக மின்சார சபை அறிவித்துள்ளதாகவும், அது 27 அன்று வீடுகள் உடைக்கப்படுவதற்கான தெளிவான அறிகுறியாகவும் ஏனையவர்கள் கூறினார். அரசாங்கத்தின் அமைச்சரான ஜனக பண்டார தென்னகோன், வீடுகளில் இருந்து எவரையும் வெளியேற்ற மாட்டோம் என முதலில் கூறியிருந்தாலும், ஜனாதிபதி விகாரையின் பீடாதிபதியை சந்தித்த பின்னர், தென்னகோன் இப்போது மௌனமாக இருப்பதாக அவர் கூறினார்.

அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்ட 44 வீடுகளில் சுமார் 20 தமிழ் குடும்பங்கள் உள்ளன. வறுமையில் மூழ்கிப் போயுள்ள அவர்களின் வீடுகளுக்கு இதுவரை மலசல கூடம் ஒன்று கூட இருந்ததில்லை. அதற்காக அவர்கள் அயலில் உள்ள காடுகளைப் பயன்படுத்திக்கொண்டனர். இப்போது சில குடியிருப்பாளர்கள் மலசல கூடங்களை அமைத்துக்கொண்டுள்ளனர். சகல தேவைகளுக்குமான நீரை, அயலில் இரு கிணறுகளில் இருந்தே பெறுகின்றனர். அவற்றின் தண்ணீர் துப்புரவு இல்லை என பிரதேச வாசிகள் கூறினர்.  

தமிழ் குடும்பங்களில் அநேகமானவர்கள், தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளை துப்புரவு செய்து வாகனங்களில் ஏற்றுவதிலேயே வருமானம் தேடுகின்றனர். மிகவும் சிரமமான நிலைமைகளின் கீழ் சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பினாலும், பெற்றோர்களுக்கு செலவை தாங்க முடியாதமையினால், அநேக பிள்ளைகளின் கல்வி இடையில் நிறுத்தப்பட்டுள்ளது. பதினைந்து, பதினாறு வயதான சிறுவர்களும் கூட கூலி வேலைகளை செய்து வருமானம் தேடுகின்றனர்.

பொருளாதார மத்திய நிலையத்தில் வேலை செய்யும் தொழிலாளியின் ஒரு நாள் வருமானம், 500 அல்லது 600 ரூபாவுக்கு இடையிலானது எனவும், அதுவும் அன்றாடம் கிடைக்காது என்றும், அங்கு வேலை செய்யும் ஒரு தொழிலாளி கூறினார். சாதாரண தரம் வரை படித்திருந்தாலும், கணித பாடம் சித்திபெறாததால் தொழில் ஒன்றை தேடுவது கடினம். இப்போது கணவரின் வருமானத்திலேயே வாழ்கின்றேன், என அவரது மனைவி தெரிவித்தார்.

தனது மகன் சிறு வயதிலேயே நகரில் பேக்கரி ஒன்றில் வேலைக்கு செல்லத் தள்ளப்பட்டதாக, சமுர்தி கொடுப்பனவு பெறும் ஒரு பெண் கூறினார். எங்களுக்கு சமுர்தியில் மாதம் 500 ரூபா மட்டுமே கிடைக்கின்றது. ஆரம்பத்தில் உணவு மற்றும் மண்ணெண்ணெய் கிடைத்தது. பின்னர் பணம் கொடுக்கத் தொடங்கினர். இப்போது மூன்று நான்கு மாதங்களாக ஒரு சதமும் கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் நிதி கிடைக்கும் வரை கொடுப்பனவு வழங்க முடியாது என தம்புள்ளை பிரதேச செயலாளர் கூறியுள்ளார்.

மேலும் ஒருவர் கூறியதாவது: நாங்கள் பன்சலைக்கு அருகில் அல்லிப் பூக்களை விற்றே வாழ்கின்றோம். பக்தர்கள் அதிகம் வரும் போயா நாட்களில் மட்டுமே 600 ரூபா வரை தேடிக்கொள்வோம். மூத்த மகள் தனி ஒரு வீட்டில் வாழ்ந்தாலும், அவரது கணவர் உயிரிழந்து இரு பிள்ளைகள் உள்ளனர். அந்த குடும்பத்துக்கும் நாங்களே உதவி செய்கின்றோம். வாழ்க்கை மிகவும் கடினமானது.

உடைப்பதாக அறவிக்கப்பட்டுள்ள 44 வீடுகளுக்கு, தமது வீடு உள்ளடங்கா விட்டாலும், புனித பூமி என குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசத்தில் உள்ள மேலும் பல வீடுகளுடன் தமது வீடும் உடைக்கப்படுவது நிச்சயம் என ஒரு இளைஞர் குறிப்பிட்டார். தம்புள்ள நிஸ்ஸங்க சந்தியில் இருந்து பாதெனிய வரை உள்ள பகுதியில், 9 காணிப் பகுதிகளில் இருக்கும் வீடுகளும் அவ்வாறு உடைக்கப்பட உள்ளன.

இந்த பகுதியில் குடியிருப்பாளர்கள் மத்தியில் அரசாங்க ஊழியர்கள், நாள் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், நகரத்தின் சுகாதார தொழிலாளர்களும் அடங்குவர். கடைகள் வசதிகள் அற்ற மிகச் சிறியவை. அவர்கள் அரை குறையாக கட்டப்பட்ட ஒன்று அல்லது இரண்டு அறைகளுக்குள்ளேயே வாழ்கின்றனர். மாதத்துக்கு 20,000 வரையான வருமானம் சில கடைகளில் மட்டுமே கிடைக்கும். அது குடும்பம் ஒன்றை கொண்டு நடத்துவதற்கு போதுமானது அல்ல என அவர் கூறினார்.

கொழும்பில் வீடுகள் உடைக்கப்படுவது சம்பந்தமாக உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட கட்டுரைகளை வாசித்ததாக அந்த இளைஞன் குறிப்பிட்டார். சோசலிச வேலைத் திட்டத்தின் கீழ் உழைக்கும் மக்களை அணிதிரட்டுவது சிரமம் என கூறிய அவர், தாம் சோசலிசத்துக்காக முன் நிற்பதாகக் கூறிக்கொண்ட கட்சிகள் அரசாங்கத்தில் சேர்ந்திருப்பது ஏன் என கேட்டார்.

1964ல் லங்கா சமசமாஜக் கட்சி முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் நுழைந்துகொண்டதன் மூலம் செய்த மாபெரும் காட்டிக் கொடுப்பும், நிகழ்காலத்தில் போலி இடதுகளும் தொழிற் சங்கங்களும் செய்கின்ற காட்டிக்கொடுப்புகளுமே இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தினுள் அத்தகைய குழப்ப நிலைக்கு வழி வகுத்துள்ளது என சோ.ச.க. உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினர். இராஜபக்ஷ அரசாங்கத்தில் இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கு தொடுக்கப்படும் தாக்குதல்கள், ஆழமடைந்து வரும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் பாகமாகும். அதனால் தாம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான குறுக்கு வழி இளைஞர்களுக்கோ தொழிலாளர்களுக்கோ கிடையாது. ஒரே மாற்றீடு, சோசலிச வேலைத் திட்டத்துக்கு போராடுவதே என சோ.ச.க. பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அதற்காக சோசலிச அனைத்துலவாத முன்னோக்கின் அடிப்படையிலான சுயாதீனமான தொழிலாள வர்க்க அரசியல் இயக்கம் ஒன்றின் அவசியத்தை சோ.ச.க. உறுப்பினர்கள் தெளிவு படுத்திய பின்னர், அந்த இளைஞர் மேலும் கலந்துரையாடுவதற்கு உடன்பட்டார்.

சோ.ச.க. பிரதேசத்தில் விநியோகித்த துண்டுப் பிரசுரங்கள், இராணுவ மற்றும் நகர அதிகாரிகளால் பிரதேசவாசிகளிடம் இருந்து பறித்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார். அரசாங்கம் இப்படிச் செய்வது எங்களைப் பயமுறுத்துவதற்கே. ஆனாலும் குடும்பம் ஒன்றுக்கு வீடு இல்லாமல் வீதியில் வாழ முடியுமா? என அதற்கு எதிர்ப்பைக் காட்டிய குடியிருப்பாளர் ஒருவர் கேட்டார். தம்புள்ள நகரில் வீடுகளை அகற்றுவதற்கு எதிரான பிரச்சாரம் என்ற தலைப்பில் சோ.ச.க. விநியோகித்த துண்டுப் பிரசுரத்தில், அரசாங்கத்தின் வேலைத் திட்டம் பின்வருமாறு தெளிவுபடுத்தப்பட்டிருந்தது: நாட்டின் பிரதான நகரங்களில் காணிகளை முதலீட்டாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ஏழை மக்களை நகரங்களில் இருந்து வெளியேற்றுவதே அரசாங்கத்தின் வேலைத் திட்டமாக இருப்பதோடு, அது கொழும்பு நகரிலேயே ஆரம்பமானது.

குடியிருப்பாளர்களை அச்சுறுத்தி, வீடுகளை உடைப்பதற்கு எதிரான அவர்களின் போராட்டத்தை தகர்க்கும் இலக்குடனேயே, இராணுவத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் சோ.ச.க. துண்டுப் பிரசுரங்ளை சேகரித்துக்கொண்டது. அது அரசாங்கத்தின் பலத்தின் வெளிப்பாடு அல்ல: சோ.ச.க. முன்வைக்கும் சோசலிச வேலைத் திட்டத்தின் மீது, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இயக்கம் ஒன்று வெளிப்படுவதற்கு எதிரான அரசாங்கத்தின் பீதியையே காட்டுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ், அரசாங்கம் வீட்டு உரிமைகள், இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வெட்டித் தள்ளுவது உட்பட நலன்புரி சேவைகளை தூக்கியெறிவதுடன், பொலிஸ்-அரச திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதான எதிர்க் கட்சியான யூ.என்.பீ. மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பீ.) அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துடன் அடிப்படை முரண்பாடுகள் எதுவும் கிடையாது. அவர்களின் போலி பிரச்சாரங்களின் குறிக்கோள், இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுகு எதிராக உழைக்கும் மக்களின் நனவுப் பூர்வமான போராட்டம் ஒன்று தோன்றுவதை தடுப்பதே ஆகும். கொழும்பில் குடிசைகளை அகற்றுவதற்கு எதிராக தோன்றும் எதிர்ப்பை, யூ.என்.பீ.யின் நீதிமன்றத்தில் தீர்வு காணும் திட்டத்துக்குள் கட்டுப்படுத்தி கரைத்துவிடுவது இதில் ஒன்றாகும். குடியிருப்பாளர்களை நகரங்களில் இருந்து வெளியேற்றுவதில், லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டிருப்பதோடு, போலி இடது கட்சியான நவ சமசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் யூ.என்.பீ. உடன் கூட்டுச் சேர்ந்துள்ளன.

வீட்டு உரிமை மற்றும் எந்தவொரு ஜனநாயக உரிமையையும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரத்தின் ஊடாகவோ அல்லது முதலாளித்துவ அரசியல்வாதிகளின் பின்னால் போவதன் மூலமோ பாதுகாக்க முடியாது. அதற்காக தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ் வீடுகளை இழப்பவர்கள், வறிய விவசாயிகள் உட்பட, முதலாளித்துவ அரசின் தாக்குதல்களை எதிர்கொள்கின்ற அனைத்து பகுதியினரையும் அணிதிரட்டும் ஒரு பெரும் அரசியல் இயக்கம் அவசியமாகும். அத்தகைய ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஆரம்பமாக, பிரதேசத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் வறிய விவசாயிகளுடன் ஒன்றிணைந்து நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொள்வதற்கு தம்புள்ளையில் வீடுகளை இழக்க உள்ளவர்கள் முன்னணிக்கு வர வேண்டும்.

அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டமானது நேரடியாக ஒரு அரசியல் போராட்டமாகும். அதாவது ஒரு சில முதலாளிகளின் தேவைகளைப் பாதுகாக்கும் முதலாளித்துவ அரசாங்கத்துக்கு மாறாக, சமூகத்தில் பெரும்பான்மையானவர்களின் தேவைக்காக அர்ப்பணித்துக்கொண்டு, சோசலிச வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துகின்ற தொழிலாளர்கள்-விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான போராட்டமாகும்.

அத்தகைய போராட்டத்துக்கு வழி காட்டும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே. சோ.ச.க. உடன் சேர்ந்து இந்த போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கு முன் வருமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.