தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை
Fourth
anniversary
of war victims போரில் கொல்லப்பட்டவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் தமிழ் முதலாளித்துவ அமைப்புகள் இலங்கையில் ஏகாதிபத்திய தலையீட்டுக்கு அழைப்பு விடுக்கின்றன
By V. Sivagnanan use this version to print | Send feedback கடந்த மாதம் இலங்கையின் வடக்கில் இரண்டரை தசாப்தங்களுக்கும் மேலாக நடந்த உள்நாட்டுப்போரின் முடிவில், முள்ளி வாய்க்காலில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்கள் உட்பட போராளிகளும் படுகொலை செய்யப்பட்டு நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது. இந்த தினத்தை நினைவுகூர்ந்து, புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் புலம் பெயர் நாடுகளில் பல்வேறு குழுக்களாக செயற்படும் புலிகள்-சார்பு அமைப்புக்கள் துக்க நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தன. லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்த ஊர்வலத்தில் வலதுசாரிகள் முதல் போலி இடதுகள் வரை அனைத்து முதலாளித்துவ கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். பிரித்தானிய பழமைவாத கட்சியின் பாராளுமன்ற அங்கத்தவர் லீ ஸ்கொட் (Lee Scott), தொழிற் கட்சி அங்கத்தவர் சியோபன் மெக்டொனா (Siobhan McDonagh) மற்றும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலத் தலைவர் பாண்டியனும் உரையாற்றினர். தமிழகத்தில் மக்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ, இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற அங்கத்தவர் சிவஞானம் சிறீதரன் மற்றும் பலரது உரைகள் திரையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டன. முள்ளிவாய்காலில் நடந்த படுகொலைகளுக்கு அரசியல் பொறுப்பினை சுமக்கும் இந்த கட்சிகளின் பிரதிநிதிகளின் உரைகள், இராஜபக்ஷ அரசின் மீது குற்றம் சுமத்துவதையும் சர்வதேச அரசியல் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து தமிழ் மக்களுக்கு சலுகைகள் வழங்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுப்பதையும் இலக்காகக் கொண்டிருந்தன. "தொடரும் அவசரத் தேவையான", இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது ஒரு "சுயாதீனமான சர்வதேச விசாரணையை" நடத்தக் கோருவதும், பொதுநலவாய (கொமன்வெல்த்) நாடுகளின் கண்ணியத்திற்கு எதிராகச் செயற்படும் இலங்கையில் அதனது மகாநாட்டினை நடாத்துவது பொருத்தமில்லை என்பதை தெரிவிப்பதுமே இந்த நிகழ்வின் நோக்கம் என பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துதிருந்தது. பேரணியில் வந்தவர்கள் ஏந்தியிருந்த பதாகைகள் இந் நிகழ்வுகளின் பிற்போக்குத் தன்மையை வெளிப்படுத்தின. அவை ஏகாதிபத்திய தலையீட்டிற்கு அழைப்பு விடுகின்ற, மற்றும் மேலும் பின்னோக்கிச் சென்று, கடந்த நூற்றாண்டில் உலகின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை காலனித்துவ அடிமைத்தனத்தில் வைத்திருந்த “பெரிய பிரித்தானிய” முடியாட்சிக்கு அழைப்பு விடுகின்ற வாசகங்களைக் கொண்டிருந்தன. ஊர்வலத்தின் ஊடகத் தொடர்பாளரான சாம் கிருஷ்ணா, “பொதுநலவாய மாநாட்டை பிரிட்டிஷ் பிரதமரும், பக்கிங்ஹாம் அரண்மனையும் புறக்கணிக்க வேண்டும்” என்ற கோரிக்கை தொடர்பாக கூறுகையில், “அந்த மாநாட்டில் கலந்துகொள்வதாக பிரதமர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்திருந்தாலும், பிரித்தானிய பிரஜைகள் என்ற வகையில் நாம் தொடர்ந்தும் அழுத்தத்தை கொடுப்போம்,” என்றார். பேரணியில் கொண்டு செல்லப்பட்ட ஒரு பதாகை, அனைத்து தமிழ் முதலாளித்துவக் குழுக்களின் அரசியலுக்கும் ஒரு அடையாளமாக இருந்தது. அதில் எழுதப்பட்டிருந்த "சதாம், கடாபி, மிலோசோவிக்குக்கு தண்டனை, இலங்கை ஜனாதிபதிக்கு பரிசு, ஏன் இந்த பாரபட்சம்" [Saddam, Gaddafi, Milosovic punished, Sri Lankan president rewarded. Why this double standard], என்ற வாசகம், ஈராக், லிபியா மற்றும் சேர்பியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை இராணுவ ஆக்கிரமிப்பினால் தூக்கியெறிந்து, தமக்குச் சார்பான கைப்பொம்மை ஆட்சிகளை உருவாக்கியது போன்று இலங்கையிலும் தலையிடுவதற்கு கோரிக்கை விடுக்கின்றது. அமெரிக்காவில் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர், மே 18ஐ, தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு நாளாக பிரகடனப்படுத்தினார். “நாம் வாழ்ந்து கொண்டு கொண்டிருக்கும் 21ம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் உலகம் பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இம் மாற்றங்களுக்கேற்ப நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. நமது நிலைப்பாடுகளையும் கொள்கைகளையும் தெளிவாக அனைத்துலக சமூகத்தின் முன்னால் வைக்க வேண்டிய அவசியம் உள்ளது”. “இலங்கைத் தீவில், இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கிடையே நிலவும் புவிசார் அரசியல் உறவுகளும் முரண்களும் இதற்கான வாய்ப்பான சூழலை ஏற்படுத்தும் நிலைமகள் உள்ளன. இரண்டாவது, தமிழீழ ஆதவுத்தளம் ஒரு வலுமையமாகத் திரள்வடைந்து, இந்தியா, அமெரிக்கா போன்ற பலமிக்க நாடுகளை இரு அரசுகள் தீர்வுக்குச் சாதகமாக கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும்”. என அவர் தெரிவித்துள்ளார். புலம் பெயர் நாடுகளில் நடத்தப்பட்ட துக்க நிகழ்வுகளில் முன்வைக்கப்பட்ட அரசியலுடன் ஒத்துப்போகும் முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் திருகோணமலையில் நியூ சில்வர் ஸ்டார் விடுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். “விடுதலைப் புலிகள் அழிக்கப்படுவதற்கு உதவிய நாடுகள் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும். இது அமெரிக்காவாக இருந்தாலும் இந்தியாவாக இருந்தாலும் எமக்கு தீர்வை பெற்றுத் தரவேண்டும். அவர்களுக்கு ஒரு கடமைப்பாடு உள்ளது”, என அவர் தெரிவித்தார். இன்னும் துல்லியமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பேட்டியொன்றில், “சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு, சிறீலங்கா அரசாங்கத்தை தமது வழிக்கு கொண்டுவருவதற்கு தமிழ் அரசியலை பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது”, “இந்திய, அமெரிக்க மற்றும் சீன குழாம்களின் வியூக முக்கியத்துவம் வாய்ந்த புவிசார் அரசியல் நலன்களை நாம் புரிந்துகொள்ளத் தவறினால், நம் மக்களுக்கு பலனளிக்கக்கூடிய எந்த வியூகத்தையும் நாம் வகுக்க இயலாது” என்றார். மே 18 வேளையில் புலம் பெயர் நாடுகளில் இந்த குழுக்களினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளும் பேட்டிகளும் இத்தட்டுக்களின் வலதுசாரிப் பயணத்தில் புதிய கட்டத்தை குறித்து நிற்கிறன. புலிகள், இலங்கை இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தின் வெற்றிகளை பாவித்து சிங்கள முதலாளித்துவத்துடனான பேரம்பேசலுக்கு ஏகாதிபத்திய மத்தியஸ்தினை பெறுவதை அரசியல் அடித்தளமாகக் கொண்டிருந்தனர். புலிகளின் ஜனநாயாக விரோத ஒடுக்கு முறைகளுக்கு மத்தியிலும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுபவர்கள் என்ற நோக்கத்தில் அவர்கள் தமிழ் உழைக்கும் மக்கள் மத்தியில் அனுதாபத்தினை தேடிக்கொண்டனர். புலிகளின் இராணுவத் தோல்விக்குப் பின்னர், கொல்லப்பட்ட போராளிகளின் தியாகங்களுக்கு உரிமை கோரி புலம்பெயந்த நாடுகளில் உருவான குழுக்கள் எதுவும் தமிழ் உழைக்கும் மக்கள் மத்தியில் அத்தகைய எந்த ஆதரவையும் கொண்டிருக்கவில்லை. உழைக்கும் மக்களிடம் இருந்து முற்றுமுழுதாக தனிமைப்பட்ட இந்த குழுக்கள், நேரடியாக இந்திய முதலளித்துவத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் பேரம் பேசுகின்றன. இவை லிபியாவில் தேசிய இடைமருவு சபை (National Transitional Council-NTC) மற்றும் சிரிய தேசிய கூட்டணியினதும் (Syrian National Coalition -SNC) குற்றவியல் பாத்திரத்தை விட வேறு சிறப்பான பாத்திரம் எதையும் ஆற்றப் போவதில்லை. ஏகாதிபத்தியத்தின் நேரடி முகவர்களாக செயற்படுவதற்கான இந்த குழுக்களின் தயார்நிலையானது பிரிவினைவாத அரசியலின் தர்க்க ரீதியான முடிவின் வெளிப்பாடாகும். இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களின் நோக்கம் தெளிவானது. 1930 களிலும் மோசமான உலக பொருளாதார நெருக்கடிகளுக்குள் மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் ஆக்கிரமிப்பு யுத்தங்களை முன்னெடுக்கும் அமெரிக்க ஏகதிபத்தியம், இப்போது ‘ஆசியாவில் மையங்கொள்ளல்’ என்ற பெயரில் சீனாவுக்கு எதிரான யுத்தத்துக்கு தயார் செய்து வருகின்றது. இந்த யுத்தத்துக்கு தமிழ் முதலாளித்துவ, பிரிவினைவாத குழுக்களும் கட்சிகளும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதோடு, அதன் வழியில் ஒரு மூன்றாம் உலக யுத்தத்துக்கும் ஒத்துழைக்கத் தயாராக உள்ளன. அதன் மூலம் சிங்கள முதலாளித்துவத்துடன் உயர்ந்த மட்டத்திலான ஒரு பேரம்பேசலுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ் முதலாளித்துவத்தின் சிறப்புரிமைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவை நனவாக செயற்படுகின்றன. தமிழ் மக்கள் மீதான இனவாத யுத்தத்தின் உச்சக்கட்டமான முள்ளிவாய்க்கால் படுகொலைகளும், தொடரும் இராணுவ நெருக்கடிகளும் ஒரு தனிமைப்பட்ட நிகழ்வு இல்லை. ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் ஏகாதிபத்திய யுத்தத்தினால் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களின் படுகொலைகளுடன் நேரடியாக இணைந்துள்ளது. இந்த கொலைகளுக்கு பொறுப்பான அமெரிக்க, பிரித்தானிய ஏகாதிபத்தியங்களை ஒடுக்கப்பட்ட மக்களினதும் ஜனநாயக உரிமைகளினதும் பாதுகாவலனாக வஞ்சத்தனமாக தூக்கிபிடித்து இராஜபக்ஷ அரசாங்கத்தினை தண்டிக்க விடுக்கும் கோரிக்கை, முப்பது வருட போரினால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களை பணயமாக்கி, தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை உறுதி செய்வதில் மட்டுமே தங்கியிருக்கிறது இதுவே தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA), தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF), நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), உலகத் தமிழர் பேரவை (GTF), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் வேலைத்திட்டமாகும். யுத்தங்களுக்கும், அழிவுகளுக்கும் மூலகாரணமான முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகளை வென்றெடுக்க முடியாது. இந்த உரிமைகளை ஒரு சோசலிச புரட்சியின் பாகமாகவே நிலை நிறுத்த முடியும். மே 18 நிகழ்வுகள், கொல்லப்பட்ட மக்களுக்கு தீபம் ஏற்றுவதற்கும் அஞ்சலி செலுத்துவதற்கும் அப்பால் பின்வரும் கேள்விகளை எழுப்புகின்றன. “ஆசியாவில் மையங்கொள்ளல்” என்ற பெயரில் அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகள் இந்தப் பிராந்தியத்தை கொலைக்களமாக ஆக்குவதற்கு ஒத்துழைப்பதா? இல்லையேல் யுத்த முயற்சிகளை தோற்கடிக்கவும் யுத்தத்துக்கும், படுகொலைகளுக்கும், அழிவுகளுக்கும் மற்றும் ஜனநாயக உரிமை மீறல்களுக்கும் அடிப்படைக் காரணமான இந்த காலாவதியான முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கி வீசி இந்திய உப கண்டத்திலும், உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்தை சோசலிசத்திற்கான போராட்டதிற்கு அணிதிரட்டுவதா? யுத்தத்தினை நிரந்தரமாக நிறுத்தும் போராட்டமானது ஒரு சர்வதேச குணாம்சத்தினை முன்நிபந்தனையாக கொண்டிருக்கின்றது. இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் போர்களுக்கு ஆதரவு கொடுக்கும் முதலாளித்துவ கட்சிகள், தொழிற்சங்கங்கள், போலி இடதுகள் இவர்களுக்கு கோரிக்கை விடும் தமிழ் முதலாளித்துவ அமைப்புக்கள் ஆகியவற்றினை நிராகரிக்க வேண்டும். அமைப்பு ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் இவர்களிடம் இருந்து உடைத்துக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான கட்சியினை கட்டுவது அவசியமாகின்றது. தேசியப் பிரச்சினை தொடர்பாக லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டது போல்: "தேசியப் பிரச்சினை எங்கும் சமூகப் பிரச்சினையுடன் இணைந்துகொள்கிறது. உலகத் தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே பூகோளத்தின் அனைத்து தேசிய இனங்களுக்குமான உண்மையானதும் உறுதியானதுமான சுதந்திரத்தை உத்தரவாதம் செய்ய முடியும்". இந்த முன்னோக்குக்காகவே இலங்கையிலும் உலகம் முழுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பகுதிகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் போராடுகின்றன. |
|
|