World Socialist Web Site www.wsws.org |
WSWS:Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கிTurkish protests grow as Erdogan calls counter-demonstrations எர்டோகன் எதிர்-ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுகையில் துருக்கிய எதிர்ப்புக்கள் பெருகுகின்றனBy Alex Lantier எதிர்ப்புக்களை சகித்துக் கொள்வதற்கும் "ஒரு எல்லை உண்டு" என துருக்கிய பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகன் எச்சரித்து, அடுத்த வார இறுதியில் எதிர்-ஆர்ப்பாட்டங்களுக்கு தன் ஆதாரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், அவரின் இஸ்லாமியவாத அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக்கள் வார இறுதியில் பெருகியுள்ளன. எர்டோகனுடைய திட்டங்களான, இஸ்தான்புல் நகரமையத்தில் இருக்கும் வரலாற்றுப் புகழ்வாய்ந்த பகுதியை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்திற்கு தோன்றிய எதிர்ப்புக்களை நசுக்கும் முயற்சியில் தோற்று பொலிசார் பின்வாங்கிய பின்னர், சனிக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் இஸ்தான்புலின் தக்சிம் சதுக்கத்தை நிரப்பினர். Besiktas மற்றும் Fenerbahce கால்பந்துக் குழுவினர் தங்கள் ஆதரவாளர்களை ஆர்ப்பாட்டத்தில் சேருமாறு அழைப்பு விடுத்தனர்; தஸ்கிம் சதுகத்தில் நடந்த மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களில் இதுவும் ஒன்றாகும். “எர்டோகனே இராஜிநாமா செய்” என்று எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டனர் ஆனால் பொலிசார் நீரை பாய்ச்சி எதிர்ப்பாளர்களை கேலி செய்ததை அடுத்து பொலிசும் எதிர்ப்பாளர்களும் மேற்கு இஸ்தான்பூல் பகுதியான காசியில் மோதினர். தலைநகர் அங்காராவில் கிஜிலே சதுக்கத்தில் சனி இரவு 10.30 மணியளவில் பொலிசார் கிட்டத்தட்ட 5,000 எதிர்ப்பாளர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு, நீர் பாச்சுதல் ஆகிய முறைகளில் தாக்கினர். நேற்று குறைந்தப்பட்சம் இருவர் காயமுற்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன; அங்காரா முழுவதும் மோதல்கள் இரவு மற்றும் ஞாயிறு அதிகாலையிலும் தொடர்ந்தது. துருக்கியின் தேசிய மருத்துவர்கள் சங்கம், எதிர்ப்புக்கள், இரு எதிர்ப்பாளர்களையும் ஒரு பொலிஸ்காரரையும் இறப்பில் தள்ளிவிட்டது, கிட்டத்தட்ட 4,800 பேர் நாடெங்கிலும் காயமுற்றுள்ளனர் எனக் கூறுகிறது. இந்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட காயமுற்ற 600 பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர். எதிர்ப்பாளரகள் மற்றொரு முக்கிய அணிவகுப்பை நேற்று பிற்பகல் தக்சிம் சதுக்கத்தில் நடத்தினர்; நாடெங்கிலும் உள்ள நகரங்களில் எதிர்ப்புக்கள் தொடர்ந்தன. “எர்டோகன், இராஜிநாமா செய்” என்று அவர்கள் முழங்கி சதுக்கத்தில் பல இடங்களில் பாடல், ஆடல்களிலும் ஈடுபட்டனர். தக்சிம் ஒருமைப்பாட்டு அரங்கு (Taksim Solidarity Platform) தஸ்கிம் சதுக்க அணிவகுப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது – இது ஒரு உயர்கல்வியார்கள், கட்டிடக்கலைஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் எதிர்தரப்பு குடியரசு மக்கள் கட்சி (Republican People’s Party -CHP) உறுப்பினர்கள் அடங்கிய குழுவாகும்; இவர்கள் எதிர்ப்புக்களை அகற்ற, எர்டோகனுடன் உடன்பாடு காண விதிமுறைகளை அமைக்க முயல்கின்றனர். தக்சிம் ஒருமைப்பாட்டு அரங்கின் சூழ்ச்சிக்கையாளல்கள் —மற்றும் தொழிற்சங்க அதிகாரிகள், போலி இடது குழுக்கள், CHP போன்ற தேசியவாத கட்சிகளுடையதும்-- எதிர்ப்பு இயக்கம் எதிர்கொள்ளும் முக்கிய அரசியல் முன்னோக்குப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகின்றன. எர்டோகனின் கொள்கைகளான, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பு, சிரியாவில் அமெரிக்க தலைமையிலான பிற்போக்குத்தன போருக்கு ஆதரவு ஆகியவற்றுக்கான பரந்த விரோதம் எதிர்ப்புக்களின் மையப் புள்ளியாக உள்ளது. பல வர்ணனையாளர்கள், துருக்கிய தக்சிம் சதுக்க எதிர்ப்புக்களை, 2011ல் கெய்ரோவில் எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை அகற்ற புரட்சிரப் போராட்டங்களை நடத்திய தஹ்ரீர் சதுக்க எதிர்ப்புக்களுடன் ஒப்பிட்டுள்ளனர். ஆனால் இரண்டு போராட்டங்களுக்கும் இடையே அப்பட்டமான வேறுபாடுகள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக பெப்ருவரி 2011ல் எகிப்தில் தொழிலாள வர்க்கம் தலையிட்டு, முபராக்கை கீழே வீழ்த்திய ஒரு தொடர் சக்திவாய்ந்த பரந்த வேலைநிறுத்தங்களை முன்னெடுத்திருந்தனர். இவை எகிப்தின் அரச-கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருந்த தொழிற்சங்கங்களுக்கு எதிராக இயக்கப்பட்டிருந்ததோடு, எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் அகப்படாதிருந்தது. சிக்கன நடவடிக்கை, போர், ஜனநாயக உரிமைகள் இவற்றிற்கு எதிரான ஒரே முன்னோக்கிய பாதை, துருக்கியிலும் எர்டோகன் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுதான்; அது தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் ஆகியவற்றில் இருந்து சுயாதீனமாகவும் அவற்றை எதிர்த்தும் நடத்தப்பட வேண்டும். துருக்கிய எதிர்ப்பு இயக்கம் அந்த மட்டத்திலான முன்னோக்கை முன்வைக்கவில்லை, இவை தொழிற்சங்கம் மற்றும் CHP உடைய பிற்போக்கு சக்திகளின் அரசியல் செல்வாக்கின் கீழேயே உள்ளன. இவை, ஒரு புரட்சியை தவிர்க்கவும் ஏகாதிபத்தியத்துடனான சூழ்ச்சிக்கையாளல்களில் தங்கள் கனத்தை அதிகரிக்கவும் எர்டோகனுடன் உடன்பாடு காண விரும்புகின்றன. எர்டோகன் இந்த நிலைமையை பயன்படுத்தி தன்னுடைய இஸ்லாமியவாத நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சியின் (Justice and Development Party -AKP) ஆதரவாளர்களை அணிதிரட்டி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறையை இயக்க விரும்புகிறார். எர்டோகன் மூன்று நகரங்களான மெர்சின், அடனா மற்றும் அங்காராவிற்கு விஜயம் செய்திருக்கையில் நேற்று AKP, அடுத்த சனி, ஞாயிறுகளில் முறையே அங்காரா மற்றும் இஸ்தான்பூலில் அரசாங்க சார்பு எதிர்-ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அடானாவில் எதிர்ப்பாளர்களை விரட்டுகையில் பாலம் ஒன்றில் இருந்து கீழே ஒரு பொலிஸ் அதிகாரி விழுந்தார் எனக் கூறப்படுகிறது; இங்கு எர்டோகன், பொலிஸ்காரரை “தியாகியாக்கியதற்கு” எதிர்ப்பாளர்களை கண்டித்தார். எதிர்ப்புக்களை மிருகத்தனமாக அடக்கியதில் தொடர்புடைய பொலிசார் இராஜிநாமா செய்யவேண்டும் என்ற அழைப்புக்களையும் அவர் தாக்கினார்; எதிர்ப்பாளர்களை பயங்கரவாதிகள் என்று அவதூறு கூறினார். “இவர்கள் விருப்பத்திற்காக நாம் பொலிசை தியாகம் செய்யமாட்டோம். தெருக்களில் அராஜகவாதிகளும், பயங்கரவாதிகளும் திரிவதற்கு அனுமதிக்கமாட்டோம்” என்றார். எர்டோகன் ஆதரவு மற்றும் எதிர்ப்பு சக்திகள் முந்தைய இரவும் மோதியிருந்தன; அது எர்டோகன் ஆதரவாளர்கள் எர்டோகனுடைய தாய்நகரான ரைசில் வியாழன் அன்று எதிர்ப்பாளர்களை தாக்கியிபின் இரண்டாம் முறை நடக்கும் மோதல் ஆகும். பொலிசார் எதிர்ப்பாளர்களை அங்காராவில் தாக்குகையில் எர்டோகன் கூறினார்: “நாங்கள் பொறுமையாக இருந்துவிட்டோம், இன்னும் பொறுமையாக இருக்கிறோம், ஆனால் பொறுமைக்கும் எல்லை உண்டு. அதிகாரத்தில் உள்ள இந்த தேசத்தின் கட்சியின் பொறுமையை மதிக்காதவர்கள் விலை கொடுக்க நேரிடும்.” வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள பெரிய வங்கிகள் மற்றும் அரசாங்கங்கள், எதிர்ப்பாளர்களுடன் சமரசம் காண அழுத்தம் கொடுக்கக்கூடும் என்ற அச்சத்தை எதிர்கொள்ளும் வகையில் அவர்கள் மீதும் எர்டோகன் வெற்றுத் தாக்குதல்களை நடத்தினார், உதாராணமாக துருக்கிய கடன் மீதான வட்டிவிகிதத்தை அவர்கள் அதிகரிக்கலாம், கடன் கொடுப்பதை நிறுத்தலாம் என்ற கருத்து வெளிப்பட்டிருக்கையில். அவர் கூறினார்: “வட்டிக்கு செல்வாக்குச் செலுத்தும் குழு ஒழுங்காகச் செயல்பட வேண்டும். என் மக்களை இச்செல்வாக்குக் குழு பல ஆண்டுகளாகச் சுரண்டி உள்ளது. நாம் நீண்டகாலம் பொறுமையாக இருந்துள்ளோம். ஒரு வங்கி அல்லது இரண்டிற்கு இதை நான் கூறவில்லை. இச்செல்வாக்குக்குழுவில் இருக்கும் அனைத்துப் பிரிவிற்கும் கூறுகிறோம். எங்களுக்கு எதிராக இப்போரை தொடங்கியவர்கள், மிக அதிக விலையைக் கொடுப்பர். பங்குச் சந்தை சரிவிற்கு முயன்றவர்களுக்கு: தயிப் எர்டோகனுக்கு அங்கு பணம் இல்லை. அது சரிந்தால் அத்துடன் நீங்களும் சரிவீர்கள். பங்குச் சந்தை ஊகத்தை கண்டறிகின்ற கணமே, நாம் உங்கள் தொண்டை வழியே அதை உள்ளே தள்ளிவிடுவோம்.” மத்திய கிழக்குப் போர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக சிரியா விடையத்தில், வாஷிங்டனுடன் நெருக்கமாக பிணைந்திருக்கும் வெளிநாட்டுக் கொள்கையுடைய அரசாங்கத்திடம் இருந்து வரும் இச்சொற்கள் ஒரு வெற்று உரையாகும். மேலும் இந்த அரசாங்கம், துருக்கியின் நடப்புக் கணக்குப்பற்றாக்குறைக்கு நிதியளிக்க சர்வதேச வங்கிகளையே நம்பியுள்ளது. எர்டோகன் இத்தகைய கருத்துக்களை கூறிய அதேநேரத்தில், பிற துருக்கிய அதிகாரிகள் இழிந்த முறையில் எதிர்ப்பாளர்களுடான மோதலை குறைமதிப்பிற்கு உட்படுத்த விரும்பினர்; இது மேற்கத்தைய செய்தி ஊடகத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கிய வகையில் இருந்தது. இஸ்தான்புலின் கவர்னர் ஹுசெயின் அவ்னி முத்லு —இவருடைய உத்தரவின் பேரில்தான் கடந்த வாரம் பொலிசார் எதிர்ப்பாளர்களை மிருகத்தனமாகத் தாக்கினர்— தக்சிம் சதுக்கம் மற்றும் அருகிலுள்ள கெஜி பூங்கா பற்றி ட்விட்டரில் அபத்தமான தகவல்களை வெளியிட்டார்: “இளைஞர்களே, கெஜிப் பூங்காவில் பறவைகள் பாட்டு, தேனீக்களின் பரபரப்பு, லிண்டென் மரங்களின் வாசனை இவற்றுடன் நீங்கள் நல்ல காலைப்பொழுதைக் கழித்தீர்கள் என கேள்விப்படுகிறேன்.... உங்களுடன் நானும் இருக்க விரும்புகிறேன்... நாம் ஒருவரோடு ஒருவர் ஒத்துப் போகாவிட்டாலும், நாம் நம் பிரச்சினைகளை மனிதாபிமானம் நீதிப் பார்வையில் காணவேண்டும்; ஒவ்வொரு தனிநபரும் மேலானவர்கள், சிறப்பானவர்கள்”. நியூ யோர்க் டைம்ஸ், எர்டோகனை விமர்சிக்கும் கெஜி ஜனநாயக இயக்கத்தினுடைய ஒரு முழுப்பக்க விளம்பரத்தை, அதன் வெள்ளிப் பதிப்பில் வெளியிட்டதற்கு துருக்கிய அதிகாரிகள் குறைகூறியுள்ளனர். துருக்கிய நாளேடு ஹுரியத் விளம்பரம் பற்றி எழுப்பிய வினாக்களுக்கு விடையிறுத்த கடிதத்தில் டைம்ஸ் எழுதியது: “முதல் திருத்த சட்டம், இத்தகைய விளம்பரத்தை வெளியிடுவதற்கு உரிமையளிக்கிறது என நாங்கள் நம்புகிறோம்; அது எங்களுக்கு செய்திகள், தலையங்கங்கள் வெளியிட அனுமதிப்பதன் அதே முக்கியத்துவத்துடன் பொது மக்கள் உரிமையும் கேட்கப்படவும் உத்தரவாதம் அளிக்கிறது”.
அரசிலமைப்பு உரிமைகள், சுதந்திரங்கள் பற்றிய டைம்ஸ் இன் பிரார்த்தனைகள் —அதுவும் உள்நாட்டு உளவுபார்ப்பு மற்றும் பொலிஸ் அரச கருவியைக் கட்டமைக்க ஒபாமா நிர்வாகத்திற்கு ஆதரவளிக்கையில்— இழிவானதும் வெற்றுத்தனமானதும் ஆகும். டைம்ஸ், அமெரிக்க வெளியுறவுக்கொள்கை நடைமுறையின் சில பிரிவுகளின் கணக்கீடுகளுக்கு ஏற்ப இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை; அவை தங்களின் சொந்த நோக்கங்களுக்காக எதிர்ப்பு இயக்கத்திற்குள் இருக்கும் ஏகாதிபத்திய கூறுபாடுகளை பயன்படுத்த விழைகின்றன. |
|