World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈரான்

US threatens Iran, Hezbollah for backing Syria

ஹெஸ்போல்லா சிரியாவை ஆதரிப்பதற்காக அமெரிக்கா ஈரானை அச்சுறுத்துகிறது

By Chris Marsden 
7 June 2013

Back to screen version

நேற்று வெள்ளை மாளிகை இதுவரை இல்லாத அளவுக்கு அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டு, ஈரானையும், லெபனிய ஷியா இயக்கமான ஹெஸ்போல்லாவையும் “கொடுங்கோன்மைக்கு பங்காளிகள்” என அவை சிரியாவில் அசாத் ஆட்சியை ஆதரிப்பதற்கு கண்டித்துள்ளது.

இந்த வாரம், சிரிய அரசாங்க படைகள் லெபனிய எல்லைக்கு அருகே இருக்கும் மூலோபாய சிறுநரான Qusayr ல் மே19 தொடங்கி பலவார போருக்குப்பின் வெற்றி பெற்றுவிட்டதாக உரிமைகோரியுள்ளது. Qusayr டமாஸ்கஸையும் மத்தியதரைக் கடலோரப் பகுதியையும் இணைக்கும் நில வழியில் உள்ளது; இது அசாத்தின் அலவைட் பிரிவின் தாயகம் ஆகும்; அதே நேரத்தில் லெபனானுக்கு எதிர்த்தரப்பின் விநியோக வழிகளை தக்க வைத்துக் கொள்ளும் திறவு கோலும் ஆகும்.

இப்போரில் லெபனானின் ஷியா ஹெஸ்போல்லா போராளிகள் அசாத்திற்கு ஆதரவாக ஈடுபட்டுள்ளனர்; அவர்கள், அல் குவேடாவுடன் பிணைந்துள்ள அல் நுஸ்ரா முன்னணி மற்றும் பிராந்தியத்தின் சுன்னி அரசுகள் ஆதரவு கொண்ட வெளிநாட்டுப் போராளிகள் என பல சுன்னிக் குழுக்களுக்கு எதிராக போரிடுகின்றனர்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே இதை கண்டித்து பதிலளிக்கையில், “Qusayr மீதான தாக்குதலுக்கு அசாத் ஆட்சியை வலுவாக கண்டிக்கிறது” என்றார்; மேலும், “இந்த ஆட்சி Qusayr போன்ற இடத்தின் மீதான எதிர்த்தரப்பின் கட்டுப்பாட்டை தானே எதிர்க்க முடியவில்லை. எனவேதான் அவை ஹெஸ்போல்லா மற்றும் ஈரானை தங்கள் பணிக்கு நம்பியுள்ளனர்.” என்றார்.

Qusayr இல் படுதோல்வி அடைந்தபின், சுதந்திர சிரிய இராணுவத்தின் தலைமை இராணுவக் குழுவின் தலைவர் ஜெனரல் சலிம் இட்ரிஸ், பிபிசியிடம் ஹெஸ்போல்லா போராளிகள் சிரியா மீது “படையெடுத்துள்ளனர்”, “அவர்கள் அதைத் தொடர்கையில், லெபனிய அதிகாரிகள் அவர்கள் சிரியாவிற்குள் வருவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஹெஸ்போல்லா போராளிகளுடன் லெபனிய நிலப்பகுதிக்குள் போரிட எங்களுக்கு அனுமதி உண்டு என நான் நினைக்கிறேன்.” என்றார்.

புதன் இரவு தன் சொல்லை இவர் காக்கும் வகையில் சிரியாவில் இருந்து டஜன் ராக்கெட்டுக்கள் லெபனிய நகரமான பால்பெக் மீதும் அதைச்சுற்றியும் ஏவப்பட்டன; பல மக்கள் காயமுற்றனர். லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் 11 ராக்கெட்டுக்கள் நகர மையம் உட்பட பல இடங்களைத் தாக்கின என்று கூறியுள்ளது.

போரை விரிவாக்கும் மற்றொரு முயற்சியாக, எதிர்த்தரப்புப் போராளிகள் சிரிய கட்டுப்பாட்டின்கீழ் உள்ள, இஸ்ரேலை எல்லையை ஒட்டி இருக்கும் கோலான் ஹைட்ஸ் க்வெனீட்ரா கடப்பைக் கைப்பற்றினர். ஆஸ்திரியா தான் அதன் 390 துருப்புக்களை 1,000 வலுவான ஐக்கிய நாடுகள் படையில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது; இது சிரியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு போர்நிறுத்தத்தைக் கண்காணிக்கிறது. டெல்அவிவ் இந்த எல்லப்பகுதி ஒரு மூடப்பட்ட இராணுவப் பகுதி என்று அறிவித்து, பிரதான சாலை இணைப்பை மூடி விவசாயிகளையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளது. எல்லைப் பகுதி சிரிய இராணுவத்தால் மீட்கப்பட்டது; ஆனால் அதற்கு முன் இஸ்ரேலிய நிலப்பகுதியில் மூன்று எறிகுண்டுகள் விழுந்தன.

இந்த வாரம் முழுவதும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அழுத்தங்களை தூண்டியுள்ளன. கடந்த சில நாட்களில் பிரான்ஸ், பிரித்தானியாவில் இருந்து அசாத் ஆட்சி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது என்னும் குற்றச்சாட்டுக்கள் நிறைய எழுந்துள்ளன. இது இராணுவ ஆக்கிரோஷத்தை முடுக்கிவிடுவதற்கு ஒரு போலிக்காரணம் என்பது வெளிப்படை.

செவ்வாயன்று பாரிசில் பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி Laurent Fabius சிரியாவில் பயன்படுத்தப்படும் இரசாயன ஆயுதம் குறித்து ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவின் தலைவருக்கு இராணுவ நச்சுப் பொருட்கள் அடையாளம் காணப்பட்ட பகுப்பாய்வுகளை அனுப்பிவைத்துள்ளதாகக் கூறினார். “இந்தப் பகுப்பாய்வுகள் சரின் வாயு இருப்பதை நிரூபிக்கின்றன. இச்சான்றை ஒட்டி, பிரான்சிற்கு இப்பொழுது சிரியாவில் பல முறை சரின் வாயு பயன்படுத்தப்பட்டுள்ளது என உறுதியாகி இருக்கிறது, அது ஆங்காங்கே பயன்படுத்தப்படுகிறது என்பதும் தெளிவு.” என்றார்.

பின்னர் ஃபாபியுஸை எதிரொலிக்கும் வகையில் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், “நம்மிடம் நிரூபணக் கூறுபாடுகள் உள்ளன, சர்வதேச சமூகம் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்றார்.

இருவரும் பிரான்ஸ் ஒருதலைப்பட்சமாக செயல்படாது, வாஷிங்டனுடன் பேச்சுக்கள் நடத்தும் என வலியுறுத்தியுள்ளனர். அவர்களுடைய கவலை ஜெனீவாவில் நடக்கத் திட்டமிடப்பட்டுள்ள சமாதானப் பேச்சுக்கள் வெளிப்படையாக ஒரு கட்டுக்கதை போன்றது, அதுவும் ஒபாமா நிர்வாகம் ரஷ்ய எதிர்ப்பை நடுநிலைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கையில் அம்பலமாகிவிடக்கூடாது என்பதுதான்.

“ஒரு வழிவகை சந்தேகத்திற்கு இடமில்லாமல் மீறப்பட்டுள்ளது” என்றார் ஃபாபியுஸ். பிரான்ஸும் அதன் நட்பு நாடுகளும், “எதிர்கொள்ளுவதா, எத்தகைய ஆயுதம் தாங்கிய முறையில் என்பது பற்றி முடிவெடுக்க வேண்டும்... ஆனால் அதே நேரத்தில் நாம் பின் வரவிருக்கும் சமாதான மாநாட்டையும் தடை செய்யக்கூடாது.”

ஏற்கனவே திட்டமிட்டபடி இம்மாநாடு இப்பொழுது இம்மாதம் நடைபெறாது, ஜூலை மாதம்தான், நடந்தால், நடைபெறும்

பிரான்சின் அறிவிப்பு, மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. ஆணைக்குழுவின் பரீட்சார்த்த கண்டுபிடிப்புகளுக்கு வலுவூட்டும் கருத்தைக் கொண்டது; அது மார்ச், ஏப்ரல் மாதங்களில் நான்கு சந்தர்ப்பங்களில் சிரியாவில் இராசயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்த “நியாயமான சான்றுகளை” மேற்கோளிட்டுள்ளது, ஆனால் எவர்மீதும் குற்றம் சாட்டவில்லை.

பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகமும் சிரியாவில் ஒன்று அல்லது அதற்கு மேல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்த திரவங்கள் Porton Down நிலைய விஞ்ஞானிகளால் சரின் பயன்பாட்டிற்கான சான்றுகளைக் கொண்டுள்ளன என்று கூறியது

பால்கன்களிலும் ஈராக்கிலும் நடத்திய போர்களை நியாயப்படுத்த அவற்றின் பொய்யான சான்று இருக்கையில் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றின் கூற்றை வினாவிற்கு உட்படுத்துவதற்கு காரணம் உண்டு—அதுவும் இப்பொழுது கூறப்படுபவை பொருளற்றும், சுயாதீன சரிபார்த்தலும் இல்லாத நிலையில்.

பிரான்ஸ் பயன்படுத்திய இரத்த மாதிரிகள் சிரியாவில் இருந்து Le Monde பத்திரிகையாளர்களால் கடத்தப்பட்டன, உள்ளூர் டாக்டர்கள் கொடுத்தவை எனக் கூறப்படுகிறது. மற்ற மாதிரிகள் எப்படி பிரான்சினால் பெறப்பட்டன என்பது குறித்த விவரங்கள் இல்லை. ஒரே ஒரு முறை ஃபாபியுஸ், சரின் பயன்பாடு நேரடியாக அரசாங்கச் சக்திகள் குறித்து கூறப்படலாம் என்றும் ஆட்சியும் அதன் உடந்தை அமைப்புக்களும்தான் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் கூறினார்.

ஐக்கிய இராச்சியத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இன்னும் உறுதியற்ற தன்மையில் அசாத் ஆட்சி இராசயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளன என்பதில் “100 சதவிகிதம் உறுதி இல்லை” என்றார். FCO அது எப்பொழுது, எங்கு அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன என்பதை உறுதிபடுத்தவில்லை. பிரித்தானியாவில் ஐ.நா.விற்கான தூதர் மார்க் லயல் கிரான்ட் அவர்கள் பல இராசயனங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்த சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும், “சில நேரங்களில் அவற்றில் சரின் இருந்தது, சில நேரம் இல்லை என்றும் கூறினார்.

ஐ.நா. விசாரணைக்குத் தலைமை தாங்கும் ஏக் செல்ஸ்டார்ம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு “தகவல் பற்றிய உண்மை தகவல் சேகரிக்கப்பட்டது எப்படி சங்கலித் தொடரில் இருந்தது என்பது குறித்த உறுதியான சான்று இல்லாத நிலையில் உறுதிப்படுத்தப்படுவதற்கு இல்லை” என்று எச்சரித்தார்.

இறுதியில் அடுத்து நடக்க இருப்பது பாரி  ஸிலோ அல்லது லண்டனிலோ முடிவெடுக்கப்படாமல், வாஷிங்டனில்தான் முடிவெடுக்கப்படும்.

ஜனாதிபதி பாரக் ஒபாமா இரசாயன ஆயுதங்கள் பயன்பாடு, “ஒரு சிவப்புக் கோட்டை” மீறுகிறது என எச்சரித்தார்; ஆனால் எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவில் சிரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

செவ்வாய் மாலை நேட்டோ பாதுகாப்பு மந்திரிகளின் பிரஸ்ஸல்ஸ் கூட்டத்தில், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் கூற்றுக்களை விவாதித்தபின், பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் நிருபர்களிடம் தான் எந்த சான்றையும் காணவில்லை என்றும், நேட்டோவின் பங்கு பாதுகாப்பிற்குட்பட்ட  நட்பு உறுப்பு நாடுகளான துருக்கிக்கு உதவுதல் என்பதைத் தொடரும் என்றார். “இதை மீறி சிரியா பற்றி கூடுதல் போர்த்திட்டங்களை நாங்கள் பெறவில்லை” என்று அவர் கூறினார்.

அமெரிக்காவில் சிரியாவிற்கு எதிரான போருக்கு மக்கள் ஆதரவு இல்லை; ஏதேனும் தவறாகப் போய்விட்டால், ஆளும்வர்க்கத்திற்கு இழப்பு அதிகமாகிவிடும். எனவேதான் இன்றுவரை, ஒபாமா நிர்வாகம் உள்ளூர் இடைத்தரகர்கள் மூலம் செயல்படுவதை விரும்பியுள்ளது—FSA மற்றும் அதன் பிராந்திய ஆதரவாளர்களான துருக்கி, வளைகுடா நாடுகள் சௌதி அரேபியா மற்றும் கட்டார் என. அமெரிக்கா, அசாத்தை ஈரானின் நண்பர் என்ற முறையில் அகற்ற விரும்புகிறது; அதே நேரத்தில் ரஷ்யாவையும் அதிகம் தூண்ட விரும்பவில்லை; எனவே மாஸ்கோ ஏற்கக் கூடிய மாற்று ஆட்சியை தயாரிக்க முற்பட்டுள்ளது.

இதைத்தவிர, இம்மோதல் கட்டுப்பாட்டைவிட்டு மீறி, அண்டை லெபனான், ஈராக், இஸ்ரேலை கூட இழுக்கிறது என்பது குறித்தும் பெருகிய கவலை உள்ளது. எப்படி விடையிறுக்க வேண்டும் எனபது குறித்து குடியரசுக் கட்சியினரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. செனட்டர் ஜோன் மக்கெயின் மற்றும் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் கொண்டலீசா ரைஸ் போன்றோர் ஒபாமாவின் “சிவப்புக்கோடு” அச்சுறுத்தலை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு கடுமையாக ஆதரவு தேடுகின்றனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் செவ்வாயன்று, மாஸ்கோ இதுகாறும் சக்திவாய்ந்த S300 நிலத்தில் இருந்து வான் செல்லும் ஏவுகணைகள் முறையை டமாஸ்கசிற்கு அனுப்பாமல் உள்ளது. முன்னய ஒரு பேச்சில், இது ஒரு நிலையான காரணியாக” இருக்கும், சிரியா மீது வெளிநாட்டு தலையீட்டை தடுக்கும் என அவர் கூறியிருந்தார்.

செவ்வாயன்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் Yekaterinburg இல் பேசியபின், புட்டின், பல ஆண்டுகளுக்கு முன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இன்னும் “யதார்தமாக்கப்படவில்லை”, ஏனெனில் “நாங்கள் பிராந்தியத்தில் சமச்சீர்நிலையைக் கவிழ்க்க விரும்பவில்லை” என்றார்.

ஆனால் “நேரடி இராணுவ நடவடிக்கை பலத்தின் மூலம் நிலைமையை மாற்ற மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிகளும் தோற்றுவிடும், தவிர்க்கமுடியாத வகையில் அதிக மனிதாபிமான இழப்புகளை கொண்டுவரும்” என்றார்.