World Socialist Web Site www.wsws.org |
Obama defends massive spying on Americans அமெரிக்கர்கள் மீதான பாரிய ஒற்றுக்கேட்டலை ஒபாமா ஆதரிக்கிறார்
Barry Grey தொலைபேசி அழைப்புக்கள், மின்னஞ்சல்கள் மற்றும் அமெரிக்க மக்களுடைய பிற தகவல்களை அரசாங்கம் முற்றிலும் ஒற்றுக்கேட்பதை ஜனாதிபதி ஒபாமா வெள்ளியன்று உறுதியாக ஆதரித்தார். கலிபோர்னியாவில் சான் ஜோஸ் என்னுமிடத்தில் நிருபர்களிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான உச்சிமாநாட்டிற்கு முன் பேசிய ஒபாமா பென்டகனை தளமாக கொண்ட தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) மில்லியன் கணக்கான அமெரிக்கர்களை இலக்கு வைத்து இரகசியத் தகவல் சேகரிப்பதை செய்தித்துறையினர் அம்பலப்படுத்தியுள்ளது ஒரு “பரபரப்புச் செயல்” என்று குறிப்பிட்டார். முதலில் புதன் அன்று பிரித்தானிய கார்டியன் செய்தித்தாளால் அம்பலப்படுத்தப்பட்ட முக்கிய அமெரிக்க தொலைபேசி நிறுவனங்களின் அனைத்து வாடிக்கையாளர்களின் தொலைபேசி சான்றுகளை NSA சேகரித்தல் மற்றும் வியாழன் அன்று கார்டியன் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டினால் அம்பலப்படுத்தப்பட்ட NSA, FBI ஆகியவை முக்கிய இணைய தள நிறுவனங்களின் கணிணிச் சேவைகளை ஒற்றுப்பார்த்து மின்னஞ்சல்கள், புகைப்படங்கள், பேச்சுக்கள், ஆவணங்கள் ஆகியவற்றை கண்காணித்தமை ஒபாமா அரசியலமைப்பில் பாதுகாக்கப்படும் அந்தரங்க உரிமைகள் மீதான “சாதாரண அத்துமீறல்” என விவரித்தார். இத்தகைய ஓர்வேல்லிய கண்காணிப்பு திட்டங்களை வாடிக்கையானது எனவும், அமெரிக்க மக்களை பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் நியாயப்படுத்தும் கருத்தின் மூலம் ஒபாமா ஆதரித்தார். காங்கிரசால் ஒப்புதல் கொடுக்கப்பட்டு, வெளியுறவு உளவுத்துறைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (FISA) செயல்படும் முத்திரைகுத்தும் நீதிமன்றங்களின் இசைவையும் பெறுவதால் இவை சட்டபூர்வமானவை என்று அவர் கூறினார். “ஏராளமான பாதுகாப்பு முறைகள்” இதில் உள்ளன என்று அறிவித்த அவர், உளவு மற்றும் பொலிஸ் நிறுவனங்கள்மீது இருக்கும் கண்காணிப்பு எனக்கூறப்படுவது குறித்து உறுதியாக ஏதும் கூறவில்லை. இதுவரை இத்திட்டங்களில் பலவற்றைப் போலவே இவையும் இரகசியம் என வரையறுக்கப்பட்டுள்ளன என்றார். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அவருடைய கருத்துக்கள் குதர்க்கத்தினதும் பொய்களுடையதும் ஒரு தொகுப்புத்தான். பலமுறை அவர் “உங்கள் தொலைப்பேசி அழைப்புக்களை எவரும் கேட்கவில்லை” என வலியுறுத்தினார்; ஏதோ அது அவ்வாறாக இருக்குமானால், இராணுவத்திடம் சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் குறித்த தகவல்கள் இருப்பது எந்த தீமையையும் தராது என்பதைப் போல். இதே போல் ஒபாமா மில்லியன் கணக்கான மக்களின் மின்னஞ்சல்கள் மற்றும் பிற தொடர்புகள் குறித்த ஒற்றுப்பார்க்கும் இணைய தள கண்காணிப்புத் திட்டமும் அமெரிக்கர்களை “இலக்கு” கொள்ளவில்லை என வலியுறுத்தினார். உண்மையில், நாட்டிற்கு வெளியே இருப்பவருடன் தொடர்பு கொள்ளும் எந்த அமெரிக்கரும் இந்த வலைக்குள் விழுந்துவிடுவதற்கான சாத்தியம் உண்டு. ஒபாமாவோ வேறு எந்த அரசாங்க அதிகாரியோ “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்னும் மறைப்பில் அரசாங்க கண்காணிப்புத் திட்டம் செயற்படுவதை உண்மையென எடுத்துக் கொள்ள முடியாது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தேசிய உளவுத்துறையின் இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர், செனட் உளவுத்துறைக் குழுவிடம் NSA அமெரிக்கர்கள் மீது ஒற்றுக் கேட்கிறதா என வினவப்பட்டபோது அப்பட்டமாகப் பொய் கூறினார். ஒபாமா மற்றும் குடியரசு அல்லது ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளாக இருந்தாலும் இவர்கள், முழு மக்கள் மீது திட்டமிட்ட ஒற்றுப்பார்த்தல் என்பது பயங்கரவாத தாக்குதல்களை தடுக்கும் விருப்பத்தால் உந்துதல் கொண்டவை எனக்கூறப்படுவது இழிவுடன் அணுகப்படவேண்டும். இது அமெரிக்க மண்ணில் ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் இன்னுமொரு அரசாங்க உடந்தை மறைக்கப்பட்ட இழிசெயலின் மத்தியில் கூறப்பட்டுள்ளது. 9/11 தாக்குதல்களின் போது நடந்தது போல், டெட்ரோயிட்டில் கிறிஸ்துமஸ் தினம் 2009ல் தோல்வியடைந்த குண்டுத் தாக்குதலைப் போல் அவற்றை நடத்தியவர்கள் FBI, CIA இன்னும் பிற அமைப்புகளுக்கும் நன்கு தெரிந்திருந்தும் மற்றும் பல எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதுபோல் மீண்டும் பொஸ்டன் தொலைதூர ஓட்ட குண்டுத்தாக்குதலின் போதும் நடந்துள்ளது. உண்மையில் ஒபாமாவே அரசாங்கத்தின் ஒற்றுப்பார்க்கும் திட்டங்களுக்குப்பின் இருக்கும் அரசியல் நோக்கங்களை பற்றியும் குறிப்பிட்டு, அவரே பதவி விலகியபின், “நான் ஒரு தனிக்குடிமகன், இலக்கு வைக்கப்படலாம் என்னும் பட்டியலில் நானும் இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். அப்பட்டியலில் முதலிடத்தில் கூட இருக்கலாம்” என்றார். இங்கு தெளிவாகுவது என்னவெனில் அமெரிக்க மக்களுடைய உரிமைகள் மீதான உண்மையான ஆபத்து பயங்கரவாதிகளிடம் இருந்து வரவில்லை, ஆனால் அமெரிக்க முதலாளித்துவ அரசிடமிருந்துதான் வருகிறது என்பதாகும். புஷ்ஷின் கீழ் கொண்டுவரப்பட்டு, ஒபாமாவின்கீழ் விரிவாக்கப்பட்டுள்ள பொலிஸ் அரச நடவடிக்கைகள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உள்நாட்டின் சிக்கனக் கொள்கை மற்றும் வெளியே முடிவில்லா போர் இவற்றிற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்புக்கு எதிராகத்தான் இயக்கப்படுகின்றன. அரசியல் அமைப்பு, உரிமைகள் பற்றிய சட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகள் ஆகியவை முற்றிலும் கிழித்தெறியப்படுகின்றன. அவற்றின் இடத்தில், ஜனநாயகத்தின் வெற்றுப் பொறிகள் அதிகரித்துள்ளதற்கு பின் அதிகம் மறைக்கப்படாமல் ஒரு சர்வாதிகாரம் வெளிப்பட்டு வருகிறது. உரிமைகள் பற்றிய சட்டத்தின் ஒரு பகுதியான நான்காம் திருத்தம் பின்வருமாறு கூறுகிறது: “தங்கள் பாதுகாப்பு, வீடுகள், ஆவணங்கள், முயற்சிகளுடைய பாதுகாப்பு நியாயமற்ற சோதனைகள், கைப்பற்றுதல்களுக்கு எதிராக என மீறப்படக் கூடாதவை. உறுதிமொழி, சான்று போன்றவற்றினால் ஆதரிக்கப்பட்டுள்ள சாத்தியமானதாக இருக்கக்கூடும் என்னும் காரணத்தை தவிர குறிப்பாக சோதனையிடும் இடம், நபர்கள் அல்லது கைப்பற்றக்கூடிய பொருட்கள் பற்றி பிடி ஆணைகள் வெளியிடப்படக்கூடாது.” வெள்ளியன்று ஒபாமா ஆதரித்த திட்டங்களில் அனைத்தும் இந்தத் தெளிவான, சந்தேகத்திற்கு இடமில்லாத அந்தரங்க உரிமைகள் அரசால் மீறப்படுவதற்கு வெளிப்படையாகவும் மற்றும் நேரெதிராகவும் உள்ளன. வெள்ளி கூறிய கருத்துக்களில் ஒபாமா, “உங்களுக்கு நூறு சதவிகித பாதுகாப்பும், நூறு சதவிகித அந்தரங்கமும் கிடைக்காது....” என்றார். வேறுவிதமாக சாதாரண ஆங்கிலத்தில் கூறினால், நான்காம் திருத்தம் இனிப்பொருந்தாது. அதேபோல் நிர்வாகத்தை பொறுத்தவரை, வழமையான விசாரணை வழிவகை, ஜூரி மூலம் விசாரணை, சுதந்திரமான பேச்சுரிமை, சுதந்திர செய்தி ஊடகம், கூடும் உரிமை ஆகியவையும் செயல்படாது. அமெரிக்க ஜனநாயகத்தின் சிதைவு, அரசியல் ஆளும்தட்டின் பாரிய அரசாங்க ஒற்றுக்கேட்டலுக்கு காட்டும் பொதுவான பிரதிபலிப்பில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. முக்கிய ஜனநாயக கட்சியினர் செனட் உளவுத்துறைக்குழு தலைவியான டயானே பைன்ஸ்ரைன் மற்றும் செனட் பெரும்பான்மைத் தலைவர் ஹாரி ரீட் போன்றோர் தங்கள் குடியரசு சக அரசியல்வாதிகளுடன் NSA திட்டங்களுக்கு ஆதரவு கொடுக்க விரைந்தனர். ஜனநாயகக் கட்சி “தாராளவாதிகளின்” ஒப்புமையில் அதிகம் பேசாமல் முடங்கி, படர்ந்திருக்கும் எதிர்ப்பு மற்றும் குடியரசு வலதுசாரி விடுதலையாளர்கள், மற்றும் செய்தி ஊடகப்பிரிவுகளான நியூயோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் வரையிலான விமர்சனங்கள் இத்திட்டங்களை நிறுத்த வேண்டும், NSA கலைக்கப்பட வேண்டும், உளவுத்துறை அதிகாரிகள்மீது குற்றவிசாரணை தேவை, ஒபாமாவிற்கு எதிராக பெரிய குற்ற விசாரணை வேண்டும், ரிச்சார்ட் நிக்சன் செய்ததைவிட இவருடைய அரசியலமைப்பு மீறல்கள் மிகவும் அப்பால் சென்றுவிட்டன எனக் கோருவதற்கு சற்று முன்னதாக நிறுத்திக் கொண்டன. இதற்கிடையில் தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர், வியாழன் பிற்பகுதியில் NSA திட்டங்களை ஆதரித்தும் உட்குறிப்பாக அவற்றை மக்களிடம் பகிரங்கமாக்கியவர்கள் மீது குற்றச்சாட்டு வரும் எனவும் அச்சுறுத்தினார். கசிவுகள், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முறைக்கு “நீண்டகால, மாற்ற இயலாத தீமையைக் கொடுக்கும்”, என்றும் இத்திட்டங்களை பற்றி “அங்கீகாரமற்ற வகையில் தகவலை வெளியிடுவது, “வெறுக்கத்தக்கது” என்றும் கூறினார். தன்னுடைய பங்கிற்கு நியூ யோர்க் டைம்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டு, இரண்டு NSA திட்டங்கள் பற்றி கார்டியன் கட்டுரைகளின் ஆசிரியரான கிளென் கிரீன்வால்ட் அரசாங்கக் கண்காணிப்பு குறித்து வெறித்தனமான கருத்தை கொண்டுள்ளார் என்றும் கிரீன்வால்ட் “தன்னை... மத்திய குற்றவியல் வழக்குத்தொடுனர்களுக்கு எதிராக நிறுத்திக் கொண்டுள்ளார்” என்றும் கூறியது. வெள்ளியன்று கூறிய கருத்துக்களில், ஒபாமா மே 23 அன்று தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தான் வழங்கிய உரையை குறிப்பிட்டார். அந்த அசாதாரண உரையில், ஒபாமா தன் ஜனநாயக விரோதக் கொள்கையை பாதுகாத்துப் பேசினார். அதில் நீதித்துறைக்கு புறம்பான படுகொலைகள், அமெரிக்க குடிமக்கள் உட்பட உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க அரசியலமைப்பு இத்தகைய திமிர்த்தன மீறல்களால் கொள்ளும் தாக்கங்களை பற்றியும் எச்சரித்தார். இவருடைய உரை, ஆழ்ந்த நெருக்கடி மற்றும் அரசாங்கத்திற்குள் தீவிர பிளவுகள் இருப்பதை பிரதிபலித்தது. ஒபாமா, தனது நிலையும் ஒன்றும் பாதுகாப்பாக இல்லை என்று உணர்ந்துள்ளார் என்பதையும் காட்டியது. வெள்ளியன்று அவர் விந்தையான உறுதிப்பாட்டைக் கொடுத்தார். அதாவது தான் “பதவியில் இருந்து விலகியதும்.... அடுத்த மூன்றரை ஆண்டுகளில்” [அழுத்தம் சேர்க்கப்பட்டது] என்றார். உண்மையில் வோல்ஸ்ட்ரீட் உடன் சேர்ந்த இராணுவ/உளவுத்துறை அமைப்பு என்பவையே அதிகாரத்தை செலுத்தும் என்பதை ஒபாமா நன்கு அறிவார். இச்சக்திகள், தங்களின் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மற்றும் உலக ஆதிக்கத்திற்கு எதிரான சமூக எதிர்ப் புரட்சியை தொடர்வதில் அதிருப்தி அடைந்தால், இச்செயற்பட்டியலை செயல்படுத்த மாறுதல்களை கொண்டுவர அவர் தயாராக இல்லை என்றால், அவர் விரைவில் அகற்றப்பட்டுவிடுவார். “நிறைவேற்றுத்துறையை மட்டுமல்லாது காங்கிரஸ் மற்றும் மத்திய நீதிபதிகளும் அரசியல் அமைப்பின்படியும் வழமையான விசாரணை வழிமுறையினதும் சட்டத்தின் ஆட்சிப்படியும் நாங்கள் செயல்படவில்லை என மக்கள் நினைத்தால் பின் நமக்கு இங்கு பிரச்சினைகள் உள்ளன” என்றார் அவர். உண்மையில், அமெரிக்க ஜனநாயகத்தின் வீழ்ச்சி மிகவும் முதிர்வடைந்த நிலையில் இருப்பது மக்களின் பரந்த பிரிவினரிடையே விரைவில் இந்த அமைப்புமுறைக்கு ஆதரவை இல்லாதொழித்துவிடும். சர்வாதிகார வகை ஆட்சிக்கு செல்லுதல் என்பது சமூக சமத்துவமின்மையின் பாரிய அதிகரிப்பினால் உந்துதல் பெறுவதுடன், உலக அரங்கில் குற்றங்களும் போரும் பெருகிய முறையில் இறுதிப்புகலிடமாகின்றன. இத்தகைய வர்க்க ஆட்சியின் நெருக்கடி புரட்சிகர எழுச்சிகளின் காலகட்டத்தை குறிக்கிறது. முதலாளித்துவம் என்பது சமூக சமத்துவமின்மை மற்றும் போர் ஆகும். இவை ஜனநாயகத்துடன் இயைந்திருக்க முடியாதவை. ஜனநாயக உரிமைகளின் ஒரே பாதுகாப்பு என்பது சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கம் போராடுவதில்தான் உள்ளது. |
|