World Socialist Web Site www.wsws.org |
WSWS:Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கிStrikes spread with two killed in Turkish protests துருக்கிய எதிர்ப்புக்களில் இருவர் கொல்லப்பட்டதோடு, வேலைநிறுத்தங்கள் பரவுகின்றனBy Bill Van Auken
திங்களன்று பொதுத்துறை ஊழியர்கள் துருக்கி முழுவதும் வேலைநிறுத்தம் செய்தபோது, இரண்டாம் பெரிய துருக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு அதன் உறுப்பினர்களை ஜூன் 5ம் தேதி பிரதம மந்திரி ரெசப் தயிப் எர்டோகனுடைய அரசாங்கம் அமைதியான எதிர்ப்புக்களை பொலிஸ் அடக்குமுறை மூலம் நசுக்குவதை எதிர்த்து நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை நடத்தும்படி அழைப்பு விடுத்துள்ளது. 22 வயதான எதிர்த்தரப்பு CHP (குடியரசு மக்கள் கட்சி) இளைஞர் பிரிவு உறுப்பினர் Abdullah Cömert, சிரிய எல்லைக்கு அருகே உள்ள தெற்கு நகரமான அன்டக்யாவில் இறந்ததை அடுத்து மிருகத்தன வன்முறை அடக்குமுறையினால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை செவ்வாயன்று இரண்டு என உயர்ந்தது. ஆரம்ப அறிக்கைகள் அவர் தலையில் சுடப்பட்டார் எனத் தெரிவித்தன, ஆனால் பிரேதப் பரிசோதனை, இறப்பை ஏற்படுத்திய காயம் அருகிலே இருந்த கண்ணீர்ப்புகை கலத்தின் வெடிப்பினால் ஏற்பட்டதைக் காட்டுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களின் தலையைக் குறிவைத்து பொலிசார் வாடிக்கையாக இக் கலத்தை நெருக்கமான இலக்குகளில் பயன்படுத்துகின்றனர், பல நேரமும் இது எலும்பு உடைவுகளையும் கண்கள் இழப்பையும் ஏற்படுத்துகிறது. Hurriyet Daily News தன்னுடைய கடைசி பேஸ்புக் குறிப்புக்களில் அப்துல்லா கோமெர்ட் தான் எதிர்ப்புக்களின்போது மூன்றாம் முறை “இறப்பில் இருந்து தப்பியதாக”எழுதியுள்ளார், அவர் களைப்பாக இருந்தாலும்கூட, “புரட்சிக்காக தெருக்களுக்கு மீண்டும் வருவார்”. செவ்வாய் நடைபெற்ற கோமர்ட்டின் இறுதிச் சடங்கிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். முந்தைய ஒரு நிகழ்வில், SODAP உறுப்பினர் 20 வயது மெஹ்மெட் அய்வலிடஸ் ஆர்ப்பாட்டம் ஒன்றில் இஸ்தான்புல் தொழிலாள வர்க்கப் பகுதியில் பங்கு பெற்றிருந்தபோது கார் ஒன்று மோதி உயிரிழந்தார். துருக்கிய மருத்துவ சங்கத்தின்படி, கிட்டத்தட்ட 3,200 பேர் ஞாயிறு, திங்கள் மட்டும் ஆர்ப்பாட்டங்களில் பொலிஸ் தாக்குதலால் காயமுற்றனர், 26 பேர் மோசமான நிலையில் உள்ளனர். இதற்கிடையில், துருக்கிய மனித உரிமைகள் சங்கம், முதல் நான்கு நாட்கள் எதிர்ப்புக்களில் குறைந்தப்பட்சம் 3,300 பேர் நாடு முழுவதும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளது. அவர்களில் பலர் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 350,000 உறுப்பினர்களை கொண்ட DISK (துருக்கியின் புரட்சிகர தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு) அதன் உறுப்பினர்களை புதன் அன்று பிற்பகல் 1 மணிக்கு தக்சிம் சதுக்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது; இதுதான் மத்திய இஸ்தான்புலில் இருக்கும் பசுமை இடங்களில் ஒன்றான கெசி பூங்காவை தகர்க்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தூண்டிவிட்ட நாடு தழுவிய எழுச்சியின் மையம் ஆகும், அரசாங்கம் இந்த இடத்தில் ஒரு வணிக வளாகத்தை அமைக்க விரும்புகிறது. “உற்பத்தியில் இருந்து வெளிவரும் சக்தி போராட்டத்தில் அதன் இடத்தில் இருக்கும்” என்று DISK தலைமை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இரண்டு இளம் எதிர்ப்பாளர்கள் இறப்பைக் குறிப்பிடுகையில், DISK அறிக்கை, சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற எர்டோகனுடைய சொற்களையே, அவருக்கு எதிராகப் பயன்படுத்தியது “தன்னுடைய சொந்த மக்களையே கொல்லும் ஒரு தலைவர் நெறியை இழந்துவிட்டார்” என்று கூறியிருப்பதை மேற்கோளிட்டு. எர்டோகனின் அரசாங்கம் வாஷிங்டனின் முக்கிய நட்பு நாடாக சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்குத் தூண்டுகையில், இத்தலையிடு பெரும்பாலான சிரிய மக்களால் எதிர்க்கப்படுகிறது. பொதுத்துறைத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டமைப்பு என்னும் KESK அதன் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தை திங்கள் நண்பகலில் தொடங்கியது, ஆசிரியர்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்களைவிட்டு நீங்கினர், பொதுத்துறை ஊழியர்கள் அலுவலகங்கள், பணியிடங்களை விட்டு நீங்கினர். தொழிற்சங்கத்தின் 250,000 உறுப்பினர்கள் கறுப்பு உடைகளையும், கறுப்பு ரிப்பன்களையும் அடக்குமுறையை எதிர்த்து அணிந்தனர். பொதுத்துறை ஊழியர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து சங்கம் ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது; ஆனால் தக்சிம் சதுக்க எதிர்ப்புக்களுடன் இணைந்துகொள்வதற்காக தேதியை முன்கூட்டி தினத்திற்கு மாற்றியது. ஓர் அறிக்கையில் KESK “முற்றிலும் அமைதியான எதிர்ப்புக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அரச பயங்கரவாதம் குடிமக்களுடைய உயிர்களையும் பாதுகாப்பையும் அச்சுறுத்துகிறது” என்று எச்சரித்து, அடக்குமுறை எர்டோகன் அரசாங்கத்தின் “ஜனநாயகத்திற்கு எதிரான விரோதப்போக்கை” அம்பலப்படுத்தியுள்ளது என்றும் சேர்த்துக் கொண்டது. மீண்டும் செவ்வாய் இரவில் இஸ்தான்பூலின் தஸ்கிம் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான ஆர்பாட்டக்காரர்கள் குவிந்தனர். இதேபோன்ற கூட்டங்கள் தலைநகர் அங்காராவில் கிஜிலே சதுக்கத்திலும் நாடு முழுவதும் மற்ற நகரங்களிலும் கூடின. கலகப் பிரிவு பொலிசார் இஸ்தான்பூலில் பெஸிக்டஸ் பகுதியில் இருக்கும் பிரதம மந்திரி அலுவலகத்தை சூழ்ந்து கொண்டர்; இதை நோக்கித்தான் முந்தைய எதிர்ப்புக்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்து வந்தனர்; மற்றொரு அடக்குமுறை இரவிற்கு தயாரிப்பு எனத் தோன்றிய வகையில் அங்காரா நகரில் கவச வாகனங்கள் நீர்பீய்ச்சும் கருவிகளைக் கொண்டிருந்தன. CNN கருத்துப்படி, “இஸ்தான்புலில் கூட்டங்கள் ‘தயிப்பே இராஜிநாமா செய்’ என எர்டோகனைக் குறித்த கோஷங்களை எழுப்பின, “பாசிசத்திற்கு எதிராக தோளொடுதோள்” என்றும் குரலெழுப்பின. ஒரு பூங்காவைத் தகர்க்க எதிர்ப்புத் தெரிவிக்க ஒரு சில டஜன் எதிர்ப்பாளர்கள் தொடக்கிய உள்ளிருபுப் போராட்டம், பின்னர் பொலிசாரின் அடக்குமுறையை ஒட்டி பெரும் மக்கள் சீற்றமாக மாற்றப்பட்டு, நாடு முழுவதும் எர்டோகனின் நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சிக்கு (AKP) எதிராக அமைந்தது. இந்த எதிர்ப்புக்களின் மையத்தானத்தில் இஸ்லாமியக் கட்சியின் பெருகிய சர்வாதிகாரம், அரச அதிகாரத்தை அரசியல் தொடர்புடைய முதலாளித்துவக் குழுவை செல்வக் கொழிப்புடையதாகச் செய்வதற்கு எதிர்ப்பு ஆகியவை உள்ளன; அரசாங்கம் அதே நேரத்தில் பெரும்பாலான உழைக்கும் மக்களின் சமூக நலன்களை தாக்குகிறது. எதிர்ப்புக்கள் மற்றும் பரவிவரும் வேலைநிறுத்தங்கள் பற்றி அரசாங்கத்திற்குள்ளும் துருக்கியின் ஆளும் நடைமுறைக்குள்ளும் பெருகிவரும் அமைதியின்மை துருக்கிய துணைப் பிரதம மந்திரி புலென்ட் அரிங்க் வெளியிட்ட பொது அறிக்கையில் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது; அவர் பிரதம மந்திரி எர்டோகன் நாட்கு நாட்கள் வட ஆபிரிக்க பயணத்தை துருக்கிய வணிகர்களுடன் மேற்கொண்டிருக்கையில், பொறுப்பைக் கொண்டுள்ளார். அரிங்க், தக்சிம் கெஜிக் பூங்காவை காக்கும் முதல் எதிர்ப்புக்கள் “நியாயமானவை,நெறியானவை” என்று கூறி, பொலிஸ் கட்டவிழ்த்த வன்முறைக்கு மன்னிப்புக் கோரினார்; அவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணீர்ப்புகைக்குண்டு, மிளகு தூவுதல், நீர் பீய்ச்சுதல், தடியடி ஆகியவற்றின் மூலம் தாக்கினர். “இந்த எதிர்ப்பை முதலில் தொடக்கிய மக்களுக்கு எதிராக மிக அதிக வன்முறை பயன்படுத்தப்பட்டது தவறு, அது முறையற்றது” என்றார் அரிங்க். “எனவே நான் குடிமக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.” என சேர்த்துக்கொண்டார். அரசாங்கம் சுற்றுச்சூழல் எதிர்ப்பாளர்களை சத்திக்கும் என்றும் அவர்களுடைய கவலையைப் பரிசீலிக்கும் என்றும் முடிந்தால் பூங்கா நிலத்தில் கட்டுமானத் திட்டம் குறித்ததை வாக்கெடுப்பிற்கு விடும் என்றும் அவர் கூறினார். “இதை நான் நேர்மையுடன் கூற விரும்புகிறேன் – ஒவ்வொருவருடைய வாழ்க்கை முறையும் எங்களுக்கு முக்கியம்தான், அது குறித்து உணர்வுபூர்வமாக உள்ளோம்” என்றார் அவர். இக்கருத்து மதசார்பற்ற துருக்கியரின் கடுமையான அதிருப்தியை போக்கும் நோக்கத்தைக் கொண்டது போல் தோன்றியது; அதேபோல் மதசிறுபான்மையினர் அரசாங்கத்தின் முயற்சியான மதுபானத் தடைகள், கருச்சிதனைவுத் தடைகள் வாழ்க்கையின் பிற கூறுபாடுகளில் இஸ்லாமிய கட்டுப்பாடுகளை கொண்டுவரும் முயற்சி குறித்து கொண்டுள்ள அதிருப்தியையும் போக்குவதற்காகும். ஆரம்ப ஆர்ப்பாட்டங்கள் “நியாமானவை, நேர்மையானவை” என்று கூறினாலும் அவர் “தெருக்களில் அழிவை ஏற்படுத்தியவர்கள், மக்களின் சுதந்திரத்தில் தலையிட்டவர்களுக்கு நாங்கள் ஒன்றும் மன்னிப்புக் கோரத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்” என்றார். அர்னிக்கின் மன்னிப்பு, துருக்கிய ஜனாதிபதி அப்புதல்லா குல்லை அவர் சந்தித்தபின் வந்தது; பிந்தையவர் திங்களன்று அவருடைய அறிக்கையை வெளியிட்டு, எதிர்ப்பாளர்களை பாராட்டி, “ஜனநாயகம் வெறும் வாக்களிப்பது மட்டும் அல்ல, இந்தச் செய்தி பெறப்பட்டுள்ளது. தேவையானது செய்யப்படும்.” எனக்கூறினார். இந்த அறிக்கைகள் எர்டோகன் வெளியிட்ட கருத்துக்களுக்கு முற்றிலும் மாறானவை, அவர் மகரெப்பிற்குப் பயணிக்கு முன் கிறுக்குத்தன உரையை வெளியிட்டு எதிர்ப்பாளர்களை “கொள்ளையடிக்கும் கூட்டம்”, “தீவிர வாதிகள்” என விவரித்திருந்தார்; அவர்கள் பெயரிடப்படாத வெளிநாட்டு சக்திகளால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர் என்றும் CHP என்ற மதசார்பற்ற எதிர்க்கட்சியும் இதற்கு உடந்தை என்றும் கூறினார். அவருடைய அரசாங்கம் எதிர்ப்பாளர்கள் தெரிவித்த “தகவலை” பெற்றதா என மொரோக்கோவில் செய்தியாளர் கூட்டத்தில் நிருபர்களால் கேட்கப்பட்டபோது, அதுதான் குல் பயன்படுத்திய சொற்றொடர், அவர் கோபத்துடன், “என்ன தகவல்? உங்களிடம் இருந்து நான் கேட்கவேண்டும்.” என்றார். எதிர்ப்பாளர்களை கண்டித்ததில் அரசாங்கத்தின் நிதி மந்திரி மெஹ்மெட் சிம்செக்கும் இருந்தார்; செவ்வாயன்று டிவிட்டரில் அவர் எழுதினார்: “இத்தகைய தொந்திரவு அளித்தல் இயல்பாக நிதியச் சந்தைகளைப் பாதிக்கும்.” இந்த பெருகிய அமைதியின்மையை ஒட்டி துருக்கியின் பங்குச் சந்தை திங்களன்று 10% அதன் மதிப்பை இழந்தது, துருக்கிய லிரா 16 மாத காலம் இல்லாத அளவிற்குக் குறைந்தது. பங்குச் சந்தைவிலைகள் செவ்வாயன்று பாதி இழப்புக்களை ஈடு செய்யும் வகையில் உயர்ந்தன. அரசாங்கத்திற்குள் காணும் பிளவுகள் வெகுஜன எதிர்ப்புக்கள், சமுக சமத்துவமின்மை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வேலை, வாழ்க்கைத்தரங்கள் மீதான தாக்குதல்கள் பரந்த இயக்கத்தை ஏற்படுத்தலாம் என்னும் அச்சங்களை பிரதிபலிக்கின்றன; இவை AKP அரசாங்கம் தப்பிப் பிழைத்தல், துருக்கிய முதலாளித்துவம் தப்பிப் பிழைத்தல் இரண்டிற்கும் நேரடி அச்சுறுத்தலைக் கொடுக்கின்றன. |
|