World Socialist Web Site www.wsws.org |
The threat to sell off the works in the Detroit Institute of Arts டெட்ரோயிட் கலைக்கூடத்தின் படைப்புக்களை விற்கப் போவதாக அச்சுறுத்தல்
David Walsh டெட்ரோயிட்டின் நிதிய ஜார் என்றழைக்கப்படும் தேர்ந்தெடுக்கப்படாத கெவின் ஓர் (Kevyn Orr), நகரத்திற்கு கடன்கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்து உதவுவதற்காக டெட்ரோயிட் கலைக்கூடத்திலுள்ள சேகரிப்பு படைப்புக்களை விற்பது அல்லது முக்கிய படைப்புக்களை விற்பது என்று அச்சுறுத்துவது, பரந்த கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. 1920ம் ஆண்டுகளின் அதனுடைய கலைநயம் படைத்த கட்டிடத்தில் இருந்து அழகுமிக்க உள்முற்றம் வரையிலுள்ள டியாகோ ரிவேராவின் சுவர் ஓவியங்களும் மேலும் அதனுடைய சேகரிப்பாகவுள்ள 65,000க்கும் மேற்பட்ட கலைப் படைப்புக்கள் உள்ள டெட்ரோயிட் கலைக்கூடமானது (DIA) ஓர் அழகிய அருங்காட்சியகமாகும். இது டெட்ரோயிட் மக்களின் ஒரு நியாயபூர்வமான பெருமிதமிக்க பொக்கிஷமாக இருக்கிறது. Orr விருப்பத்தின்படி நடந்துவிட்டால், Van Gogh, Delacroix, Degas, Monet, Hals, Rubens, Correggio, Hogarth, Rembrandt, Courbet, Bellini, Titian, Velasquez, Bruegel, Cassatt, Whistler, Homer, Eakins இன்னும் பலருடைய படைப்புக்கள் ஏலப் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டு டெட்ரோயிட்டின் செல்வம் படைத்த பங்குப் பத்திரம் வைத்திருப்போர்களின் பேராசையைத்தான் திருப்தி செய்யும். சந்தேகத்திற்கு இடமின்றி, முதலீட்டாளர்கள் ஏற்கனவே தற்பொழுது பணவீக்கம் நிறைந்த கலைச் சந்தையில் இந்த விலைமதிக்கமுடியாத கலை சேகரிப்புத் தொகுப்பிலிருந்து கிடைக்கப் போகும் பெரும் செல்வம் குறித்த சந்தர்ப்பங்கள் பற்றி வாயில் எச்சில் ஊற காத்திருக்கின்றனர். டெட்ரோயிட்டை கொள்ளை அடிப்பதை மேற்பார்வையிட அமர்த்தப்பட்டுள்ள முதலீட்டு வங்கியாளரான கென்னெத் பக்பைரின் (Kenneth Buckfire) கூற்றான, “DIA உடைய அருஞ்சொத்துக்களின் கலாச்சாரம், உணர்ச்சிமிக்க மதிப்புக்களுக்கு பதிலாக 700,000 க்கும் மேற்பட்ட பரந்த வறிய டெட்ரோயிட்டில் வசிப்பவர்களின் தேவையாகவுள்ள பாதுகாப்பான தெருக்களும் கடனில் மூளாத திறமையான அரசாங்கத்தினை பற்றி கவனத்திற்கொள்ள வேண்டும்” என்ற கூற்றானது இழிந்தது மட்டுமல்ல வெறுக்கத்தக்கதுமாகும். உயர்தர உடையணிந்த தற்காலத்திய கலையை அழிப்பவர்களின் விருப்பம் நிறைவேறினால், சொத்தை அபகரிக்கும் கடன் கொடுத்தவர்கள், வக்கீல்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆலோசகர்கள் தங்கள் பைகளில் பணத்தை நிரப்பிக்கொண்டு செல்கையில் டெட்ரோயிட் வாழ்மக்கள் “பாதுகாப்பான தெருக்களையோ, பொதுப்பணிகளோ, வேலைகளோ அல்லது கணிசமான கலை அருங்காட்சியகத்தையோ பெற்றுக்கொள்ள மாட்டார்கள். சமீப ஆண்டுகளில் அமெரிக்காவும் உலகமும் எதற்கு சாட்சியாக இருக்கின்றது என்றால், பிரபுத்துவக் கொள்கை மீண்டும் வந்திருப்பதற்குத்தான். டெட்ரோயிட், கிரேக்கம்(அக்ரோபோலிஸ் 2011இல் குறுகிய காலத்திற்கு விற்பனைக்கு வந்தது) இன்னும் பிற இடங்களில் நம்முடைய தற்காலத்திய ஆட்சியாளர்கள் கருத்துப்படி, அனைத்து முக்கிய சமூகக் கொள்கை மற்றும் உத்தியோகபூர்வ முடிவெடுத்தல் ஒரு சில தனிநபர்கள் தடையின்றி பெரும் செல்வத்தை சேகரிப்பதற்கு சேவைசெய்வதாக இருக்கவேண்டும் என்பதாகும். Jean-Jacques Rousseau வின் சொற்றொடரை தலைகீழாக்கினால் தற்காலத்திய வாசகம் “மிகப் பெரிய செல்வந்தர்கள்தான் மனித குலமெனப்படுவர்” என்றாகின்றது. நிதியப் பிரபுத்துவத்தின் பார்வையில் உழைக்கும் மக்கள் எவ்வித உரிமையுமற்ற கீழ்மட்ட மக்கள் என்ற கருத்து உள்ளது. கலை என்பது பெரும் செல்வந்தர்களுக்கு மட்டும்தான், வாங்குவதற்கு, விற்பதற்கு, பார்ப்பதற்கு அல்லது தங்கள் ஓய்வு நேரத்தைக் கழிப்பதற்கு என்பதே அவர்களின் கருத்து. இத் தர்க்கத்தின் அடிப்படையில், மருத்துவமனைகள், நூலகங்கள், பள்ளிகள் அல்லது அருங்காட்சியகங்களை மக்கள் கொண்டிருப்பது என்பது அதிகரித்தளவில் இந்த அல்லது அந்த பெரும் செல்வந்தரின் விருப்பத்தை ஒட்டியே இருக்கும். கையில் தொப்பியுடன் மக்கள் கையேந்தி காத்திருக்கையில், சமூகத்தின் பெரிய மனிதர்களான வாரன் பஃபேக்கள், பில் கேட்ஸ்க்கள், மார்க் சுக்கெர்பேக்குகளும் இன்னும் பலரும் தங்கள் விருப்பப்படி கொடுப்பதா அல்லது இல்லையா, ஆதரவளிப்பது மற்றும் உதவுவது குறித்து தங்களுக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே பரிசீலிப்பார்கள். 18ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சிகளை ஆதிக்கம் செய்த ரூஸோ, ஜோன் லோக் போன்றோரின் “சமூக உடன்பாட்டு” கோட்பாட்டாளர்களின் கருத்துக்களானது மக்களுடைய விருப்பம்தான் அரசாங்கத்திற்கு சட்டபூர்வதன்மையைக் கொடுக்கிறது என வாதிட்டது. மக்கள் சென்று பார்க்கக்கூடிய தற்கால அருங்காட்சியகம் அல்லது கலைக்கூடமானது இந்த ஜனநாயகப் புரட்சிகளின் விளைவாக உருவாக்கப்பட்டது. முதலாவது பெரிய பொதுக் கலை அருங்காட்சியகமான பாரிசில் உள்ள லூவ்ர் (Louvre) பெரும் பிரெஞ்சுப் புரட்சியின் ஒரு நிகழ்வாக உருவானது. 1792இல் பதினாறாம் லூயி சிறை வைக்கப்பட்டதின் அர்த்தம் அரச குடும்பத்தின் கலைச் சேகரிப்புக்கள் தேசிய சொத்தாகின என்பதாகும். அருங்காட்சியகம் 1793ல் திறந்து வைக்கப்பட்டமை “சர்வாதிகார நிர்வாகத்தை விட” குடியரசு அரசாங்கம் உயர்வானது என்பதற்கான எடுத்துக்காட்டு என்று பிரெஞ்சுப் புரட்சியாளர்களால் கருதப்பட்டது. 1917 ஆண்டு ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் அருங்காட்சியகங்கள் விரைவாக அதிகமாயின, இதனால் பழைய பிரபுக்களின் சேகரிப்புக்களை முதல் தடவையாக பொதுமக்கள் பார்த்து அனுபவிக்க முடிந்தது. போல்ஷிவிக் ஆட்சியும் கலைச் சேகரிப்பு தொகுப்புக்கள் மத்தியப்படுத்தப்பட்டிருந்ததை அகற்றி ஜனநாயகமயப்படுத்தி, தொழிலாள வர்க்கப் பகுதிகள் மற்றும் மாநிலங்களின் நகரங்களில் அவற்றை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்து வைத்தது. அமெரிக்காவில், 19ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் பொது அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டமையானது பொதுக் கல்வி மற்றும் பிற முற்போக்கு காரணங்களுக்கான போராட்டங்களுடன் இணைந்திருந்தது. இவற்றிற்காக வாதிட்டவர்களால் அது ஐரோப்பிய முறைக் கொடுங்கோன்மைக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு எனக் கருதப்பட்டது. உள்நாட்டு யுத்தத்தையும் மற்றும் அடிமைமுறை அழிக்கப்பட்டதையும் தொடர்ந்த “1800 இன் கடைசிப் பகுதிகள்”, “அமெரிக்க அருங்காட்சியகங்களுக்கு ஏற்றம் கொடுத்த காலமாகும்” என்று ஒரு வர்ணனையாளர் எழுதியுள்ளார். 1885ல் நிறுவப்பட்ட டெட்ரோயிட் கலைக்கூடம் முன்பும் பலதடவை பிற்போக்குத்தன சக்திகளின் தாக்குதலுக்கு உட்பட்டது. ரிவேராவின் சுவர்ச் சித்திரங்களான, “டெட்ரோயிட் தொழில்துறை” தொழிலாளர்களை அதன் முன்னணியில் நிறுத்தி கார்த் தயாரிப்பை விளக்குகிறது. இது 1933ம் ஆண்டு பிற்போக்குத்தன கத்தோலிக்கப் பாதிரியாரான அருட்தந்தை கௌலினால் மத முரண்பாடானது, சடத்துவவாத சார்பானது, கம்யூனிச சார்புடையது போன்ற தாக்குதலுக்கு உட்பட்டது. தொழிலாளர்கள் சுவர்ச் சித்திரங்களை பாதுகாக்க அணிதிரண்டு, 10.000 மக்கள் ஒரு ஞாயிறன்று மட்டும் DIA க்கு வருகை புரிந்தனர். சமீபத்திய ஆண்டுகளில், DIA ஆனது அரசின் தயவில் உள்ளதுடன், நகரசபை வரவு-செலவுத் திட்ட நெருக்கடிகளில் சிக்கியது. அரசியல்வாதிகள் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு “பணம் இல்லை” என்கின்றனர். அதே நேரத்தில் நிதியச் சந்தைகள் பணத்தில் மிதந்ததுடன் பெருநிறுவனங்களும் பல பில்லியன் தொகையை கையில் வைத்திருக்கின்றன. அமெரிக்க ஆளும் உயரடுக்கு கொடூரமானது, கொள்ளை முறையைக் கொண்டது, குற்றம் சார்ந்தது. அதன் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை கொண்டுவராத அனைத்தும் பயனற்றவை எனக் கருதுகின்றது. எப்படியும், அதிகாரத்தை கொண்ட சக்திகள் மக்களுடைய ஆர்வத்தை உணர்வற்றதாக்குவதில் அக்கறை கொண்டதுடன், அதை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வன்முறையை நோக்கி திருப்புகின்றன. அந்த நிலைப்பாட்டில் கலை என்பது எப்பொழுதும் ஆபத்தானது. அனைத்தையும் மூடிவைத்துவிடல் அல்லது விற்றுவிடல் சிறந்தது என இவர்களால் கருதப்படுகிறது. இது சாதாரணமாக தனியார் நிதிய மேலாளர்கள் போன்றவர்களுக்கு மட்டும் அல்ல, உயரடுக்கின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பொருந்தும். ஜனநாயகக் கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் அமெரிக்க தாராளவாதத்தின் எஞ்சிய சிதைந்த பகுதிகள் அனைத்தும் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கு எதுவும் செய்யப் போவது கிடையாது. டெட்ரோயிட்டில் கறுப்பின ஜனநாய கட்சியினர்தான் இத்தாக்குதலில் முன்னிற்கின்றனர். DIA க்கு எதிரான அச்சுறுத்தலால் தூண்டிவிடப்பட்டுள்ள பரந்த உணர்வானது ஏற்கனவே கலை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான ஒரே பிரதிநிதி தொழிலாள வர்க்கம்தான் என்ற உண்மையைக் காட்டுகிறது. நிலைமையின் முழு தாக்கத்தையும் உணராத நிலையிலும் பல டெட்ரோயிட் மக்கள், செல்வந்தர்களாலும் மற்றும் அதிகாரத்திலுள்ளவர்களாலும் தங்களிடமிருந்து ஏதோ பறிக்கப்படுதவதாக உணர்கின்றனர். அவர்கள் கருத்து சரியாகவே இருக்கின்றன. சோசலிச சமத்துவக் கட்சி தன்னுடைய வேலைத்திட்டத்தில் “கலாச்சார உரிமை” என்பதை தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக உரிமைகளில் ஒன்றாக முன்வைக்கின்றது: அதாவது “கலை மற்றும் கலாச்சாரத்தை அணுகுவதற்கான நிலைமை என்பது ஆரோக்கியமான சமூகத்தின் ஒரு அடிப்படைக் கூறுபாடாகும். ஆயினும்கூட, மற்றவற்றைப் போல், இதுவும் இடைவிடாத தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது. ... கலாச்சாரத்தை இலாப நோக்கத்திற்கு அடிபணியச்செய்வது என்பது பெரும் சீரழிவிற்கு வழிவகுத்திருக்கிறது.” DIA யின் கலைப் படைப்புக்களை விற்பனை செய்வது என்னும் அச்சுறுத்தல், அது செயற்படுத்தப்பட்டாலும், செயற்படுத்தப்படாவிட்டாலும், அதிகாரத்திலுள்ளவர்கள் மக்களிடம் இருந்து எல்லாவற்றையும் திருடுவது என்னும் உறுதிப்பாட்டைத்தான் அறிவித்துள்ளனர். தங்கள் பரந்த சொத்துக்களை பாதுகாப்பதற்காக தேசத்தையும் அதனுடைய நிறுவனங்களையும் அழித்து மக்களை உரிமைகளற்ற, அறிவற்றவர்களாக உணர்வற்ற சடக் கூட்டமாக மாற்றிவிடுவதுதான் அவர்களுடைய நோக்கமாகும். அவர்களுடைய சுயநல, பகுத்தறிவற்ற மற்றும் அழிவான அமைப்புமுறையை இல்லாமல் செய்வதை நோக்கமாக கொண்ட நனவான வெகுஜன இயக்கத்தைக் கட்டமைப்பதன் ஊடாகவே செல்வந்தர்களை கையாள முடியும். |
|