தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The Egyptian Revolution and the crisis of revolutionary leadership எகிப்தியப் புரட்சியும் புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியும்Johannes Stern use this version to print | Send feedback நீண்டகாலம் பதவியிலிருந்த சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக் அகற்றப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குப்பின், எகிப்திய தொழிலாளர்களும் இளைஞர்களும் பாரிய எதிர்ப்புகளுடன் மீண்டும் தெருக்களுக்கு வந்துள்ளனர். இம்முறை அவர்கள் இஸ்லாமிய ஜனாதிபதி முகம்மது முர்சி மற்றும் முஸ்லிம் சகோதரத்துவம் (Muslim Brotherhood -MB) அகற்றப்பட வேண்டும் எனக் கோருகின்றனர். இப்பொழுது வெளிப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் வரலாற்றிலேயே பெரியவற்றுள் ஒன்றாகும். எகிப்திய இராணுவத்தின் தகவல்களின்படி, முர்சி பதவி ஏற்ற முதலாண்டு நிறைவு தினத்தன்று 17 மில்லியன் ஆர்ப்பாட்டக்கார்கள் தெருக்களிலும் சதுக்கங்களிலும் ஒன்றுகூடினர். பதவியில் இருந்த ஒரே ஆண்டிற்குள் முஸ்லிம் சகோதரத்துவத்தின் பிற்போக்குத்தனம் எகிப்திய மக்களிடையே அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. தனது வலதுசாரி வேலைத் திட்டத்தை இஸ்லாமியவாத வார்த்தைஜாலங்களுக்கு பின்னால் மறைக்க முயற்சித்த போதிலும், முர்சியின் ஆட்சி, தொழிலாள வர்க்கத்தின் அதிகரிக்கும் எதிர்ப்பைத்தான் கண்டது. பொருளாதார, சமூக உரிமைகளுக்கான எகிப்திய மையத்தின் (ECESR) சமீபத்திய அறிக்கைப்படி, முர்சியின் ஆட்சியின்கீழ் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் 2013 முதல் காலாண்டில் இருமடங்கால் தீவிரமாக அதிகரித்தது. 24,000 வேலைநிறுத்தங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு பிரதிபலிப்பாக முர்சி, மேலும் நெருக்கமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தன்னை இணைத்துக்கொள்ள முற்பட்டார். வெகுஜன எதிர்ப்புக்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு முர்சி சிரியாவிற்கு எதிராக இப்பொழுது நடக்கும் பினாமிப்போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவைக் கொடுத்தார். இப்போர் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை அகற்றி, ஈரானுக்கு எதிராக ஒரு போரைத் தயாரிக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும். “சிரியாவிற்கு ஆதரவளிக்கும்” ஒரு அணிவகுப்பில் முர்சி தான் சிரியாவிற்கு எதிராக “பறக்கக்கூடாது பகுதி” ஒன்றை நிறுவவும், மேற்கத்தைய ஆதரவுடைய இஸ்லாமியவாத சிரிய எதிர்த்தரப்பிற்கு “பொருளாதார, தார்மீக” உதவியளிக்கவும் முன்வருவதாகத் தெரிவித்தார். இது அவருடைய ஆட்சிக்கு எதிராக மக்களுடைய வெறுப்பை தூண்டிவிட்டது. முர்சியின் கொள்கைகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்கள் வெடித்திருக்கையில், எகிப்திய புரட்சியில் புரட்சிகரத் தலைமை தொடர்பான பிரச்சினை முக்கிய கேள்வியாக முன்னொருபோதுமில்லதளவிற்கு மிகவும் அவசரமாக எழுந்துள்ளது. இந்த எதிர்ப்புக்கள் அரசியல்ரீதியாக “தமரோட்” (எழுச்சியாளர்) அரங்கின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளன. இது பல தாராளவாத, இஸ்லாமியவாத, போலி இடது கட்சிகள் மற்றும் முபாரக் ஆட்சியின் எஞ்சிய பிரிவுகளின் ஆதரவைக் கொண்டுள்ளது. இதற்கு முகம்மது எல் பரடேயின் தேசிய மீட்பு முன்னணி, இஸ்லாமியவாத வலுவான எகிப்துக் கட்சி, ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம், தவறான பெயரைக்கொண்டுள்ள புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் முபாரக் சர்வாதிகாரத்தில் கடைசிப் பிரதமராக இருந்த அஹ்மத் ஷபிக் ஆகியோரும் ஆதரவு கொடுக்கின்றனர். “தமரோட்” எகிப்திய இராணுவத்தை முர்சியை அகற்றி, “ஒரு தொழில்நுட்ப அறிஞர்” அரசாங்கத்தைக் கொண்டுவருமாறு அழைப்புவிடுகின்றது. அந்தப் புதிய அரசாங்கம் முதலாளித்துவ சார்பு அரசாங்கமாக எகிப்திய இராணுவத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். திங்கள் அன்று தமரோட் அறிக்கை ஒன்றை வெளியிட்டு “இராணுவம், பொலிஸ், நீதித்துறை உட்பட அனைத்து அரசாங்க அமைப்புக்களும் மக்கள் கூட்டத்தினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மக்கள் விருப்பத்துடன் தெளிவாக ஒன்றுசேரவேண்டும்” என்று கூறியது. தன்னுடைய பங்கிற்கு அமெரிக்க நிதி பெறும் எகிப்திய இராணுவம் எதிர்ப்புக்களை நேரடியாக அடக்கும் வலிமை தனக்கு இல்லை என்று நினைக்கிறது. எனவே அது ஆட்சியை நியமிக்கும், நடுநிலைவகிக்கும் ஒரு பாத்திரத்தை வகித்து அமெரிக்காவுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து தன் மூலோபாயத்தை செயல்படுத்த விரும்புகின்றது. திங்களன்று அமெரிக்கக் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சே எகிப்திய தளபதி ஜேனரல் செட்கி சோபியுடன் பேசினார் என அறிவிக்கப்படுகின்றது. அதே நாளன்று எகிப்திய இராணுவப் படைகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசியல் கட்சிகளுக்கு 48 மணிநேர இறுதி எச்சரிக்கையை கொடுத்தது: “நாடு தற்பொழுது முகங்கொடுக்கும் வரலாற்றுச் சுமையை கணக்கில் எடுத்துக்கொண்டு தங்களுக்குள் உடன்பாட்டிற்கு வந்து தற்போதைய நெருக்கடியை தீர்க்க இது கடைசி வாய்ப்பாகும்” என்றது. இராணுவம் கருத்திற்கொண்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டணி முஸ்லிம் சகோதரத்துவம், பிரதான தாராளவாதக் கட்சிகள், முன்னாள் முபாரக் அதிகாரிகள் மற்றும் சில சிறிய போலி இடது குழுக்களை ஒன்றாக கொண்டுவந்து ஒரு மறைவான திரைபோல் பயன்படுத்த முனைகின்றது. இது எதிர்ப்புக்களை சட்டபூர்வமற்றவையாக்க உதவுவதுடன், அவற்றை வன்முறை மூலம் நசுக்குவதற்கு இராணுவத்திற்கு போதுமான நேரத்தையும் கொடுக்கும். இந்த நோக்கங்கள் வாஷிங்டனாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் எகிப்திய தொழிலாள வர்க்கம் எழுச்சியடைந்து ஒரு வலுவற்ற எகிப்திய அரசாங்கத்துடன் வெளிப்படையாக மோதும் சாத்தியம் குறித்து அச்சமடைந்துள்ளது. ஏனெனில் இது மத்திய கிழக்கு முழுவதும் ஏகாதிபத்திய கட்டமைப்பிற்கு குழிபறித்துவிடும் அச்சறுத்தலை கொண்டுள்ளது. இக்கட்டமைப்பில் அமெரிக்கா, இஸ்ரேலுடன் ஆழ்ந்த உறவுகளைக் கொண்ட எகிப்து முக்கிய பங்கை வகிக்கின்றது. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள், அரசியல்ரீதியான சுயாதீன வெளிப்பாட்டைக் காண வேண்டும். அவை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக, சமூக விருப்புகளை மீண்டும் மீண்டும் ஏமாற்றத்திற்குட்படுத்தியுள்ள அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்தும் உடைத்துக்கொண்டு சுயாதீனமாக இருக்க வேண்டும். கடந்தகால புரட்சிகரப் போராட்டங்களின் கசப்பான அனுபவங்கள், இராணுவமோ, இஸ்லாமியவாதிகளோ அல்லது எல் பரடேய் தலைமையிலான தாராளவாதிகளை கொண்ட எகிப்திய முதலாளித்துவத்தின் எந்தப்பிரிவுமோ தொழிலாள வர்க்கத்திற்கு எதையும் வழங்கவில்லை என்பதை காட்டுகின்றது. வெகுஜன அடித்தளம் இல்லாத நிலையில், அவை முற்றிலும் ஏகாதிபத்திய சக்திகள் கொடுக்கும் ஆதரவைத்தான் நம்பியுள்ளன. இது முதலாளித்துவ சொத்துடைமையை பாதுகாக்கும், ஏகாதிபத்தியத்துடனான அவர்களின் பிணைப்பு மற்றும் எகிப்திய முதலாளித்துவ அரசமைப்பை பாதுகாக்கும் எகிப்தில் இருக்கும் அரசியல் சக்திகளின் திவால்தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. ஒரு தெளிவான புரட்சிகர வேலைத்திட்டம், ஒரு மார்க்சிச அடித்தளத்தில்தான் அபிவிருத்தி செய்யப்பட முடியும். இன்று இதன் பொருள் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கான போராட்டமாகும். ட்ரொட்ஸ்கி எழுதியபடி இது ஒன்றுதான் “தொழிலாள வர்க்கம் வறிய விவசாயிகள், நகர்ப்புற ஏழைகளுடன் இணைந்து சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்னும் உறுதியைக் கொடுக்கிறது. அது ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும் முதலாளித்துவத்தினரிடமிருந்தும் அதிகாரத்தை தனது கைகளில் எடுத்துக்கொண்டு சமூகத்தை சோசலிச வழியில் மாற்றியமைக்கும் பணியை ஆரம்பிக்கவேண்டும்.” எகிப்திய முதலாளித்துவத்தை தூக்கிவீசி அதற்கு பதிலாக சோசலிசக் கொள்கைகளுக்காக போராடும் தொழிலாளர் அரசாங்கத்தை அதிகாரத்தில் இருத்துதல் என்ற போராட்டத்திற்காக தனது சொந்த உண்மையான தொழிலாள வர்க்க அமைப்புகளை தோற்றுவிக்க வேண்டும். அவை ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற அடித்தளத்தை அமைத்துக்கொடுத்த சோவியத்துக்களை மாதிரியாக (தொழிலாளர் குழுக்கள்) கொண்டிருக்கவேண்டும். அத்தகைய முன்னோக்கை பாதுகாத்து முன்னெடுக்கும் ஒரே அரசியல் போக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மட்டுமேயாகும். தொழிலாளர்கள் எகிப்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதி ஒன்றைக் கட்டமைக்கப் போராடவேண்டும். இதனூடாக எகிப்திய தொழிலாளர்களின் போராட்டங்களை, மத்திய கிழக்கிலும், சர்வதேசரீதியாகவும் இருக்கும் தங்கள் வர்க்க சகோதர, சகோதரிகளின் முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு பொதுப் புரட்சிகர போராட்டத்தில் ஐக்கியப்படுத்த வேண்டும். |
|
|