தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா : எகிப்து Egyptian coup leader al-Sisi threatens mass repression எகிப்திய சதியின் தலைவர் அல்-சிசி பாரிய ஒடுக்குமுறை கையாளப்படும் என அச்சுறுத்துகிறார்By Johannes
Stern use this version to print | Send feedback ஜனாதிபதி மகம்மது முர்சியையும் மற்றும் முஸ்லிம் சகோதரத்துவத்தையும் (MB) அதிகாரத்தில் இருந்து அகற்றிய இராணுவ சதி ஏற்பட்டு மூன்று வாரங்களுக்கு பின்னர் எகிப்திய இராணுவம் நாட்டின் மீது தன் பிடியை இறுக்குவதற்கும், மீண்டும் இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கும் பாரிய ஒடுக்குமுறையைக் கையாள்கிறது. எகிப்தின் சதியை அடுத்து வந்த தலைவரும் தற்போதைய ஆட்சியாளருமான ஜெனரல் அப்தெல் ஃபட்டா அல் சிசி “எல்லா நேர்மையான, நம்பகத்தன்மையுடைய எகிப்தியர்களையும்” ஒடுக்குமுறைக்கான இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். முர்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வியாழன் இரவு கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்திலும் மற்றும் அலெக்சாந்திரியாவிலும் போர்ட் சையதிலும் ஒன்றுகூட தொடங்கினர். முஸ்லிம் சகோதரத்துவம், இதற்கிடையில் இராணுவக் காவலில் உள்ள முர்சியை மீண்டும் பதவியில் இருத்துவதற்கு தனது சொந்த ஊர்வலங்களுக்கு அழைப்புவிட்டுள்ளது. நாட்டின் 84 மில்லியன் மக்கள் பெருகும் இரத்தக்களரியை எதிர்நோக்குகின்றனர். இந்தவெடிக்கும் மோதலோ ஏற்கனவே ஜூலை 3 சதியிலிருந்து 200 உயிர்களை பலிகொண்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் முர்சி ஆதரவாளர்கள் ஆவர். முஸ்லிம் சகோதரத்துவம் தலைமையிலான சதி எதிர்ப்பு ஜனநாயச் சார்புக் கூட்டணி “உள்நாட்டுப்போருக்கு வெளிப்படையான அழைப்பு” விடுத்துள்ளதாக இராணுவத்தை குற்றம் சாட்டியுள்ளது. இராணுவம் முர்சியின் ஆதரவாளர்களுக்கு சனிக்கிழமை வரை “எதிர்காலத்திற்கு நாட்டைத் தயாரிக்கச் சேருங்கள்” என்று கெடு கொடுத்துள்ளது. “வன்முறையையும்”, “பயங்கரவாதத்தையும்” தூண்ட முற்படுபவர்களுக்கு எதிராக துப்பாக்கிகள் திருப்பப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளது. அரசாங்கத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட இராணுவப் பயிற்சி முடிவு நிகழ்வில், புதன் அன்று நிகழ்த்திய உரையில் ஜெனரல் சிசி “அடுத்த வெள்ளியன்று அனைத்து எகிப்தியர்களும் தெருக்களுக்கு வந்து வன்முறையையும் பயங்கரவாதத்தையும் எதிர்க்க கட்டளையிட எனக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.” எனக் கூறினார். அல்-சிசியின் உரை ஓர் அச்சுறுத்தல் என உணரப்பட வேண்டும். தெருக்களில் இராணுவத்திற்கு ஆதரவு கொடுக்கும் குண்டர்களை அவர் திரட்டி இராணுவத்தின் இன்னும் மோசமான வன்முறைமிக்க ஒடுக்குதலுக்கு ஒரு மறைப்பு அளிக்க முற்படுகிறார். இவருடைய கருத்துக்கள் பதவியகற்றப்படுவதற்கு பத்து நாடுகளுக்கு முன், முன்னாள் சர்வாதிகாரி ஹொஸ்னி முபாராக் கொடுத்த இழிந்த பெப்ருவரி 1, 2011 உரையைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது. அப்பொழுது அவர் எகிப்திய தேசத்தை காப்பற்றவும் “நாம் தொடர்ந்து சட்டவிரோதிகளை தண்டிக்கவும்” பதவியில் இருக்கப் போவதாக உறுதியளித்தார். மறுநாள் அவர் தன்னுடைய குண்டர்களை திரட்டி, தஹ்ரிர் சதுக்கத்தில் “Battle of the Camels” (“ஒட்டகங்களின் போராட்டத்தில்”) எதிர்க்கும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தாக்க கட்டவிழ்த்தார். கடந்த சில வாரங்களில், இராணுவம் ஒரு மிருகத்தன அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஜூலை 8ம் திகதி, குறைந்தபட்சம் 50 முர்சி சார்பு ஆர்ப்பாட்டக்கார்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டு, கெய்ரோவில் முர்சி காவலில் இருப்பதாகக் கூறப்படும் குடியரசுக் காவலர் தலைமையகத்திற்கு முன் நூற்றுக்கணக்கானவர்களும் காயத்திற்குள்ளாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம் சகோதரத்துவத்தின் உறுப்பினர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவற்றுள் அதன் தலைமை வழிகாட்டி முகம்மது அல் பேடியும் அடங்குவார். முஸ்லிம் சகோதரத்துவத்தை அடக்குவது உடனடி இலக்கு என்றாலும், இராணுவத்தின் இறுதி நோக்கம் தொழிலாள வர்க்கத்தை அடக்குவதாகும். தொழிலாள வர்க்கம்தான் எகிப்திய புரட்சியின் பின்னால் உந்துசக்தியாக உள்ளது. அல் சிசி வெள்ளியன்று அவசரகால நிலையை அறிவித்து மீண்டும் முபாரக் சகாப்தத்தின் இழிந்த அவசரகால சட்டங்களை மறுபடியும் அறிமுகப்படுத்துவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு முன் இருந்த முபாரக்கைப் போல், அல்-சிசியும் “பயங்கரவாத” அச்சுறுத்தல் என்பதைக் குறிப்பிட்டு எதிர்ப்பை நசுக்கவும் மற்றும் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவ முற்படுவார். சிசியின் சர்வாதிகார திட்டங்களுக்கு தமரோட் (“எழுச்சியாளர்கள்”) கூட்டணியின் ஆதரவு உள்ளது. அது தன் பேஸ்புக்கில் “நாம் அனைத்து எகிப்திய பெருமக்களையும் இந்த வெள்ளியன்று சதுக்கங்களில் கூடி உத்தியோகபூர்வமாக முகம்மத் முர்சி விசாரணைக்கு உட்படுத்தப்பட கோருமாறும், பயங்கரவாதத்திற்கு எதிரான வரவிருக்கும் போர்களில் எகிப்திய ஆயுதப்படைகளை ஆதரிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.” என எழுதியுள்ளது. வெள்ளி ஆர்ப்பாட்டங்களுக்கு முன்பு தமரோட் கூட்டணியின் செய்தித் தொடர்பாளரான முகம்மது அப்துல் அஜிஸ் பின்வருமாறு அறிவித்தார்: “நாளை நாம் எகிப்தை தூய்மைப்படுத்துவோம்”, முஸ்லிம் சகோதரத்துவத்தை குறிப்பிட்டு, “நம் புரட்சியை தீவிரவாதிகள் அழிக்க அனுமதியோம்.” எகிப்தின் மிகச்செல்வம் படைத்த தன்னலக்குழுக்கள் மற்றும் முன்னாள் சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கின் எஞ்சிய செல்வாக்குடையவர்களையும் கொண்ட அரசியல் கூட்டணி, நாட்டின் போலி இடது அமைப்புக்களான புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் போன்ற பிரிவுகளை உள்ளடக்கியிருந்தாலும், வலதுசாரி முர்சியின் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்புக்களை இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் பின்னால் திருப்ப முனைகின்றது. தமரோட் ஆரம்பத்தில் இருந்தே ஒரு வலதுசாரி சதியாகத்தான் உள்ளது. இது எகிப்தில் இராணுவ சர்வாதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்தும் ஒரு முன்னணிக் குழுவாகச் செயல்படுகிறது. இது எகிப்திய முதலாளித்துவத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளின் நலன்களின் சார்பாக பேசுகிறது. ஜூலை 20 அன்று வாஷிங்டன் போஸ்ட் “முர்சி அகற்றப்பட்டபின், எகிப்தின் பழைய படைகள் மீண்டும் வந்துவிட்டன—முஸ்லிம் சகோதரத்துவம் வெளியேறிவிட்டது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டு, எவ்வாறு ஆட்சிமாற்றம் முன்னாள் முபாரக்கின் அதிகாரிகளையும் இராணுவத் தளபதிகளையும் அதிகாரத்திற்கு மீட்டுள்ளது என்று விபரிக்கின்றது. போஸ்ட் எழுதுவது: “முர்சியை அகற்றிய ஜூலை 3 ஆட்சிமாற்றத்திற்குப் பின்னரான எகிப்தின் புதிய அதிகார இயக்கவியல் விந்தையான முறையில் அறிமுகமானது போல் தெரிகிறது. முன்பு தடைசெய்யப்பட்டிருந்த முஸ்லிம் சகோதரத்துவத்தின் இஸ்லாமியவாத ஆட்சியாளர்கள் அகன்றுவிட்டனர். மீண்டும் பழைய படைகளின் முகங்கள்தான் தெரிகின்றன. இவர்கள் நெருக்கமாக முபாரக்கின் ஆட்சியுடன் பிணைந்தவர்கள் அல்லது சக்தி வாய்ந்த தளபதிகளுடன் நெருக்கமானவர்கள். இக்கட்டுரை காவலில் உள்ள முஸ்லிம் சகோதரத்துவத்தினரின் வக்கீலான அமிர் அலி அல்-தின் என்பவரை மேற்கோளிடுகிறது: “நாம் 25 ஜனவரிக்கு முன்னரான காலத்திற்கு சென்றுவிட்டோம். சிறைகளில் முன்மாதிரியான அடக்குமுறைதான் – தெருக்களிலும் அப்படித்தான்.” எகிப்திய ஆளும் உயரடுக்கு தனது எதிர்ப்புரட்சித் தாக்குதலுக்கு எகிப்திலுள்ள வசதி படைத்த தாராளவாதிகளையும் போலி இடது குழுக்களையும் நம்பியுள்ளது. அவை தீவிரமாக வலதிற்கு மாறியுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கம் பற்றி அச்சுறுத்தலடைந்து, முன்பு முபாரக் ஆட்சியைக் குறைகூறிய இந்த அரசியல் சக்திகள் இப்பொழுது வலதுசாரி பேரினவாத அலையில் பிடிபட்டுள்ளனர். “எகிப்தின் ஜனநாயகவாதிகள் ஜனநாயகத்தை கைவிடுகின்றனர்” என்ற தலைப்பில் போஸ்ட்டில் ஜூலை 22 வந்துள்ள கட்டுரை ஏப்ரல் 6, இளைஞர் இயக்கத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான எஸ்ரா அப்தை மேற்கோளிடுகிறது; அவர் சதிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். போஸ்ட் “அவர் ஒரு தீவிர நாட்டுப்பற்றின் வர்ணிப்பின் வெடிப்புடன் இராணுவத் தலையீட்டை நியாப்படுத்துகிறார்: “பயங்கரவாதம் எகிப்தைக் கைப்பற்ற முயலும்போது, வெளிநாட்டுத் தலையீடு நம் உள்நாட்டு விவகாரங்களில் அதிகம் ஈடுபடும்போது, பின் பெரும் எகிப்திய மக்கள் வெளிநாட்டு ஆபத்திற்கு எதிராக அதன் இராணுவப் படைகளை ஆதரிப்பது தவிர்க்க முடியாதது.” என்கிறார். இதற்கிடையில் வாஷிங்டனில் ஒபாமா நிர்வாகம் தான் இராணுவம் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதை எதிர்க்காது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்க துணை வெளிவிவகார செயலர் வில்லியம் பேர்னஸ், அமெரிக்க செனட், பிரதிநிதிகள் மன்றத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு வியாழன் அன்று எகிப்தில் இராணுவத்தின் மூலம் சதி நடந்தது என்பதை ஒப்புக் கொள்ளும் நோக்கத்தை நிர்வாகம் கொண்டிருக்கவில்லை என்று விளக்கினார். அமெரிக்க சட்டத்தின் கீழ், சதி என்று ஒப்புக்கொண்டால் அமெரிக்கா எகிப்திக்கு கொடுக்கும் ஆண்டு நிதி உதவி $1.55 பில்லியன் நிறுத்தப்பட வேண்டும். இதில் $1.3 பில்லியன் நாட்டின் இராணுவத்திற்கு நேரடியாக செல்கிறது. “அத்தகைய ஒரு முடிவை எடுப்பது நம் தேசிய நலனுக்கு உகந்தது அல்ல” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஒரு நிர்வாக அதிகாரி கூறினார். புதன் அன்று நிர்வாகம் கெய்ரோவிற்கு அனுப்ப இருந்த நான்கு F16 போர்விமானங்களை தாமதப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது முர்சியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவராமல் முஸ்லிம் சகோதரத்துவத்துடன் ஒருவித உடன்பாட்டிற்கு செல்லுமாறு ஆளும் இராணுவ கட்டுப்பாட்டு ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகும். அரபு உலகில் அதிக மக்கள் இருக்கும் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடிப்பது குறித்து வாஷிங்டன் கவலைப்படுகிறது. அதேபோல் முஸ்லிம் சகோதரத்துவத்தை முற்றாக ஒடுக்குவது என்பது அப்பரந்த பிராந்தியத்தில் அதன் கொள்கைகளுக்கு பாதிப்பாக இருக்கும். குறிப்பாக சிரியாவில், ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் அரசாங்கத்தை அகற்ற அந்நாட்டின் முஸ்லிம் சகோதரத்துவத்தையும் அல்குவேடா பிணைப்புடைய பிரிவுகளையும் உள்நாட்டுப் போரில் ஆதரிக்கிறது. |
|
|