தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
அமெரிக்கா இராணுவமயமாகிறது
Bill Van Auken use this version to print | Send feedback அமெரிக்க வாழ்க்கையில் பழகிப் போன ஒரு அம்சமாக மாறிவிட்டிருக்கின்ற “நகர்ப்புற போர்ப் பயிற்சி” ஒத்திகை நடவடிக்கை வரிசைகளில் சமீபத்தியதாக இந்த வாரத்தில் சிக்காகோவில் பிளாக்ஹாக் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டன. மற்றெங்கிலும் போலவே, இந்த ஒத்திகையும் மக்களை திகைக்கச் செய்யும் வகையில் அறிவிப்பின்றி திடீரென்றே முளைத்தது. இரகசியமாக நடத்தப்பட்ட இந்த ஒத்திகைகளின் - உள்ளூர் போலிஸ் முகமைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஆகிய அனைவரின் ஒத்துழைப்புடன் தான் இது நடந்திருக்க முடியும் என்பது வெளிப்படை - நோக்கம் “நகர்ப்புற பகுதிகளிலான இராணுவ நடவடிக்கைகள்” என்று பென்டகனின் சித்தாந்தம் விவரிக்கின்ற ஒன்றில் அமெரிக்க துருப்புகள் அனுபவம் பெறும் பொருட்டு தான் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் சந்தேகத்திற்கிடமின்றி அமெரிக்க இராணுவத்திற்கு வெகு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் நாம் கண்ணுற்றதைப் போல, ஓரளவுக்கு சக்தி குறைந்த நாடுகளை ஊடுருவதும் ஆக்கிரமிப்பதும் பின் அங்கிருக்கும் எதிர்ப்பு காட்டும் மக்களை பெரும்பாலும் நகர்ப்புற மையங்களில் வீடு வீடாகச் சென்று சண்டையிடுவதும் தான் கடந்த தசாப்தத்தில் அதன் பிரதான இலக்காக இருந்திருக்கிறது. தென்மத்திய இண்டியானா பகுதியில் இராணுவம் 1,000 ஏக்கர் பரப்பில் நகர்ப்புற பயிற்சி மையம் ஒன்றை இயக்குகிறது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் மாதிரிகளாக வடிவமைக்கப்பட்டுள்ள 1500 “பயிற்சி கட்டமைப்பு”கள் இந்த மையத்தில் இருப்பதாக பெருமையடிக்கப்படுகிறது. “வெளிநாட்டு சூழல்கள் மற்றும் உள்நாட்டு சூழல்கள் இரண்டு வகை மாதிரிகளையும் இங்கு கச்சிதமாக உருவாக்க முடியும் ” என்று இம்மையத்தின் வலைத் தளம் கூறுகிறது. இந்த பரந்து விரிந்த பயிற்சி மையத்தின் மாதிரிக் கட்டிட அமைப்புகளின் மூலம் சாதிக்க முடியாத எது ஒன்றை சிக்காகோவின் குடியிருப்பு கட்டிடங்களின் மீது தாழ்வாகப் பறக்கிற பிளாக்ஹாக் ஹெலிகாப்டர்களும் அல்லது செயிண்ட் லூயிஸ் வீதிகள் வழியே பவனி வரும் ஆயுதமேந்திய இராணுவ வாகன வரிசைகளும் சாதிக்கவிருக்கின்றன? சென்ற ஆண்டில் மட்டும், லாஸ் ஏஞ்சல்ஸ், சிக்காகோ, மியாமி, டாம்பா, செயிண்ட் லூயிஸ், மினபோலிஸ், வேர்ஜினியாவில் உள்ள கிரீட்ஸ் பகுதிகளில் உட்பட குறைந்தபட்சம் ஏழு இத்தகைய ஒத்திகைகள் நடத்தப்பட்டன. அமெரிக்க நகரங்களில் துருப்புகள் செயல்படுவதை இயல்பு நடவடிக்கை போல் ஆக்க வேண்டும், அத்துடன் உள்நாட்டிற்குள் அமெரிக்க இராணுவ வலிமை பயன்படுத்தப்படுவதை அமெரிக்க மக்கள் இயல்பாக எடுத்துக் கொள்ளப் பழக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருக்க முடியும் என்பது வெளிப்படை. இத்தகைய இராணுவ நிலைநிறுத்தல்களுக்கான தயாரிப்புகள் ஏற்கனவே மிகவும் முன்னேறிய மட்டங்களுக்குச் சென்று விட்டன. கடந்த தசாப்த காலத்தில், “பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போரை” தொடுப்பதான பேரில், அடுத்தடுத்த ஒடுக்குமுறை சட்டங்களை வாஷிங்டன் செயலாக்கி இருக்கிறது. அத்துடன் தாயகப் பாதுகாப்புத் துறையின் கீழ் அரசக் கட்டுப்பாட்டின் ஒரு புதிய பரந்த அதிகாரத்துவத்தையும் அது உருவாக்கியிருக்கிறது. ஒபாமா நிர்வாகத்தின் கீழ், அமெரிக்க மக்களின் மீதான மின்னணுமுறை வேவுபார்ப்பு மிகப் பிரம்மாண்டமாய் விரிந்து செல்கின்ற அதே நேரத்தில், அரச எதிரிகளை காலவரையற்ற இராணுவக் காவலுக்குள் தள்ளுவதற்கோ அல்லது அவர்களை ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மூலமாக அமெரிக்க மண்ணிலேயே கூட படுகொலை செய்வதற்கோ வெள்ளைமாளிகை அதிகாரம் கோருகிறது. இந்த நிகழ்முறையின் பகுதியாகவே அமெரிக்க இராணுவ அதிகாரத்தின் இடைவிடாத வளர்ச்சியும் உள்நாட்டு விவகாரங்களிலும் கூட அதன் தலையீடு அதிகரிப்பும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 2002 இல் அமெரிக்க வடக்குப் படைத்தலைமை உருவாக்கப்பட்டதானது முதன்முறையாக அமெரிக்காவிற்குள்ளேயேயான நடவடிக்கைகளுக்கு ஒரு இராணுவத் தலைமையை அர்ப்பணித்திருக்கிறது. ”உள்நாட்டிலான பிரச்சினைகளுக்கான பதிலிறுப்புகள் உட்பட குடிமை சட்ட அமலாக்க அதிகாரி”களுக்கு “உதவு”கின்ற விதமாக அமெரிக்க மண்ணில் இயங்குகின்ற அமெரிக்க இராணுவப் படைகளுக்கான புதிய நடத்தை விதிகள் அமலுக்கு வருவதை சென்ற மே மாதத்தில் தான் பென்டகன் அறிவித்தது. இந்த ஆவணம் “அவசரநிலை அதிகாரம்” என்ற தலைப்பிலான ஒரு பிரிவின் கீழ் மிகப் பேரளவான வானளாவிய இராணுவ அதிகாரங்களை அறிவிக்கிறது. ”ஜனாதிபதியிடம் முன்கூட்டிய அனுமதி பெறுவது சாத்தியமில்லாத, அரசியல்சட்டப்படியான உள்ளூர் அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்துவது இயலாத அசாதாரணமான அவசரகால சூழ்நிலைகளில், எதிர்பாராத வகையில் பெரிய அளவில் நடக்கக் கூடிய மக்கள் அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளில் தற்காலிகமாக இறங்குவதற்கு” ஒரு “கூட்டரசின் இராணுவத் தளபதி”க்கு இருக்கும் அதிகாரத்தை இந்த ஆவணம் திட்டவட்டமாக தெரிவிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பென்டகன் கூட்டமானது இராணுவச் சட்டத்தை வேண்டியபோது கையிலெடுப்பதற்கான அதிகாரத்திற்கு உரிமைகோருகிறது. இந்த அதிகாரங்கள் எல்லாம் ஏதோ அமெரிக்க மக்களை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றுவதற்கோ அல்லது சில கற்பனையான அவசரகால நிலைகளை எதிர்கொள்வதற்காகவோ எல்லாம் நிலைநிறுத்தப்படவில்லை. அபாயம் எங்கே இருக்கிறது என்கிற விடயத்தை அமெரிக்க இராணுவத் தலைமை ரொம்பவே நனவுடன் புரிந்து வைத்திருக்கிறது. ஃபோர்ட் லீவன்வொர்த் தளபதிகள் மற்றும் படை ஊழியர்களுக்கான கல்லூரியில் மூத்த விரிவுரையாளர் மற்றும் இராணுவத்தின் முன்னேறிய இராணுவ ஆய்வுகளுக்கான பள்ளியின் முன்னாள் இயக்குநரின் சமீபத்திய ஒரு கட்டுரையில், இராணுவம் தலையீடு செய்யத்தக்க ஒரு சூழ்நிலை குறித்து கூறியிருந்தார். “இருபத்தொன்றாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தைய பெருமந்தநிலையானது எவரொருவரும் கணித்திருந்ததை விடவும் நீண்டு கொண்டே செல்கிறது. 2012 இல் வெள்ளை மாளிகை மற்றும் நாடாளுமன்றத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதன் பின்னர், ஆளும் கட்சியானது பொருளாதார ஊக்குவிப்புக்கோ அல்லது நிவாரணத்திற்கென்றோ ஒதுக்கப்பட்டிருந்த அத்தனை நிதிகளையும் துண்டித்து வருகிறது. தசாப்தத்தின் பாதிக்கும் மேற்பட்ட காலத்திற்கு, 1990களில் ஜப்பான் இருந்ததைப் போல அமெரிக்கப் பொருளாதாரமானது தேங்கி விட்டிருக்கிறது. 2016க்குள்ளாக, பொருளாதாரம் மீண்டெழும் அறிகுறிகளைக் காட்டினாலும் கூட, நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கங்கள் வேலையில் வளர்ச்சி என்பதையோ அல்லது ஊதிய உயர்வுகள் என்பதையோ இனிமேல் தான் காண வேண்டியிருக்கிறது. வேலைவாய்ப்பின்மையின் அளவு இரட்டை இலக்கங்களுக்கு நெருக்கமாகவே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது...” வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அமெரிக்காவில் இன்று நிலவக் கூடிய சூழலுக்கு அதிக வித்தியாசமில்லாத மேற்கூறிய நிலைமைகள் இராணுவ வலிமையால் மட்டுமே தணிக்கப்படத்தக்க சமூக எழுச்சிகளை உருவாக்குகின்றன என்பதை பென்டகன் காண்கிறது. குடிமைச் சட்ட அமலாக்கத்தில் இராணுவத்தின் பயன்பாட்டைத் தடை செய்கிற பல நூற்றாண்டு கால அரசியல் கோட்பாடுகள் தான் திரைமறைவில் ஏறக்குறைய எந்த ஊடகமும் செய்தி வெளியிடாமல் அதிகமான பொது விவாதங்களும் இன்றி இல்லாதொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுதந்திரப் பிரகடனத்திலேயே கூட, ஜோர்ஜ் மன்னருக்கு எதிரான புரட்சியை நியாயப்படுத்தும் குற்றச்சாட்டில், ”அவர் மக்கள் அதிகாரத்தை விட இராணுவம் சுயேச்சையானதாகவும் மேலதிகாரம் படைத்ததாகவும் இருக்க வழிவகுத்து பாதிப்பு ஏற்படுத்தினார்” என்ற குற்றச்சாட்டும் இடம்பெற்றிருந்தது. இராணுவத்தின் உள்நாட்டு அதிகாரம் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற அதேவேளையில் குடிமை போலிசாக கருதப்பட்டு வந்ததும் இராணுவமயமாக்கப்பட்டு வருகிறது. சென்ற வார இறுதியில் “போர்த்திற போலிசின் எழுச்சி” (“The Rise of the Warrior Cop”) என்ற தலைப்பில் வோல்ஸ்டிரீட் ஜேர்னலில் வெளியான ஒரு கட்டுரையில் இந்த நிகழ்முறை விவரிக்கப்பட்டுள்ளது: “இராணுவ ஆவேசத்தினாலும் கத்திமுனைகள் மற்றும் எம்-16 துப்பாக்கிகள் தொடங்கி ஆயுதமேந்திய வீரர்கள் சுமக்கும் வாகனங்கள் வரை இராணுவ-பாணி சாதனங்கள் கிடைப்பதாலும் அமெரிக்க போலிஸ் படைகள் பல சமயங்களில் முன்னதாக போர்க்களத்திற்கென இருந்த ஒரு மனோநிலையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. போதை மருந்துகள் மீதான போரும், மிக சமீபத்தில், 9/11க்குப் பிந்தைய பயங்கரவாத தடுப்பு முயற்சிகளும் அமெரிக்கக் காட்சியில் போர்த்திற போலிஸ் (warrior cop) என்ற ஒரு புதிய அவதாரத்தை உருவாக்கியிருக்கின்றன. உடலெங்கும் கன ஆயுதம் தரித்திருக்கும் இவர், குறி வைக்கப்படும் தவறிழைப்போரையும் பழகிய அமெரிக்க சுதந்திரங்களுக்கு பெருகும் அச்சுறுத்தலையும் மிகக் கடுமையாகக் கையாளத் தயாராய் இருப்பார்.” தாயகப் பாதுகாப்புத் துறையில் இருந்து சுமார் 35 பில்லியன் டாலர் அளவுக்கான நிதி உதவியுடன் ஏறக்குறைய அமெரிக்காவின் ஒவ்வொரு நகரிலும் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் உத்திகள் பிரிவுகள் விரிந்து பரந்துள்ளதை இக்கட்டுரை விவரிக்கிறது. ”இதில் பெரும்பான்மையான பணம் ஆயுதமேந்திய வீரர்களைச் சுமக்கும் பீரங்கி வாகனங்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.” ஏப்ரல் மாதத்தில் போஸ்டன் நகரில் சந்தேகத்திற்குரிய ஒரு பதின்வயது நபரைப் பிடிப்பதற்காக ஏறக்குறைய முற்றுகை நிலை என்று சொல்லத்தக்க ஒன்று நடந்தபோது இந்த ஆயுதப் படையின் முழு வீச்சை காணக் கிடைத்தது. ஏறக்குறைய துருப்புகளில் இருந்து வித்தியாசப்படுத்தி அறிய முடியாத அளவுக்கு மோதலுக்கு தயார்நிலையில் இருந்த போலிசார் வீதிகளை ஆக்கிரமித்து உத்தரவு ஆணைகள் இன்றி வீடு வீடாக சோதனை நடத்தியதால் ஒரு முக்கிய அமெரிக்க நகரத்தின் ஒட்டுமொத்த மக்களும் தங்களது வீடுகளில் அடைபட்டுக் கிடந்தனர். அமெரிக்க சமூகம் முன்கண்டிராத வகையில் இராணுவமயமாக்கப்படுவதன் கீழே இரண்டு இணையான நிகழ்முறைகள் இருக்கின்றன. பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் பில்லியனர்கள் மற்றும் மல்டி-மில்லியனர்களை மக்களின் மிகப் பெரும்பான்மையினரான அமெரிக்க உழைக்கும் மக்களிடம் இருந்து பிரிக்கின்ற சமூகப் பிளவு பெருமளவில் விரிந்து செல்வதென்பது அடிப்படையாக ஜனநாயகத்துடன் இணக்கமற்றதாக இருக்கிறது, ஆட்சியின் பிற வடிவங்களை அது கோருகிறது. அதேசமயத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பிரதான சாதனமாக இராணுவவாதத்தை நோக்கித் திரும்புவதென்பது அமெரிக்க அரசு எந்திரத்துக்குள்ளாக இராணுவத்தின் அதிகாரத்தை பரந்த அளவில் அதிகப்படுத்தியிருக்கிறது. ஆழமான சமூகத் துருவப்படுத்தலும் ஆழமடையும் பொருளாதார நெருக்கடியும் நிச்சயம் சமூக எழுச்சிகளுக்கு வழிவகுக்கும் என்பதை அமெரிக்காவின் ஆளும் சிலவரணியும் சரி பென்டகன் தலைமையும் சரி நன்றாக புரிந்து கொண்டுள்ளன. தொழிலாள வர்க்கம் பொருத்தமான முடிவுகளுக்கு வந்தாக வேண்டும்; அத்துடன் வரவிருக்கும் தவிர்க்கவியலாத மோதல்களுக்கான தனது சொந்த அரசியல் தயாரிப்புகளில் அது ஈடுபட வேண்டும். |
|
|