சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: NLC workers angered by sell-out of their anti-privatisation strike

இந்தியா: தனியார்மயமாக்க-எதிர்ப்பு வேலைநிறுத்தம் விலைபேசப்பட்டதில் கோபமடைந்திருக்கும் என்.எல்.சி. தொழிலாளர்கள்

By Arun Kumar and Sasi Kumar and Moses Rajkumar
26 July 2013

use this version to print | Send feedback

நிலக்கரி அகழ்வு மற்றும் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நெய்வேலி லிக்னெட் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் இந்திய அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து அந்நிறுவனத்தின் சுமார் 25,000 தொழிலாளர்கள் நடத்திய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொழிற்சங்கங்களால் விலைபேசப்பட்டதில் அத்தொழிலாளர்களிடையே  அதிருப்தி பெருகி வருகிறது.

நிறுவனத்தை தனியார்மயமாக்குவதன் முதல் படியாகவும், இந்திய மற்றும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு பெரும் இலாபங்களை உருவாக்கித் தரும் வகையில் இந்தியாவின் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்யும் தனது திட்டங்களின் பகுதியாகவும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் அதிக இலாபமீட்டித் தரும் என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்கிறது.

என்.எல்.சி. வேலைநிறுத்தம் பதின்மூன்றாவது நாளை எட்டியிருந்த ஒரு நிலையில், தொழிற்சங்கங்கள் எல்லாம் என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தமிழ்நாட்டின் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மாநில அரசாங்கம் வாங்கிக் கொள்வதாகக் கூறியதை பிடித்துக் கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன.

என்.எல்.சி. பங்குகளை வாங்குவது தொடர்பாக தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் அதிகாரிகள் இந்தியாவின் பங்கு விற்பனை வாரியத்துடன் பேச்சுகளை தொடங்கியிருப்பதாக ஜூலை 15 செய்தி வெளியானதுமே, தொழிற்சங்கங்கத் தலைவர்கள் எல்லாம் சற்றும் தாமதிக்காமல் முக்கியமான வெற்றி என்று அறிவித்து வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்டனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் எந்தவித கூட்டம், கலந்துரையாடல் அல்லது வாக்கெடுப்பிலும் பங்கேற்காமல் அவரவர் வேலைக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டனர்.

தமிழ்நாடு அரசாங்கத்திற்கு விற்பனை செய்யும் திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் கூட அது மத்திய அரசாங்கத்தின் தனியார்மயமாக்க திட்டங்களுக்கு ஒரு பலத்த அடியாக மாறக் கூடிய நிலை ஒருபோதும் இருக்கவில்லை. என்.எல்.சி. நிறுவனத்தை முதலாளித்துவ இலாபமீட்டல் நிறுவனமாக இயக்குவதில் மாநில அரசாங்கம் டெல்லிக்கு சற்றும் சளைக்காத அதே அளவில் உறுதிபூண்டிருக்கிறது.

மேலும், வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் உடைத்தமையானது என்.எல்.சி. நிறுவனத்தின் மிருகத்தனமாய் சுரண்டப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டுமொருமுறை சங்கடத்தில் நிறுத்தியது. நிறுவனத்தின் ஊழியர்களில் சுமார் பாதிப்பேர் தங்களது வேலையை நிரந்தரமாக்குவதற்கும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு நிகராக ஊதியங்களையும் நல உதவிகளையும் பெறுவதற்கும் பல வருடங்களாக போராடி வருகிறார்கள். அரசாங்கத்தின் தனியார்மயமாக்க திட்டங்கள், என்.எல்.சி.யின் அனைத்துத் தொழிலாளர்களுக்குமே அச்சுறுத்தல்தான் என்பதை உணர்ந்திருந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள், நிரந்தரத் தொழிலாளர்களுக்கென பேரம்பேசுகிற தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளித்தனர். சட்டவிரோத வேலைநிறுத்தம் நடத்துவதற்கு தண்டனை கிடைக்கும் என்ற நீதிமன்ற அச்சுறுத்தல்களை இருவகைத் தொழிலாளர்களுமே கூட்டாக எதிர்த்து நின்றனர்.

என்.எல்.சி.யின் தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுடன் இணைந்தவை ஆகும். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்த தொழிலாளர் முன்னேற்ற முன்னணி (LPF), அஇஅதிமுக உடன் இணைந்த அண்ணா தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம் (AWSU), அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் (CITU) ஆகியவை பிரதான தொழிற்சங்கங்களாகும். கடைசி இரண்டு தொழிற்சங்கங்களும் முறையே இரண்டு பிரதான ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) ஆகியவற்றுடன் இணைந்ததாகும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெருவாரியாக இணைந்திருக்கக் கூடிய என்.எல்.சி. ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வழிநடத்தும் AITUC இன் பகுதியாக இருக்கிறது.

தனியார்மயமாக்கத்திற்கு எதிரான என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் விலைபேசப்பட்டதானது தனியார்மயமாக்கத்திற்கு என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் காட்டும் எதிர்ப்பின் மோசடியான தன்மையை மீண்டுமொரு முறை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இத்தொழிற்சங்கங்கள் இணைப்பு கொண்டிருக்கும் திமுக, அஇஅதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய பல்வேறு கட்சிகளுமே இந்தியாவை உலக மூலதனத்திற்கான மலிவு-உழைப்புக் களமாக உருவாக்குவதற்கான இந்திய உயரடுக்கின்  வேலைத்திட்டத்திற்கு உறுதி பூண்டவை ஆகும். இக்கட்சிகள் அனைத்துமே சந்தை ஆதரவு சீர்திருத்தங்களை தயவுதாட்சண்யமின்றி அமல்படுத்தியிருக்கக் கூடிய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களில் பங்குபற்றி வந்திருக்கின்றன.

திமுக மற்றும் அஇஅதிமுக ஆகிய இரண்டு தமிழ்-பிராந்தியக் கட்சிகளுமே தனியார்மயமாக்கத்தை வெளிப்படையாக ஆதரிப்பதில் ஒரு நெடிய வரலாற்றைக் கொண்டவை ஆகும். என்.எல்.சி. தனியார் முதலீட்டாளர்களிடம் விற்கப்படுவதை இவ்விரு கட்சிகளும் எதிர்க்கின்றன என்றால் அதில் என்.எல்.சி. தொழிலாளர்களின் நலன்கள் சம்பந்தமாகவோ அல்லது பொதுவாக உழைக்கும் மக்கள் நலன்கள் சம்பந்தமாகவோ எதுவும் இருக்கப் போவதில்லை. என்.எல்.சி.யை ஒரு பொதுத்துறை நிறுவனமாக பராமரிப்பதை திமுகவும் அஇஅதிமுகவும் ஆதரிக்கின்றன என்றால், அதன் காரணம் அவை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ்நாட்டு பிராந்திய உயரடுக்கின் நலன்களை ஊக்குவிப்பதற்கான ஒரு மதிப்புமிகுந்த செல்வமாக அதனை அவர்கள் பார்க்கிறார்கள் என்பதால்தான். என்.எல்.சி.யில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும், அது முடியாதெனும் பட்சத்தில் அதில் முன்னுரிமையாவது வேண்டும் என்று கேட்குமளவுக்கு அக்கட்சிகள் சென்று விட்டன.

தாங்கள் பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லும் சாமானியத் தொழிலாளர்களிடையே பாரிய கோபம் நிலவுவதைக் கண்ட என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் மத்திய அரசாங்கத்தின் தனியார்மயமாக்க திட்டங்களுக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கைக்கு தயக்கத்துடன் ஒப்புதலளித்தன. ஆனால் அவை கடந்த தசாப்தத்தில் திரும்பத் திரும்ப செய்து வந்திருப்பதைப் போல, என்.எல்.சி. தொழிலாளர்களது போராட்டத்தை தனிமைப்படுத்த முறையாக வேலை செய்தன. நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இடையே இருக்கும் பிளவு நிலைத்திருக்கும் வகையில் வேலை செய்தன என்பதோடு டெல்லியிலும் சென்னையிலும் இருக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகளை நெருக்கினால் தொழிலாளர்களின் நலன்களை உறுதிசெய்து விடலாம் என்பதான பொய்யை தொடர்ந்து ஊக்குவித்தன.

நெடுங்காலமாகவே தொழிலாளர் போர்க்குணத்தின் ஒரு மையமாக இருந்து வந்திருக்கக் கூடிய என்.எல்.சி.யிலான ஒரு வேலைநிறுத்தம் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் பெருவணிகக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த இயக்கத்திற்கான வினையூக்கியாக மாறிவிடுமோ என்பதுதான் தொழிற்சங்கங்களின் மிகப் பெரும் அச்சமாக இருந்தது.

வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருகையில், என்.எல்.சி.யின் பல்வேறு தொழிற்சங்கங்களின் தலைவர்களும் ஒன்றுகூடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அதாவது ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக மாநில அரசாங்க ஊழியர்களின் ஒரு வேலைநிறுத்தத்தை உடைப்பதற்கு துப்பாக்கி சூடுகளையும் பாரிய கைது நடவடிக்கைகளையும் பயன்படுத்தி அவப்பெயர் சம்பாதித்த ஒரு பிற்போக்குவாதிக்கு புகழாரம் சூட்டினர்.

என்.எல்.சி. பங்குகளை மாநில அரசாங்கம் வாங்கிக் கொள்வதான ஜெயலலிதாவின் அறிவிப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அஇஅதிமுக உடனான தமது பிற்போக்குத்தனமான அரசியல் கூட்டணியை புதுப்பித்துக் கொள்வதற்கான சாத்தியம் குறித்து பேசத் தொடங்கினர். 2011 மாநிலத் தேர்தலில் இந்த இரண்டு ஸ்ராலினிசக் கட்சிகளும் ஒரு சில தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு  பிரதிபலனாக அஇஅதிமுகவை ஆதரித்தன.

ஜுலை 15 அன்று நெய்வேலிக்கு பயணம் செய்து கொண்டிருந்த இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை அலைபேசியில் தொடர்புகொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப வலியுறுத்தும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார். ராமகிருஷ்ணனும் அதற்கு உடனடியாக ஒத்துக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலரான தா.பாண்டியனும் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஜெயலலிதா செய்த தலையீட்டிற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அடகுவைத்ததில் தனது கரம் வலுப்பெற்றதாக உணர்ந்துள்ள என்.எல்.சி. நிர்வாகம், உற்பத்தி மீண்டும் தொடங்கிய உடனேயே தனது தாக்குதலையும் தொடங்கி விட்டது. உற்பத்தி வேகத்தை அதிகரிக்க தொழிலாளர்களுக்கு அது நெருக்குதல் அளிப்பதோடு தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும் அச்சுறுத்தியது. இதற்குப் பதிலிறுப்பாக நிரந்தரத் தொழிலாளர்கள் சென்ற வாரத்தில் விதிப்படி மட்டுமே வேலை பிரச்சாரத்தை தொடங்கினர். அதனையடுத்து நிர்வாகம் இரண்டு தொழிலாளர்களை இடைநீக்கம் செய்ததோடு தெளிவாக இன்னுமொரு விரிவான வேட்டைக்குக் களம் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

என்.எல்.சி. தொழிலாளர்களிடையே சென்ற வாரம் விநியோகம் செய்யப்பட்ட உலக சோசலிச வலைத் தள கட்டுரை ஒன்றில், என்.எல்.சி. பங்குகளை மாநில அரசாங்கம் வாங்கும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் உடன்படுமானால் வேலைநிறுத்தத்தில் இருந்து உடனடியாக விலகிக் கொள்வதாக அஇஅதிமுக உடன் இணைந்த தொழிற்சங்கங்கள் கூறியுள்ளதைக் கூறி இந்த பொறியில் மற்ற என்.எல்.சி. சங்கங்களும் சிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று எச்சரித்திருந்தது. (காணவும்: தனியார்மயமாக்கத்திற்கு எதிரான என்.எல்.சி. வேலைநிறுத்தம் தொடர்கிறது.)

பெரு வணிகத்தின் மற்றும் அரசாங்கத்தில் இருக்கும் அதன் பிரதிநிதிகளின் சமூகரீதியான பிற்போக்குத்தனமான கொள்கைகளை முறியடிக்க வேண்டுமென்றால் தொழிலாளர்கள் முதலாளித்துவ ஆதரவு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இருந்து முறித்துக் கொள்வதோடு புதிய போராட்ட அமைப்புகளை உருவாக்க வேண்டும், ஒரு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின்  சுயாதீனமான அணிதிரட்டலை தொழிற்துறை மற்றும் அரசியல் ரீதியாக உருவாக்க வேண்டும் என்று அந்தக் கட்டுரை வாதிட்டது.

உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடிய என்.எல்.சி. தொழிலாளர்களில் பலரும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை விலைபேசியதற்கான தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர்.

நிரந்தரத் தொழிலாளியான ராஜன் என்பவர் கூறியதாவது: இது புலி வாலைப் பிடித்த கதை தான். தொழிற்சங்கங்கள் எல்லாம் வேலைநிறுத்தத்தை முடிக்க விரும்பியதால் வேலைநிறுத்தத்தை அவை நிறுத்தி விட்டன. தொழிலாளர்களுக்கு அபாயம் இன்னும் இருக்கவே செய்கிறது. என்.எல்.சி. தொழிலாளர்களில் சுமார் 60 சதவீதம் பேருக்கு வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்றது பிடிக்கவில்லை. என்.எல்.சி. வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது குறித்து கேட்டதற்கு, உயர் நீதிமன்றம் என்பது முதலாளிகளின் நலன்களுக்கு சேவை செய்யும் ஒரு ஸ்தாபனமே  தவிர, உழைக்கும் மக்களுக்கு சேவை செய்வதல்ல என்று ராஜன் தெரிவித்தார்.

இன்னுமொரு நிரந்தரத் தொழிலாளியான அப்துல் கூறினார்: எல்லா தொழிற்சங்கங்களும் சேர்ந்து எங்களை ஏமாற்றி விட்டன. எங்களுக்கு எந்த வேலை பாதுகாப்பும் இல்லை. அஇஅதிமுக, திமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட எந்தக் கட்சியுமே தொழிலாளர்களுக்காக இல்லை. இக்கட்சிகள் முதலாளிகளுக்கு ஆதரவான பொருளாதார சீர்திருத்தங்களையே ஊக்குவிக்கின்றன. இந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பகுதியாக அரசாங்கங்கள் பொதுத் துறை நிறுவனங்களைக் கழற்றி விடுவதோடு மானியங்களையும் வேலைகளையும் ஒழித்துக் கொண்டிருக்கின்றன. என்.எல்.சி. பங்குகளை மாநில அரசாங்கத்திடம் கையளிப்பதை ஒரு வெற்றி என தொழிற்சங்கங்கள் அறிவிக்கின்றன. ஆனால் உண்மையில் அது தனியார்மயமாக்க நிகழ்முறையின் ஒரு பகுதியே ஆகும்.

சண்முகம் கூறினார்: இதை ஒரு வெற்றி என்று கருத முடியாது. இது உண்மையில் ஒரு தோல்வியே. அவர்கள் தனியார்மயமாக்கத்தை தற்காலிகமாக மட்டுமே தள்ளிப் போட்டிருக்கிறார்கள். அதைத் தடுக்க முடியாது. தொழிற்சங்கங்கள், குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளது தொழிற்சங்கங்கள், அரசாங்கத்துடன் ஒத்துழைத்து வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றன. என்.எல்.சி. பங்குகளை வாங்குவது குறித்து தமிழ்நாடு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தவறொன்றும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜா கூறியிருந்தார். இந்தப் பேச்சின் மூலம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர் சூசகம் செய்தார். இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தின் கட்சிகளே அல்ல.