தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
US military plans direct intervention in Syria அமெரிக்க இராணுவம் சிரியாவில் நேரடித் தலையீட்டிற்கு திட்டமிடுகிறது
சிரியாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போரில், சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை கவிழ்ப்பதற்கு, நேரடி அமெரிக்க இராணுவத் தலையீட்டுக்கான ஒரு பெரிய விரிவாக்கத்திற்கு திட்டமிடப்படுகிறது. செனட்டின் ஆயுதப் படைகள் குழுவிற்கு தலைவரான ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கார்ட் லெவினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சே திட்டங்களை முன்வைத்து, சிரியாவில் பல அமெரிக்க தலையீட்டு திறன்களுக்கான செலவு மதிப்பீடுகளையும் கொடுத்துள்ளார். அவருடைய திட்டங்களில் சிரியாவில் எதிர்த்தரப்புப் போராளிகளுக்கு பயிற்சி அளித்தல், சிரிய இலக்குகளை ஏவுகணைகளை கொண்டு தாக்குதல், சிரியாவின் விமானப் படைகளை அழிக்க அல்லது தரையில் இருந்து புறப்படாமல் செய்ய “பறக்கக் கூடாது பகுதியை” நிறுவுதல், துருக்கி அல்லது ஜோர்டன் அருகே சிரிய நிலப்பரப்பில் “இடைப்பட்ட பகுதிகளை” கைப்பற்றுதல், இராசயன ஆயுதங்களை கைப்பற்ற சிறப்புப் படைகளை கொண்டு தாக்குதல் ஆகியவை அடங்கும். பென்டகனுடைய திட்டங்களில் பெரிய அளவு நடவடிக்கைகள் உள்ளன; குறைந்த பட்சம் பல பில்லியன் டாலர்கள் ஆண்டு ஒன்றிற்கு என செலவாகும். டெம்ப்சே, சிறப்புப் படைகள் தாக்குதல் மாதம் ஒன்றிற்கு 1 பில்லியன் டாலருக்கு மேல் ஆகும் என்று கூறியுள்ளார்; ஏவுகணைத் தாக்குதல்களுக்கு, நூற்றுக்கணக்கான விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் இன்னும் பிற உதவிப் பொருட்களும் தேவை, இவை “பில்லியன் கணக்கில் செலவைக் கொடுக்கும்” எனக் கூறியுள்ளார். டெம்ப்சேயின் கடிதத்தை தொடர்ந்து கடந்த வாரம் அமெரிக்கப் பிரதிநிதிகள் மன்றத்திலும் செனட் உளவுத்துறைக் குழுக்களிலும் சிரியாவில் எதிர்த்தரப்பு சக்திகளுக்கு நேரடியாக ஆயுதம் கொடுப்பது குறித்து வாக்கெடுப்பு நடந்தது. இதுவரை அவர்களுக்கு, அமெரிக்க நட்பு எண்ணெய் முடியரசுகளான கட்டார், சௌதி அரேபியா போன்றவை நிதி கொடுத்தும் ஆயுதம் அளித்தும் வந்தன; அமெரிக்கா நேரடியாகக் கொடுக்கவில்லை. இது இழிந்த முறையில் எதிர்த்தரப்பிற்கு, தான் பணம் கொடுக்கவில்லை எனக் கூற வாஷிங்டனை அனுமதித்தது; அதே நேரத்தில் CIA, ஆயுதங்கள் மற்றும் நிதிப் பாய்வை ஒருங்கிணைத்தது. ஒபாமா நிர்வாகம் சிரியாவில் எதிர்த்தரப்பிற்கு ஆயுதம் அளிக்க தீவிரமாக வாக்குகளுக்கு ஆதரவை நாடியது. துணை ஜனாதிபதி ஜோ பிடென், CIA இயக்குனர் ஜோன் பிரென்னன் மற்றும் வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி அனைவரும் காங்கிரஸ் உறுப்பினர்களை அழைத்தனர் அல்லது சந்தித்துப் பேசினர். சிரியப் போருக்கான ஆரம்ப நியாயப்படுத்துதல் —சிரிய மக்களின் ஜனநாயக எழுச்சியைக் காக்க நடத்தப்படும் மனிதாபிமான போராட்டம் என்பது— அப்பட்டமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் அதை மீண்டும் கூட கூறுவதில்லை. பொறுப்பற்ற முறையில் ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்கும் அல்குவேடாவுடன் பிணைந்துள்ள அல் நுஸ்ரா முன்னணி போன்ற படைகள், CIA உடைய “நிதானமான” உறுதியான சொத்துக்கள், ஆட்சி மாற்றத்திற்கு உதவுபவை எனக் கூறப்பட்டன; அசாத்தை அகற்ற இது நம்பப்பட்டது. அதே நேரத்தில் சிரிய மக்கள், அமெரிக்க ஆதரவுடைய கும்பல்கள், போராளிகள் இவற்றின் தாக்குதலை எதிர்கொண்டனர்; செய்தி ஊடகமும் முதலாளித்துவ “இடது” அமைப்புக்களும் இச்சக்திகளை ஜனநாயகத்திற்காக போராடும் புரட்சிகர போராளிகள் எனப் பாராட்டின. இக் குற்றத்தன்மை வாய்ந்த கொள்கை இப்பொழுது நாசமுற்றுள்ளது. எதிர்த்தரப்பு, அதன் மக்கள் ஆதரவு இல்லாத காரணத்தாலும், போர் சர்வதேச அளவில் பரந்துவிட்டதாலும் தோல்வியை எதிர்நோக்குகிறது. சமீபத்திய மாதங்களில் சுன்னி ஆதிக்கம் உடைய எதிர்த்தரப்பு போராளிகளுடைய குழுக்களுக்கு எதிரான போர்களில், குறிப்பிட்ட ஈரானிய படைகளும், லெபனிய ஷியைட் குழு ஹெஸ்போல்லாவில் உள்ள போராளிகளும் அசாத்திற்கு உதவினர். இதை வாஷிங்டன் எதிர்கொள்வது இன்னும் பெரிய குருதி கொட்டுதலுக்கு தயாரிப்பு நடத்துவதாகும். ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகள் அசாத்தை அகற்றுவதற்கு பரந்த அமெரிக்கப் போருக்கு அழுத்தம் கொடுக்கின்றன, அதையொட்டி அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கம் மத்திய கிழக்கில் உறுதிப்படுத்தப்படும். CSIS எனப்படும் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் செல்வாக்கு மிக்க மூலோபாயம் இயற்றுபவர் ஆன்டனி கோர்ட்ஸ்மன் இத்தகைய போருக்கு நேற்று “சிரியாவின் நிலையற்ற விளைவு” என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்ட்டில் கட்டுரை எழுதியுள்ளார். அவர்: “ஒரு பிளவுற்ற மத்திய கிழக்கில், சுன்னி என்றும் ஷியைட் என்றும் பிரிந்திருக்கும் பகுதியில் எதிர்தரப்பை நசுக்குவதில் அசாத் வெற்றியடைந்தால், அல்லது எப்படியும் சிரியாவின் பெரும்பகுதி மீது கட்டுப்பாட்டை கொண்டார் என்றால், ஈராக், சிரியா மற்றும் லெபனான் மீது புதிய அளவு செல்வாக்கை மகத்தான முறையில் ஈரான் கொள்ளும்.... இது இஸ்ரேலுக்குத் தீவிர இடர்களை அளிக்கும், ஜோர்டன், துருக்கியை வலுவிழக்கச் செய்யும், இன்னும் முக்கியமாக ஈரானுக்கு பேர்சிய வளைகுடாவில் மிக அதிக செல்வாக்கைக் கொடுக்கும்; இதுதான் உலகில் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களில் 48%ஐக் கொண்டுள்ளது”. என எழுதினார் அமெரிக்க நடவடிக்கைகள் குறித்து கோர்ட்ஸ்மன் ஒரு தொகுப்பை அளித்துள்ளார்; இதில் விமானத் தாக்குதல் எதிர்ப்புப் பிரிவுகளில் இருந்து டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வரை மேற்கத்தைய ஆதரவுடைய போராளிகளுக்கு அளிக்கப்பட வேண்டும், அதுதான் பறக்கக்கூடாது பகுதியை சுமத்தவும் நேரடி அமெரிக்கத் தலையீட்டை அனுமதிக்கவும் செய்யும். “எழுச்சியாளர்கள் அத்தகைய ஆயுதங்களுடன் வெற்றிபெறுவதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். —அதுதான் அசாத் அரசாங்கத்தை பேச்சுக்கள் மூலம் அகற்ற வழிவகுக்கும், ஒரு புதிய தேசிய அரசாங்கத்தை நிறுவ வழிவகுக்கும்— அல்லது அமெரிக்கா அதனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து பறக்கக்கூடாது பகுதியை தோற்றுவிக்க வேண்டும்.” கோர்ட்ஸ்மன்னுடைய திட்டம், பென்டகனும் அதன் நட்பு நாடுகளும் வெகுஜன இறப்புக்களும் உலகப் பொருளாதாரத்தில் பேரழிவு விளைவுகளும் கொண்ட ஒரு பரந்த பிராந்திய, ஏன் உலகப் போர்களுக்கு கூட தயாராக இருக்குமாறு கோரும் அழைப்பாகும். இது அமெரிக்காவை, சிரியாவுடன் மட்டும் இன்றி, ஹெஸ்போல்லா சக்திகள் மற்றும் அசாத் ஆட்சியின் சர்வதேச ஆதரவாளர்கள்—கடந்த வாரம் கூடுதல் தடைகளை அமெரிக்கா சுமத்தியுள்ள ஈரான், மற்றும் ரஷ்யா, சீனாவுடன் கூட போரில் ஈடுபடுத்தும். அமெரிக்க இராணுவத்தின் அடுக்குகள் சில ஒரு விரைவான, முழுப் போருக்கு எதிராக எச்சரித்துள்ளன; முக்கியமாக அத்தகையபோர் எப்படி விரிவாகும் என அவர்கள் உறுதியாக எதிர்பார்கமுடியவில்லை. எனவே லெவினுக்கு எழுதிய கடிதத்தில் டெம்ப்சே எழுதியதாகக் கூறப்படுவது: “ஒரு நடவடிக்கையை தொடங்கிவிட்டால், அடுத்து வருவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஆழ்ந்த ஈடுபாட்டை தவிர்ப்பது கடினம்.” ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் எதிர்த்தரப்பை வலுப்படுத்தி, நவகாலனித்துவ முறையில் நாட்டை பிரிக்கப் பயன்படும் நீண்டகால பினாமிப் போரை சிரியாவில் நடத்தும் திட்டத்தை கொண்டுள்ளன. நியூ யோர்க் டைம்ஸ் நேற்று வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் ஜே கார்னரின் கூற்றை மேற்கோளிட்டு, அதாவது “அசாத் சிரியா முழுவதையும் மீண்டும் ஆளமாட்டார்”, வாஷிங்டன் “ஒரு நீண்டகால உண்மை பிரிக்கப்படும் சிரியாதான்” என்பதற்கு தயாரிப்புக்களை கொண்டுள்ளது என்றும் அசாத் ஒரு “எஞ்சிய பகுதியை” மட்டுமே ஆள்வார் என்றும் எழுதியுள்ளது. மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத் தலையீட்டை விரிவாக்கும் இத்திட்டங்கள் அனைத்தும் அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி மற்றும் முறிவைப் பிரதிபலிக்கின்றன. மக்களுடைய கருத்துக்களுக்கு இழிவு தரும் வகையில், ஈராக்கின் மீது செல்வாக்கற்ற அமெரிக்க படையெடுப்பு நடந்த பத்து ஆண்டுகளுக்குப்பின், ஏகாதிபத்திய மூலோபாயம் இயற்றுபவர்கள் மற்றொரு நாசகரமான போருக்கான திட்டங்களை முன்வைக்கின்றனர். மக்களில் 61% சிரியப் போரில் அமெரிக்க ஈடுபாட்டை எதிர்க்கின்றனர் என சமீபத்திய Quinnipiac கருத்துக் கணிப்பு கூறுகிறது. ஆளும் உயரடுக்கு போருக்கான தன் திட்டங்களை முன்னோக்கி அழுத்தும் திறன், செய்தி ஊடகத்தின் ஆழ்ந்த பிற்போக்குப் பங்கையும், குட்டி முதலாளித்துவ “இடது” மக்கள் எதிர்ப்பு வெளிப்பட்டால் அதை நசுக்குவதையும்தான் காட்டுகிறது. குறிப்பாக போலி இடது குழுக்களான அமெரிக்காவின் ISO, ஜேர்மனியில் Die Linke, பிரான்ஸில் NPA ஆகியவற்றின் பங்கு தெளிவானதாகும். இவை தொடர்ச்சியாக இழிந்த ஏகாதிபத்திய போர்களை நடத்த ஊக்கம் கொடுத்துள்ளன, மத்தியதர வர்க்கத்தின் இடது-தாராளவாத பிரிவுகளுடைய ஆதரவை “புரட்சிகளுக்கு” அளிக்க முற்படுகின்றன. இக்கட்சிகள் அவற்றின் வெளியீடுகளில் போர்களுக்கு ஆதரவு கொடுப்பது மட்டும் இல்லாமல், போரை ஏற்பாடு செய்யத் தேவையான உளவுத்துறை நடவடிக்கைகளிலும் நேரடிப் பங்கைக் கொண்டுள்ளன. சிரியப் போரின் ஆரம்பத்தில், NPA உடைய Gilbert Achcar ஒரு இரகசிய 2011 அக்டோபர் மாநாட்டில், CIA ஆதரவு கொடுத்த சிரிய தேசியக் குழு மாநாட்டில் கலந்து கொண்டு வெளிநாட்டுத் தலையீட்டின் செயற்பாடு குறித்து ஆலோசனை வழங்கினார். இக்கட்சிகள், இஸ்லாமியவாத எதிர்ப்புடன் சேர்ந்து உளவுத்துறைச் சமூகத்தின் பல பிரிவுகளின் குரல்களாக செயல்பட்டு, அசாத்தை ஏகாதிபத்திய முறையில் அகற்றுவதற்கு ஆதரவு கொடுக்கின்றன. இவ்வகையில், NPA உடைய முக்கிய சிரியா பற்றிய எழுத்தாளர் Gayath Naïssé, “சிரிய மக்களின் புரட்சியில் சுய அமைப்பு” என்னும் சமீபத்திய கட்டுரையில், சிரிய நகரமான டீர் எஸ் ஜோரைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கும் எதிர்த்தரப்பு போராளிகளைப் பாராட்டியுள்ளார். “ஒரு ஜனநாயகக் கனவு டீர் எஸ் ஜோரில் சாதிக்கப்பட்டுள்ளது” என எழுதியுள்ளார். “ஒரு சுதந்திர தேர்தல் வழிவகை முதல் தடவையாக 40 ஆண்டுகளில் அமைக்கப்பட்டது” என்று அவர் பாராட்டுகிறார்; இப்படித்தான் எதிர்த்தரப்பின் உள்ளூர்க்குழு உறுப்பினர் காதர் அதை விவரிக்கையில், அது ஞாயிறன்று உள்ளூர் “விடுவிக்கப்பட்ட பகுதிகளில்” வசிக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றார். இது, பல சிரிய நகரங்களை அமெரிக்க ஆதரவுடன் கைப்பற்றியுள்ள, மக்கள் மீது பயங்கரவாத ஆட்சியை சுமத்தியுள்ள, அல்குவேடா பிணைப்புடைய தீவிர வலதின் அரசியல் சான்றைக் குறித்த அப்பட்டமான பொய்கூறல் ஆகும். டீர் எஸ் ஜோரிலேயே அவை மரணக் குழுக்கள் மூலம் செயல்படுகின்றன; இவர்களின் கொள்கைகளை எதிர்க்கும் மக்களைக் கொலை செய்யும் காட்சிகள் பரந்த அளவில் வெளிவந்துள்ளன. இன்னும் பரந்த அளவில், இஸ்லாமியவாத எதிர்ப்பு போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் கொள்ளை அடிக்கின்றனர், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளில் இருந்து தாங்கள் ஆயுதம் வாங்க நிதி பெறுவதற்காக குறிப்பாக அலெப்போவில் ஆலைகளை அழிக்கின்றனர். ISO வின் சமீபத்திய சிரியா பற்றிய அறிக்கை— Michael Karadjis ஆல் முதலில் ஆஸ்திரேலிய போலி இடது தளமான Links ல் வெளிவந்த கட்டுரை—சிரிய எதிர்த்தரப்பிற்காக அமெரிக்க தலையீட்டிற்கு எத்தகைய எதிர்ப்பையும் தாக்குகிறது. “வெளிநாடுகளில் இருந்து இலகுரக ஆயுதங்கள் குறித்த சோம்பேறித்தனப் பேச்சு, கண்டிக்கப்பட வேண்டும்; ஏனெனில் சிரியாவில் ‘பெரிய போர்’ நடைபெறுகிறது. இது அமெரிக்கத் தலையீட்டை எதிர்ப்பவர்கள் “ஆயுதங்கள் தவறான மக்களை அடைந்துவிடுமோ என்று பெரிதும் அச்சப்படுபவர்களால்” எதிர்க்கப்படுகிறது. அறிக்கை மேலும் கூறுவது: “ஏகாதிபத்திய நாடுகளுக்குள் இருக்கும் சோசலிஸ்ட்டுக்கள் நம் அரசாங்கங்கள் ஆயுதங்களை வழங்கக்கூடாது என்று கூறமுடியாது; ஏனெனில் நம் அரசாங்கங்களின் நோக்கங்களை நாம் வேறுவிதமாக உணர்கிறோம்; அத்தகைய ஆயுதங்களை வழங்குதல் எழுச்சியாளர்களிடம் இருந்து அரசியல் விலையை எதிர்பார்க்கிறது... அமெரிக்கா அல்லது மற்ற ஏகாதிப்த்திய நாடுகள் தங்கள் காரணங்களுக்காக ஆயுதங்களை கொடுக்க முடிவெடுத்தால், நாம் அதற்கு எதிராக இயந்திர கதியில் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது. இப்பத்தி, ஏகாதிபத்தியம் மற்றும் போரைக் காப்பதற்கு எப்படி ISO மிக நனவாகச் செயல்படுகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சிரிய எதிர்த்தரப்பில் அமெரிக்க அரசாங்கம் ஆயுதம் கொடுத்த பிரிவுகள் உள்ளன என்பதை ஒப்புக்கொண்டு, அதையொட்டி அவை அதன் கூலிகள் போல் செயல்படுகின்றன எனக்கூறும் இது, இந்த அமெரிக்க சிரியக் கைக்கூலிகள் நிறைய ஆயுதம் கொடுக்கப்பட வேண்டும், அத்தகைய பினாமிப்போருக்கு எதிர்ப்பு அமைக்கப்படக்கூடாது என்கிறது. இத்தகைய சக்திகள்தான் சிரியாவை அழிப்பதில் உடந்தையாக இருப்பவை; நடைபெறும் இன்னும் பரந்த குருதி கொட்டக்கூடிய ஏகாதிபத்திய போர்களுக்கான தயாரிப்புக்களிலும் உடந்தையாக இருப்பவை. |
|
|