World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A call to action: Oppose the Detroit bankruptcy!

நடவடிக்கைக்கான ஒரு அழைப்பு: டெட்ராயிட் திவால்நிலையை எதிர்ப்போம்!

Barry Grey
23 July 2013

Back to screen version

டெட்ராயிட் திவால்நிலை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கினர் தொடுக்கின்ற தாக்குதலில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்து நிற்கிறது. டெட்ராயிட்டை திவால்நிலைக்குள் தள்ளுவதற்கான சட்டபூர்வ ஆவணங்களை அதன் அவசரநிலை மேலாளர் தாக்கல் செய்த சில நாட்களிலேயே, அமெரிக்காவெங்கிலும் தொழிலாளர் ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதார உதவிகள் ஒப்பந்தங்களை உடைத்தெறிவதற்கான ஒரு முன்மாதிரி விவகாரமாகவே வாகன உற்பத்தியில் உலகின் முன்னாள் தலைநகரின் நிலை சேவை செய்ய இருக்கிறது என்பது தெளிவாகியிருக்கிறது.

டெட்ராயிட்டின் அவசரநிலை மேலாளர் போன்ற தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளையும் திவால்நிலை நீதிமன்றங்களின் சட்டரீதியான கட்டமைப்பையும் கொண்ட ஒரு பொறிமுறையைப் பயன்படுத்தி ஒரு நகரத்திற்கு அடுத்ததாய் இன்னொரு நகரம் என்று ஒவ்வொரு நகரத்திலுமே பாரிய வெட்டுகளை அமல்படுத்துவதற்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மிச்சிகன் போல, அரசு ஊழியர்களின் ஓய்வூதியங்களை உத்திரவாதப்படுத்துகின்ற மாநில அரசியல்சட்டங்களின் மீது மேலதிகாரம் செலுத்த அவசியப்படுகின்ற இடங்களிலும் கூட இது மேற்கொள்ளப்படவிருக்கிறது.

அத்தகைய கருப்பொருளுடன் எண்ணிலடங்கா பத்திரிகை செய்திகள் காணக் கிடைக்கின்றன; டெட்ராயிட், பனிமலையின் ஒரு முகடு மட்டுமே. சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பால்டிமோர் மற்றும் ஏராளமான பிற நகரங்களில் ஓய்வூதிய மற்றும் சுகாதார பராமரிப்பு கடப்பாடுகள் பாரிய அளவில் நிதியாதாரமற்று இருக்கின்றன. அவை அத்தனையையும் துடைத்தழிக்க முயற்சிகள் நடக்கும். சீராட்டப்படுகின்ற சுயநலமிக்க தொழிலாளர்கள் அவர்களது வாழ்க்கைத் தரங்களில் நடத்தப்படும் பாரிய வெட்டுகளை ஏற்றுத் தான் ஆக வேண்டுமாம்.

ஞாயிறன்று, நியூயோர்க் டைம்ஸின் வலைத் தளத்தில் அந்த செய்தித்தாளின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் பில் கெல்லரின் ஒரு வருணனை வெளியிடப்பட்டிருந்தது. நியூஜோர்க் டெட்ராயிட் அல்ல தான். ஆனால்.... என்கிற தலைப்பிலான அந்த கட்டுரையில் செவ்ரானின் (Chevron )முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியின் மல்டிமிலியனர் பையன் எழுதுகிறார், நகரின் ஊழியர்களுக்கு பல தசாப்தங்களாக அளிக்கப்பட்டு வந்திருக்கக் கூடிய வாக்குறுதிகளின் குவியல் தான் டெட்ராயிட்டிலும், நியூயோர்க்கிலும் இன்ன பிற அமெரிக்க நகரங்களிலும் இருக்கும் பிரச்சினையாம்.

என்ன நாராசமான பொய்கள்! டெட்ராயிட்டிலும் மற்றும் நாடெங்கிலுமான நெருக்கடி நகர ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளால் உருவானதல்ல, மாறாக ஆளும் வர்க்கம் ஒழுங்கமைத்த கட்டுப்பாடற்ற கொள்ளை நடவடிக்கையால் உருவாக்கப்பட்டதாகும். வோல் ஸ்டீரிட்டின் ஊக வணிகர்களைப் பிணையெடுக்க டிரில்லியன் கணக்கிலான டாலர்கள் வங்கிகளிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன. டெட்ராயிட் திவால்நிலைக்குள் செல்கின்றபோதும் கூட, நகரத்தின் கடன்களை அளித்திருக்கக் கூடியதும் நகரத் தொழிலாளர்கள் வறுமைக்குள் தள்ளப்பட வேண்டும் என்று கோருவதுமான வங்கிகள், மலைக்க வைக்கும் இலாபங்களை ஈட்டியிருக்கின்றன கூட்டரசின் கையிருப்பில் இருந்து வருடத்திற்கு டிரில்லியனுக்கும் அதிகமான டாலர்கள் சுதந்திரமாக பாய்ச்சப்படுவதால் பங்குச் சந்தை, சாதனை உயரங்களுக்கு பயணித்திருக்கிறது.

சமூக ஏற்றத்தாழ்வு என்பது நவீன வரலாற்றில் முன்னர் கண்டிராத மட்டங்களை தொட்டிருக்கிறது. நியூயோர்க்கில் ஊதியங்களிலான ஒவ்வொரு டாலருக்கும் 50 சென்ட்டுகள் மிகச் செல்வம் படைத்த 1 சதவீதத்தினரிடம் சென்று சேர்கிறது. நிதிய அதிபர்கள் ஆடம்பரக் கட்டிடங்களுக்காய் பத்து மில்லியன் கணக்கிலான டாலர்களைச் செலவிடுவது வழக்கமாகி இருக்கிறது. வோல் ஸ்ட்ரீட் ஒட்டுண்ணிகளின் வாழ்க்கைப் பாணியை ஆதரிக்க, வரம்பற்ற பணம் இருக்கிறது.

ஆயினும் அடிப்படை உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வேலைகளுக்கு மட்டும் பணம் இல்லையாம்!

அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய பொருளாதார நிலையில் ஏற்பட்ட சரிவினாலும், அதன் தொழிற்துறை உள்கட்டமைப்பு நாசம் செய்யப்பட்டதாலும், நிதி ஒட்டுண்ணித்தனத்தின் வளர்ச்சியாலும் உந்தப்பட்டு சுமார் நான்கு தசாப்தங்களாகவே தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளுக்கு எதிரான தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2008 நிதி நெருக்கடிக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் மேலும் தீவிரமடைந்திருக்கிறது. முதலில் புஷ் தலைமை கொடுத்த இந்தத் தாக்குதலுக்கு, பின்னர் ஒபாமா நிர்வாகம் தலைமையெடுத்துக் கொண்டது.

20 ஆம் நூற்றாண்டின் பாதையில் தொழிலாள வர்க்கம் வென்றிருக்கக் கூடிய சமூக வெற்றிகளில் எஞ்சியிருக்கும் அத்தனையையும் அழிப்பதே ஆளும் வர்க்கத்தின் நோக்கமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு அதிகப்பட்சம் எட்டு மணி நேர வேலை என்பதில் தொடங்கி, குழந்தைத் தொழிலாளர் சட்டங்கள், ஓய்வூதியங்கள், சுகாதாரப் பராமரிப்பு, அரச கல்வி, சமூகப் பாதுகாப்பு, மெடிக்கேர் இவை அனைத்துமே அழித்தொழிப்பிற்கான இலக்குகளாக்கப்பட்டிருக்கின்றன. இவை அத்தனையுமே பிரம்மாண்டமான மற்றும் அநேக சமயங்களில் குருதி தோய்ந்த போராட்டங்களின் வழியாகப் பெற்றவை ஆகும். உழைக்கும் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு என்பது எந்த வடிவத்திலும் இருந்திராத ஒரு பழங்கால நிலைக்கு பின்னோக்கித் தள்ளும் வகையில் அமெரிக்க சமூகத்தை மறுசீரமைப்பது தான் அவர்களது திட்டமாக இருக்கிறது.

தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடனும் செயலூக்கத்துடனான பங்கேற்புடனும் தான் சமூக எதிர்ப்புரட்சியிலான இந்த புதிய கட்டம் சாத்தியமாக்கப்பட்டு இருக்கிறது. டெட்ராயிட்டில் இருக்கும் தொழிற்சங்கங்கள், திவால்நிலை தாக்கல் செய்யப்பட்டமைக்கு அளித்த முதல் பதிலிறுப்பு என்பது தமது உறுப்பினர்களை வேலையைத் தொடரவும் எந்த வித நடவடிக்கையிலும் இறங்காமல் இருக்கவும் உத்தரவிட்டது தான்.

இந்தத் தாக்குதல்களை தொழிற்சங்கங்கள் ஆதரிக்கின்றன என்பதோடு வேலைகளையும், ஊதியங்களையும் மற்றும் சமூக சேவைகளையும் ஒட்டுமொத்தமாக அழிப்பதில் ஒபாமா நிர்வாகத்துடன் கைகோர்த்து வேலை செய்து கொண்டிருக்கின்றன. சங்க உறுப்பினர்களின் ஓய்வூதியங்களும் சுகாதாரப் பராமரிப்பும் அகற்றப்படுவதற்கு ஒத்துழைப்பதன் மூலம் தமது சொந்த ஊதியங்களையும் சலுகைகளையும் பத்திரப்படுத்திக் கொள்ள முடியுமா என்பதே அவர்களது ஒரே கவலையாக இருக்கிறது.

ஒவ்வொரு பிற நாட்டிலும் போலவே அமெரிக்காவிலும் தொழிற்சங்கங்கள் வர்க்க ஒடுக்குமுறை அமைப்பின் பகுதியாக இருக்கின்றன. தொழிலாளர்களுக்கு பேரழிவை உருவாக்கியிருக்கும் சமரசம் மற்றும் ஒப்பந்த உழைப்பு கொள்கைகளைத் தான் மூன்று தசாப்தங்களாக இவை பின்பற்றி வந்திருக்கின்றன.  1979 கிறைஸ்லர் பிணையெடுப்பு, 1981 இல் பாட்கோ(PATCO)அழிக்கப்பட்டமை, 1980களில் தொழிற்சங்கங்கள் உடைப்பின் ஒரு அலை, 80கள் மற்றும் 90களில் தொழிலக திவால்நிலைகளின் ஒரு வரிசை, கிறைஸ்லர் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸில் ஒபாமாவின் ஊதிய வெட்டு மறுசீரமைப்பு என தொழிற்சங்கங்களின் ஒவ்வொரு வளைந்துகொடுப்பும் மேலதிகமான மிருகத்தனமான தாக்குதல்களுக்கே இட்டுச் சென்றுள்ளன.

டெட்ராயிட் திவால்நிலை ஒரு உலகளாவிய கொள்கையின் பகுதியாகும். கிரீஸிலும், ஸ்பெயினிலும் மற்றும் ஐரோப்பாவிலும் அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது இதேபோன்ற தாக்குதல்களையே நடத்திக் கொண்டிருக்கின்றன. பாரிய வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை, வேலைகள் அழிப்பு மற்றும் சமூக சேவைகள் அழிப்பு இவை தான் நாடு மாற்றி நாடாக வங்கிகளால் உத்தரவிடப்படும் நிலைமைகளாக இருக்கின்றன.

ஆளும் வர்க்கம் சமூக எதிர்ப்பை முன்கணிக்கிறது. சாட்சாத் அதனால் தான், தொழிலாள வர்க்கத்தின் மீதான சமூகத் தாக்குதல்களை அவர்கள் அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர், ஒரு போலிஸ் அரச கட்டமைப்பையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஒபாமாவின் நிர்வாகம் அமெரிக்க அரசியல்சட்டத்தின் மீது ஒரு ஒட்டுமொத்தமான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அமெரிக்கரையும் மற்றும் உலகெங்கிலும் நூறாயிரக்கணக்கான மில்லியன் மக்களையும் இரகசியமானதும் சட்டவிரோதமானதுமான முறையில் அரச கண்காணிப்புக்கு உட்படுத்தியதை முன்னாள் தேசியப் பாதுகாப்பு முகமை ஒப்பந்ததாரரான எட்வார்ட் ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தியிருக்கிறார். ஸ்னோவ்டென் மீதும், தகவல் தெரிவிப்பவரான பிராட்லி மேனிங் மீதும் வேவு பார்த்த குற்றச்சாட்டை சுமத்தியதும் ஸ்னோவ்டெனை உயிருடனோ பிணமாகவோ பிடிப்பதற்கு சர்வதேச வேட்டையை கட்டவிழ்த்து விட்டதும் தான் அமெரிக்க அரசாங்கத்தின் பதிலிறுப்பாகும்.

அமெரிக்க மற்றும் உலகின் தொழிலாள வர்க்கம் ஒரு திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கிறது. டெட்ராயிட் தொழிலாளர்களின் போராட்டம் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் உடனடி அவசர கவனத்துக்குரியதாகும். ஒட்டுமொத்த பூகோளத்தையும், வங்கியாளர்கள் மற்றும் ஊக வணிகர்களின் குற்றவியல் கூட்டு நிழல் போல் சூழ்ந்துள்ளது. ஒவ்வொரு நாட்டின் அரசியல் ஸ்தாபகமும் இவர்களிடம் ஊதியம் பெறுபவர்களாக இருக்கின்றனர்.

உழைக்கும் மக்களின் மிக அடிப்படையான தேவைகளை, முதலாளித்துவத்துடன் நல்லிணக்கமான வகையில் பூர்த்தி செய்வது சாத்தியமற்றதாகும். அடிப்படையான சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய இலாயக்கற்ற ஒரு அமைப்புமுறை ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

திவால்நிலைக்கு எதிராகவும், வேலைகள், ஓய்வூதியங்கள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அடிப்படை சமூக சேவைகள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் டெட்ராயிட்டில் உள்ள தொழிலாளர்கள் அதிமுக்கியமான நடவடிக்கைகளில் இறங்க முடியும், இறங்க வேண்டும். ஆனால் இந்த நடவடிக்கைகள் சோசலிசத்துக்கான தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான ஒரு போராட்டத்துடன் பிணைக்கப்பட்டாக வேண்டும்.

டெட்ராயிட் தொழிலாளர்கள் தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு அடிப்படையாக பின்வரும் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்கு சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது:

முதலாவதாக, திவால்நிலையையும் அத்துடன் உழைக்கும் மக்களிடம் இருந்து வெட்டுகள், தியாகங்கள் அல்லது ஒப்பந்த வேலைகள் ஆகியவற்றுக்கான அத்தனை கோரிக்கைகளையும் திட்டவட்டமாக நிராகரிப்பது.

அவசரநிலை மேலாளர், சிட்டி கவுன்சில், கவர்னர் மற்றும் இவர்களுக்கு பின்னால் நிற்கும் வங்கிகள் ஆகியோருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளையும் அணிதிரட்டுவதற்கான ஒரு பிரச்சாரம்.

நகரம் முழுவதிலும் வேலையிடங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அண்டை அருகாமைப் பகுதிகளில் ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சுயாதீனமான கமிட்டிகளை ஒழுங்கமைத்தல். இந்த கமிட்டிகள் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டும் என்பதோடு டெட்ராயிட்டில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான வழியையும் தயாரிப்பு செய்ய வேண்டும்.

அவசரநிலை மேலாளரை அகற்றுவதும் சிட்டி கவுன்சிலை தொழிலாளர்களது கவுன்சிலை கொண்டு இடம்பெயர்ப்பதும் இயக்கத்தின் கோரிக்கைகளில் இடம்பெற வேண்டும்.

வங்கிகளுக்கு நகரம் கொண்டுள்ள கடன்கள் நிராகரிக்கப்பட வேண்டும், முக்கியமான பத்திர உரிமையாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அப்போது தான் அவர்களது தவறான வழியில் சேர்த்த சொத்துகள், கண்ணியமான ஊதியத்திலான வேலைகளை வழங்குவதற்கும், பள்ளிகளை மறுகட்டுமானம் செய்வதற்கும், கண்ணியமான வீட்டுவசதி மற்றும் ஆரோக்கிய பராமரிப்பை வழங்குவதற்கும், பொழுதுபோக்கு, கலை மற்றும் கலாச்சாரத்திற்கான அணுகலை விரிவாக்குவதற்கும் பயன்பட முடியும்.

வங்கிகளும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் அரசுடைமையாக்கப்பட்டு மக்களுக்கு சொந்தமான ஸ்தாபனங்களாக மாற்றப்படுவதுடன் உழைக்கும் மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் அவை கொண்டுவரப்பட வேண்டும்.

சமூகக் கோபம் பெருகிச் செல்லும் சூழ்நிலைகளின் கீழ், தாக்குதலை முன்னெடுத்து, நடப்பு அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறைக்கு முற்றிலும் சுயாதீனமான மற்றும் எதிரானதொரு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பம் தொழிலாளர்களிடத்தில் தான் இருக்கிறது. சோசலிச சமத்துவக் கட்சி அதன் வேலைத்திட்டத்தை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்வதற்கும், வெகுஜனப் போராட்டத்திற்கான அடிப்படையாக அந்த வேலைத்திட்டத்தை ஆக்குவதற்கும் தொழிலாளர்களை வலியுறுத்துகிறது.