World Socialist Web Site www.wsws.org |
The Detroit bankruptcy டெட்ராய்ட் திவால்நிலை
Barry Grey வாகன உற்பத்தியில் உலகின் முன்னாள் தலைநகரமாய் விளங்கிய டெட்ராயிட்டின் திவால்நிலையானது அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்றுரீதியான சிதைவில் ஒரு மைல்கல்லாகி இருக்கிறது. ஆளும் வர்க்கம் அதன் அமைப்புமுறையின் தோல்விக்கு உழைக்கும் மக்களை விலை செலுத்தச் செய்வதற்கு நடத்துகின்ற சமூக எதிர்ப்புரட்சியின் ஒரு புதிய துவக்கப் புள்ளியாகவும் அது நிற்கிறது. 78,000 கைவிடப்பட்ட கட்டிடங்கள், செயல்படாத தெருவிளக்குகள், சிதிலமடைந்து போன மற்றும் போதுமான பணியாளர்கள் அற்ற தீயணைப்புத் துறை என டெட்ராயிட்டின் படுபயங்கர நிலைமைகளை தேர்ந்தெடுக்கப்படாத நிதி அதிபரான கெவின் ஓர், குடியரசுக் கட்சி ஆளுநரான ரிக் ஸ்னைடர், ஜனநாயகக் கட்சி மேயரான டேவிட் பிங் மற்றும் ஸ்தாபக ஊடகங்கள் எல்லோருமே சுட்டிக் காட்டுகின்றனர். இதற்குப் பொறுப்பான அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவன சக்திகள் மீது குற்றம் சுமத்துவதற்கு அல்ல, மாறாக இந்த நாசகரமான நிலைமைக்கு எந்தவிதத்திலும் பொறுப்பு கூற முடியாத தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களும் அடிப்படை பொது சேவைகளும் அழிக்கப்பட்டதை நியாயப்படுத்துவதற்கு. தொழிற்சங்க ஒப்பந்தங்களை ஓரங்கட்டுவதன் மூலமும், பணிபுரிகின்ற மற்றும் ஓய்வுபெற்று விட்ட நகர தொழிலாளர்களது ஓய்வூதியங்களை மற்றும் சுகாதார நல உதவிகளை வெட்டுவதன் மூலமும், பொதுச் சேவைகளை வெட்டுவதன் மூலமும், பொது விளக்குகள் பராமரிப்பு, போக்குவரத்து மற்றும் சுகாதாரத்தை தனியார்மயமாக்குவதன் மூலமும், அத்துடன் நீர் சுத்திகரிப்பு ஆலை, பெல்லே ஐஸில் பூங்கா, டெட்ராயிட் மிருகக் காட்சிச்சாலை விலங்குகள், மற்றும் டெட்ராயிட் கலை நிறுவனத்தின் உலகப் புகழ்பெற்ற சேகரங்கள் ஆகியவற்றை விற்பதன் மூலமும் பெரிய வங்கிகள் மற்றும் பத்திர உரிமை நிறுவனங்களுக்கு நகரம் பட்டுள்ள கடன்கள் அடைக்கப்பட வேண்டும் என்று வோல் ஸ்ட்ரீட்டின் திவால்நிலை வழக்கறிஞரான ஓர், நீதிமன்றம் சென்றிருக்கிறார். இதன் விளைவாக, நூறாயிரக்கணக்கான டெட்ராயிட் வாசிகள் சமூகத் துயர நிலைக்குள் தூக்கியெறியப்படுவார்கள். ஆயிரக்கணக்கிலான சிறுவணிகங்கள் துடைத்தெறியப்படும். அதேசமயம், டெட்ராயிட் ரெட் விங்ஸ் உரிமையாளரான பில்லியனர் மைக் இலிட்ச் ஒரு புதிய நிகழ்வு வளாகத்தை கட்டுவதற்கு வசதியாகவும், டெட்ராயிட்டின் உட்பகுதியை அழகுபடுத்துவதற்கு ரியல் எஸ்டேட் அதிபரான டான் கில்பர்ட்டிற்கு மானியமளிக்கும் பொருட்டும் நூறுமில்லியன் டாலர் கணக்கிலான பணம் பொதுமக்கள் பணத்தில் இருந்து கைமாற இருக்கிறது. இதை நடத்துவதற்கு பெருவணிகக் கட்சிகளின் ஆதரவும், டெட்ராயிட்டுக்கு எந்த பெடரல் உதவியையும் நிராகரித்திருக்கும் ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவும் ஓருக்குக் கிட்டியிருக்கிறது. ஆளும் வர்க்கமானது டெட்ராயிட்டை திவால்நிலைக்குள் தள்ளியதன் மூலம் வர்க்க ஆட்சியின் யதார்த்தத்தையும் ஜனநாயக பொறிகளுக்குப் பின்னால் நிழலாடுகின்ற மூலதனத்தின் சர்வாதிகாரத்தையும் அம்பலத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் மேலாதிக்கமானது, எந்த ஜனநாயகக் கட்டுப்பாடுகளுக்கும் வெளியில் இயங்கக் கூடிய அவர்களது முகவர் ஓரின் பாத்திரமாக உருவடிவம் பெற்றிருக்கிறது. டெட்ராயிட் திவால்நிலைக்குள் சரிந்ததற்கு அளிக்கப்படுகின்ற அத்தனை விளக்கங்களும் - தவிர்க்கவியலாமல் இவை நகரத் தொழிலாளர்களது ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதார நல உதவிகளுக்கென அதிகமாக செலவிடப்படுவதாக கூறுவதையே மையமாகக் கொண்டிருக்கின்றன - பொய்யானவை. நான்கு தசாப்த காலமாக வாகன நிறுவனங்களும், வங்கிகளும் மற்றும் ஆளும் வர்க்கமும் பின்பற்றிய ஒரு திட்டமிட்ட கொள்கையின் விளைவாகவே டெட்ராயிட் இந்த வறுமை நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. 1970களின் பின்பகுதியில் தொடங்கிய தொழிற்துறை அழிப்பு நிகழ்முறை ஒன்றின் மூலமாகவே இந்நகரம் மதிப்பிழந்து விட்டிருக்கிறது. அடிப்படைத் தொழிற்துறையில் இலாப விகிதங்கள் வீழ்ச்சியடைந்தமைக்கும், நிறுவனங்கள் உற்பத்தியை மலிவூதியப் பகுதிகளுக்கு மாற்றுவதற்கு எளிதாக்கிய உற்பத்தியின் உலகளாவிய ஒருங்கிணைப்பு பெருகியமைக்கும் அமெரிக்காவின் பெருநிறுவன-நிதி உயரடுக்கு அளித்த பதிலிறுப்பாக இது இருந்தது. அமெரிக்கத் தொழிற்துறை தகர்க்கப்பட்டதுடன் கைகோர்த்து, நிதி ஊகத்தின் மிகவும் ஒட்டுண்ணி வடிவங்களுக்கு மாறியமையும் ஒரு நிதி பிரபுத்துவத்தின் எழுச்சியும் நிகழ்ந்தது. சமூக வேலைத்திட்டங்கள் மீதான ஒரு தாக்குதல், பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கான வரிவிலக்குகள், மற்றும் 1980களில் தொழிற்சங்கங்களை முடக்குதல், வேலைநிறுத்தங்களை உடைத்தல் மற்றும் ஊதிய வெட்டுகள் ஆகியவற்றின் ஒரு அலை ஆகியவையும் கைகோர்த்து நிகழ்ந்தன. வாஷிங்டனில் ஜனநாயகக் கட்சியின் அல்லது குடியரசுக் கட்சியின் நிர்வாகங்கள் இருந்தபோதும் சரி, மாநில மற்றும் உள்ளூர் மட்டத்தில் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளின் கீழும் சரி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல் இடைவிடாது தொடர்ந்தன. அதேநேரத்தில் தான் இன மற்றும் அடையாள அரசியலின் ஊக்குவிப்பும், ஆபிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உயர் நடுத்தர வர்க்க அடுக்கு, முக்கியமாக ஜனநாயகக் கட்சியின் வாயிலாக அரசியல் அதிகார அமைப்பிற்குள்ளாக ஒருங்கிணைக்கப்பட்டமையும் நிகழ்ந்தது. தொழிற்துறை சரிவினால் நாசமுற்ற மற்ற அமெரிக்க நகரங்கள் போலவே டெட்ராயிட்டும் கூட பல தசாப்தங்களாக பெரும்பாலும் ஆபிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகளின் நிர்வாகத்தின் கீழ் தான் இயங்கி வருகிறது. இரக்கமற்ற தன்மையிலும் ஊழலிலும் இவர்கள் தமது வெள்ளை சகாக்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்திருக்கின்றனர். தொழிற்துறை அழிப்பும் அத்துடன் சேர்ந்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களது வேலைகள், ஊதியங்கள், வேலை நிலைமைகள், மற்றும் நல உதவிகளின் அழிப்பும் தொழிற்சங்கங்களின் முழு ஒத்துழைப்புடன் தான் நடந்தேறி வந்திருக்கிறது. 1930களில் டெட்ராயிட் வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்களின் வெடிப்பு மிகுந்த போராட்டங்களின் விளைவாக உருவான ஐக்கிய வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் (UAW)சங்கமானது 1980கள் மற்றும் 1990களில் ஆலை மூடல்கள் மற்றும் ஊதிய வெட்டுகளுக்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்தையும் தனிமைப்படுத்தியது, காட்டிக் கொடுத்தது. தன்னை பெருநிறுவன நிர்வாகத்தின் அமைப்பிற்குள்ளாக ஒருங்கிணைத்துக் கொண்டது. தேசிய அளவில் UAW அழைப்பு விடுத்த மிகப் பெரும் வாகன உற்பத்தித் துறை வேலைநிறுத்தம் கடைசியாக 1970 இல் நடந்தது. 1979-1980 இன் கிறைஸ்லர் பிணையெடுப்பு தொடங்கி, UAW மூன்று தசாப்தங்களை வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதில் செலவிட்டுள்ளது என்பதோடு வாகன உற்பத்தித்துறை தொழிலாளர்களின் மீது முன்னெப்போதையும் விட சுமைகரமான நிலைமைகளைச் சுமத்துவதற்கு வேலை செய்து கொண்டிருக்கிறது. 2008 நிதிப் பொறிவுக்குப் பின்னர், இது வாகன உற்பத்தித் துறை நிறுவனங்களின் பெருநிறுவன ஒட்டுவாலாக உருமாறுவதையும் பூர்த்தி செய்து, முப்பெரும் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் ஒரு முக்கியமான பங்குதாரராக ஆகியிருக்கிறது. தொடர்ந்து வேலை செய்ய வேண்டும், ஓரை எதிர்த்து எதுவும் செய்யக் கூடாது என தமது உறுப்பினர்களுக்குக் கட்டளையிட்டதே திவால்நிலை அறிவிப்புக்கு UAW மற்றும் டெட்ராயிட்டில் இருக்கும் பிற தொழிற்சங்கங்களின் பதிலிறுப்பாக இருந்திருக்கிறது. நகரத் தொழிலாளர்கள் மீது புதிய ஊதிய வெட்டுகளை திணிப்பதில் ஒத்துழைக்க தாங்கள் தயாராக இருந்ததை கண்டுகொள்ளாததற்காகவே முக்கியமாக அவை அவசரநிலை மேலாளரை விமர்சித்திருக்கின்றன. திவால்நிலை அறிவிப்பு தேச அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான பிணைப்புகளைக் கொண்டதாகும். நாடெங்கிலும் பொருளாதார நெருக்கடியால் நிதிரீதியாக முடக்கப்பட்டிருக்கும் மற்ற நகரங்களுக்கு டெட்ராயிட் ஒரு முன்னுதாரணமாக ஆக்கப்படும். ஓய்வூதியங்களையும் சுகாதார நல உதவிகளையும் உடைப்பதற்கு திவால்நிலை நீதிமன்றத்தை பயன்படுத்துவது மில்லியன் கணக்கான ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் பிற நகராட்சி ஊழியர்கள் மீதும் இதேபோன்ற தாக்குதல்களுக்கு மடைதிறந்து விடும். ஐரோப்பாவெங்கிலும் மற்றும் அதனைக் கடந்தும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு கிரீஸ் எவ்வாறு ஒரு முன்மாதிரி ஆக்கப்பட்டதோ, அதைப் போல டெட்ராயிட் திவால்நிலையானது - இது கிரீஸில் நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களையும் கடந்ததாக இருக்கிறது - அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் மீதான அடுத்த கட்டத் தாக்குதலுக்கான வடிவத்தை அமைத்துத் தரும். ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் தொழிலாள வர்க்கம் கடுமையான, மற்றும் பல சமயங்களில் குருதி தோய்ந்த போராட்டத்தின் மூலமும் தியாகத்தின் மூலமும் வென்றெடுத்த ஒவ்வொரு வெற்றியும் இப்போது பணயத்தில் இருக்கிறது. டெட்ராயிட்டின் தொழிலாள வர்க்கம் திவால்நிலையை சமரசமின்றி எதிர்க்க வேண்டும். நிதி எதேச்சாதிகாரத்தின் சொத்துகளைப் பாதுகாப்பதற்கு தொழிலாளர்களை வெட்டுகளுக்கும் தியாகங்களுக்கும் ஆட்படக் கோரும் கோரிக்கைகள் அத்தனையையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். ஒபாமா நிர்வாகமும், ஜனநாயகக் கட்சியும் மற்றும் தொழிற்சங்கங்களும் போராட்டத்தின் எதிர்ப் பக்கத்தில் நிற்கின்றன என்பதை அறிந்து கொள்வதே போராட்டத்திற்கான தொடக்கப் புள்ளியாகும். டெட்ராயிட் மேயர் இருக்கைக்கு சோசலிச சமத்துவக் கட்சி தனது சொந்த வேட்பாளராக டி’ஆர்டக்னன் கோலியர் ஐ களமிறக்கியுள்ளது. ஓரை அகற்றுவதற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சுதந்திரமான மற்றும் ஐக்கியப்பட்ட வகையில் அணிதிரட்டுவதற்காகவும் வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள், சுகாதார உதவிகள் மற்றும் மற்ற பிற சமூக சேவைகளை பாதுகாக்கின்ற சோசலிசக் கொள்கைகளை நடத்துவதற்காகவும் அவர் போட்டியிடுகிறார். திவால்நிலையை எதிர்ப்பதற்கு வேலையிடங்களிலும், பள்ளிகளிலும் மற்றும் அண்டைஅருகாமைப் பகுதிகளிலும் சுயாதீனமான தொழிலாளர்’ குழுக்களை உருவாக்க நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இந்தக் குழுக்கள் வங்கியாளர்களின் சதிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களுக்கும் தொழிற்துறை நடவடிக்கைகளுக்கும் தயாரிப்பு செய்ய வேண்டும். இந்தப் போராட்டமானது ஒரு புதிய அரசியல் மூலோபாயத்துடன் பிணைக்கப்பட வேண்டும். தொழிலாளர்களது ஓய்வூதியங்களுக்கும், சுகாதாரப் பராமரிப்புக்கும் அடிப்படை சமூக சேவைகளுக்கும் “பணமில்லை” என்று கூறுவது ஒரு பொய் ஆகும். வங்கியாளர்களுக்கான கடன்கள் மறுதலிக்கப்படுவதோடு வாகன உற்பத்தி நிறுவனங்களும், வங்கிகளும் மற்றும் முக்கிய பெருநிறுவனங்களும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் அரசுடைமையாக்கப்பட வேண்டும். அப்போது தான் வள ஆதாரங்கள் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கி செலுத்தப்பட முடியும். டெட்ராயிட்டில் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலை எதிர்த்துப் போராட விரும்பும் அனைவரையும் டி’ஆர்டக்னன் கோலியரின் மேயருக்கான பிரச்சாரத்தை ஆதரிப்பதற்கும் டெட்ராயிட்டிலும் மற்றும் நாடெங்கிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் SEP பிரச்சாரத்தில் இணைத்துக் கொள்வதற்கும் நாங்கள் வலியுறுத்துகிறோம். *** SEP குறித்த கூடுதல் தகவல்களுக்கும், பங்கேற்புக்கும் இங்கே கிளிக் செய்யுங்கள். டி’ஆர்டக்னன் கோலியரின் மேயர் பிரச்சாரம் குறித்து கூடுதலாக அறிய, இங்கே கிளிக் செய்யுங்கள். |
|