World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan defence secretary expresses fears of social unrest

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சமூக அமைதியின்மை பற்றி அச்சம் தெரிவிக்கின்றார்

By K. Ratnayake
1 July 2013

Back to screen version

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ, வெகுஜன சமூக அமைதியின்மை மற்றும் பயங்கரவாதம் உட்பட அரசாங்கம் எதிர்கொள்ளும் பல்வேறு அச்சுறுத்தல்களை சுட்டிக் காட்டியதன் மூலம், நாட்டின் உள் விவகாரங்களில் இராணுவத்தின் தொடர்ச்சியான தலையீட்டை அண்மையில் நியாயப்படுத்தினார்.

ஜனாதிபதி மஹிந்தி இராஜபக்ஷவின் சகோதரரான இராஜபக்ஷ, கொடேலவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இராணுவ அலுவலர்களின் கற்கைநெறி ஒன்றுக்கு இலங்கையின் தேசிய பாதுகாப்பு அக்கறைகள் என்ற தலைப்பில் ஜூன் 13 அன்று ஆற்றிய விரிவுரையிலேயே தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

தனது எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும், பாதுகாப்புச் செயலாளர், 2009ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின்னர், இலங்கை உலகில் மிகவும் அமைதியான ஸ்திரமான நாடுகளில் ஒன்றாக உள்ளது என மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டார். வடக்கு மற்றும் கிழக்கில், ஜனநாயகம் முழுமையாக மீள் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளதோடு மக்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் உயர் பாதுகாப்பு வலயங்களும் அகற்றப்பட்டுள்ளன, என தெரிவித்த அவர், பொருளாதார வளர்ச்சி நிச்சயமாக குறிப்பிடத்தக்கவை என்றார்.

இத்தகைய அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை. வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்வதோடு உயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னமும் உள்ளன. பொது மக்கள் பாதுகாப்பு படைகளாலும் அவற்றுடன் சேர்ந்து செயற்படும் துணைப்படை குழுக்களாலும் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளின் பின்னரும், ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களின் விளைவாக, நாடு பூராவும் தொழிலாளர்கள், வறியவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அமைதியின்மை உக்கிரமடைந்து வருகின்றது.

இராஜபக்ஷவின் அச்சுறுத்தல் பட்டியலில், வெளிநாட்டில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் பிரிட்டிஷ் தமிழ் பேரவை போன்ற குழுக்கள் ஊடாக புலிகள் மீண்டும் தலை நீட்டுகின்றனர் என்பதும் அடங்கும். இந்தக் குழுக்கள் யுத்தக் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை சம்பந்தமாக சர்வதேச விசாரணைக்கும் மற்றும் உள்ளூர் புலிகள்-சார்பு சக்திகளை மீண்டும் ஒழுங்கமைப்பதன் ஊடாக மோதலைப் புதுப்பிக்கவும் நெருக்குவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

புதுப்பிக்கப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பற்றிய பாதுகாப்புச் செயலாளரின் குறிப்புகள், வளர்ச்சிகண்டு வரும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களைப் பிளவுபடுத்துவதற்காக தமிழர்-விரோத இனவாதத்தை கிளறிவிடுவதை இலக்காகக் கொண்டதாகும். 1948ல் நாடு உத்தியோகபூர்வமாக சுதந்திரம் பெற்றதில் இருந்தே, இனவாத அரசியல் என்பது கொழும்பு அரசாங்கங்களின் களஞ்சியத்தில் இருந்து வந்துள்ளது. அடுத்தடுத்த தமிழர்-விரோத படுகொலைகளும் மோசமான உத்தியோகபூர்வ பாரபட்சங்களும் 1983ல் மோதல்கள் வெடிக்க வழிவகுத்தன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரிட்டிஷ் தமிழர் பேரவை போன்ற அமைப்புகள், ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களையும், அதேபோல் தமிழர்கள் மத்தியிலான பரந்த வறுமை மற்றும் வேலையின்மையையும் சுரண்டிக்கொள்ள எதிர்பார்க்கின்றன. ஆனால் அவர்களுடைய பிரதான அரசியல் திசையமைவானது கொழும்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மனித உரிமைகள் விவகாரத்தை பயன்படுத்தும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பிரதான ஏகாதிபத்திய சக்திகளை நோக்கியதாகும்.

சகல உலக வல்லரசுகளும் பிராந்திய சக்திகளும் புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட இனவாத யுத்தத்தை ஆதரித்து, இராணுவ உதவிகளையும் வழங்கியதோடு பொது மக்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்கள் பற்றியும் மௌனம் காத்தன. யுத்தத்தின் கடைசி மாதங்களில் மட்டுமே அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் பொது மக்கள் படுகொலை செய்யப்படுகின்றமை தொடர்பாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அக்கறைகளை வெளியிடத் தொடங்கியது, அரசாங்கத்தை தானே சீனாவிடம் இருந்து தூர விலகச் செய்வதற்கு நெருக்குவதற்கான ஒரு வழியாகவே அன்றி, தமிழர்கள் மீதான அக்கறையினால் அல்ல.

பாதுகாப்புச் செயலாளர், துளியளவு ஆதரம் கூட இல்லாமல், அதிதீவிரவாத இஸ்லாமிய குழுக்களின் தோற்றம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என கூறிக்கொண்டார். இந்தக் குழுக்கள் பூகோள இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுடன் கூட இணைப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்துள்ளன என்றும் அவர் பிரகடனம் செய்தார்.

இராஜபக்ஷவின் கருத்துக்கள், சிங்கள அதி-தீவிரவாத அமைப்புக்களான பொது பல சேனா, சிங்கள ராவய போன்றவை முன்னெடுக்கும் பிற்போக்கு முஸ்லிம்-விரோத பிரச்சாரத்துடன் பிணைந்துள்ளது. இந்தக் குழுக்கள், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதோடு இஸ்லாமிய மத ஸ்தானங்கள் மற்றும் வியாபார நிலையங்கள் மீது தாக்குதல்களையும் நடத்துவதுடன் கிறிஸ்தவ மத குழுக்களையும் இலக்கு வைத்துள்ளன. இந்த ஆண்டு ஆரம்பத்தில், பொது பல சேனாவின் தலைமைத்துவ பயிற்சி நிலையத்தின் திறப்பு விழாவுக்கு இந்த பாதுகாப்புச் செயலாளர் அதிதியாகக் கலந்துகொண்டார்.

எவ்வாறெனினும், பரந்தளவிலான சமூக அமைதியின்மை மற்றும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்களின் எழுச்சியினால் ஏற்படும் அச்சுறுத்தலையிட்டே அரசாங்கம் உண்மையில் கவலை கொண்டுள்ளது. அராபிய எழுச்சி போன்ற மாற்றங்கள் இலங்கையில் இடம்பெறும் சாத்தியங்கள் குறைவான இருந்தாலும், தீவிர ஜனரஞ்சக அரசியல் தலைமைத்துவத்தின் காரணமாக இது கண்காணிக்கப்பட வேண்டிய இன்னொரு அச்சுறுத்தலாக உள்ளது, என இராஜபக்ஷ தெரிவித்தார்.

நிவாரணங்களையும் அத்தியாவசிய சமூக சேவைகளையும் வெட்டித் தள்ளக் கோரும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும் அரசாங்கத்தின் மீது அமைதியின்மை வளர்ச்சியடைவதையிட்டு பாதுகாப்புச் செயலாளர் விழிப்பாக உள்ளார். அடிப்படை உணவுப் பொருட்களின் விலைகள் உட்பட விலைவாசி அதிகரிப்பது சம்பந்தமாக, தீவிரமான ஜனரஞ்சக அரசியல் தலைமைத்துவத்துக்கு எதிராக ஏற்கனவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இராஜபக்ஷ, ஏனைய நாடுகளில் வெகுஜனப் போராட்டங்களில் இளைஞர்கள் மத்தியில் முன்னணி வகிபாகம் ஆற்றிய முகநூல், டுவிட்டர் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களின் பயன்பாடு சம்பந்தமாக குறிப்பாக அக்கறை காட்டினார். இணைய ஊடுருவலும் கணினி அறிவும், தேசிய பாதுகாப்பின் பாரம்பரிய கருவிகளை கடந்து, ஒன்லைனில் குறிப்பிட்ட கருத்துக்களை முன்னிலைப்படுத்தவும் மக்களை அணிதிரட்டி ஒழுங்கமைக்கவும், பயன்படுத்தப்படக் கூடும், என அவர் கூறினார்.

முந்தைய கிளர்ச்சிகளில் சம்பந்தப்பட்ட... ஏனைய அதி தீவிரவாத குழுக்களிடம் இருந்தும் சாத்தியமான அச்சுறுத்தல்கள் இருந்தன என பாதுகாப்புச் செயலாளர் கூறிக்கொண்டார். அவர் தெரிவித்ததாவது: மாணவர்களைத் தீவிரமயப்படுத்துவதும் அவர்களை பல்வேறு ஆர்ப்பாட்டங்களுக்காக வீதிகளில் இறங்க ஊக்குவிப்பதும் அவர்களது நடவடிக்கையில் அடங்கும்.

இராஜபக்ஷ இங்கு சுட்டிக் காட்டுவது, எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) மற்றும் அதில் இருந்து பிரிந்து சென்ற முன்னணி சோசலிசக் கட்சியையும் (மு.சோ.க.) ஆகும். 1971ல் தோல்விகண்ட ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டதோடு 1980களின் கடைப் பகுதியில் இந்திய உடன்படிக்கைக்கு எதிராக ஒரு பேரினவாத பிரச்சாரத்தையும் முன்னெடுத்த ஜே.வி.பீ., இப்போது கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் பாகமாக உள்ளது.

அரசாங்கம் ஜே.வி.பீ. மற்றும் மு.சோ.க. சம்பந்தமாக அந்தளவு அக்கறை காட்டவில்லை. மாறாக, முழு அரசியல் ஸ்தாபனத்தின் மீதும் அதிருப்தி கண்டுள்ள இளைஞர்கள், புரட்சிகர சோசலிச அரசியலின் பக்கம் திரும்பத் தொடங்குவார்கள் என்பதையிட்டே அது கவலை கொண்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளரின் விரிவுரையின் பிரதான உந்துதல், இனவாத பிளவுகளை உருவாக்கும் அதே வேளை, எந்தவொரு அரசாங்க-விரோத எதிர்ப்பையும் நசுக்க பாதுகாப்புப் படைகளை தயார் செய்வதாகும்.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்தும், இலங்கை இராணுவம் உலகின் மிகப் பெரிய இராணுவங்களில் ஒன்றாக இருப்பதுடன் மேலும் பலப்படுத்தப்படுகிறது. 2005 மற்றும் 2009 கடைப்பகுதியிலும் இராணுவத்தினரின் எண்ணிக்கை 120,000 முதல் 200,000 வரை அதிகரித்துள்ளது. ஒன்பது பிரிவுகள் 20 பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு படையணிகளின் எண்ணிக்கையும் 44ல் இருந்து 71 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடற்படை, விமானப் படை, துணைப்படையான பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவுகள் உட்பட பொலிஸ் படையும் மற்றும் சிவில் பாதுகாப்பு படையுமாக அனைத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு செலவு தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. அரசாங்கம் சகல புலனாய்வு சேவைகளையும் நேரடியாக பாதுகாப்புச் செயலாளருக்கு அறிவிக்கும் தேசிய புலனாய்வு துறையின் பிரதானியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கண்காணிப்பை மேலும் அதிகரிப்பதற்காக, முன்னர் பொதுமக்கள் சபையாக இருந்த ஆட் பதிவுத் திணைக்களம் நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போதுள்ள அடையாள அட்டைக்கு மாற்றீடாக மின்னியல் அடையாள அட்டையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இராஜபக்ஷவின் விரிவுரை, உள்நாட்டு யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரசு இயந்திரமானது தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் வறியவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதற்காக பலப்படுத்தப்படுகின்றமை பற்றிய ஒரு சிறிய கசிவே ஆகும்.