World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Hannah Arendt: Margarethe von Trottas film revisits s debate over Eichmann trial

Hannah Arendt: மார்கரெத் வொன் ட்ரொட்டாவின் திரைப்படம் ஐஷ்மேன் வழக்கு பற்றிய விவாதத்தை மறுபார்வையிடுகிறது

By Fred Mazelis and Stefan Steinberg
20 June 2013

Back to screen version

வொன் ட்ரொட்டா மற்றும் பாம் கட்ஸ் இன் திரைக்கதை வசனத்தில், மார்கரெத் வொன் ட்ரொட்டா இயக்கியது.

திரைப்பட இயக்குனரான மார்கரெத் வொன் ட்ரொட்டாவுக்கு ஜேர்மன் திரைப்பட உருவாக்கத்தில் நீண்ட வரலாறு உண்டு. 1942ல் பிறந்த வொன் ட்ரொட்டா, முதலில் 1970களின் ஆரம்பத்தில் ரெய்னர் வெர்னர் ஃபாஸ்பிண்டர் (Rainer Werner Fassbinder) இயக்கிய திரைப்படங்கள் உள்ளிட்ட, நியூ ஜேர்மன் சினிமா நிறுவன திரைப்படங்களில் நடித்து வந்தார். 1975ல் மேற்கு ஜேர்மனியில் தாக்கமும், குழப்பமுமிக்க அரச ஒடுக்குமுறை மற்றும் ஊடகத்தின் உடந்தை குறித்த (இந்த படத்தின் கதை ஹென்ரிச் போல் [Heinrich Böll] இன் நாவலை அடிப்படையாகக் கொண்டது) The Lost Honor of Katharina திரைப்படத்தில், இவரது கணவரான வொல்க்கர் ஸ்க்லோண்டோர்வுடன் இணை இயக்குனராக பணியாற்றினார்.

1977ல் ஒரு தனி திரைப்பட இயக்குனராக தொழிலை ஆரம்பித்த வொன் ட்ரொட்டா, முதலாவதாக, Marianne and Juliane (1981) திரைப்படத்தின் மூலம் தனது அடையாளத்தை பதித்தார். அத்திரைப்படம் இரு சகோதரிகளை பற்றியது. அவர்களுள் ஒருத்தி அராஜகவாதியாக இருந்து, சிறையில் தெளிவுபடுத்தப்படாத காரணங்களினால் இறந்து போகிறார். 1970களில் பொதுச் சொத்துக்களுக்கு தீவைத்தல்கள், வங்கிக் கொள்ளைகள் மற்றும் கொலைகள் ஆகியவற்றில் ஈடுபட்ட ஜேர்மன் அராஜகவாதக் குழுவான, Red Army Faction  என்ற சிவப்பு இராணுவப் பிரிவின் (Baader-Meinhof) வரலாறே இத்திரைப்படத்தின் அடிப்படை கதையம்சமாகும்.

வொன் ட்ரொட்டா இதுவரை இயக்கியவற்றுள் மிக முக்கிய திரைப்படமென்றால், அது போலந்து-ஜேர்மன் புரட்சிகர மார்க்சிசவாதியான ரோசா லுக்சம்பேர்க்கின் (Rosa Luxemburg) இன் வாழ்க்கை வரலாற்று (1986) திரைப்படமே. லுக்சம்பேர்க்கினை சிறப்பாக எடுத்துக்காட்டி கால் நூற்றாண்டுகளான பின்னர், ஜேர்மன் நடிகை பார்பரா சுகோவா (அவரது தலைமுறைகளில் சிறந்த ஒருவர்) Hannah Arendt இல் மற்றுமொரு அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆரெண்ட், கலாச்சாரம் மிகுந்த மற்றும் கல்விகற்ற ஒரு ஜேர்மன் யூத குடும்பத்தில் பிறந்தவர். வைமார் காலகட்டம் முழுவதும் அவர் ஜேர்மனியில் வாழ்ந்தார், 1920 களில் ஜேர்மன் தத்துவஞானியும் நாஜிக்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் அவர்களை தீவிரமாக ஆதரித்தவருமான மார்ட்டின் ஹைடேக்கரின் கீழ் கல்வி பயின்று, அவரை காதலித்தும் வந்தார். 1933இல் ஆரெண்ட் பாரிஸுக்கு தப்பிச் சென்றார். 1940ல் விஷி ஆட்சியின் வருகையுடன் மற்றும் நாஜிக்களின் ஆக்கிரமிப்பினை அடுத்து, பிரான்சிலுள்ள தடுப்புக் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்ட பின், 1941இல் அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடி புலம் பெயர்ந்தார்.

இரண்டாம் உலகப்போரின் பிந்தைய காலகட்டத்தில், ஆரெண்ட், பிரின்ஸ்டன் நகரில் உள்ள New Yorks New School for Social Research மற்றும் பல இடங்களில் கற்பித்தார். அவரது பெரும்பான்மையான புத்திஜீவித  ஆற்றல்கள் அவரது எழுத்துப் பணியை நோக்கி செலுத்தப்பட்டது. சர்வாதிபத்தியத்தின் மூலங்கள் (The Origins of Totalitarianism) என்னும் புத்தகம் அவருக்கு குறிப்பிட்ட அளவுக்கு புகழை பெற்றுத் தந்தது.

மேலும் ஆரெண்ட்டின் சர்வாதிபத்தியம் பற்றிய விவாதம் கம்யூனிசத்தையும் பாசிசத்தையும் ஒன்றுகலக்கும் முயற்சிகள் இடம்பெற்ற பனிப்போரின் உச்சக்கட்டதில் நிகழ்ந்தது. அவரது மார்க்சிசத்திற்கெதிராக வெளிப்படுத்திய கருத்துக்கள் பற்றி கருத்துவேறுபாடு எதுவுமில்லை என்றாலும், ஆரெண்ட் சுதந்திரமான கல்வி மற்றும் அறிவுசார்ந்த வட்டங்களில் பயணிக்கிற ஒரு வலது-சாரி ஆர்வலர் இல்லை. அவரின் இரண்டாவது கணவர் ஹென்ரிக் ப்ளுஷ்ஷர், ஒரு முன்னாள் ஜேர்மன் கம்யூனிஸ்டாகும். 1930களின் பிற்பகுதியில் ஆரண்ட்டின் நெருங்கிய நண்பர் ட்ரொட்ஸ்கிசத்தோடு நெருங்கிய தொடர்புடைய எழுத்தாளரான மேரி மெக்கார்த்தி ஆவார்.

வொன் ட்ரொட்டா தனது திரைப்படத்தில் சற்று குறைந்த காலத்தினை தேர்வு செய்தபோதும் ஆனால் ஆரெண்டின் வாழ்க்கையின் முக்கிய காலகட்டமான 1960 - 1963 வரையிலான காலகட்டத்திற்கு தனது முக்கியத்துவம் கொடுக்க முடிவெடுக்கிறார். சியோனிச நிர்வாகத்திடமிருந்து கோபமான கண்டனங்களைத் தூண்டிய, மற்றும் வரலாறு மற்றும் நாசிப்படுகொலையின் தன்மை குறித்து கேள்விகள் எழுப்புகின்ற, ஐஷ்மேன் விசாரணை மீதான தனது அறிக்கைகளால் ஆரெண்ட் மிகப் பிரலமானார்

அன்று தப்பி சுதந்திரமாக திரிந்த சில மேல்மட்ட நாசி தலைவர்களுள் ஒருவரான, அடொல்வ் ஐஷ்மேனின் கடத்தலை சித்தரிக்கிற ஆரம்பக் காட்சியுடன் ஆரம்பிக்கும் இத்திரைப்படம், இவ்வரலாற்று முரண்பாட்டுக்கான மேடையை அமைத்துக் கொடுக்கிறது. அதே நேரம், நியூயோர்க்கின் மேல்மட்ட மேற்கு பகுதியில் அவரது விஸ்தாரமான அடுக்குமாடி வீட்டில், மெகார்த்தி (Janet McTeer) உள்ளிட்ட அவரது நெருக்கமான நண்பர்களுக்கு மத்தியில் தொடர்ந்து புகைக்கும் ஆரெண்ட்டை விரைவில் நாம் பார்க்கிறோம். ப்ளூஷ்ஷர் (Axel Milberg) மற்றும் ஆரெண்ட்டால் வழங்கப்படும்  மாலைநேர  விருந்துகளில் நட்புரீதியான ஆனால் சூடான விவாதங்கள் புத்திஜீவிதமான பொறிகளாக பறந்தன.

1960 மே மாதம் இஸ்ரேலிய முகவர்களால் ஐஷ்மேன் கடத்தப்பட்டு இஸ்ரேலுக்கு இரகசியமாக கொண்டு செல்லப்பட்டமை தலைப்புச் செய்திகளாக  அறிவிக்கப்படும்போது, அந்த விசாரணையை பதிவு செய்ய மற்றும் பத்திரிக்கைக்காக தொடர் கட்டுரைகளாக எழுதவிரும்பி தி நியூ யோர்க்கர் பத்திரிகையின் நீண்டகால ஆசிரியரான வில்லியம் ஷானுடன் (Nicholas Woodeson) தொடர்புகொண்டு தனது எண்ணத்தை ஆரெண்ட் தெரிவிக்கின்றார்.

அவரது கணவருடனான மற்றும் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடனான மாலைநேர விருந்து விவாதங்களின் உரையாடல்களில் காட்டியிருப்பது போன்று, பலத்த சந்தேகத்தோடு ஆரெண்ட் தனது மதிப்பீடுகளை ஆரம்பிக்கிறார். இஸ்ரேல் அரசுக்கு அவரது ஆதரவு இருந்தபோதிலும், ஐஷ்மேனை நாஜி ஆதிக்கத்தின் ஒரு சின்னமாகவும் மற்றும் மொத்த யூத மக்களையும் தாம் பிரதிநித்துவப்படுத்துவதாகவும் பாதுகாப்பதாகவும் கூறும் சியோனிஸ்ட்டுகளின் உரிமை கோரலை நியாயப்படுத்தவுமான ஒரு சோடிக்கப்பட்ட வழக்காக இது இருக்குமா என்பது பற்றி அவர் கேள்வியெழுப்புகின்றார். ஆரெண்ட் படுகொலைகளை (Holocaust) யூத மக்களுக்கு எதிரானதாக மட்டுமல்லாது முழு மனித இனத்திற்கும் எதிரான குற்றமாக கருதுகின்றார்.

இத்திரைப்படத்தில் பெரும்பகுதி காலக்கிரம வரிசைப்படி சம்பவங்களை சித்தரிப்பதைத் தொடர்கிறது. இவ்விசாரணை கறுப்பு-வெள்ளை மூல நிழல்படங்கள் மூலம் திறமையாக சித்தரிக்கப்படுகிறது. அதிகமாக புகைபிடிப்பவர் என்பதாலும், அங்கேயே அவர் அதிக நேரம் செலவிட்டிருப்பதாலும் ஆரெண்ட் பத்திரிக்கையாளர் அறையிலிருந்து அதனை கவனிப்பது இன்னொரு யதார்த்தத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.

விசாரணை பற்றிய அவதானங்களில் இருந்து ஆரெண்ட் பல முடிவுகளுக்கு வருகிறார். தனக்காக சிந்திக்க மற்றும் முடிவெடுக்கமுடியாத நிலை மற்றும் கட்டளைக்கு பணியும் குணங்களை இயக்குனர் ட்ரொட்டா ஒருங்கிணைத்து ஐஷ்மேனின் வாக்குமூலத்தினூடாக அறிவிப்பதனூடாக அவர் அதிர்ச்சியடைகிறார். இதுபோன்ற குணங்களுடன் சேர்ந்த அவரது ஒழுங்கமைக்கும் திறன், அவுஸ்விட்ஸ் (Auschwitz) மற்றும் பிற இடங்களுக்கும் மில்லியன் கணக்கான மக்களை எரிவாயுக்கூடங்களுக்கு கொண்டு செல்வதற்கு அவரின் பங்களிப்பை சாத்தியமுறச் செய்ததாக ஆரெண்ட் நிறைவு செய்கிறார். அதிகாரவர்க்க மனநிலையையும் நாசி தலைவரின் சிந்தனையையும் சித்தரிப்பதற்காக அவர் கொடியவற்றின் அற்பத்தன்மை (banality of evil) என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்.

அதே நேரத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நாசிக்களால் அமைக்கப்பட்ட யூத சபைகளான யூதர்குழுக்களை (Judenräte) சேர்ந்த தலைவர்கள் மரண முகாம்களுக்கு ஆட்களை கொண்டு செல்லும் பணிகள் சுமுகமாக நடக்க ஒத்துழைப்பு வழங்கியது பற்றி  விசாரணையின் போது சாட்சிகள் குறிப்பிட்டதால் ஆரெண்ட் அதிர்ச்சியடைகிறார்.

இறுதியாக ஆரெண்ட்டின் கட்டுரை வெளிவரும்போது, சியோனிச நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு மூலைகளிலிருந்தும் மற்றும் அவரது பல நெருங்கிய நண்பர்களிடமிருந்தும் கண்டனங்கள் எழுகின்றது. கொலம்பியா பல்கலைக்கழக அறிஞரும் Partisan Review இன் முக்கிய பிரமுகருமான லயோனல் டிரில்லிங்கும் தாக்க முனைகின்றார். அந்த நாளில் உரக்க குரலிடும் Commentary இதழின் சியோனிச ஆசிரியரும் கம்யூனிசத்திற்கு எதிரான தாரளவாதியாக இருந்து முன்னணி நவீனபழமைவாதத்தின் வாயாடியும் தீவிர வலதுசாரியின் ஆதரவாளராகவும் மாறிவரும் மிகவும் குறைந்த வயதான நோர்மன் பொதோரெட்ஸ், கடும் கோபமுறுகிறார்

இவ்விமர்சனங்களை விட அவரது முன்னைய நண்பர்களிடமிருந்து வரும் பிரதிபலிப்புகள் ஆரெண்ட்டை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. நியூ ஸ்கூலில் அவருடன் கற்பித்த ஒரு சக ஜேர்மன் அகதியான ஹன்ஸ் ஜோனாஸ் (Ulrich Noethen) அவருடனான உறவினை முறித்துக் கொள்கிறார். இன்னொரு நீண்டகால நண்பரான, மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கும் குர்ட் ப்ளமின்ஃபெல்டை (Michael Degen) பார்ப்பதற்காக ஆரெண்ட் இஸ்ரேலுக்கு பயணிக்கிறாள். ப்ளமின்ஃபெல்ட்டும் அவரை காண மறுக்கிறார்.

ஆரெண்ட், ஐஷ்மேனை எவ்வாறு குணாதிசயப்படுத்தினாரோ அதை  வெளிப்படையாக பாதுகாத்துக் கொள்வதுடன் திரைப்படம் முடிவடைக்கிறது. நியூ ஸ்கூலில் அவரது சக ஊழியர்களால் விலக்கிவைக்கப்பட்டு தனது ஆசிரியர் பணியை விட்டுவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டும் ஆரெண்ட் அவற்றையெல்லாம் மறுக்கிறாள். மாணவர்களும் சகஊழியர்களும் நிரம்பிய ஒரு சொற்பொழிவுக் கூடத்தில், கொடியவற்றின் அற்பத்தன்மைக்கு ஒரே மாற்றுமருந்து என்பது அறிவொளிமிக்க தனிநபர்களின் விமர்சனரீதியான சிந்தனைகள்தான் என்று  விவரித்து ஆரெண்ட்-சுகோவா முழுமையாக எட்டு நிமிடங்களுக்கு பேசுகிறாள்.

அனைத்திற்கும் மேலாக, இஸ்ரேல் அரசு மட்டுமே அனைத்து யூதர்களின் சார்பாக பேச முடியும் மற்றும் அதனால் யூத மக்களின் உயிர்வாழ்விற்கு  ஒரே நம்பிக்கை இஸ்ரேல் மட்டுமே என்ற கூற்றும் சியோனிஸ்ட்டுகளின் அரசியல் நோக்கங்களில் குறுக்கீடு செய்யும் ஒரு பிடிவாதம்கொண்ட தனிநபர்வாதியாக ஆரெண்ட் உள்ளார். ஒரு சுய-வெறுப்புள்ள யூதராக தன் மீதான அனைத்து தாக்குதல்களுக்கும் எதிராக பாதுகாப்பதற்கு அவர் நிச்சயம் தகுதியுடையவர்.

அதே நேரத்தில், ஆரெண்ட்டின் மொத்த வழிமுறைகளும், அவரது எதிரிகளை நாசிசத்தின் மிக வலுவாக எதிராளிகளாக தங்களைக் காட்டிக் கொள்ள வைத்து அவர்களை வலுப்படுத்தியது என்ற முடிவுகளை எடுக்க அவரை இட்டுச் செல்கிறது. அந்த நேரத்தில், ஆரெண்ட்டுக்கு எது தெளிவாக இருந்திருக்க வேண்டுமென்பதை பிந்தைய ஆதாரங்கள் விளக்கியிருக்கின்றன. விசாரணையின் போது, அவரின் நடவடிக்கைகள் இயல்பாக இருந்தபோதிலும், ஐஷ்மேன் அப்பாவியோ பணிவுடன் சட்டப்படி நடப்பவரோ அல்ல, மாறாக, அப்பாவி யூதர்களை கொல்வதற்கு துணை போன தனது செயலை பெருமையடித்துக் கொள்ளும் இறுதித் தீர்வின் (Final Solution -யூதர்கள் அனைவரையும் கொல்லுதல்) பணிகளில் தன்னை இணைத்துக்கொண்ட ஒரு கொடூரமான யூதர் வெறுப்பாளர் என்பது நிரூபணமானது.

ஐஷ்மேனை வரலாற்று உள்ளடக்கத்துக்குள் வைத்து பார்ப்பதைவிட, ஒரு தீவிரமான பகுத்தாய்விற்கு பதிலாக ஒரு வகையிலான பகுதி-உளவியல் ரீதியிலான அணுகுமுறைகளை மாற்றாக வைத்து, ஆரெண்ட் அவரது விசாரணை சாட்சியங்களின் மீது சாதாரணமாக தனது கருத்துப்பதிவுகளை சார்ந்திருந்தார். லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்ராலினின் பாத்திரம் குறித்த அவரது பகுத்தாய்வில் ஆழமாக சுட்டிக்காட்டப்பட்டது போல், முக்கியத்துவமற்ற அல்லது சாதாரண நபர்கள், குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் கீழ், அதிக ஆற்றலுள்ள நிலைமைக்கு விரைவாக உயர முடியுமென்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது.

யூத சபையை பொறுத்தவரையில், இந்த விஷயத்திலும் ஆரெண்ட், உலக நிகழ்வுகளிடமிருந்து பிரிக்கப்பட்ட யூதத் தலைவர்களின் செயல்பாடுகளை ஒரு வரலாற்றுரீதியான அணுகுமுறையற்ற ஆராயும் முறையையே சார்ந்திருக்கிறார். இந்த தலைவர்களுள் பலர் யூத மக்களின் சலுகையுள்ள பிரிவுகளை பிரதிநித்துவப்படுத்திய வேளையிலும், அவர்களும் வன்முறையான மற்றும் உயிருக்கான அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டனர். சிலரின் செயல்பாடுகள் யூதத்தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் மீதான அவர்களது வெறுப்பினையும் இகழ்ச்சியையும் பிரதிபலித்தது, ஆனால் அது எப்போதும் அவ்வாறிருக்காது, சிலர் சந்தேகமின்றி குறைந்தபட்சம் சில யூத மக்களையாவது காப்பாற்றலாமென்று நம்பினார்கள்.

இத்திரைப்படத்தால் அந்த பிரச்சனையை நேர்மையாக வெளிப்படுத்தவும் விவரிக்கவும் முடியவில்லை. சுகோவாவின் கைதேர்ந்த நடிப்பு, ஐஷ்மேனின் விசாரணை நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய ஒளிப்பதிவுக்காட்சிகள் மற்றும் ஆரெண்ட் இயங்கிக்கொண்டிருந்த  உலகின் துல்லியம் மற்றும் கவர்ச்சியான படத்தை வழங்குவதற்காக ஜேர்மன், ஹிப்ரூ மற்றும் ஆங்கிலத்தின் வலுவான பயன்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் சுவாரஸ்யமாகவும் பிடிப்பாகவும் உள்ளன.

எனினும், மொத்தத்தில் இந்த திரைப்படம் ஒப்பீட்டளவில் சுறுசுறுப்பற்றதாகவும் ஈர்ப்பற்றதாகவும் இருக்கிறது. நடிகர்கள் குறிப்பாக சுகோவா மற்றும் ப்ளூஷராக மில்பெர்க் தங்களின் வேலையை செய்கின்றனர். ஆயினும், வரலாற்று உள்ளடக்கம் (மற்றும் அது ஏற்படுத்தும் ஆற்றல்) இல்லை. குறிப்பாக ஆரெண்ட் மற்றும் ஹைய்டேக்கரின் (Klaus Pohl) சுருக்கமான முந்நிகழ்ச்சிகளின் பதிவுக்காட்சிகள் வெறுமையானதாகவும் வலுவில்லாமலும் இருக்கிறது. இக்கதையில் அதிகம் இலக்கியமான, மௌனமான மற்றும் சுருக்கமான விஷயங்கள் உள்ளன, அது ஆரெண்ட்டின் தவறுகள் மற்றும் குழப்பங்கள் மீது கவனம் செலுத்துகிறது ஆனால், அவரது வாழ்க்கையும் தொழிலையும் உருவாக்கிய விடயங்கள் மீது கவனம் செலுத்தவில்லை.

இத்திரைப்படத் தயாரிப்பு குறித்த அவரது குறிப்புகள் உள்ளிட்ட வொன் ட்ரொட்டாவின் குறிப்புகளில் இத்திரைப்படத்தின் பிரச்சினைக்கான முக்கிய அம்சம் உள்ளடங்கி இருக்கிறது. மக்களையும் உலகையும் புரிந்து கொள்வதற்கான ஆரெண்ட்டின் தாகம்... ஆச்சரியப்படத்தக்க வகையில், அவரை நோக்கி என்னை இழுத்தது என்று இயக்குனர் விவரிக்கிறார். ஆயினும், வரலாற்றின் கொடூரமான சக்தியை எதிர்க்கும் தனிநபர்களின் சக்திகளை ஆரெண்ட் தொடர்ச்சியாக நம்பினார் என்று அவர் மேலும் விவரிக்கிறார்

வொன் ட்ரொட்டா ஐஷ்மேனை பின்வருமாறு விவரிக்கிறார்: தனது உயரதிகாரிகளின் கட்டளைகளுக்கு பணிவதே, அவர் வலியுறுத்தியது போன்று, அவரது கடமை. இந்த கண்மூடித்தனமான விசுவாசத்தில், மனித இனத்தை மற்ற எல்லா இனங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற முக்கிய குணாதிசயங்களுள் ஒன்றான தனக்கான யோசிக்கும் திறனற்று ஐஷ்மேன் இருந்தார். இத்திரைப்படம் ஆரெண்ட்டை அரசியல் கோட்பாட்டாளராகவும் சுதந்திரமான சிந்தனையாளராகவும், அவருக்கு முற்றிலும் எதிரான எதையும் யோசிக்காத பணிவான அதிகாரவாதியாகவும், ஆர்வமுள்ள ஒரு கீழ்நிலை பணியாளராக இருப்பதற்கு விருப்பப்படுபவரையும் பற்றி சித்தரிக்கிறது.

படுகொலைக்கு (Holocaust) ஒரு விளக்கமாக இருக்கும் இது அர்த்தமற்றது. தனது செயல்பாடுகள் குறித்து ஐஷ்மேன் யோசித்திருந்தால் கூட, பெரும் கொலைகள் தடுக்கப்பட்டிருக்கும்.

ஆரெண்ட்டின் படைப்பிலும் திரைப்படத்திலும் 1918 முதல் 1933 வரையிலானது ஜேர்மன் வரலாறு முற்றாக தவறவிடப்பட்டுள்ளது. அதாவது தவறவிடப்பட்ட புரட்சிகரமான வாய்ப்புகள் அதன் பின்னர், ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கான ஒரேயொரு சாத்தியக்கூறுகளை ஏற்படுத்திய ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்தின் மீதான காட்டிக்கொடுப்புகள் தவறவிடப்பட்டுள்ளது.

சோவியத் யூனியனின் உடைவு மற்றும் சோசலிசம் இறந்துவிட்டது என்று அறிவிக்கின்ற கருத்தியல் பிரச்சாரங்களின் பார்வையில், 20 ஆம் நூற்றாண்டின் வரலாறு நோக்கிய தனது அணுகுமுறையை வொன் ட்ரொட்டோ மாற்றியிருப்பதாகத் தெரிகிறதுஉண்மையில், அவர் இப்போது ரோசா லுக்சம்பேர்க்குக்கு எதிராக ஆரெண்ட்டை சாதகமாக சித்தரிக்கிறார். கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பெண்மணியும் சிந்தனையாளருமாக ரோசா லுக்சம்பேர்க் இருந்ததாக நம்பியதால், 1983 இல் அவரைப் பற்றி ஒரு திரைப்படம் எடுக்க விரும்பினேன்... ஆனால் இப்போது, 21 நூற்றாண்டில் ஆரம்பத்தில், ஆரெண்ட் இன்னும் முக்கிய நபராக இருக்கிறார் என்று அவர் விளக்குகிறார்.

இப்போது நமது நூற்றாண்டுக்கு பொருத்தமானதாக இருப்பதாக வொன் ட்ரொட்டாவால் பாராட்டப்பட்ட, ஆரெண்ட்டின் கருத்தானது, சாதாரண மக்கள்  இன் வடிவத்தில் பாசிசத்திற்கு மனிதகுலம்தான் பொறுப்பு என்ற மிக அவநம்பிக்கையான மற்றும் தவறான முடிவை நோக்கி நேரடியாக இட்டுச் செல்கிறது. ஆரெண்ட்டுக்கு, நாசிக்களின் நடத்தையிலிருந்து மிகவும் கட்டுப்படுத்த முடியாத தார்மீக கேள்விகள் உதிக்கவில்லை, மாறாக சாதாரண மரியாதைக்குரிய நபர்களின் நடத்தையிலிருந்துதான் எழுகிறது என்ற இந்த வரிகளுடன் வொன் ட்ரொட்டா ரிச்சார்ட் பெர்ன்ஸ்டீனை மேற்கோள் காட்டுகிறார். மேலும் என் கருத்தில், இது முக்கியமான விஷயம் என்று வொன் ட்ரொட்டா கூறுகிறார்.

ஆரெண்ட்டின் கொடியவற்றின் அற்பத்தன்மை என்ற கோட்பாடு சாதாரணமாக எந்தவித பின்புலமும் இல்லாத ஒன்றல்ல. இதுவரை உலகின் மோசமான குற்றங்கள் மனித இனத்துக்கு எதிரான அரக்கர்களால் மட்டும் செயல்படுத்தப்பட்டவையல்ல என்பதை வலியுறுத்துகிறது. சொல்லப்போனால், சாதாரண மக்கள் கூட இதுபோன்ற செயல்களில் ஈடுபடவோ அல்லது சேர்ந்துகொள்ளவோ முடியுமென்பதை 20 ஆம் நூற்றாண்டு எடுத்துக்காட்டியது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இது எப்படி நடைபெறுகிறது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, சிதைவுற்ற மற்றும் அவநம்பிக்கை கொண்ட ஜேர்மன் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நாசிகளின் பாதையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது அல்லது அவர்கள் நாசிகளால் வென்றெடுக்கப்பட்டது எவ்வாறு? மற்றும் உழைக்கும் வர்க்கத்துக்கு எதிராக அவர்கள் எப்படி மாறுகிறார்கள் மற்றும் இந்த விளைவு எப்படி தவிர்க்க முடியாத ஒன்றாக ஆனது?.

ஐஷ்மேனுக்கு எந்த விஷயத்திலும் இந்த அற்பத்தன்மை கருத்து பொருந்தவில்லை. இவரது நடவடிக்கைகளையும் படுகொலைகளையும் அதனை உருவாக்கிய சமுதாய மற்றும் வரலாற்று நிபந்தனைகளிலிருந்தும் எல்லாவற்றுக்கும் மேலாக, போராடும் வர்க்கங்களின் போராட்டம் மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடி ஆகியவற்றிலிருந்தும் பிரித்துவிடுவதால், அவரது பொறுப்புகளும் ஆரெண்ட்டால் குறைக்கப்பட்டன. கொடியவற்றின் அற்பத்தன்மை இலிருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பாடம் என்னவெனில், தனிமைப்படுத்தப்பட்ட சிந்திக்கக்கூடிய தனிபர்கள், பரந்துபட்ட மக்களின் பங்களிப்பினை தவிர்த்து வரலாற்றை மாற்ற முடியும் என்பதல்ல. மாறாக சோசலிசத்திற்கான போராட்டம் முழுவதிலும் மனித குலத்தைப் பாதுகாக்க புரட்சிகரமான தத்துவமும் தலைமையும் அவசியமாக தேவைப்படுகிறது என்பதே.