World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா India: NLC strike against privatisation continues இந்தியா: தனியார்மயமாக்கத்திற்கு எதிரான என்.எல்.சி. வேலைநிறுத்தம் தொடர்கிறதுBy
Arun Kumar தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் (NLC) நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 25,000 நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், மத்திய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டங்களுக்கு எதிராக நடத்தி வருகின்ற காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று அதன் ஒன்பதாவது நாளை எட்டியது. நீர் விநியோகம், மின்சாரம் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை சேவைகளில் பணியாற்றும் என்.எல்.சி. தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். தொழிலாளர்களது நடவடிக்கைக்கான பரந்த வெகுஜன ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, ஜூலை 4 அன்று நெய்வேலி பகுதியில் கடையடைப்பும் நடத்தப்பட்டது. என்.எல்.சி.யில் எரிபொருள் கையிருப்பு துரிதமாகக் காலியாகி வருவதோடு பணிக்குச் செல்லும் 4,500 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் உற்பத்தியைப் பராமரிக்க 12 முதல் 14 மணி நேரம் வரையிலும் வேலை செய்யத் தள்ளப்பட்டுள்ளனர். வேலைநிறுத்தம், தமிழ்நாட்டிலும் மற்றும் அண்டை மாநிலங்களிலும் மின்விநியோகத்தில் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாததைப் போல காட்டுவதற்கு என்.எல்.சி.யின் நிர்வாக இயக்குநரான பி.சுரேந்தர் மோகன் முயன்றார். அவர் இந்து நாளிதழிடம் கூறினார்: “சுரங்கங்கள் மற்றும் அனல் மின் உற்பத்தி நிலையங்களின் அன்றாட செயல்பாட்டை அதிகாரிகளும் பொறியாளர்களும் நிர்வகித்து வருகின்றனர்.” என்.எல்.சி. நிறுவனம் லிக்னைட் அகழ்வு மற்றும் மின் உற்பத்தியில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். இந்நிறுவனத்தை முழுமையாக தனியார்மயமாக்குவதை நோக்கிய முதல் படியாக நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு இந்திய அரசாங்கம் முனைகிறது. இந்த வேலைநிறுத்தம் அரசியல்ரீதியாக தூண்டப்பட்டது என்று கூறி கண்டித்திருக்கும் வி.நாராயணசாமி --இவர் பிரமதரின் அலுவலகத்துடன் தொடர்புபட்ட மத்திய அமைச்சர் ஆவார்-- வேலைநிறுத்தம் செய்பவர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று கூறினார். என்.எல்.சி. பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் தொழிற்சங்கம், வேலைநிறுத்தத்திற்கு எதிரான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, கடைசித் தருணத்தில் வேலைநிறுத்தத்தில் இருந்து விலகிக் கொண்டது. நிறுவன நிர்வாகம் நீதிமன்ற உத்தரவைக் கோரிப் பெற்றிருந்த போதிலும் என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை. என்.எல்.சி. தொழிலாளர்களது ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஜூலை 2 வரை பல்லாயிரம் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களும் பங்குபெற்றனர். 2006 ஆம் ஆண்டில் போலவே, இந்த வேலைநிறுத்தத்தில் என்.எல்.சி.யின் சுமார் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும் என்.எல்.சி.யின் நிரந்தரத் தொழிலாளர்களுடன் கைகோர்த்ததோடு தங்களது வேலைகளை நிரந்தரமாக்கும் கோரிக்கையையும் வைத்தனர். பதிலிறுப்பாக, என்.எல்.சி. நிர்வாகம் சென்ற மாதத்திற்கான அவர்களது ஊதியம் வழங்கப்படுவதை தாமதித்தது. வறிய ஊதியம் பெறும் இத்தொழிலாளர்களின் வேலைநிறுத்த பங்கேற்பை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு முயற்சியாகவே நிர்வாகம் இதனைச் செய்தது. என்.எல்.சி. கட்டமைப்புகளுக்கு “அடிப்படைப் பாதுகாப்பு” வழங்குவதான பேரில் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையினர் பல்லாயிரம் பேர் அங்கு குவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உறுதுணையாக தமிழ்நாடு மாநில அரசாங்கமும் 3,000 கூடுதல் போலிசாரை அளித்திருக்கிறது. ஜூலை 9 அன்று, முதலாம் அனல் மின் நிலையத்தை முற்றுகையிடச் சென்ற பல நூறு என்.எல்.சி. தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். நெய்வேலி குடியிருப்பு பகுதியையும் சுற்றியிருக்கும் பகுதிகளையும் ஒரு முற்றுகையிடப்பட்ட நிலையில் தான் போலிஸ் வைத்திருக்கிறது. ஜூலை 11 அன்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குபெற்று நெய்வேலியில் இருக்கும் மந்தாரக்குப்பத்தில் இரயிலை மறிக்க முயன்றனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோரை போலிசார் கைது செய்தனர். என்.எல்.சி. வேலைநிறுத்தம் தொடர்கின்ற நிலையிலும், அதற்கு மற்ற தொழிலாளர்களின் ஆதரவும் கிட்டியிருக்கக் கூடிய நிலையிலும், இந்த தொழிற்துறை போராட்ட நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிவகைகளை காண மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் கூடி வேலை செய்கின்றன. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை வாங்கிக் கொள்வதாக மாநில அரசாங்கம் கூறியிருக்கும் நிலையில் மத்திய அரசாங்கத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் நடந்தேறி வருகின்றன. இத்தகையதொரு எந்த விற்பனையிலும் மேலதிகமாக பங்குகளை விற்பதற்கு முன்னேற்பாடாக தொழிலாளர்களின் நலன்களை விலைகொடுத்து நிறுவனம் மறுசீரமைக்கப்படுவது தவிர்க்கவியலாமல் இடம்பெறும். சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் வணிக-ஆதரவு “சீர்திருத்தங்களுக்கான” தமது விரிந்த கோரிக்கைகளின் பகுதியாக மின்சாரம் தனியார் மயமாக்கப்படுவதையும் தாராளமயமாக்கப்படுவதையும் முன்னுரியமையாக்கி இருக்கின்றன. தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்த தொழிற்சங்கங்கள், பங்குகளை மாநில அரசாங்கம் வாங்கிக் கொள்வதான திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் உடன்படுகின்ற பட்சத்தில் வேலைநிறுத்தத்தில் இருந்து விலகிக் கொள்வதற்கான அவற்றின் விருப்பத்தை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கின்றன. என்.எல்.சி.யின் அத்தனை பிற தொழிற்சங்கங்களும் இச்சதியில் வீழும் என்பதில் சந்தேகமில்லை. தனியார்மயமாக்கலை எதிர்ப்பதாகக் கூறும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலரான டி.ராஜா, அதேநேரத்தில் தமிழ்நாடு அரசாங்கம் பங்குகளை வாங்கிக் கொள்வது தொடர்பாக அதனுடன் முறையான விவாதம் நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்றார். இதன் மூலம் அஇஅதிமுக அரசாங்கத்தின் திட்டத்தைக் காரணமாக காட்டி வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தனது கட்சியும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கமும் தயாராக இருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த இரண்டு தசாப்தங்களாக நிதி மூலதனத்தின் சந்தை-ஆதரவு திட்டநிரலை அமல்படுத்தியதற்கு நேரடிப் பொறுப்பான மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களில் அங்கம் வகித்த அரசியல் கட்சிகளுடன் தான் அத்தனை தொழிற்சங்கங்களும் இணைந்துள்ளன. என்.எல்.சி.யின் நிரந்தத் தொழிலாளர்களுக்கு என திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்த தொழிலாளர் முன்னேற்ற முன்னணி (LPF), அஇஅதிமுகவுடன் இணைந்த அண்ணா தொழிலாளர்கள் மற்றும் ஊழியர் சங்கம், அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) ஆகிய தொழிற்சங்கங்கள் உள்ளன. என்.எல்.சி. ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமும் AITUC உடன் இணைந்ததாகும். AITUC மற்றும் CITU ஆகிய இரண்டு தொழிற்சங்கங்களும் இந்தியாவின் இரண்டு ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) ஆகியவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களாகும். இந்த இரண்டு தொழிற்சங்கக் கூட்டமைப்புகளுமே கொஞ்சமும் வெட்கமின்றி, 2003 ஆம் ஆண்டில் வேலைநிறுத்தம் செய்த 200,000 அரசாங்க ஊழியர்களை இடைநீக்கம் செய்தமை உள்ளிட தொழிலாள-வர்க்க விரோத நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்றவரான தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை தொழிலாளர்களின் பாதுகாவலராக விளம்பரப்படுத்துகின்றன. மாநிலத் தேர்தலில் இரண்டு ஸ்ராலினிச கட்சிகளும் அவரின் அஇஅதிமுக கட்சிக்கே ஆதரவளித்தன. மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு திமுக மற்றும் அஇஅதிமுக காட்டுகின்ற எதிர்ப்புக்கும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது. தமிழ்நாட்டில் ஒரு மின்சார நெருக்கடியை உருவாக்கி மாநிலத்தில் பெருவணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலன்களை சேதப்படுத்த அச்சுறுத்துகின்ற ஒரு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் உண்மையில் இந்தக் கட்சிகள் எல்லாம் தீர்மானத்துடன் உள்ளன. திமுக மற்றும் அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே சமூகரீதியாய் பிற்போக்குத்தனமான “சுதந்திர சந்தை” கொள்கைகளுக்கு முழு உறுதிப்பாடு பூண்ட கட்சிகளே ஆகும். உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசிய என்.எல்.சி. தொழிலாளர்கள் தனியார்மயமாக்க திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர். அது தமது வாழ்க்கையும் வேலை நிலைமைகளையும் பாதிக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். நிர்வாகத்தின் கோரிக்கையின் பேரில் என்.எல்.சி. வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த தங்களது அதிருப்தியை அவர்கள் வெளியிட்டனர். என்.எல்.சி. தொழிலாளர்களில் மிகவும் சுரண்டப்படுகின்ற பிரிவாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியத்தில் சுமார் பத்தில் ஒரு பங்கையே ஊதியமாகப் பெறுகின்றனர். நாட்டின் சொற்பமான தொழிலாளர் சட்டங்களையும் மீறிய வகையில், இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களில் பலரும் இந்நிறுவனத்தில் 15 முதல் 30 ஆண்டுகள் வரை பணிபுரிந்து வருகின்ற நிலையிலும் நிரந்தரமாக்கப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தொழிற்சங்கங்களிடம் இருந்து முற்றிலுமாக முறித்துக் கொள்வதன் மூலமும், சாமானியத் தொழிலாளர் கமிட்டிகளை உருவாக்குவதன் மூலமும் மற்றும் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் இதேபோன்ற தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற தொழிலாளர்களின் மற்ற பிரிவினரை நோக்கித் திரும்புதல் ஆகியவற்றின் மூலமும் மட்டுமே என்.எல்.சி. தொழிலாளர்கள் தனியார்மயமாக்கத்திற்கு எதிராகப் போராடவும் வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். எல்லாவற்றுக்கும் மேல், மத்தியில் உள்ள காங்கிரஸ்-தலைமையிலான அரசாங்கத்தினாலும் மற்றும் ஜெயலலிதாவின் மாநில நிர்வாகத்தாலும் திணிக்கப்படுகின்ற நிதி மூலதனத்தின் திட்டநிரலுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டமும் இதில் அவசியமாகிறது. தெற்காசியாவிலும் மற்றும் உலகெங்கிலும் சோசலிசத்துக்காக நடத்தப்படும் ஒரு பரந்த போராட்டத்தின் பகுதியாக சோசலிசக் கொள்கைகளை முன்னெடுத்து நடத்துகின்ற தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது ஒரு அரசாங்கத்திற்காக போராடுவது என்பதே இதன் பொருளாகும். |
|