World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா : எகிப்து The Egyptian coup and the counterrevolutionary role of the Revolutionary Socialists எகிப்திய ஆட்சி சதியும் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்களின் எதிர் புரட்சிப் பாத்திரமும்
By Johannes
Stern and Alex Lantier கெய்ரோவில் நேற்று மாலை குடியரசுப் படையினர் பாசறைக்கு முன் எகிப்திய இராணுவத்தினால் முஸ்லிம் சகோதரத்துவத்தின் (MB) ஆர்ப்பாட்டக்காரர்கள் இரத்தம்சிந்த படுகொலை செய்யப்பட்டமை இராணுவம் எகிப்தில் ஒரு புதிய புரட்சியை செய்கின்றது என்னும் கூற்றுக்கள் அனைத்தையும் சிதறடித்துவிட்டது. எதிர்ப்பாளர்கள் மீதான, எகிப்தின் இராணுவ சர்வாதிகாரத்தினால் சுமத்தப்படும் வன்முறை, இறுதியில் 2011 முதல் அனைத்து வெகுஜன எழுச்சிகளுக்கும் பின்னணியில் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும். நேற்று காலை பிரார்த்தனைகளின்போது இராணுவப் பிரிவுகள் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்கார்கள் மீது முதலில் கண்ணீர்ப்புகை குண்டை வீசினர். பின்னர் கவச வாகனங்களின் பாதுகாப்புடன் அவர்களை நோக்கி அணிவகுத்துச்சென்று கூட்டத்தினரை நோக்கி சுட்டனர். இப்படுகொலை குறைந்தபட்சம் 51 குடிமக்களைக் கொன்று, 435 பேரைக் காயப்படுத்திவிட்டது என்று எகிப்திய சுகாதார அமைச்சரக தகவல்கள் கூறுகின்றன. உண்மையில் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகம் உயரலாம். இத்தகைய படுகொலையின் நோக்கம் புதன் நடைபெற்ற ஆட்சிசதிக்கும், புதிய இராணுவ ஆட்சிக்குழுவிற்கும் எதிரான அனைத்து எதிர்ப்பையும் அச்சுறுத்துவதாகும். எகிப்தில் இப்பொழுது நடைபெறும் அதிர்வு நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளவும், எதிர்வரவிருக்கும் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தயாரிக்கவும் எகிப்தில் நடக்கும் இரண்டு வேறுபட்ட மோதல்களை பற்றி முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும். முபாரக் அகற்றப்பட்டதில் இருந்து எரியூட்டப்பட்டுள்ள பிரச்சினைகளான, முதலும் முக்கியமானதுமாக பொருளாதாரக் கொள்கை பற்றியும் அத்துடன் வெளியுறவுக் கொள்கை, வாழ்க்கைநிலை தொடர்பாகவும் முதலாளித்துவத்திற்கு உள்ளேயே மோதல்கள் உள்ளன. கடந்த வாரங்களில் இந்த மோதல் முக்கியமாக முன்னாள் ஜனாதிபதி முர்சி தலைமையிலான முஸ்லிம் சகோதரத்துவத்திற்கும் சற்று கூடுதலான மதச்சார்பற்றதன்மை கொண்ட ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுக்கும் இடையே தீவிரமடையும் அதிகாரத்திற்கான போட்டி என்னும் வடிவத்தை எடுத்தது. இராணுவம், தான் பாதுகாக்க உறுதி கொண்டுள்ள நிதியப் பொருளாதார நலன்களும் உள்ளன. இரு பிரிவுகளும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆணையிடும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் சர்வதேச மூலதனம் கோரும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் தங்கள் ஆதரவைக் கொடுக்கின்றன. ஆனால் இன்னும் தீர்மானகரமான மோதல் ஒருபுறத்தில் தொழிலாள வர்க்கம் மற்றும் நகர்ப்புற வறியவர்களுக்கும் மறுபக்கத்தில் முழு எகிப்திய ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலானதாகும். இம்மோதல் முஸ்ரியின் ஆட்சியின்கீழ் பெருகிய வறுமை மற்றும் சமூக அதிருப்தியினால் இன்னும் அதிகமாயிற்று. சமீப மாதங்களில் எகிப்தில் அலைபோன்ற ஆலைமூடல்களும் வேலைநிறுத்தங்களும் நடைபெற்றுள்ளன. இராணுவம் ஆட்சியை எடுத்துக் கொண்டதற்கு முன்பு பல மில்லியன் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் உள்ளடக்கிய பாரிய மக்கள் எதிர்ப்புக்கள் முஸ்லிம் சகோதரத்துவத்தின் அரசாங்கத்திற்கு எதிராக நடந்தன. ஆனால் இராணுவத்தின் தலையீடு இந்த இயக்கத்தின் வெளிப்பாடு அல்ல. மாறாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இயக்கப்படும் முன்கூட்டிய தாக்குதலாகும். இராணுவ ஆட்சி சதியை தொடர்ந்த முதல் நாட்களில் இராணுவத்தின் நடவடிக்கை புதிய ஆட்சியின் தன்மையை மட்டுமின்றி, தமரோட் (கிளர்ச்சி) கூட்டணியின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தையும் அம்பலப்படுத்துகின்றது. இதற்கு எகிப்திய புரட்சிர சோசலிஸ்ட்டுக்கள் (RS) போன்ற போலி இடது குழுக்களின் ஆதரவும் உண்டு. இது அமெரிக்காவில் உள்ள சர்வதேச சோசலிச அமைப்பு (ISO), பிரித்தானியாவில் உள்ள சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. இராணுவ ஆட்சி இப்பொழுது முஸ்லிம் சகோதரத்துவத்தை நசுக்குவதில் கவனத்தை காட்டுகிறது என்றால், அது தமரோட் மற்றும் புரட்சிர சோசலிஸ்ட்டுக்களின் உதவியுடன், குறைந்தப்பட்சம் தற்காலிகமேனும் கடந்த வாரம் பாரிய எதிர்ப்புகளில் பங்குபெற்ற தொழிலாளர்களினதும் இளைஞர்களினதும் எதிர்ப்பை ஓரங்கட்டிவிட்டதாலாகும். இது தொழிலாள வர்க்கத்துடன் இன்னும் ஒரு தீர்மானகரமான பலப்பரீட்சைக்கு தயார் செய்யும்போது, இராணுவத்திற்கு ஏமாற்று சூழ்ச்சிகளை செய்வதற்கும் மற்றும் அதன் ஆட்சியை உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் அவகாசமளித்துள்ளது. தாராளவாத, இஸ்லாமியவாத, போலி இடது எதிர்ப்பு கட்சிகளின் கருத்தில் தோற்றுவிக்கப்பட்டது தமரோட் ஆகும். புரட்சிர சோசலிஸ்ட்டுக்களை தவிர, இதன் ஆதரவாளர்களில் எல்பரடேய் இன் தேசிய மீட்பு முன்னணி (NSF), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்டெல் மோனீம் அபௌல் போடோக் வழிநடத்தும் இஸ்லாமிய வலுவான எகிப்துக் கட்சி, ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம், இன்னும் ஜெனரல் அஹ்மத் ஷபிக் போன்ற முன்னாள் முபாரக் ஆட்சியின் அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர். தமரோட், முதலாளித்துவ எதிர்ப்பிற்கு ஓர் அரங்கு என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இது ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. எவ்வாறாயினும், முழு முதலாளித்துவ வர்க்கத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டக்கூடிய சக்தி ஏதும் இல்லாதநிலையில், --முஸ்லிம் சகோதரத்துவத்திற்கும் மற்றும் தமரோட்டுக்களுள் இருக்கும் ஊழல் சக்திகளுக்கும் எதிராக-- இது முர்சிக்கு எதிரான ஒரு பரந்த எதிர்ப்பியக்கத்தை மில்லியன் கணக்கான கையெழுத்துக்களை சேகரிக்கும் பொறியினுள் தள்ளிவிடக்கூடும். தமரோட்டின் முக்கிய கோரிக்கைகளான இஸ்லாமியவாத ஆதிக்கம்கொண்ட பாராளுமன்றத்தின் மேல்பிரிவை கலைத்தல், நீதித்துறையின் தலைவரை ஜனாதிபதியாக நியமித்தல், தடையற்ற சந்தைச்சார்பு தொழில்நுட்பவாத அரசாங்கத்தை நியமித்தல் ஆகியவை, தமது ஆட்சிக்கான ஒட்டுமொத்தமான அடிப்படையாக இராணுவக் குழுவால் முழுமையாக ஏற்கப்பட்டுள்ளன. மே மாதம் புரட்சிர சோசலிஸ்ட்டுக்கள் அதன் ஆதரவை தமரோடுக்கு வழங்கி, அதை “புரட்சியை முடித்து வைக்கும் வழிவகை” எனக்கூறியது. புரட்சிர சோசலிஸ்ட்டுக்களின் உறுப்பினர்கள் தமரோட்டிற்காக கையெழுத்து சேகரித்ததுடன் அதை முன்னெடுக்க கூட்டங்களை ஒழுங்கு செய்தனர். மே 28 அன்று புரட்சிர சோசலிஸ்ட்டுக்கள் தமரோட் தலைவர்களான முகம்மது பட்ர் (Mahmoud Badr) மற்றும் மகம்மது அப்துல் அசீசை அவர்களுடைய கீசாவிலுள்ள தலைமையகத்தில் சந்தித்து ஊக்கமளித்து, தமரோட்டின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவுகொடுத்துக் கூட்டு அறிக்கைகளை வெளியிட்டனர். இராணுவம் ஆட்சியை எடுத்துக் கொண்டபின், புரட்சிர சோசலிஸ்ட்டுக்களின் முக்கிய உறுப்பினர் சமே நகீப் ஆட்சி சதியை பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) Socialist Worker வலைத் தளத்தில் “இரண்டாம் புரட்சி” எனப் பாராட்டினார். “இது ஜனநாயகத்தின் முடிவும் அல்ல, சாதாரண இராணுவ ஆட்சி சதியுமல்ல” என அறிவித்து, “கடந்த சில நாட்களின் நிகழ்வுகளை அடுத்து மக்கள் அதிகாரமும் உரிமையும் பெற்றுவிட்டதாக உணர்கின்றனர்.” என்றார். புரட்சிர சோசலிஸ்ட்டுக்கள், இராணுவக் குழுவிற்கு ஆதரவாக எதிர்ப்பாளர்களை அணிதிரட்டவும் முயன்றுள்ளது. ஜூன் 6 ம் திகதி அவர்களுடைய அரபு மொழி வலைத் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், புரட்சிர சோசலிஸ்ட்டுக்கள் “அமெரிக்க ஆதரவு கொண்ட முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் அதன் பொது வழிகாட்டியான முகம்மது பேடி இன் பிடிவாதம், முட்டாள்தனம் மற்றும் குற்றத்தன்மை, உள்நாட்டுப்போர் என்னும் அச்சம்தரும் நிலைமையை திறக்கின்றன. இது, புரட்சியை பாதுகாப்பதற்கு மில்லியன் கணக்கான மக்கள் சதுக்கங்களுக்கும் தெருக்களுக்கும் தாங்கள் வந்தால்தான் நிறுத்தப்பட முடியும். அவர்கள் அமெரிக்க-முஸ்லிம் சகோதரத்துவத்தின் திட்டமான எகிப்திய புரட்சியை ஒரு இராணுவ ஆட்சிசதி எனச் சித்தரிப்பதை தடுக்க வேண்டும்.” என எழுதியுள்ளது. இதன்பின் புரட்சிர சோசலிஸ்ட்டுக்கள் இராணுவக் குழுவை “சமூக நீதியை அடைய உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறும்..... சுதந்திரம் மற்றும் சமூக நீதியின் பெறுமதிகள் பொதிந்த ஒரு பொதுமக்களுக்கான ஜனநாயக அரசியலமைப்பை எழுதவேண்டும்” என்றும் கோரியது. அமெரிக்க ஆதரவுடைய ஆட்சிக்குழுவிற்கு இத்தகைய நட்புரீதியான ஆலோசனை வழங்குவது புரட்சிர சோசலிஸ்ட்டுக்களை ஒரு எதிர்ப்புரட்சி அமைப்பு என முத்திரையிடுகின்றது. இதன் கரங்கள் இரத்தத்தில் தோய்ந்துள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியம் முஸ்லிம் சகோதரத்துவத்துடன் கூட்டாக சேர்ந்து, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை ஒரு சதியென அவதூறுபடுத்த முற்படுகிறது என்னும் கருத்து அபத்தமானது. ஏனெனில் அமெரிக்க அரசாங்கம் வேண்டுமென்றே சில சட்டரீதியான பின்விளைவுகளை தவிர்க்க அச்சொற்றடரை பயன்படுத்தியது. அவ்வாறான விளைவுகளில் எகிப்திய இராணுவத்திற்கு உதவியை நிறுத்துவதும் அடங்கும். உண்மையில் தமரோட், வாஷிங்டனுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் ஆட்சி சதிக்காலம் முழுவதும் நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தது. எல்பரடேய் அமெரிக்க வெளிவிவகாரத்துறையுடனும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுப் பிரிவு அதிகாரிகளுடனும் விவாதங்கள் நடத்தி ஆட்சிசதியை ஆதரிக்குமாறு அவற்றைக் கோரினார். இதை அவரே கடந்த வெள்ளியன்று நியூயோர்க் டைம்ஸின் டேவிட் டி. கிர்க்பாட்ரிக்கிற்குக் கொடுத்த நேர்காணலில் கூறியுள்ளார். “பிரபல எகிப்திய தாராளவாதி, எழுச்சிக்கு மேற்கில் ஆதரவை நாடுவதாகக் கூறுகிறார்” என்னும் தலைப்பை கொண்ட கட்டுரையில், கிர்க்பாட்ரிக் “மேற்கத்தைய சக்திகளிடம் ஜனாதிபதி முகம்மத் முர்சி வலுக்கட்டாயமாக அகற்றப்பட வேண்டிய அவசியத்தை நம்பசெய்ய தான் கடுமையாக பாடுபட்டதாக எல்பரடேய் கூறியதாக” எழுதியுள்ளார். “ஆட்சி சதி நாட்களில் திரு.எல்பரடேய் தான் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை அதிகாரி காத்தரீன் ஆஷ்டன் ஆகியோருடன் விரிவாகப் பேசியதாகவும், திரு.முர்சி அகற்றப்பட வேண்டிய தேவையை அவர்கள் நம்பச்செய்ய உதவியதாகவும் கூறினார்.” கிர்க்பாட்ரிக் கருத்துப்படி எல்பரடேய் “பல மில்லியன் மக்கள் தெருக்களுக்கு வந்து திரு.முர்சியை அகற்றப் போராடுகையில், இராணுவ ஆட்சிசதி “மிகக்குறைந்த வேதனை தரும் விருப்புரிமை” என வாதிட்டுள்ளார். ஒரு புரட்சி, அரசியல் அயோக்கியத்தனத்தை இரக்கமின்றி அம்பலப்படுத்துகிறது. தமரோட் நடவடிக்கையையும் அமெரிக்க ஆதரவுடைய ஆட்சிசதியையும் “இரண்டாம் புரட்சி” என சித்தரிக்கும் புரட்சிர சோசலிஸ்ட்டுக்களின் பிற்போக்குத்தன முயற்சி கெய்ரோ தெருக்களில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நிராகரிக்கப்படுகிறது. இராணுவக் குழுவிற்கு தற்பொழுது புரட்சிர சோசலிஸ்ட்டுக்கள் கொடுக்கும் ஆதரவு 2011ல் ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் ஆரம்பத்தில் இருந்து வந்த தொடர்ச்சியான கீழ்த்தரமான நடவடிக்கைகளின் சமீபத்திய ஏமாற்றுத்தந்திரமாகும். ஜனவரி 2011 எதிர்ப்பின் வெடிப்பை முகங்கொடுக்கையில், புரட்சிர சோசலிஸ்ட்டுக்கள், எல்பரடேய் இன்னும் பிற முதலாளித்துவ ஆளும்தட்டின் பிரிவுகளுடன் சேர்ந்துகொண்டு, ஆட்சியின் வீழ்ச்சிக்கு என்றில்லாமல், “ஜனநாயகம், குடியுரிமைகள் மற்றும் சுதந்திர, நியாயமான தேர்தல்களை” அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்று ஜனவரி 21 வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தது. ஜனவரி 25 க்கு பின், எதிர்ப்புக்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன புரட்சிகர இயக்கமாக வளர்ச்சியடைந்து, முபாரக்கை அகற்றியபோது புரட்சிர சோசலிஸ்ட்டுக்கள் அதற்குப்பின் பதவிக்கு வந்த அமெரிக்க ஆதரவுடைய இராணுவக்குழுவிற்கு தமது ஆதரவை கொடுத்தனர். மே 31ம் திகதி புரட்சிர சோசலிஸ்ட்டுக்களின் முக்கிய உறுப்பினரான முஸ்தபா ஓமர் Socialist Worker இல் எழுதிய ஒரு கட்டுரையில் ஆயுதப்படையின் தலைமைக்குழு “அரசியல், பொருளாதார முறையை சீர்திருத்தும் நோக்கம் கொண்டதால், அது கூடுதல் ஜனநாயகமும் குறைந்த அடக்குமுறையும் உள்ளதாக இருக்கும்” என்றார். இராணுவ ஆட்சிக்கு எதிராக எதிர்ப்புக்கள் மீண்டும் புதிதாக எழுச்சியடைந்ததுடன், புரட்சிர சோசலிஸ்ட்டுக்கள் வெளிப்படையாகவே ஒரு “இரண்டாம் புரட்சியை” எதிர்த்ததுடன், விரைவில் தமது ஆதரவை விரைவில் முர்சிக்கும் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கும் மாற்றிக் கொண்டனர். ஜனாதிபதி தேர்தல்களில் அவர்கள் முர்சிக்குப் பிரச்சாரம் செய்ததுடன், முஸ்லிம் சகோதரத்துவத்தை “புரட்சியின் வலது பிரிவு” என ஏராளமான அறிக்கைகளை வெளியிட்டனர். முர்சி ஒரு “புரட்சிகர வேட்பாளர்” என்றும் கூறினர். முர்சி இறுதியில் ஜனாதிபதியானதும், அவர்கள் அந்த வெற்றியைக் கொண்டாடினர். சர்வதேச சோசலிச அமைப்பின் (ISO) சோசலிசம் 2012 மாநாட்டில், சமேஷ் நகீப் “முஸ்லிம் சகோதரத்துவத்தின் வேட்பாளர் முர்சியின் வெற்றி எதிர்ப்புரட்சியையும் இராணுவ சதியையும் பின்னே தள்ளுவதில் ஒரு பெரும் சாதனையாகும். எப்போதாவது எதிர்ப்புரட்சி என்னும் அச்சுறுத்தல் இருக்குமேயானால், இஸ்லாமியவாதிகள் மக்களிடம் ஓடி இராணுவ ஆட்சிக்கு எதிராக நூறாயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டுவர்.” என அறிவித்தார். நகீப், முஸ்லிம் சகோதரத்துவத்தை ஒரு புரட்சிகர சக்தி என உயர்த்திக் காட்டியது வேடிக்கையானதாகும். ஆனால் பின்னர் நடந்தபடி புரட்சிர சோசலிஸ்ட்டுக்கள் தம்மை மாற்றிக்கொண்டு இப்பொழுது முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு எதிராக இராணுவச் சதியை ஆதரிக்கிறனர். இந்த அசாதாரண திருப்பங்களுக்கும் திடீர் மாற்றங்களுக்கும் புரட்சிர சோசலிஸ்ட்டுக்கள் எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை. அவர்கள் அமெரிக்க ஆதரவுடைய இராணுவ ஆட்சிக்குழுவால் (திடீரென அதை முற்போக்கானது என புகழ்கின்றனர்) முஸ்லிம் சகோதரத்துவம் (திடீரென அதை எதிர்ப்புரட்சியெனக் கண்டிக்கின்றனர்) அகற்றப்பட்டது என்பதை சாதாரணமாக ஒரு இரண்டாம் புரட்சிக்கு ஒப்பாகும் என்கின்றனர். முதலாளித்துவ அரசுடனும் உலக ஏகாதிபத்தியத்துடனும் நெருக்கமாக பிணைந்துள்ள இத்தகைய நிலையற்ற, நெறியற்ற அரசியல் ஊசலாட்டங்கள், மத்தியதர வர்க்கத்தின் ஊழல் மிகுந்த பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழுவிற்கான அடையாளமாகும். புரட்சிர சோசலிஸ்ட்டுக்களின் சமீபத்திய சூழ்ச்சித்தந்திரங்கள், எகிப்திய முதலாளித்துவமும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் நிதிய மூலதனம் கோரும் கொள்கைகளை முபாரக், முர்சியைவிடக் கூடுதலாகச் செயல்படுத்த ஆதரவளிக்கும் முயற்சியாகும். எல்பரடேய் நீண்டகாலமாக சர்வதேச நாணய நிதியத்திடம் புதிய கடன் வாங்க வேண்டும் என்று தீவிரமாக ஆதரிப்பவர்களில் ஒருவர் ஆவார். இதற்கு ஈடாக பாரியளவு எகிப்தியர்கள் நம்பியுள்ள அடிப்படைப் பொருட்களான தானியங்கள், எரிபொருள் ஆகியவற்றிற்கு வழங்கும் மானியங்களை மோசமான அளவில் வெட்டவேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோரும். சர்வதேச நிதிய மூலதனம் கோரும் கொள்கைகளை செயல்படுத்தும் ஒரு அரசாங்கத்தை ஒன்றிணைக்கத்தான் இராணுவம் முயல்கிறது. எல்பரடேயை தவிர, புதிய எகிப்திய பிரதம மந்திரிப் பதவிக்கான வேட்பாளர்களில் முன்னாள் எகிப்தின் மத்திய வங்கியின் தலைவர் பரூக் எல்-ஒக்டா, பஹ்ரைனை தளமாக கொண்ட அஹ்லி யுனைட்டட் வங்கியின் தற்போதைய முக்கிய நிர்வாகியும் முன்னாள் மோர்கன் ஸ்டான்லி வங்கியாளருமான அடெல் எல்- லப்பான் ஆகியோர் உள்ளனர். சிக்கன நடவடிக்கையை செயல்படுத்த விரும்பும் இரக்கமற்ற இராணுவ ஆட்சிக்குழு தவிர்க்க முடியாமல் தொழிலாள வர்க்கத்துடன் கடும் சமூக மோதலை எதிர்கொள்ளும். இப்பொழுது முக்கியமான பணி தொழிலாள வர்க்கத்தின் தலைமையை கட்டமைப்பதாகும். அது முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் எதிராக சோசலிசத்திற்கான போராட்டத்தை அடித்தளமாக கொள்ளவேண்டும். தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு மிகவும் வன்முறையான தாக்குதலை கொடுப்பதற்கான நிலைமைகளை தோற்றுவிக்கும் ஒரு குருதிகொட்டும் அமெரிக்க உதவியுடனான இராணுவச் சதிக்கு ஆதரவு கொடுத்தல் மூலம் புரட்சிர சோசலிஸ்ட்டுக்கள் மீண்டும் தன்னை பிற்போக்கு முகாமில் இருத்தியுள்ளது. எகிப்தில் உள்ள சோசலிச நோக்குடைய தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த அமைப்பை இழிவுடன் அணுகவேண்டும். ஜனநாயகம், சமூக சமத்துவத்திற்கான எகிப்திய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் புரட்சிகரப் போராட்டத்தில் அது அவர்களுக்கு எதிரான மறுபக்கத்தில் நிற்கிறது. |
|