World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP campaigns for defence of Edward Snowden

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி எட்வர்ட் ஸ்நோவ்டெனை பாதுகாக்க பிரச்சாரம்

By our correspondent
10 July 2013

Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ...) அதன் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், அமெரிக்க புலனாய்வு நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்நோவ்டெனை பாதுகாக்க முன்னெடுத்த பிரச்சாரத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பிரதிபலித்தனர்.

தேசிய பாதுகாப்பு முகவரமைப்பின் (NSA) முன்னாள் ஒப்பந்த ஊழியரான ஸ்நோவ்டென், ஒபாமா நிர்வாகம், அமெரிக்க மக்களுக்கும் உலக மக்களுக்கும் எதிராக, மின்னணு உபகரணங்களைப் பயன்படுத்தி பிரமாண்டமான கண்காணிப்பு உளவு நடவடிக்கையில் ஈடுபடுவதை அம்பலப்படுத்தியதால், அது அவருக்கு அச்சுறுத்தல் விடுத்துக்கொண்டிருக்கின்றது. மாஸ்கோ விமான நிலையத்தில் இடைத்தங்கல் பகுதியில் சிக்கி இருக்கும் ஸ்நோவ்டெனுக்கு, வாஷிங்டன் ஏனைய நாடுகளை அச்சுறுத்துவதன் காரணமாக அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலான பிரச்சாரம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலை தளமும் ஸ்நோவ்டெனை பாதுகாக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் பாகமாகவே முன்னெடுக்கப்படுகிறது. சோ... மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.., கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் ஜூலை 12 ம் தேதி ஒரு பொது கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதோடு ஸ்நோவ்டெனுக்கு எதிராக ஒபாமா நிர்வாகம் வலை விரிப்பதை நிறுத்துமாறு கோரி ஒரு கையெழுத்துப் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளன.

சோ... மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.. உறுப்பினர்கள், இந்த வாரம் கொழும்பு துறைமுகம், இரயில் நிலையம், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடினர். நூற்றுக்கணக்கானவர்கள் மனுவில் கையெழுத்திட்டதோடு பலர் கூட்டத்திற்காக நிதிச் சீட்டுகளை வாங்கினர். பிரச்சாரகர்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் "எட்வர்ட் ஸ்நோவ்டெனை பாதுகாத்திடு" என்ற தலைப்பில் வலைத் தளத்தில் வெளியான பிரசுரத்தை விநியோகித்தனர்.

மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: எட்வர்ட் ஸ்னோடன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கத்தினதும் அரசியல் ஸ்தாபனம் மற்றும் முதலாளித்துவ ஊடகங்களினதும் வேட்டையாடல் பிரச்சாரத்தின் நேரடி இலக்காகி இருப்பது நாம் அறிந்ததே. அமெரிக்காவிலும் உலகம் பூராகவும் கோடிக்கணக்கான மக்களை குறிவைத்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரமைப்பு மேற்கொண்டுவரும் இரகசிய மற்றும் சட்டவிரோத கண்காணிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதற்கு ஸ்னோடன் தைரியமாக முடிவெடுத்தமையினாலேயே அவர் அத்தகைய வேட்டையாடலுக்கு இலக்காகியுள்ளார்... அதனால், ஒபாமா ஆளும் வர்க்கத்தினதும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் துரோக வேலைத் திட்டத்தை கண்டனம் செய்யும் நாம், ஸ்னோடனுக்கு எதிரான வேட்டையாடலை உடனடியாக நிறுத்துமாறு கோருகிறோம்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் மல்ஷ குறிப்பிடுகையில் "ஒபாமா கறுப்பு என்பதால், அவர் சாதாரண அமெரிக்கர்களின் குறைகளை நிவர்த்தி செய்வார் என்று நான் நினைத்தேன். உண்மையில், அவர் முக்கியமாக 2008 இல் தனது முதல் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, 'நிச்சயமாக மாற்றம்' செய்வதாக உறுதியளித்தார்.  இலங்கையில், நான் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ [பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான]  உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் எமது பிரச்சினைகளை தீர்ப்பார் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. ஒபாமா எங்கள் நம்பிக்கைகளை நொருக்கி விட்டார். இராஜபக்ஷவும் அதையே செய்துள்ளார். ஆமாம், ஸ்நோவ்டெனை இன, மதத்தைப் பாராமல் அவரை பாதுகாக்க வேண்டும், என்றர்.

இலங்கை ஊடக அறிக்கைகளின் பிழையான வழிநடத்தலால் உருவாக்கப்பட்ட குழப்பத்தை பிரதிபலித்த, மற்றொரு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவி நிவந்தி, ரஷ்யா ஸ்நோவ்டெனுக்கு அடைக்கலம் வழங்கப் போகிறது என்று நம்பினார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தஞ்சம் வழங்கப்பட வேண்டுமெனில் அமெரிக்க உளவு இரகசியங்களை வெளிப்படுத்துவதை ஸ்நோவ்டென் நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார், என்பதை பிரச்சாரகர்கள் அவருக்கு விளக்கினார்.

"ஸ்நோவ்டென் அந்த இரகசியங்களை வெளிப்படுத்தவில்லை என்றால், அவர் நன்றாக அமெரிக்காவில் இருக்க முடியும்," என நிவாந்தி ஏளனமாய் பதிலளித்தார். "அப்படியெனில் ரஷ்யாவில் அரசியல் தஞ்சம் பெறுவதில் என்ன பயன் இருக்கிறது?". ஜனநாயக உரிமைகளை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு நசுக்குவதற்கு உலகம் பூராவும் உள்ள ஆளும் வர்க்கங்கள் ஒருமித்த உடன்பாடு கொண்டுள்ளன என ஒரு சோ.... உறுப்பினர் விளக்கினார்.
மற்றொரு மாணவர், "ஏன் ஸ்நோவ்டெனுக்காக பிரச்சாரம் செய்கின்றீர்கள்? அவர் தனது வேலையை தவறாக செய்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். அவர் அதற்கு [தண்டனைக்கு] உரியவர் இல்லையா?" என ஆரம்பத்தில் கேட்டார்
.

ஸ்நோவ்டென் அமெரிக்க ஸ்தாபனத்திற்கு எதிரானவராக ஆனது ஏன், என்பதை உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் விளக்கினர். முதலில், அவர் உண்மையில் பயங்கரவாதத்தின் மீதான போர் என சொல்லப்படுவது, பயங்கரவாதத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதை இலக்காகக் கொண்டது என்று நம்பினார், ஆனால் பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் நடத்தையால் அவர் உண்மையை அறிந்துகொண்டார். பின்னர் அந்த மாணவர், பாதுகாப்பு பிரச்சாரத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் வாயில் முன்னிலையில், கிட்டத்தட்ட நூறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மனுவில் கையெழுத்திட்டதுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். பலர் ஸ்நோவ்டெனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை. அவர்கள் கூட்டம் நிரம்பி வழியும் பஸ்கள் மற்றும் ரயில்களைப் பிடிக்க அவசரப்பட்டாலும், ஸ்நோவ்டென் ஒபாமா அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார் என்று கூறிய பின்னர், மனுவில் கையெழுத்திட காத்திருந்தனர். வேறு எவரும் இலங்கையில் ஸ்நோவ்டெனை பாதுகாக்க பிரச்சாரம் செய்யவில்லை என்று குறிப்பிட்ட ஒரு இளைஞன், பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக உறுதியளித்தார்.

அமெரிக்க அரசாங்கத்தால் இந்த நபர் [ஸ்நோவ்டென்] வேட்டையாடப்படுவது எனக்குத் தெரியும். ஸ்நோவ்டென் உள்ளே பயணிக்கின்றார் என்ற சந்தேகத்தின் பேரில், கடந்த வாரம் பொலிவிய ஜனாதிபதி பயணித்த விமானம் தரையிறக்கப்பட்டது. இது நல்லது அல்ல. அமெரிக்கா உலகம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றது. அதனாலேயே அவர்கள் உளவு பார்க்கின்றனர்," என ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்.

"இலங்கையில் ஒரு அமெரிக்க குடிமகனுக்காக ஒரு மகஜர் கையெழுத்திடுவதன் முக்கியத்துவம் என்ன?" என ஒரு இளைஞன் கேட்டார்: ஸ்நோவ்டெனின் அம்பலப்படுத்தல்கள் சம்பந்தமாக கட்டவிழ்ந்துள்ள சம்வங்கள் சர்வதேச அளவிலானவையாகும், என்று சோ... உறுப்பினர்கள் விளக்கினர். அவர் அம்பலப்படுத்திய விடயங்கள், அமெரிக்க முதலாளித்துவத்தின் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் உண்மையான இயல்பை காட்டியுள்ளதுடன், மேலும் அவர்கள் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக என்ன செய்கின்றார்கள் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளன. கலந்துரையாடலின் பின்னர், அந்த இளைஞர் மனுவில் கையெழுத்திட்டார்.

இலங்கை ஊடகம் ஸ்நோவ்டென் பற்றியும் அவர் மீதான ஒபாமா நிர்வாகத்தின் சீற்றத்தைப் பற்றியும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திரிபுபடுத்தப்பட்ட கட்டுரைகளையே வெளியிட்டுள்ளன. இதன் விளைவாக, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவரைப் பற்றி சிறிதளவே தெரியும் அல்லது எதுவும் தெரியாது. எனினும், சோ.../.வை.எஸ்.எஸ்.. பிரச்சாரத்திற்கான பிரதிபலிப்பு, உழைக்கும் மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், சர்வதேச பிரச்சினைகள் பற்றி, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிகரித்துவரும் அடக்குமுறை நடவடிக்கைகள் பற்றிய ஆர்வம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது.

மத்திய கொழும்பில் உள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் ஜூலை 12, வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.. ஏற்பாடு செய்துள்ள பொது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.