தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The infrastructure of a police state emerges in Europe ஐரோப்பாவில் ஒரு பொலிஸ் அரச உள்கட்டுமானம் வெளிப்படுகிறது Peter
Schwarz use this version to print | Send feedback முன்னாள் NSA ஊழியர் எட்வார்ட் ஸ்னோவ்டென், ஜேர்மனிய நாஜி ஆட்சி போன்ற முழு சர்வாதிகார நாடுகளுடையதை விட, கண்காணிப்பில் மிக அதிக அதிகாரங்களை கொண்ட ஒரு பொலிஸ் அரச உள்கட்டுமானத்தை அம்பலப்படுத்தியுள்ளார். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் குடிமக்கள் பற்றிய தொடர்பு தகவல்களை கண்காணித்து சேமித்து வைக்கின்றன. ஒற்று செய்யப்பட்ட தொலைபேசிகளின் மெட்டா தரவுகள் குவிப்பின் அடிப்படையில், ஒரு தனிப்பட்ட நபரின் நடவடிக்கைகள், தொடர்புகள் குறித்து இடையறா சுயவிவரத்தை பெறமுடியும். இந்த முறையில் உரையாடல்கள், மின்னஞ்சல்களை அதன் உள்ளடக்கத்தில் இருந்து தேர்ந்தெடுத்து வடிகட்டிவிட முடியும். அந்தரங்க உரிமை —அமெரிக்கா மற்றும் ஒவ்வொரு ஐரோப்பிய அரசியலமைப்பிலும் பொதிந்துள்ள அடிப்படை மனித உரிமை— மற்றும் அதைத் தொடர்ந்து அஞ்சல், தொலைத்தொடர்புகள் குறித்த அந்தரங்கங்கள் பற்றிய உத்தரவாதங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளன. தொலைபேசிகள் ஒற்றாடலுக்கு உட்படுத்தப்படுவது வெளிப்படையாக சட்டவிரோதமானது, ஒரு நாட்டின் உளவுத்துறை நிறுவனங்கள் தங்கள் சொந்த தேசிய சட்டங்களை தாங்கள் அப்பட்டமாக மீறுவதை தவிர்க்கும் பொருட்டு பல நேரமும் தங்கள் செயற்பாடுகளை வெளிநாட்டுப் பங்காளிகள் செயல்புரிய அனுமதிக்கின்றனர். ஸ்னோவ்டெனுடைய வெளிப்படுத்தல்கள், பனிக்கட்டியின் உச்சியைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இவை, அவர் முன்பு பணியாற்றிய தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) மற்றும் அதன் பங்காளி அமைப்புக்களில்தான் குவிப்புக் காட்டுகின்றன —பிரித்தானிய அரசாங்கத்தின் தொடர்புத்துறை தலைமையகம் (GCHQ), ஜேர்மனியக் கூட்டாட்சி உளவுத்துறைப் பிரிவு (BND) பிரான்சின் Direction generale de le securite exterieure (DGDE) போன்றவை; இவை உத்தியோகபூர்வமாக வெளிநாட்டு ஒற்றாடலைச் செய்கின்றன. சேகரிக்கப்பட்ட தகவல்களை அணுகும் உரிமை பெற்ற இராணுவம் மற்றும் உள்நாட்டு உளவுத்துறை அமைப்புக்களின் நடவடிக்கைகள் மற்றும் தொடர்புடைய பொலிஸ் துறைகளினதும் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. கண்காணிப்பு கருவியின் பரப்பளவு மிகப்பிரமாண்டமானது. அமெரிக்க உளவுத்துறை மட்டும் நூறாயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது. துல்லியமான எண்ணிக்கையை பெறுவது கடினம், ஏனெனில் அவை இரகசியமாக உள்ளன; ஆனால் வாஷிங்டன் போஸ்ட் நடத்திய விசாரணை ஒன்று 2010ல் கிட்டத்தட்ட 854,000 அமெரிக்கர்கள் உயர்மட்ட இரகசிய பாதுகாப்பு விதிவிலக்கை கொண்டிருந்தனர். இதன் பொருள் உளவுத்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அமெரிக்க தொடக்கப் பள்ளிகளில் இருக்கும் 1.8 மில்லியன் ஆசிரியர்களில் கிட்டத்தட்ட பாதி என்பதாகும். ஐரோப்பாவில் உளவுத்துறை நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை இதேபோல் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. துல்லியமான மதிப்பீடுகள் செய்வது கடினம்; ஏனெனில் நிறைய நாடுகளும் உளவுத்துறை அமைப்புக்களும் உள்ளன. ஜேர்மனியில் மட்டும் BND ஐ தவிர, மற்ற அமைப்புக்கள் இராணுவ எதிர் உளவுத்துறைப் பிரிவு, கூட்டாட்சி அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகம் (BfV) மற்றும் அதன் 16 தனி மாநில அலுவலங்களும் அடங்கும். இத்தகைய ஓர்வெல்லிய கண்காணிப்புக் கருவி பயங்கரவாதத்திற்கு எதிராக ஈடுபடுத்தப்படுகிறது என்னும் கூற்று அபத்தமானதாகும். ஒரு சிறிய எண்ணிக்கையிலுள்ள பயங்கரவாதிகளின் சுவடறிய நூற்றுக்கணக்கான மில்லியன் குடிமக்களை கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லை, பல சந்தர்ப்பங்களில் பயங்கரவாதிகளே தங்கள் சொந்த தொடர்புகளை உளவுத்துறையுடன் கொண்டுள்ளனர். உளவுத்துறை கண்காணிப்பின் உண்மையான இலக்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள்தாம். ஆளும் வர்க்கத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள உண்மையான எதிரி இவர்கள்தாம். சமூகப்புள்ளி விவரங்கள் மற்றும் எதிர்ப்புரட்சி சமூக நடவடிக்கைகள் என இப்பொழுது நடப்பதை சுருக்கமாக பார்த்தாலே இது உறுதியாகும். அமெரிக்காவில் மிகச் செல்வக் கொழிப்புடைய 10 வீதத்தினர் அனைத்து வருமானத்திலும் பாதிக்கும் மேல் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர், அதில் முக்கால் பகுதி தனியார் சொத்துக்கள் ஆகும். கீழ்மட்டத்தில் மிக வறிய 15 வீத மக்கள் உத்தியோகபூர்வ வறுமைக் கோடான ஓராண்டிற்கு 22,500 டாலர்கள் நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு என்பதை விட கீழ்நிலையில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள், ஐரோப்பாவில் பரந்த வேலையின்மை மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவில் சமூகச் சரிவை ஏற்படுத்தியுள்ளன. கிரேக்கத்தில் ஐந்து சிக்கன வரவு-செலவுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின், மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் சுகாதாரக் காப்பீடு இல்லாதுள்ளனர், எனவே சுகாதாரப் பாதுகாப்பு உரிமை அற்று உள்ளனர். மக்களுடைய எதிர்ப்பு வளர்ந்து வருகிறது என்பதை ஆளும் வர்க்கம் உணர்ந்து, முழு மக்கட் தொகையையும் கண்காணிப்பின் கீழ் இருத்தியுள்ளதன் மூலம் பதிலளித்துள்ளது. இத்தகைய கண்காணிப்பு ஒதுக்கி நின்று கவனிப்பதோடு நின்றுவிடுவதில்லை. தற்பொழுது எகிப்தில் நடைபெறுவது போல் வர்க்கப் போராட்டம் விரிவாக்கமடைந்தால், உளவுத்துறை பிரிவுகளின் பரந்த தரவு தொகுப்பு தளங்களில் சேமிக்கப்பட்டுள்ள மக்களைப் பற்றிய சுயவிவரங்கள், முகவரிகள் தேடியெடுக்கப்பட்டு எதிர்ப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் என கைது செய்ய, குற்ற நடவடிக்கைகள் எடுக்க பட்டியலிடப்படுவர். ஆளும் வர்க்கத்தின் இரக்கமற்ற தன்மை எட்வார்ட் ஸ்னோவ்டென் விவகாரத்தில் தெளிவாகக் காட்டப்படுகிறது. 30 வயதானவர் தன்னுடைய உயிருக்கு அஞ்சுகிறார், அவர் NSA உடைய குற்றம் சார்ந்த செயல்களை அம்பலப்படுத்தும் தைரியத்தைக் கொண்டிருந்ததற்காக உலகம் முழுவதும் வேட்டையாடப்படுகிறார். வியன்னாவில் பொலிவிய ஜனாதிபதி ஏவோ மோராலேஸ் விமானத்தை பலவந்தமாக தரையிறக்க வைத்த செயல் ஒரு இறைமை பெற்ற நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் கூட அமெரிக்க இரகசியப் பிரிவு மற்றும் அவற்றின் ஐரோப்பிய கூட்டாளிகளின் சூழ்ச்சிகளில் இருந்து எவருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. உளவுத்துறைப் பிரிவுகள் தங்கள் நோக்கங்களை அதிகப்படுத்த ஆத்திரமூட்டல்களையும் பயங்கரவாதச் செயல்களையும் பயன்படுத்த தயாராக உள்ளன. 1970கள், 1980களில் இத்தாலியில் உள்ள நேட்டோவின் இரகசிய Gladio அமைப்பு இத்தகைய ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை செயல்படுத்தி இழிவடைந்திருந்தது. “குண்டு வைப்பு விவகாரம்” என அழைக்கப்படும் இதேபோன்ற காரணத்தை ஒட்டி லுக்சம்பேர்க்கின் பிரதம மந்திரி ஜோன் குளோட் யுங்கர் இன்று இராஜிநாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜேர்மனியில், தேசிய சோசலிஸ்ட் தலைமறைவு இயக்கம் (National Socialist Underground -NSU) நடத்திய இனவெறிக் கொலைகளில் அரசியலமைப்புப் பாதுகாப்பு அலுவலகத்தின் ஈடுபாடு குறித்த புதிய சான்றுகள் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எட்வார்ட் ஸ்னோவ்டெனுடைய விவகாரம் முக்கிய படிப்பினைகளை கொண்டுள்ளது. அடிப்படை ஜனநாயக உரிமைகளை காக்க, ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவின் மீதும் நம்பிக்கை வைக்கக்கூடாது. ஆளும் உயரடுக்குகள் மிக அடிப்படை உரிமைகளை புறக்கணித்து, தங்கள் செல்வம், சலுகைகளை பாதுகாக்க பொலிஸ்-அரச வழிமுறைகளை அபிவிருத்தி செய்கின்றன. ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பு என்பது, சமூக வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்துடன் இணைந்த வகையில், முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கியெறியும் நோக்கம் கொண்ட ஒரு தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்தினால்தான் மேற்கொள்ளப்பட முடியும். |
|
|