World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Convulsions in Egypt signal new era of world revolution

எகிப்திய கொந்தளிப்புக்கள் உலகப் புரட்சியின் ஒரு புதிய சகாப்தத்தை சமிக்ஞை செய்கின்றன

David North and Alex Lantier
5 July 2013

Back to screen version

இந்த வாரம் எகிப்தில் நடந்த அதிர்வுமிக்க நிகழ்வுகள், ஜனாதிபதி முகம்மது முர்சியை அகற்றிய இராணுவச் சதியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இது உலகெங்கிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு மகத்தான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

இந்நிகழ்வுகளின் மிக முக்கிய கூறுபாடு முர்சியின் இஸ்லாமியவாத ஆட்சிக்கு எதிராக வெளிப்பட்ட சமூக எதிர்ப்பின் மேல்நோக்கி எழுந்த அளவுதான். நகர மையங்களை நோக்கி குழுமிய கூட்டங்களின் எண்ணிக்கை பத்து அல்லது நூறு ஆயிரங்களில் என்று இல்லாமல், மில்லியன் கணக்கில் இருந்தன. நாடெங்கிலும் பல பத்து மில்லியன் கணக்கான மக்கள் இவற்றில் பங்குபற்றியிருந்தனர்.

“வரலாற்றுரீதியான நடவடிக்கையின் முழுநிறைவான தன்மையுடன் சேர்ந்து, அதில் பங்கு பெறும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்” என்று கார்ல் மார்க்ஸும் பிரெடெரிக் ஏங்கெல்ஸும் 1844ல் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் முதலாவது பெரிய புரட்சிகரப் போராட்டங்களுக்கு சற்றுமுன்பு (1848-49) எழுதினர். இந்தப் புதிய “வரலாற்றுரீதியான நடவடிக்கை”, பல மில்லியன் கணக்கானோரை போராட்டத்தினுள் ஈர்த்திருப்பது, உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள முதலாளித்துவத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் சர்வதேச தொழிலாள வர்க்கப் புரட்சியாகும்.

சமீபத்திய ஆண்டுகள் உலகெங்கிலும் பரந்த வேலைநிறுத்தங்களையும் எதிர்ப்புக்களையும் கண்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் சிக்கன நடவடிக்கைகளால் பேரழிவிற்கு உட்பட்ட கிரேக்கம், போர்த்துக்கல் ஸ்பெயின் போன்ற நாடுகளிலும், ஆசியாவில் தொழில்துறை பிராந்தியங்களான சீனா, வங்கதேசத்திலும், மத்திய கிழக்கில் இஸ்ரேல் உட்பட பரந்த தொழிலாள வர்க்க எதிர்ப்புக்களை சமீபத்தில் துருக்கியிலும், பிரேசிலிலும் காணக்கூடியதாக இருந்தது. எகிப்தில் தொடர்ச்சியான அலைகளென எழும் வெகுஜனப் போராட்டங்கள் ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்கின் மிகஆழ்ந்த வெளிப்பாடாகும்.

1991 சோவியத் ஒன்றியத்தின் உடைவு வரலாற்றின் முடிவைக் குறித்தது மற்றும் தாராளவாத ஜனநாயகத்தின் இறுதி வெற்றி என்னும் கூற்றுக்கள் இப்பொழுது உலகப் பொருளாதார நெருக்கடியாலும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புதிய எழுச்சிகளாலும் முற்றாக நிராகரிக்கப்பட்டுவிட்டன. எகிப்திய எழுச்சி எதிர்வரவிருப்பவை குறித்த ஒரு முன்னுணர்வை கொடுக்கிறது. நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் புரட்சிகரப் போராட்டங்களில் நுழைதல் என்பது முந்தைய காலங்களின் புரட்சிகளை மிகச் சிறியவை ஆக்கிவிடும்.

வர்க்கப் போராட்டத்தின் எழுச்சிக்குப் பின்னே இருக்கும் உந்து சக்திகள், உலக முதலாளித்துவ அமைப்புமுறையில் உள்ள முரண்பாடுகளாகும். எந்தவொரு நாட்டிலும் தொழிலாளர்களை போராட்டத்திற்கு தள்ளும் பிரச்சினைகள், தேசியத் தன்மை கொண்டவை என்பதைவிட பிரதானமாக ஒரு சர்வதேசிய தன்மையைத்தான் கொண்டுள்ளன. உற்பத்திச் சாதனங்கள் மீதான முதலாளித்துவ தனிச்சொத்துடைமையினாலும் மற்றும் தேசிய அரசமைப்பு முறையினாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் பொருளாதார வாழ்வு பூகோளமயமாக்கப்பட்டிருப்பது, இன்னும் கூடுதலான நிதிய ஒட்டுண்ணித்தனத்தையும், சமூக சமத்துவமின்மையும், வறுமை, போர் மற்றும் ஜனநாயகத்தின் முறிவு ஆகியற்றையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலைமைகள் 20ம் நூற்றாண்டின் மிகப் பெரிய புரட்சியாளரான லியோன் ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்ட அச்சகாப்தத்தின் தன்மை குறித்த குணாதிசயப்படுத்தலின் ஒரு வரலாற்று நிரூபணமாகும். ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான இடைமருவு வேலைத்திட்டத்தில் “முதலாளித்துவத்தின் மரண வேதனை” பற்றி பின்வருமாறு எழுதினார். 1938ல் இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு ஓராண்டுக்கு முன் எழுதிய ட்ரொட்ஸ்கி, சோசலிசப் புரட்சிக்கான புறநிலை முன்னிபந்தனைகள் முதிர்ச்சியடைந்துவிட்டன என்று விளக்கினார். மனித குலத்தின் வரலாற்று நெருக்கடி, “புரட்சிகர தலைமையின் நெருக்கடியாக சுருக்கப்பட்டுள்ளது” என அவர் அறிவித்தார்.

அந்த நேரத்தில் ட்ரொட்ஸ்கி, சோசலிசப் புரட்சியை தடுக்க தமது ஆற்றல் முழுவதையும் பயன்படுத்திய ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் தொழிற்கட்சி அதிகாரத்துவங்களுக்கு எதிராக எழுதினார். அவற்றின் காட்டிக் கொடுப்புக்களின் விளைவுதான், தொழிலாள வர்க்கத்திற்கு தொடர்ந்த பேரழிவுகரமான தோல்விகளும் பாசிசமும் உலகப் போருமாகும்.

இன்றைய வெகுஜனப் போராட்டங்கள் மீண்டும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமை நெருக்கடியை முன்னணிக்கு கொண்டுவந்துள்ளது. சோசலிசப் புரட்சிக்கான புறநிலைச் சூழல்கள் விரைவாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு புதிய புரட்சிகர சகாப்தத்தின் கோரிக்கைகளை பூர்த்திசெய்யும் ஒரு அரசியல் தலைமை பற்றிய பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.

எகிப்தில், வெகுஜன எழுச்சிகள் தனிப்பட்ட ஆட்சியாளர்களை அகற்றி, அரசியல் உயரடுக்கை உறுதி குலைத்துள்ளன. ஆனால் அவை இராணுவத்தை அகற்றுவதிலோ, முதலாளித்துவ சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் அகற்றுவதிலும் மற்றும் முதலாளித்துவ அரசிற்கு முடிவுகட்டுவதிலும் வெற்றி பெறவில்லை.

2011ல் அலையென எழுந்த வெகுஜன அணிதிரளல்கள் முபாராக்கை அகற்றின. ஆனால் அங்கு எந்தக் கட்சியும் ஒரு சோசலிசப் புரட்சியை வழிநடத்த தயாராக இருக்கவில்லை. மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கொள்கைகளுடன் பிணைந்த திவாலான முதலாளித்துவ கட்சிகளும் மற்றும் அடையாள அரசியல் என்னும் தன்னலத்தை நோக்கமாக கொண்ட குட்டி முதலாளித்துவ போலி இடது கட்சிகளும் நிறைய இருந்தன. இவை அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் எத்தகைய சுயாதீன இயக்கத்திற்கும் விரோதமானவையாகும். வெகுஜனங்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கான வேலைத்திட்டம் எதையும் இந்த அமைப்புக்கள் எதுவும் கொண்டிருக்காததால் அதிகாரம் இராணுவ ஆட்சிக்குழுவின் கரங்களில் விழ்ந்துள்ளது.

தொழிலாள வர்க்க தலைமையில் இராணுவ ஆட்சிக் குழுவிற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு 2011 முழுவதும் நடைபெற்று 2012லும் காணப்பட்டது. ஆனால் முதலாளித்துவ எதிர்க்கட்சிகளினதும் மற்றும் அதன் போலி இடது கூட்டுக்களினதும் திவால்தன்மை, வலதுசாரி முஸ்லிம் சகோதரத்துவத்தை முன்முயற்சி எடுக்க வைத்து அரசாங்க அதிகாரத்தையும் கைப்பற்ற வைத்தது. தவறான பெயரைக் கொண்டுள்ள புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள், முஸ்லீம் சகோதரத்துவம் ஜூன் 2012 தேர்தல்களில் வெற்றி பெற்றதை புரட்சியின் வெற்றி எனப் பாராட்டினர்.

ஓராண்டிற்குள்ளேயே, முஸ்லீம் சகோதரத்துவம் மற்றும் ஜனாதிபதி முர்சிக்கு எதிராக எழுந்த நாடுதழுவிய வெகுஜன இயக்கம் தஹ்ரிர் சதுக்கத்திற்கு மிகவும் அப்பாலும் சென்றது. ஜனாதிபதி முர்சியின் ஆட்சி, இராணுவக் குழுவை விட சற்றும் குறையாத சர்வாதிகார தன்மையை கொண்டிருந்தது. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி இல்லாத நிலையில், இராணுவமும், முதலாளித்துவமும், குட்டி முதலாளித்துவக் கட்சிகளும், தொடர்ந்த அவசரமான பேச்சுவார்த்தைகள் மூலம் முர்சியை அகற்றி ஒரு புதிய ஆட்சிக்குழு அமைக்க ஒப்புக்கொண்டன. இது ஒரு முதலாளித்துவ அரசியல்வாதிகளின் கூட்டணி போன்ற வடிவத்தை எடுத்துள்ளது. தொழிலாள வர்க்க இயக்கம் எழுச்சியடைவதற்கு எதிரான ஒரு முன்கூட்டிய தாக்குதலாகும்.

வெகுஜன கிளர்ச்சிக்கு எதிராக நேரடித் தாக்குதலை நடாத்த மிகவும் பலவீனமாக இருப்பதை உணர்ந்த இராணுவம், கூட்டணி என்னும் மறைப்பின் பின் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான நீண்டகாலப் போருக்கான தயாரிப்பை மேற்கொள்கிறது. ஒரு பாரிய ஒடுக்குமுறைக்கு அது தயாராகையில், சமூகச் சிக்கன நடவடிக்கை கொள்கைகள் மீதானதும் மற்றும் எகிப்திய இராணுவம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைப்பதற்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பையும் அடக்க முற்படும். எகிப்திய தொழிலாளர்களும் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற வறியவர்களும் இந்த நிலையற்ற ஆட்சிக்கு எதிரான ஒரு புதிய மோதலுக்கு தயார் எனக் கணிப்பது கடினமல்ல.

இந்த மிக முக்கியமான அனுபவங்களின் படிப்பினைகள் எகிப்தில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ளீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு உண்மையான புரட்சிகரத் தலைமையை வளர்க்கும் போராட்டத்தில், 20ம் நூற்றாண்டு மற்றும் 21ம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளை அடிப்படையாக கொண்ட வரலாற்றுப் படிப்பினைகளை அடித்தளமாக கொண்டு, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் சில அடிப்படைக் கருத்தாய்வுகள் வலியுறுத்தப்பட வேண்டும்:

* உலகில் எந்த நாட்டிலும், அதுவும் பிரதானமாக ஒடுக்கப்பட்ட முன்னாள் காலனித்துவ நாடுகளில், முதலாளித்துவ வர்க்கத்தின் எந்த பிரிவாலோ அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகளாலோ ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகிக்கமுடியாது.

* அனைத்து நாடுகளிலும்  எவ்வித விட்டுக்கொடுப்புகளையும் செய்யாது ஒரு ஜனநாயக வேலைத்திட்டத்தை பாதுகாத்து நடைமுறைப்படுத்தக் கூடிய அடிப்படையான புரட்சிகர சக்தி  தொழிலாள வர்க்கம் மட்டுமேயாகும். ஜனநாயகத்திற்கான போராட்டமானது சோசலிசத்திற்கும் மற்றும் தொழிலாளர்களின் அதிகாரத்திற்குமான புரட்சிகரப் போராட்டத்துடன் இணைந்தே எழுச்சியடையும்.

* எந்தவொரு நாட்டினது போராட்டமாயினும் அது கட்டாயம் ஒரு சர்வதேச மூலோபாயத்தால் வழிநடத்தப்பட வேண்டும். எகிப்திய தொழிலாளர்களின் புரட்சி என்பது, அப்பிராந்திய ஆளும் உயரடுக்குக்கள் மற்றும் அவற்றின் கைப்பாவை அமெரிக்க, ஐரோப்பிய எஜமானர்களுக்கு எதிராக இஸ்ரேலிய தொழிலாள வர்க்கம் உட்பட மத்திய கிழக்கு தொழிலாள வர்க்கம் முழுவதையும் ஒரு பொதுப்போராட்டத்தில் ஈர்த்துக்கொள்வதன் மூலம் மட்டுந்தான் வெற்றிபெற முடியும்.

ஏகாதிபத்தியம், தனது விருப்பங்களை மத்திய கிழக்கு வெகுஜனங்கள் மீது திணிக்க எதையும் செய்யத் தயங்காது. எகிப்தில் புரட்சி வெடித்தபின், லிபியாவிலும் சிரியாவிலும் நடத்தப்பட்ட குருதிசிந்தும் போர்கள் ஓர் எச்சரிக்கை ஆகும். இங்குள்ள மாற்றீடு, ஒரு சோசலிசப் புரட்சி அல்லது மத்திய கிழக்கை ஏகாதிபத்திய சக்திகள் புதிதாக துண்டாடுதலும் தொழிலாள வர்க்கத்தை அடிமைப்படுத்துதலும் ஆகும்.

ஒரு சோசலிச மூலோபாயத்தை செயல்படுத்துவது என்பது, மத்திய கிழக்கிலும் சர்வதேசரீதியாகவும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடித்தளமாக கொண்ட ஒரு புதிய மார்க்சிச தொழிலாள வர்க்கக் கட்சிகளை கட்டியமைப்பதற்கு அப்பால் நினைத்தும் பார்க்க முடியாத்தாகும்.