தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Edward Snowden: Planet without a visa எட்வார்ட் ஸ்னோவ்டென்: ஒரு நுழைவு அனுமதியில்லாத உலகம்
Bill Van
Auken use this version to print | Send feedback தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் (NSA) ஒப்பந்தக்காரர் எட்வார்ட் ஸ்னோவ்டென், அமெரிக்க மக்களுக்கும் உலகிற்கும் மில்லியன் கணக்கானவர்களை இலக்கு வைத்த, இரகசியமானதும் அரசியலமைப்பை மீறியதுமான அமெரிக்க ஒற்றுத் திட்டங்களை தைரியமாக அம்பலப்படுத்தியவராவார். இப்பொழுது அவர் ஒரு அரசாங்கம் கூட அவருக்கு தஞ்சத்திற்கான ஜனநாயக உரிமையை வழங்க தயாராக இல்லாத நிலையைத்தான் காண்கிறார். அனைவருக்கும் பொருந்தும் மனித உரிமைகள் பிரகடனம் கூறுகிறது: “துன்புறுத்துதலில் இருந்து தப்பித்து மற்ற நாடுகளில் தஞ்சத்தை நாடவும் பெற்றுக்கொள்வதற்குமான உரிமை அனைவருக்கும் உண்டு.” இந்த பல நூற்றாண்டுக்கால உரிமை பல சர்வதேச உடன்படிக்கைளில் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி இந்த உரிமைக்கான தகுதி ஸ்னோவ்டெனுக்கு உண்டு. அமெரிக்க அரசாங்கத்தின் அமெரிக்க மக்கள் மற்றும் உலகிற்கு எதிரான திட்டமிட்ட ஒற்றுக்கேட்டல் என்னும் உண்மைக் குற்றங்கள அம்பலப்படுத்திய “குற்றத்திற்காக” அவர் இரண்டு ஒற்றுக்கேட்டல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார். ஒருவேளை இவை மரண தண்டனையைக் கூட வழங்கும். செய்தி ஊடகம் மற்றும் அரசாங்கத்தின் அவரை தேசத் துரோகி, ஒற்றர் என்று முத்திரைகுத்தி இழிவுபடுத்திய பிரச்சாரத்தால் அவருக்கு அமெரிக்காவில் ஒரு நியாயமான விசாரணை என்பது இயலாததாகிவிட்டது. அவர் ஒப்படைக்கப்பட வேண்டும் என கோரும் அரசாங்கம், அரசாங்கத்திற்கு விரோதி எனக்கருதும் எவரையும் கூட்டாக மரணதண்டனைக்கு உட்படுத்தலாம் என்ற அதிகாரத்தையும் தானே எடுத்துக் கொண்டுள்ளது. இந்த “உரிமையை” குறைந்தப்பட்சம் நான்கு அமெரிக்க மக்களுக்கு எதிராக ஆளில்லா விமான டிரோன் தாக்குதல்களை இயக்கி கொன்றதின் மூலமும் செயல்படுத்தியுள்ளது. செய்தி ஊடகத்தைப் பொறுத்தவரை, ஸ்னோவ்டெனின் “குற்றங்கள்” எனப்படுபவற்றில் கவனத்தை காட்டுவதன் மூலம் அது முழு உள்நாட்டு, சர்வதேச ஒற்றுக்கேட்டலை வெளிப்படுத்தியதை வேண்டுமென்றே மறைத்துவிட்டது. கடந்த 11நாட்களாக ஸ்னோவ்டென் மாஸ்கோ ஷெரிமெட்யேவோ விமான நிலையத்தில் விமானங்கள் மாற்றிச்செல்லும் பகுதியில் அகப்பட்டுள்ளார். ரஷ்யாவிற்குள்ளும் அனுமதிக்கப்படவில்லை, வேறு எந்த நாட்டிற்கும் செல்லவும் முடியவில்லை. அவருக்குத் தஞ்சம் கொடுக்கும் சாத்தியமுடையை நாடுகளுக்கு எதிராக ஒபாமா நிர்வாகம் ஒரு சர்வதேச அச்சுறுத்தல் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் செயல்களைக் கண்டித்த ஸ்னோவ்டென் பின்வருமாறு கூறினார்: “இறுதியில் ஒபாமா நிர்வாகம் என்னைப் போன்ற, பிராட்லி மானிங் அல்லது தோமஸ் ட்ரேக் போன்ற தகவல்களை வெளியிடுவோரை கண்டு அஞ்சவில்லை, நாங்கள் நாடற்றவர்களாக, சிறைபிடிக்கப்பட்டு, சக்தியற்று உள்ளோம். இல்லை, ஒபாமா நிர்வாகம் உங்களைக் கண்டுதான் அஞ்சுகிறது. ஒரு அறிவார்ந்த, சீற்றம் மிகுந்த பொதுமக்கள் உறுதியளிப்பட்டுள்ள அரசியலமைப்பின் வழியிலான அரசாங்கத்தை நடத்த வேண்டும் எனக் கோருகின்றது—அது அப்படித்தான் இருக்க வேண்டும்.” இத்தகைய அச்சம் ஒன்றும் ஒபாமா நிர்வாகத்திற்கு தனித்துவமானதல்ல. ஸ்னோவ்டெனின் செயல்கள் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடைய ஆதரவையும் நன்றியையும் பெற்றிருக்கையில், அவர்களை ஆளும் அரசாங்கங்கள் அப்படி நினைக்கவில்லை. அவை அனைத்தும் வாஷிங்டனின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து நடக்கின்றன. அமெரிக்க அரசாங்கத்தை போலவே, தொடர்ச்சியாக விரிவடையும் சமூக சமத்துவமின்மை சூழலில் அவை செல்வம் படைத்த ஆளும் வர்க்கங்களை பாதுகாக்கின்றன. வாஷிங்டனைப் போலவே அவையும் தங்கள் மக்களுக்கு எதிரான அவற்றின் சதித்திட்டங்கள் அம்பலபமாகும் என அஞ்சுகின்றன. திங்களன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஸ்னோவ்டென் ரஷ்யாவில் அவர் “நம் அமெரிக்க பங்காளிகளுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்தை தவிர்த்தால்” இங்கு அனுமதிக்கப்பட முடியும் என அறிவித்தார். முன்னாள் KGB முகவர், அமெரிக்க அரசாங்கத்தை விவரிக்கத் தன்னிடம் இருந்து வெளிப்பட்ட சொற்கள் “வினோதமாக.... என்னுடைய உதடுகளில் இருந்து வந்தவை இருந்தன” என்பதை ஒப்புக் கொண்டார். மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே எத்தகைய பூகோள அரசியல் மோதல்கள் இருந்தாலும், இரு அரசாங்கங்களும் பேராசை பிடித்த முதலாளித்துவ தட்டினையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றதுடன், தத்தமது நாட்டு உழைக்கும் மக்களிடையே அராங்கத்தின் குற்றங்கள் அம்பலப்படுத்தப்படுவது குறித்த அச்சத்தில் ஐக்கியப்பட்டுத்தான் நிற்கின்றன. புட்டினுடைய “சலுகையை” ஸ்னோடன் விரைவில் நிராகரித்தார். இது அவரை கிரெம்ளின் நிதியதன்னலக்குழுவின் அரசியல் கைதியாகச்செய்திருக்கும். அருடைய தஞ்ச விண்ணப்பத்தையும் அவர் திரும்ப பெற்றுக்கொண்டார். இவருடைய செயல் அமெரிக்க அரசாங்கத்தின் சட்டவிரோத செயற்பாடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தும் அவருடைய உறுதியை தெளிவாக்கின. அதேநேரத்தில் அவருக்கு எதிரான ஒற்றுக்கேட்டல் குற்றச்சாட்டுக்களில் இருக்கும் மோசடித்தனத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. தஞ்சம் நாடி 20 நாடுகளுக்கு ஸ்னோவ்டென் மனுக்களை அளித்திருந்தார்; அவற்றுள் பலவும் அவருடைய வேண்டுகோளை தொழில்நுட்பக் காரணம் காட்டி நிராகரித்துவிட்டன. மற்றவை டில்மா ரௌவ்செப்பின் பிரேசில் தொழிலாளர் கட்சியின் நிர்வாகம் போன்று அவை அதைப் பரிசீலினைகூடச் செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளன. போலந்து அரசாங்கம் அப்பட்டமாக அதன் தஞ்சக் கொள்கையில் ஜனநாயக உரிமை கொடுப்பது “தேசிய நலன்களுக்கு” உதவும் என இருக்க வேண்டும் என உள்ளது எனக்கூறியுள்ளது. அக்கொள்கை எத்தகைய பொலிஸ் அரச சர்வாதிகாரத்தாலும் தழுவிக்கொள்ளப்படலாம். சிலவேளை மிக அசாதாரண எதிர்கொள்ளல் மேற்கு ஐரோப்பிய அரசாங்கங்களுடையதாக இருந்தது. இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அமெரிக்க ஒற்றுக்கேட்டல் பற்றிய வெளிப்பாடுகளை சீற்றத்துடனும், ஓர்வெலிய முறையில் உள்ளது எனவும் கண்டித்துள்ளன. மேலும் அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சுதந்திர வர்த்தக உடன்பாட்டை கைவிடுவதாக அச்சுறுத்தியுள்ளன. ஆயினும் எந்த நாடும் இக்குற்றங்களை அம்பலப்படுத்திய தனிநபரான ஸ்னோவ்டெனுக்கு தஞ்சம் வழங்கத்தயாராக இல்லை. அவை ஸ்னோவ்டெனை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பத் தயாராக உள்ளன. அங்கு அவர் இதே அரசாங்கங்கள் கண்டித்துள்ள குற்றங்களை செயல்படுத்தியுள்ள அரசாங்கத்தின் ஒரு இட்டுக்கட்டிய வழக்கை சந்திக்க வேண்டும். ஸ்னோவ்டெனுடைய தஞ்ச உரிமையை நிராகரிப்பதில் முக்கிய கருத்து, அவரிடத்தில் இருக்கும் இரகசியத் தகவல்கள் இதேபோன்ற குற்றங்களின் தத்தம் நாட்டு அரசாங்கமும் ஈடுபட்டுள்ளது குறித்த கவலை ஆகும். ஸ்னோவ்டென் இலத்தின் அமெரிக்க “இடது” எனப்படும் அரசாங்கங்களிடமும் தஞ்சம் நாடியுள்ளார். ஆனால் அவை எதுவும் அவருக்குக் கொடுக்கவில்லை. அவற்றின் தலைவர்கள் தங்கள் மக்களிடையே அவர் கொண்டுள்ள வெகுஜன ஆதரவிற்கு அழைப்புவிடுவதன் மூலம் அவருடைய தைரியத்தை பாராட்டியுள்ளனர். ஆனால் அவர் காட்டிய தைரியத்தில் நூறில் ஒரு பகுதியைக்கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து வரும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அவர்கள் காட்டத் தயாராக இல்லை. ஈக்வடோரின் ஜனாதிபதி ராபேல் கோரியா, ஸ்னோவ்டெனுக்குத் தஞ்சம் அளிக்கத் தயார் என்னும் தன் அரசாங்கத்தின் ஆரம்ப விருப்பத்தைக் காட்டியபின், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பிடெனிடம் இருந்து கடந்த வாரம் வந்த தனிப்பட்ட தொலைபேசி அழைப்பை ஏற்று, தன்னுடைய குரலை விரைவில் மாற்றிக் கொண்டார். லண்டனின் ஈக்வடோரிய தூதரகத்தின் முடிவான ஸ்னோவ்டெனுக்குப் பாதுகாப்பு அனுமதி ஒன்றை ஹாங்காங்கை விட்டு செல்வதற்கு அளித்ததை ஒரு “தவறு” என குறிப்பிட்டு, இதற்கு “பின்விளைவுகள்” இருக்கும் என்றார் அவர். தன்னுடைய அரசாங்கம், தஞ்சக் கோரிக்கையை முன்னாள் NSA ஒப்பந்தக்காரர் ஈக்வடோர் வந்தால் ஒழிய பரிசீலிக்கப்பட மாட்டாது என்றார். இது இயலாதது, ஏனெனில் அவருடைய அமெரிக்க கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுவிட்டதுடன், ஈக்வடோரிய அனுமதி தள்ளுபடியாகிவிட்டதுடன், வேறு எந்த பயண ஆவணங்களும் அவரிடத்தில் இல்லை. ஸ்னோவ்டென் “உண்மையிலேயே வட அமெரிக்க சட்டங்களை மீறியிருக்கலாம்” என்று கூறி, “பிற நாடுகள், அவற்றின் சட்டங்களுக்குத் தான் பெரும் மதிப்பு கொடுப்பதாக” கொரேயா அறிவித்தார். பின் அவர் கூறினார்: “சட்டத்தை மீறும் எவரும் தன் பொறுப்பை உணர வேண்டும்.” பின்னர் வெனிசூலாவின் ஜனாதிபதி நிக்கோலாஸ் மடூரோ மற்றும் பொலிவியாவின் ஏவோ மோராலேஸும் உள்ளனர். இவர்கள் இருவரும் இந்த வாரம் எரிவாயு உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டத்திற்காக மாஸ்கோவில் இருந்தனர். ஸ்னோவ்டெனுக்கு தஞ்சம் அளிக்கும் வாய்ப்பு உள்ளது என இருவரும் கூறினாலும், இருவரில் ஒருவர் ஸ்னோவ்டெனை தங்கள் ஜனாதிபதி விமானத்தில் அழைத்துச் சென்றிருக்கலாம் என்றாலும், அவர்களில் ஒருவர் கூட அப்படிச் செய்யவில்லை. வாஷிங்டனுடன் உறவுகளை “சீராக்கும் கொள்கையை” ஆரம்பித்துள்ள, வெனிசூலாவின் பில்லியனர்களுக்கு இணங்க நடக்க விரும்பும் மடூரோ, ஸ்னோவ்டென் “சர்வதேச பாதுகாப்பை” பெற வேண்டும் என்ற கருத்தைக் கூறினார்; ஆனால் அவருடைய அரசாங்கம் தஞ்சக் கோரிக்கையை பெற்றுள்ளது என்பதை மறுத்தார். விக்கிலீக்ஸோ அத்தகைய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது. ஸ்னோவ்டென் குறித்து இத்தகைய வெற்றுத்தன அறிக்கைகளைத்தான் மோரேல்ஸும் தெரிவித்தார். அரசியல் தஞ்சம் கோரும் கோரிக்கையை பெறவில்லை என்றும் கூறினார். எந்த அரசாங்கமும் எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு அரசியல் தஞ்சம் கோரும் உரிமையை கொடுப்பதில் அக்கறை இல்லாத நிலையில், இக்கோரிக்கை உலகம் முழுவதும் நடைமுறையில் நிராகரிக்கப்படுகின்ற நிலையில், அவருடைய பாதுகாப்பு அமெரிக்காவிலும் உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் எடுக்கப்பட வேண்டும். இதில் ஒவ்வொரு நாட்டிலும் அவருக்கு இப்பொழுது தஞ்சம் அளிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் உள்ளடங்கியிருக்க வேண்டும். ஸ்னோவ்டெனினதும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அதன் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக இலக்கு வைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ், இராணுவத்தினர் பிராட்லி மானிங் ஆகியோரின் பாதுகாப்பு, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கானதும் போர், சமூக சமத்துவமின்மை மற்றும் பொலிஸ்-அரச சர்வாதிகாரம் ஆகியவற்றின் மூலகாரணமான முதலாளித்துவ இலாபமுறைக்கு எதிரான உலகந்தழுவிய எதிர்ப்பின் ஆரம்பகட்டமாக இருக்கவேண்டும் |
|
|