சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The NSA’s cyber-surveillance technology

Infrastructure of a police state

அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின் (NSA) இணையக் கண்காணிப்புத் தொழில்நுட்பம்

 

ஒரு பொலிஸ் அரசின் உள்கட்டமைப்பு 

 
By Kevin Reed 
25 June 2013

use this version to print | Send feedback



மேரிலாந்தில்
போர்ட் மீயட்டிலுள்ள NSA அமைப்பின் தலைமையகம். கறுப்புக் கண்ணாடிக்குக் கீழ் தோல் போன்ற மறைப்புடைய, மெல்லிய ஆரஞ்சு வண்ண செம்புக் காப்புக் கவசம் அனைத்துச் சமிக்கை அல்லது குறிகைகளையும் உள்ளே வராமலும், வெளியே செல்ல முடியாமலும் தடுக்கின்றது.

இரகசிய NSA அமைப்பின் கண்காணிப்புச் செயற்பாடுகள் குறித்து எட்வார்ட் ஸ்னோவ்டெனுடைய ஆவண அம்பலப்படுத்தலானது தொலைபேசி அழைப்புக்களின் உள்ளடக்கங்களை பெறவும் (metadata-எளிதாக தரவுகளை அணுகவும் மற்றும் பயன்படுத்தவும் செய்வதற்கான தரவுகள்) மற்றும் அமெரிக்கக் குடிமக்களினதும் தனிநபர்களினதும் மற்றும் உலகம் முழுவதுமுள்ள நிறுவனங்கள், அரசாங்கங்களின் இணைய தள (Online) பரிமாற்றச் செயற்பாடுகளை பாரியளவில் சட்டவிரோதமாக சேகரித்தது குறித்தும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

ஜூன் 11ம் திகதி காங்கிரசிற்கு கொடுக்கப்பட்ட இரகசிய உளவுத் தகவலைத் தொடர்ந்து அமெரிக்க காங்கிரசின் கீழ்மன்றப் பிரதிநிதியான அம்மையார் லோரெட்டா சான்சேஸ் ஒரு C-Span பேட்டியில் ஸ்னோவ்டென் மறைவாகயிருந்தவைகளை வெளிப்படுத்தியுள்ளமையானது பனிப்பாறையின் உச்சிமட்டும்தான் என்றார். உண்மையில், இன்னும் பல வெளிப்படுத்தல்கள் வரவிருக்கையில், எட்வார்ட் ஸ்னோவ்டென் தைரியமாக பெருநிறுவன-இராணுவ-உளவுத்துறை அமைப்புகள் அமெரிக்காவிற்குள் செய்துவரும் ஒரு மிகப்பெரும் உளவுச் சதித் திட்டத்தைப் பற்றி பொதுமக்கள் அறிய நன்கு உதவியுள்ளார்.

ஸ்னோவ்டெனின் வெளிப்படுத்தல்களுக்கு முன்பு, NSA அமைப்பினுடைய சமிக்கை உளவுத்துறை அமைப்புக்கள் குறைந்த வரம்பைக் கொண்டிருந்தன. இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டவற்றுள் பெரும்பாலானவை ஜேம்ஸ் பாம்போர்ட் என்னும் செய்தியாளர், உளவுத்துறை பற்றிய வல்லுனர் மற்றும் NSA அமைப்புக் குறித்துப் பல நூல்களை எழுதியவரின் படைப்புக்களில் இருந்து எடுக்கப்பட்டவை; அவருடைய நூல்களில் The Shadow Factory: The Ultra-Secret NSA from 9/11 to the Eavesdropping on America (2008) என்பதும் அடங்கும்.

NSA அமைப்பின் முன்னாள் ஊழியர்கள் மற்றும் மற்றய தகவல் தெரிவிப்பவர்களுடனும் பாம்போர்ட் பரந்த பேட்டிகளை நடத்தியுள்ளார். மேலும், நாட்டின் மிகப் பெரிய உளவு மையத்தின் கட்டிடம் NSA ஆகும் (நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை அவதானமாகப் பேசவும்) என்ற தலைப்பில் வந்த கட்டுரையையும் அவர் மார்ச் 2012 ஆண்டு Wired என்னும் ஏட்டில் எழுதியுள்ளார்.

NSA அமைப்பு கண்காணிப்பின் பின்னணி

குளிர் யுத்தகால ஆரம்பத்தில், NSA அமைப்பானது “மறைமுக” நடவடிக்கைகளை உருவாக்கத் தொடங்கியது, மேலும் அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் தகவல்தொடர்புகளை இரகசியமாகக் கண்காணிக்க உள்கட்டமைப்புக்களை உருவாக்கத் தொடங்கியது. NSA அமைப்பின் கண்காணிப்புக்களில் உரிய ஆணை இல்லாத நடவடிக்கைகளில் முதலாவதான ஷாம்ரோக் திட்டம் (Project Shamrock)  தந்திச் செய்திகளை(telegram) நகல் எடுத்து அவற்றை அமெரிக்க சட்டத்தைச் செயல்படுத்தும் பிரிவிற்கும் இராணுவத்திற்கும் அனுப்பி வைப்பதாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தகவல் தொடர்புகள் குறித்து வேறுபாடுகளும் காட்டப்படவில்லை. ஒவ்வொரு தந்திச் செய்தியும் நுண்படச்சுருள்களில் (microfilm) நகல் எடுக்கப்பட்டது.

ஷாம்ரோக் திட்டத்திற்கு NSA அமைப்பிற்கும் தகவல்தொடர்புத் தொழில்துறைக்கும் இடையே ஒத்துழைப்பு தேவைப்பட்டது. Western Union, RCA, ITT போன்ற நிறுவனங்கள் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு, ஒவ்வொரு இரவும் NSA அமைப்பிடம் தந்திச் செய்திகளை ஒப்படைத்தன. இத்திட்டம் 1975ல் அம்பலப்படுத்தப்பட்டு, பிராங்க் சேர்ச்சின் செனட் உளவுத்துறைக் குழுவில் விவாதத்திற்கு உட்பட்டு, 1978ல் FISA சட்டம் கொண்டுவரப்பட்டது.

போருக்குப் பின்னான காலப்பகுதியில் செயற்கைக்கோள், நுண்ணலைத் தகவல்தொடர்புகள் (microwave communications) வளர்ச்சி ஏற்பட்ட நிலையில், Echelon என அழைக்கப்பட்ட கண்காணிப்புத் திட்டம் தொலைத்தொடர்பு தரவுகள் (data communications) மற்றும் தொலைபேசிப் பேச்சு இவைகளை இடைமறிப்பது, சேமிப்பது மற்றும் பகுப்பாய்வது என்பதில் முன்னோடியாக விளங்கியது. முழு உலகத்தையும் கண்காணிப்பதற்கு, Echelon ஆனது ஐந்து கண்கள் (அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து) என அழைக்கப்பட்ட கூட்டுத் திட்டமாகியதுடன், இது அக்காலத்தின் மிக நவீன செயற்கைக்கோள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பம் என்பவற்றை பயன்படுத்தியது. இன்று உலகின் தொலைத்தொடர்பு பரிமாற்றத்தில் 1 சதவிகிதம் மட்டுமே செயற்கைக் கோள்கள் மூலம் நடைபெறுவதால், Echelon ஆனது சமிக்கை உளவுத்துறையின் ஒரு அம்சமாக உள்ளது என நம்பப்படுகிறது. இல்லாவிடின் இது இழை ஒளி கேபிள் வலையமைப்புகளுக்கு (fiber optic cable networks) அர்ப்பணிக்கப்பட்டிருக்கும்.

1990களில் இணையம், உலக வலைத் தளம் மற்றும் கைபேசிகள் என்பவைகள் உலகத் தகவல் தொடர்பு முறைகளாக மாறின. அவைகளின் வேகத்திற்கு ஏற்ப வைத்துக்கொள்ளும் வகையில், NSA அமைப்பானது அதன் மறைமுக நடவடிக்கைகளை இணையக் கண்காணிப்பிலான புதிய சகாப்த மாற்றத்திற்குச் சென்றது. ஆரம்பத்தில், நிக்சன் சகாப்தத்தில் எஞ்சியிருந்த உள்நாட்டு உளவுபார்த்தல் குறித்த கவலைகள் காரணமாக, வளர்ந்துவரும் உளவுத் தொழிற்துறையினால் அபிவிருத்தி செய்யப்பட்ட தொழில்நுட்பங்களின் பரந்த அனுகூலங்களைப் பயன்படுத்துவதில் NSA க்கு தடைகளை ஏற்படுத்தியது. ஆனால் செப்டம்பர் 11, 2001க்குப் பின், ஏராளமான நிதிகள் கண்காணிப்புத் திட்டங்களுக்குள் செலுத்தப்பட்டன, NSA அமைப்பின் திட்டங்களும், ஆரம்ப முயற்சிகளும் பல ஆண்டுகள் கவனிக்கப்படாமல் இருந்தவை பின்னர் எடுக்கப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன.

ஆளும் வர்க்கத்திற்குள் இருந்த அதே அரசியல் சக்திகள் 9/11 குறித்த வெறித்தனத்தை பயன்படுத்திக் கொண்டு நீண்டகாலமாக இருந்த போர் திட்டங்களை செயற்படுத்த  உயர் தொழில்நுட்ப ஒட்டுக் கேட்டல் நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவிற்குள் விரைவில் நகர்ந்தன என்பதும் தெளிவானதாக இருக்கிறது.

அத்தகைய திட்டத்தில் ஒன்றுதான் புஷ் நிர்வாகத்தின் TIA எனப்பட்ட முழுத் தகவல் விழிப்புணர்வு (Total Information Awareness) திட்டமாகும் இதன் ஆரம்ப முயற்சியானது இரகசிய தகவல் விழிப்புணர்வு அலுவலகத்தால் (OIA) நடத்தப்பட்டது; இதற்கு முன்னாள் ஈரான்-கொன்ட்ரா சதித் திட்டம் தீட்டிய ஜோன் பாயின்டெக்ஸ்டர் பெப்ருவரி 2002ல் இருந்து தலைமை தாங்கினார். TIA ஆனது பாதுகாப்பு முன்னேறிய ஆய்வுத் திட்ட நிறுவனத்தின் துணை இயக்குனரான ஜே.பிரியன் ஷார்க்கியின் சிந்தனையிலிருந்து பிறந்ததாகும். அவர் வெகு சீக்கிரத்திலேயே ஒவ்வொருவரின் இலக்கமுறை சுவட்டையும் (digital trail) “முற்றிலும் உறிஞ்சும் வாய்ப்பை அறிந்துகொண்டார். ஷார்க்கியின் கருத்தாக்கம் புத்தக விற்பனைக் கடைக்குச் செல்லுதல், எரிபொருள் விற்பனை நிலையங்களுக்குச் செல்லுதல், தொலைப்பேசித் தரவுகள் மற்றும் இணையத் தேடல் செயற்பாடுகள் பெரும் திறனுடைய கணிப்பொறிகளால் கையாளப்படவும், மேலும் சிக்கல் வாய்ந்த நெறிப்பாட்டுமுறையானது (algorithm) கண்காணிப்பு செயல்முறையை தானியங்கியாகச் கையாளப்படவும் முடியும் என்பதாகும்.

2002 ஆம் ஆண்டின் இறுதியில், பாயின்டெக்டெரின் TIA/OIA நடவடிக்கை அம்பலப்படுத்தப்பட்டபின், இந்த NSA  யின் சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்படும் என்றும், காங்கிரஸ் அதற்கான நிதியை நிறுத்திவிடும் என்றும் பொதுமக்களுக்கு கூறப்பட்டது. ஆனால் மிகவும் மதிப்பு வாய்ந்தது கைவிடப்படுவதாக கருதப்பட்டு, இந்த செயற்பாடுகள் இன்னும் ஆழமான முறையில் இராணுவ உளவுத்துறை முகாம்களுக்கு நகர்த்தப்பட்டன, மேலும் பென்டகன் அதைத் தொடர்ந்து செயற்படுத்தியது.

ஒபாமா நிர்வாகம், NSA அமைப்பின் செயற்பாடுகளைக் குறைப்பதற்கு முற்றிலும் மாறாக, சட்டவிரோத உளவு நடவடிக்கைகளை அதிர்ச்சிதரும் அளவிற்கு விரிவாக்கியுள்ளது. ஆளில்லா, தொலைதூரக் கட்டுப்பாட்டு டிரோன்களால் “இலக்கு வைக்கப்பட்டு படுகொலைகளுக்கு” பயன்படுத்துவதுடன், தொழில்நுட்ப புதிய கண்டுபிடிப்புக்களான அதி வேக ஒளியியல் தகவல்தொடர்புகள் (high-speed optical communications), கணிப்பொறிச் செயலாக்க திறன் (computer processing power), சேமிப்பகம் (storage), மறைக்குறியீட்டு நீக்கம் (decryption) ஆகியவைகள் உளவுமுறையை தீவிரப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.

பிரமாண்டமான அளவிலான தொழில்நுட்பங்கள் தற்பொழுதுள்ளதும் மற்றும் இன்னும் வலைத்தளத்தில் வரவிருக்கும் நிலையில், கையடக்க தொலைபேசி அல்லது இணையத் தொடர்புடைய ஒவ்வொரு நபரின் சுயவிபரங்களையும் இடைமறித்து, சேமித்து, வகைப்படுத்த திட்டமிட்டுள்ள நோக்கத்தை அமெரிக்க அரசாங்கம் கொண்டுள்ளது என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான், அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பகுதியினருடையது, கிட்டத்தட்ட 4.5 பில்லியன் மக்களுடைய தகவல் தொடர்புகளையாகும்.

NSA யின் கட்டமைப்பு

மேரிலாந்திலுள்ள போர்ட் மீயட்டில், நகரத்தின் அளவிற்கு இருக்கும் தலைமையகத்தில் மையப்படுத்தப்பட்டுள்ள NSA அமைப்பானது நாள் ஒன்றிற்கு பல பில்லியன் பரிமாறல் தகவல் தொடர்புகளைக் கண்காணிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பூகோள இணையம் முழுவதும் மற்றும் தொலைப்பேசி அழைப்புத் தரவுகளையும், அமெரிக்கா மற்றும் உலகெங்கும் முக்கியமான இடங்களின் வழியாக செல்லுபவற்றை, NSA அமைப்பானது மாபெரும் தொகுதி அளவிலான தகவல்களை உடனடியாகக் கையாள்கிறது.



மார்ச் 2012ல்
Wired Magazine இல் வெளியிட்டுள்ளதன்படி, இது Utah தரவு மையத்தின் வடிவமைப்பு. இத்தகவல் மையத்தில் நான்கு 25,000 சதுர அடி சேவையக (server) அரங்குகளில் யோட்டாபைட்டுக்களை (YB) சேகரித்து வைக்கக்கூடியதாகும்.1 YB என்பது 1 டிரில்லியன் ரெராபைட்டுக்கள் ஆகும். 64GB மைக்ரோ எஸ்டி அட்டைகள் (மிக நெருக்கமான முறையில் தகவல்களைச் சேமித்துவைக்கும் வடிவத்தில் கிடைப்பவை) பயன்படுத்தப்பட்டால், ஒரு YB க்குத் தேவைப்படும் இடம் கிட்டத்தட்ட 2,500,000 கன மீட்டர்கள் அல்லது Giza இலுள்ள பெரிய பிரமிட்டின் கொள்ளவிற்கு ஒப்பாகும்.

தற்போதைய மறைக்குறியீடாக்கல் (encryption) தொழில்நுட்பத் திறனின் காரணமாக உதாரணத்திற்கு இன்று எவைகள் பயன்படுத்தப்பட முடியாதோ, அவைகள் எதிர்காலத்தில் மறைக்குறியீட்டு நீக்கம் (decryption) மற்றும் பகுப்பாய்விற்காகவும் சேமித்து, வகைப்படுத்தி வைக்கப்படுகிறது. இதைத்தவிர, அமெரிக்க உளவுத்துறையின் ஓர்வெலியன் உலகத்தில், உத்தியோகபூர்வமாக இன்று “அச்சுறுத்தல்” எனக் கருதப்படாதது, நாளை அச்சுறுத்தலாக மாறலாம், அதற்கான “சான்றுகள்” தயாராக இருக்கும் தரவுத் தளங்களில் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

நிர்வாகிகள், குறிமுறைகளை உடைப்பவர்கள் (code-breakers), இடைமறித்தலை இயக்குபவர்கள் (intercept operators), மறைக்குறியீட்டு மொழி வல்லுனர்கள் ( crypto-linguists), துறை வல்லுனர்கள் என NSA நிலையத்தில் 40,000 ஊழியர்கள் உள்ளனர். பெருகிய முறையில் NSA நிலையத்தின் உப ஒப்பந்த வேலைகள் தனியார் நிறுவனங்களான Booz Allen Hamilton (எட்வர்ட் ஸ்னோவ்டெனின் முன்னாள் நிறுவனம்), Raytheon, Lockheed Martin, Northrop Grumman மற்றும் SAIC (விஞ்ஞான பயன்பாட்டு சர்வதேச நிறுவனம்) போன்றவற்றிற்கு ஒப்பந்தமுறையில் வேலையை பிரித்துக் கொடுக்கின்றனர். NSA அமைப்பின் வரவு-செலவுத் திட்டம் இரகசியம் என்றாலும், அது 2008ல் 60 பில்லியன் டாலர்களாக இருந்தது என்றும் அதில் 70 சதவிகிதம் துணை ஒப்பந்தக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்றும் பாம்போர்ட் மதிப்பிட்டுள்ளார்.

NSA அமைப்பானது பூமியைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையில் நகராதது போல் இயங்கும் நான்கு செயற்கைகோள் நிலையங்களை இயக்குகிறது; அவைகள் செயற்கைக்கோள்களில் இருந்து வானொலி அலைகளையும் கைபேசிக்கான நுண்ணலைத் தகவல்தொடர்புகளையும், வாக்கி டாக்கி சமிக்கைகளையும் கண்காணிக்கின்றன. அமெரிக்காவிற்குள் இந்த நிலையங்கள் பென்சில்வானியா, கலிபோர்னியா, கோலோரோடோ, டெக்சாஸ், ஜார்ஜியா, டெனசி, ஹவாய் ஆகிய இடங்களில் வலையமைப்புத் தளங்களைக் கொண்டுள்ளன. இவற்றுள் சில டெனிசியில் ஓல் ரிட்ஜிலுள்ள ஆய்வு நிலையங்கள் போன்றவை; அல்லது உலகின் பல பகுதிகளில் இருந்து வலையமைப்புக்குள் வரும் தகவல்தொடர்பு இடைமறித்தல்களை நிர்வகிக்கும் நிலையங்களாகும்.

உலகத் தொலைத்தொடர்பு இணைப்பு தொகுதியானது ஒன்றுடன் ஒன்று தங்கியிருக்கும் காரணத்தினால், “வெளிநாடு” எனும் குறிப்பான தகவலுக்கும் மாறாக “உள்நாடு” என்னும் தகவலுக்கும் இடையே வேறுபாடுகள் பொருளற்றவையாகப் போய்விட்டனமுன்பு FISA யின் இலக்ரோனிக் ஒட்டுக் கேட்டல் சட்டம் அதை ஒட்டித்தான் இயற்றப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் வலையப்பில் கடக்கும் டிரில்லியன் கணக்கான தகவல் தொகுப்புக்களில், சர்வதேச மற்றும் அமெரிக்கா மட்டும் என்னும் தரவுகள் முற்றிலும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

Interception in gigabits - ஜிகாபிட்டுக்களில் இடைமறித்தலுக்கு உட்படுத்துதல்

இழை ஒளி கேபிள் (fiber optic cables) கடலடி அமைப்பானது சர்வதேச தொலைத் தொடர்புகளில் 99 சதவிகிதத்தை கொண்டவையாகும். அமெரிக்காவிற்கு வெளிநாட்டிலிருந்து தகவல்கள் வந்து இறங்குகின்ற அமெரிக்காவிலிருக்கும் 2 டஜன் கேபிள் நிலையங்களின் இழை வலையமைப்பில் ஒட்டுக்கேட்டல் வேலையை NSA அமைப்பானது செய்யவில்லை. மாறாக, அமைப்பானது நவீன “ஒளியியல் பிரிப்புக்களை (optical splitters)”, அல்லது தரவு இடைமறிப்பான்களை (data interceptors) முக்கிய வணிகப் பரிமாற்ற இடங்களில் நிறுவியுள்ளது; கடலோரப் பகுதிகளில் பரிமாற்றப்படும் இடங்களிலும் வைத்துள்ளது. இதனால் அது பிரமாண்டமான தகவல்களைச் சேகரிக்கிறது.

ஒரு AT&T ஊழியர், 2006ல் NSA அமைப்பின் தகவல்தொடர்புக் கட்டமைப்பின் ஒட்டுக் கேட்டலை அம்பலப்படுத்திய மார்க் கிளேனை பாம்போர்ட் பேட்டி கண்டார். 2003 ம் ஆண்டிலேயே அரசாங்கமானது AT&T யின் சான் பிரான்ஸிஸ்கோ நிலையத்தை நாருஸ் இடைமறித்தல் போக்குவரத்துப் பகுப்பாய்வு அமைப்புமுறை நிறுவப்பட்டதன் மூலம் கண்காணிப்பதை கிளேன் அறிந்திருந்தார்; அது ஒரு நவீன கணிப்பொறி அமைப்புமுறை அது இழை ஒளி இணைப்புக்களை (fiber optic lines) நேரடியாக ஒட்டுக் கேட்கும். கிளேன் கூறினார்: “இணையத்தில் செல்வது அனைத்தும் இங்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள்ளும் செல்கிறது என்பதைப் பார்த்தேன். பௌதிகச் சாதனங்கள் அனைத்தையும் அதற்கு அளிக்கிறது. இதில் பெரும்பாலானவை உள்நாட்டுடையதாகும்.”



நாருஸ் வரைபடம்: இது எப்படி இடைமறித்தல்
N அமைப்புமுறை என்பது ஒரு முப்பட்டகம் ஒளிக்கற்றையை சிதறலடையச் செய்கிறதோ அதேபோல் தொழில்நுட்ப பிரிப்பி இழை ஒளி போக்குவரத்துக் கற்றைகளை அப்படிச் செய்கிறது. இந்த அமைப்புமுறைகளை தொலைவிடங்களில் இருந்து இயக்குவதற்கு, NSA அமைப்பானது தொலைபேசி நேரடியிணைப்பு தொடர்புகளை ஒட்டுக் கேட்டு, தரவுத்தொடர் கதிர்கற்றையை இணையத் தளம், சொற்பொருள் ஆய்வியல் (semantic plane) தளம் மற்றும் பயன்பாட்டாளர் தளம் என மூன்று கூறுகளாகப் பிரிக்கிறது.

ஆரம்பத்தில் நாருஸானது அதிவேகத் தரவு வடிகட்டி முறைகளில் சிறப்புத் தேர்ச்சியைக் கொண்டிருந்தது; அவை மின்னஞ்சல், உரையாடல், காலண்டர்படி சந்தித்தல், வரைவுக் கோப்புத் தொகுப்புக்கள், முகவரி குறிப்பு புத்தகம் போன்றவற்றின் வேறுபாட்டை எடுத்துக்காட்டியது. இது தொலைத்தொடர்பு பயன்பாட்டுக் கட்டணத்தைக் கணக்கிடுவதற்காகும். பாம்போர்ட் விளக்குவது போல், “9/11 தாக்குதல்களைத் தொடர்ந்து, நாருஸ் அதன் அமைப்புமுறையை மாற்றியமைத்து, உலகெங்கிலும் இருக்கும் உளவு நிறுவனங்களுக்கு அதை விற்றது. அவை கட்டணக் கணக்கீடு என்பதற்குப் பதிலாக பாரிய கண்காணிப்பிற்குப் பயன்படுத்தின.

இன்று போயிங்கின் துணை நிறுவனம் என்னும் முறையில், புதிய தலைமுறை நாருஸ் அமைப்பானது “முழுமையான தொகுப்பு கண்காணிப்பை” நடத்தும் திறன் உடையது. அதாவது தரவுப் பாய்வில் வேறுபட்ட தளங்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளைக் கண்டறியும் திறனைக் கொண்டுள்ளது; ஒரு வினாடிக்கு 10 ஜிகாபைட் என்று அது கேபிள்கள் மூலம் கடக்கும்போது, அதாவது ஒளியின் வேகத்தில் செல்லும்போதும் கூட இணையப் போக்குவரத்தை பரிசோதிக்கிறது. முன்னாள் NSA அமைப்பின் உளவுத்துறை அதிகாரி வில்லியம் பின்னியின் கருத்துப்படி, NSA ஆனது இந்த அமைப்புகளின் “10 அல்லது 20” கருவிகளை நாடு முழுவதும் நிறுவியுள்ளது; அவைகள் தொலைதூர போர்ட் மீயட்டிலிருந்து இயங்க வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் பெற்றுக்கொள்ளும் 20 ரெராபைட்டு இடைமறித்தல் தரவுகளை என்ன செய்வது என்ற சவாலை NSA அமைப்பினால் எதிர்கொள்ளப்படுகிறது.

Storage in yottabytes - யோட்டாபைட்டுக்களில் சேமிப்பு

தற்பொழுது Utah தரவு மையம் என அழைக்கப்படும் ஒரு நிலையத்தை NSA அமைப்பு கட்டிவருகிறது; இது இந்த ஆண்டு செப்டம்பரில் இது திறக்கப்பட உள்ளது. சால்ட் லேக் நகரத்தில் இருந்து 20 மைல் தொலைவிலுள்ள பிளப்டேலில் இந்த 2 பில்லியன் டொலர்கள் நிர்மாணிப்புத் திட்டம் உலகத்திலேயே மிகப் பெரிய தகவல் சேகரிப்பு மைய  அடிப்படையிலான -cloud-based data storage- சேமிப்பு நிலையமாகவும் NSA அமைப்பின் இணைய உளவு பார்த்தல் நடவடிக்கைகளுக்கும் மையமாக இது இருக்கும். ஒரு மில்லியன் சதுர அடிக்கும் மேலான இடத்தில், அதிஉயர் இரகசிய, தானே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வளாகமானது யோட்டாபைட்டுத் தரவுகளைச் சேமித்து வைக்கும் திறனுடைய சேவையகத்தை (server) கொண்டிருக்கும். ஒரு யோட்டபைட் (1024 bytes) என்பது 1 டிரில்லியன் ரெராபைட்டுக்கள் ஆகும்.

 

XT5 ஜாகுவர் சிறப்புக் கணிப்பொறியானது கிரேயாலும் NSA  அமைப்பினாலும் தயாரிக்கப்பட்டது, உலகின் அதி வேக கணிப்பொறியாக 2009ல் இது உருவெடுத்தது, 1.75 பெடாப்ளாப்பு (petaflops) வேகத்தில் கையாளக்கூடியது. இந்த அமைப்புமுறையில் 200 அறைகள் உண்டு, 37,500 க்வாட் உள்ளக செயலகங்கள் (quad core processors) உள்ளன; 300 TB (ரெராபைட்)  உடனடி சேமிப்பகம் (RAM), 10,000 TB  அளவிலான தகவல் குறுவட்டுக்களை சேமித்து வைக்கலாம். இது அதி வேகமான மேசைக் கணிப்பொறியைவிட 100,000 மடங்கு வேகமானது.

யுடாவில் மறைவாகவுள்ள தரவுகளை தேடி செயலாக்கம் செய்யும் வசதியை (data-mining facility) NSA அமைப்பு கட்டமைத்து வருகிறது; இதில் நான்கு 25,000 சதுர அடி முழுமையான தரவு அரங்குங்களில் அதி வேக சேவையகங்களைக் கொண்டுள்ளன, இது தகவல்தொடர்பு போக்குவரத்தின் பெரும் வளர்ச்சியுடன் இணைந்து நிற்கும் கிறுக்கத்தன முயற்சியாகும். இணையத்தில் கொடுக்கப்படும் முழுத் தரவுகள் 2010ல் இருந்து 2015 க்குள் நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது, அதாவது ஆண்டு ஒன்றிற்குக் கிட்டத்தட்ட 1,000 எக்ஸாபைட்டுக்கள் வரை (1 மில்லியன் எக்சாபைட்டுக்களுக்கு சமம் ஒரு யோட்டாபைட்). யுடா தரவு மையத்தினுடைய இலக்கின் முக்கிய அம்சமானது “ஆழமாக வலைத் தளத்திலிருந்து”, அதாவது பாதுகாப்பான, தனிப்பட்ட, பொதுவாக உலவிப் பெறமுடியாத, பாதுகாக்கப்பட்ட கடவுச்சொல் தரவை ஊடுருவிச்சென்று சேகரிப்பதாகும்.

இந்த நிலையத்தில் 900,000 சதுர அடி தொழில்நுட்ப உதவி, நிர்வாக அலுவலகங்கள் இருக்கும். பாம்போர்டின் கருத்துப்படி, “இதனுடைய சேவையகங்கள் (servers) மூலமும், வழிப்படுத்திகள் (routers ) மூலம் பாய்ந்து வரும், மிக மிக ஆழமான தரவுத் தளங்களில் சேமிக்கப்படுபவைகளானது அனைத்து வடிவங்களிலான தொடர்புகளாக இருக்கும்; இவற்றில் தனியார் மின்னஞ்சல்கள், கையடக்க தொலைபேசி அழைப்புக்கள், கூகிள் தேடல்கள் மற்றும் அனைத்துவித தனிப்பட்டவரிற்குரிய தரவுச் சுவடுகளாக இருக்கும் அதாவது கார் நிறுத்துமிட ரசீதுகள், பயண செய்யும் பாதைகள், புத்தகக் கடைகளில் வாங்கியவை, இன்னும் டிஜிட்டல் முறையிலான “கிறுக்கல் குப்பைகள்”.

Analysis in petaflops - பெட்டாபிளாப்புகளில் பகுப்பாய்வு

ப்ளப்டேல் மையத்தின் நோக்கங்களில் ஒன்று, சில இடைமறித்தலுக்கு உட்பட்ட தரவுகளின் உள்ளடக்கத்தைப் வாசிக்க முடியாமலிருக்கும் நிலையான மறைக்குறியீட்டை (encryption) உடைக்கும் திறனுடைய தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வதாகும். NSA அமைப்பானது இத்தகைய மறைக்குறியீட்டாக்கலை முறியடிப்பதற்கு அதி வேகக் கணிப்பொறிகள் மற்றும் “மிருகத்தனமான சக்தியுடைய” ஒரு கூட்டுத் தாக்குதல்களை தகவல்கள் மீது நடத்தும் திட்டங்களைக் கொண்டுள்ளது, இதற்கு பாரிய எண்ணிக்கையான தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். பாம்போர்ட் கருத்துப்படி, “குறிப்பிட்ட இலக்கில் இருந்து அதிக தகவல்கள் வந்தால், கணிப்பொறிகள் அவற்றின் வடிவமைப்பை வெளிப்படுத்திக் கண்டுபிடிக்கும், பிளப்டேல் பல தகவல்களை பற்றி அறிந்து கொள்ளும்.”

டெனிசியில் ஓக் ரிட்ஜிலுள்ள NSA அமைப்பினுடைய ஆய்வு நிலையத்தில் உயர்மட்ட உற்பத்தித்திறன் கணிப்பொறி அமைப்புத் திட்டத்தின் பகுதியாக தெரிய வந்துள்ள கையாளுதல் செயலாக்க அம்சத்திற்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆரம்ப இலக்கானது இதுவரை அறியப்படாத சக்திவாய்ந்த கணிப்பொறியை கட்டமைத்தல், அதாவது ஒரு வினாடிக்கு ஒரு க்வாட்டிரில்லியன் (quadrillion -1015) செயற்பாடுகளுக்கும் அப்பால் நவீன கணிப்பொறி வேகத்திற்குள் (பெட்டாப்ளாப்- petaflop) கொண்டுவருதலாகும். ஒரு பிளாப் (flop) என்பது கணித மிதவைப் புள்ளி (mathematical floating-point) கணக்கீட்டின் ஒரு அளவீடாகும். அதாவது கணிப்பொறி வினாடிக்கு எத்தனை செயல்களை கையாளமுடியும் என்பதாகும். இன்று மிக அதிக வேக மேசைக் கணிப்பொறி 100 ஜிகாப்ளாப்புக்கள் (gigaflops)  அல்லது NSA நிலையத்திலிருக்கும் இலக்கை விட நூறாயிரம் மடங்கு மெதுவான வேகத்தைத்தான் கொண்டுள்ளது.

கிரேயுடன் செயற்படுகையில் (சிறப்பு கணிப்பொறி நிறுவனத்தின் 250 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தப் பங்காளி நிறுவனம்தான் கிரே), NSA அமைப்பானது “ஜாகுவார்” என்ற குறியீட்டுப் பெயரில் ஒரு அமைப்புமுறையை உருவாக்கியது; இது பெட்டாப்ளாப் (petaflop) தடையை உடைத்து, உத்தியோகபூர்வமாக உலகின் அதி வேக கணிப்பொறியாக 2009ல் வந்தது. 2011ல் ஓக் ரிட்ஜ் நிலையத்தில் 2.33 பெட்டபிளாப்புக்களை அடைந்தது, ஆனால் வேகத்தில் ஜப்பானின் “K கணிப்பொறிக்குப்” பின் மூன்றாவதாகத்தான் இருந்தது; K கணிப்பொறி குறிப்பிடத்தக்க வகையில் 10.51 பெட்டாபிளாப்புக்கள் கடக்கும், சீனாவில் Tianhe-1A System 2.57 பெட்டாபிளாப்புக்களைக் கடக்கும். அடுத்த NSA  வின் இலக்கு “டைட்டான்” என்ற குறியீட்டுப் பெயரை கொண்ட திட்டத்தை நிறைவேற்றுவது ஆகும்; இது 2013 ஐ ஒட்டி 10 முதல் 20 பெட்டாபிளாப்புக்களைக் கடக்கும்.

ஒரு பொலிஸ் அரச அச்சுறுத்தல்

அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடியின் உள்ளடக்கத்திற்குள் பார்க்கையில், இத்தகைய முன்னோடியிலாத அளவுகளிலும் திறன்களிலும் NSA அமைப்பின் இலத்திரனியல் ஒட்டுக் கேட்டல் உளவு முறை அமெரிக்க மக்கள் மீது மேற்கொள்ளப்படுவதும், இன்னும் உலகில் பலர் மீதும் மேற்கொள்ளப்படுவதும், ஒரு அச்சுறுத்தும் பண்பைக் கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாகக் கூறப்படும் காரணங்களைக் காட்டிலும் மற்றவற்றிற்காகவே தயாரிக்கப்படுகின்றன என்பது தெளிவு.

தன் அதிகாரத்தின் உச்சக்கட்டத்தில், அடால்ப் ஹிட்லரின் நாஜி ஆட்சி தனக்கு விருப்பத்தகாதவரின் சுவடுகளை அறிய, அடையாளம் காண மிக நுட்பமான ஒப்புமை தகவல் முறையைப் (analog information methods) பயன்படுத்தியது. 1933ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மக்களின் இனரீதியான அடையாளத்தை நிறுவப் பயன்படுத்தப்பட்டது, அதையடுத்து IBM நிறுவனத்தால் கொடுக்கப்பட்டு, ஹெர்மன் ஹோல்லெரித் கண்டுபிடித்த கணிப்பொறித் துழை அட்டை அட்டவணைப் (punch card tabulation) சேவைகளின் உதவியால் இது பின்னர் செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின் நாஜி மரணவதைசிறை முகாம்கள் ஒவ்வொன்றிலும் மூன்று இலக்க ஹோலெரித் குறியீட்டு இலக்கமுறை, அலுவலகப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டது.

கையடக்கத் தொலைபேசி, கம்பியில்லா சாதனங்ககளின் வேகமான வளர்ச்சியும், அவைகள் உலக மக்களின் பெரும்பாலானவர்களின் வாழ்வில் நிறைந்திருப்பதும், அடக்குமுறை நோக்கங்களுக்காக ஒவ்வொரு தனிநபரின் ஒவ்வொரு நாள் செயற்பாடுகளை பற்றிய விபரங்களை சேகரிப்பது, அரசிற்குள் கெடுநோக்குடைய நடவடிக்கைகளுக்கு சாத்தியமாக இருக்கிறது.