தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Israel’s elections augur deepening political instability இஸ்ரேலின் தேர்தல்கள் ஆழமடையும் அரசியல் உறுதியற்ற தன்மையை முன்னறிவிக்கின்றன
By Jean
Shaoul use this version to print | Send feedbackபிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தெனியாகுவின் வலதுசாரித் தேர்தல் கூட்டான லிகுட் பெய்டின்யு மற்றும் அவருடைய மதவாத கூட்டணிப் பங்காளிகள் செவ்வாய் தேர்தல்களில் மிகவும் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளனர். இது ஒரு பெரும்பான்மையற்ற பாராளுமன்றம் என்ற நிலையை தோற்றுவித்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் பல முக்கிய காரணிகளால் தீர்மானிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் எதிர்பார்த்ததைவிட அதிகமான 67 சதவிகித வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்ததாகும். இது 1999ல் இருந்து மிக அதிக எண்ணிக்கை ஆகும். இது கோடை 2011ல் வெளிப்பட்ட பாரிய வெகுஜன எதிர்ப்புக்களில் எடுத்துக்காட்டப்பட்ட சமூக அதிருப்தி மறைந்துவிடவில்லை என்னும் உண்மைக்குச் சான்றளிக்கிறது. இரண்டாவதாக, கடந்த ஆண்டு நிறுவப்பட்ட யெஷ் அதித்திற்கு -Yesh Atid- வலுவான ஆதரவு வியத்தகு முறையில் வெளிப்பட்டிருப்பது ஆகும்; இஸ்ரேலின் மத்தியதர வர்க்கங்களுக்கு நலன்களைத் தரும் சமூக, பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கும் என்ற கூற்றுக்களில் இருந்து இது இலாபமடைந்தது. மற்றும் இறுதியாக, உண்மையான சமூகத் தளம் இன்றி, உலக நிதிய நெருக்கடியின் பாதிப்பினால் குறுகிய உயிர்வாழும் காலத்தைகொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள பிளவுகளும் காரணமாயின. எதிர்த்தரப்புக் கட்சிகள் சிதைந்து நிற்பது தனக்குப் பெரிய பெரும்பான்மையை தரும் என்ற நம்பிக்கையில் நெத்தெனியாகு முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இது அவரை 2013க்கான சிக்கன வரவு-செலவுத் திட்டத்தையும் இயற்ற ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. அதே நேரத்தில் அவர் பாலஸ்தீனியர்கள் குறித்த ஆக்கிரோஷக் கொள்கையை தொடர்ந்து வருவதுடன் ஈரான் மீதான தாக்குதல்களுக்கான தயாரிப்புக்களையும் கொண்டுள்ளார். ஆனால் சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு விரோதப் போக்கு மற்றும் இஸ்ரேலுக்கு முக்கிய ஆதரவாளரான வாஷிங்டனுடனான உறவுகளை பாதிப்படையச் செய்துள்ள கிழக்கு ஜேருசெலேமிலும் மேற்கு கரையோரப் பகுதியில் இஸ்ரேலியக் குடியருப்புக்களை விரிவாக்கும் உந்துதலும் அவருடைய கணிப்பீடுகளை தவறாக்கி விட்டன. சில சிறுகட்சிகள் வெற்றி பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இறுதி முடிவுகள் ஜனவரி 30 வரை தெரியாது. ஆனால் 99 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பரந்து கோடிட்டுக்காட்டப்படும் நிலைமை தெளிவாகத்தான் உள்ளது. நெத்தெனியாகுவிற்கு 120 இடங்கள் உள்ள நெசட் என்னும் இஸ்ரேலியப் பாராளுமன்றத்தில் 61 உறுப்பினர்கள்தான் உள்ளனர். இது அவரை, தான் ஒரு பரந்த கூட்டணியுடன் இஸ்ரேலை ஆட்சிசெய்யவுள்ளேன் எனக்கூறும் கட்டாயத்திற்கு உட்பட வைத்தது. அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் அவருக்கு மதவாதக்கட்சிகள் அல்லது யெஷ் அதிட் இன்னும் பிற மத சார்பற்ற கட்சிகளுடன் உடன்பாட்டைக் காண்பதற்கு ஆறு வார கால அவகாசம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அவர் அவருடைய இராணுவ செயற்பட்டியலை வெளிநாட்டிலும் சிக்கனத் திட்டத்தை உள்நாட்டிலும் செயல்படுத்தக்கூடிய உறுதியாக அரசாங்கத்தை அமைப்பது அநேகமாக இயலாது எனலாம். இதுபெருகிய அரசியல் மற்றும் சமூகக் கொந்தளிப்பிற்குக் கட்டியம் கூறுகிறது. இப்பாராளுமன்றத்தில் லிகுட்டிற்கு 20 இடங்கள் உண்டு. இது முன்பு இருந்ததைவிட 7 இடங்கள் குறைவாகும். யிஸ்ரேல் பெய்டின்யு முன்பைவிட 4 குறைவாக 11 இடங்களை கொண்டுள்ளது. ஷாஸ் இன்னும் பிற மதவாதக் கட்சிகள் 18 இடங்களைக் கொண்டுள்ளன. சிக்கனத்திற்கு எதிரான கருத்தும், நெத்தெனியாகுவின் போர் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிர்ப்பும் வலதுசாரி பக்கம் பாய்ந்துள்ள உத்தியோக பூர்வ “இடது” மற்றும் “மத்தியவாத” மாற்றீடுகளூடாக உண்மையான தமது எதிர்ப்பை காட்டமுடியவில்லை. அதன் தலைவர்கள் “அரசியல் கூடாது” கொள்கையை வலியுறுத்திய நிலையில் 2011ல் வெகுஜன சமூக எதிர்ப்புக்களின் அரசியல் விளைவு இந்த உளுத்துப்போன மற்றும் அடிப்படையில் பிற்போக்கான கட்சிகள் தற்காலிகமாக வலுப் பெறவதற்கு உதவியுள்ளது. யாஷ் அதிட் லுகுட்டிற்கு அடுத்தாற்போல் மிக நெருக்கமாக 19 இடங்களைப் பெற்றது. இதன் பெயரே—ஒரு வருங்காலம் உள்ளது—அதன் அரசியலில் இருக்கும் வெற்றுத்தன்மை மற்றும் கொள்கைத் தன்மையற்ற நிலைக்குச் சான்றாகிறது. இதன் தலைவரும் தொலைக்காட்சி நிறுவன அமைப்பாளரும் காலம் சென்ற டோமி லிபிட்டின் மகனுமான யாயிர் லபிட் ஒரு தொலைக்காட்சி நபராக இருப்பதுடன் 1997ல் இருந்து 2006 வரை மதசார்பற்ற ஷிநுய் கட்சிக்குத் தலைமை தாங்கியவராவார். இவர் மத்தியதர வர்க்கத்தை இலக்கு கொண்ட பிரச்சாரத்தை நடத்தி மதச்சார்பற்ற மற்றும் தீவிர மரபார்ந்த யூதர்களுக்கு இடையே பதட்டங்களை தூண்டினார். தீவிர மரபார்ந்தவர்கள்- ultra-Orthodox- இராணுவம் மற்றும் பணிப்பிரிவில் சேர்க்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். பாலஸ்தீனியர்களுடன் உடன்பாடு காண முற்படுகையில் அவர் இஸ்ரேல் நிபந்தனைகள்படி அது இருக்க வேண்டும் என்று கூறுகிறார். கிழக்கு ஜேருசலேமை திருப்பிக் கொடுக்க மறுப்பதுடன், குடியிருப்புக்கள் யூதர்களால் தொடர்ச்சியாக வைத்திருக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். அதன் முக்கிய உறுப்பினர்களிடையே பல பிளவுகள், கட்சி மாறல்களைக் கண்டுள்ள தொழிற்கட்சி “சமூகப் பிரச்சினைகளை” முன்வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டது. அதன் தலைவர் இருவர் எதிர்ப்பு இயக்கத்தின் பட்டியலில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளனர். அப்படி இருந்தும், இது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 2009 தேர்தல்களில் பெற்ற 13 இடங்களில் இருந்து இப்பொழுது 15 இடங்களைப் பெற்று மூன்றாம் மிகப் பெரிய கட்சியாகியுள்ளது. பாலஸ்தீனியர்களுடன் “சமாதானம்” என்னும் கட்சியின் முன்னாள் திட்டத்தில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக் கொண்ட இதன் தலைவர் முன்னாள் செய்தியாளர் ஷெல்லி யாசிமோவிச், இப்பொழுது நெத்தெனியாகு காஸா மீது கடந்த நவம்பர் மாதம் தாக்கியதற்கும் மற்றும் குடியேற்றத் திட்டத்திற்கு ஆதரவையும் கொடுக்கிறார். 6 இடங்களைக் கொண்டுள்ள ஹடுனா முன்னாள் கடிமாத் தலைவரும் வெளியுறவு மந்திரியுமான சிபி லெவ்னியால் அமைக்கப்பட்டது. இது பாலஸ்தீனியர்களுடன் உடன்பாடு வேண்டும் என்ற பிரச்சாரத்தை செய்தது. ஆனால் அது இஸ்ரேலிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலப்பகுதிகளிலும் பாலஸ்தீனியர்கள் பெரும்பான்மையாவதைத் தடுப்பதற்குத்தான். முன்பு சமாதானத்திற்கு ஆதரவானோருடன் பிணைப்புக் கொண்டிருந்த சமூக ஜனநாயக கட்சி மெரெட்ஸ் இதன் பிரதிநிதித்துவத்தைப் பாராளுமன்றத்தில் 6 இடங்களைப் பெற்ற இரு மடங்காக ஆக்கியுள்ளது. 2009ல் மிக அதிக இடங்களை (28) பெற்ற கடிமா போதுமான வாக்குகளை ஏதேனும் இடத்தைக் கூடப்பெற்றதா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இக்கட்சி கடந்த ஆண்டு அதன் தலைவர் ஷாவுல் மொபஸ் கடிமாவை நெத்தெனியாகுவின் கூட்டணிக்கு அழைதந்துச் சென்று, ஆறே வார காலத்தில் தீவிர மரபார்ந்த யெஷிவா மாணவர்களுக்கு இராணுவச் சேவையில் இருந்து விலக்கு பெறுவதில் தோல்வி அடைந்த நிலையில் சரிந்துவிட்டது. இஸ்ரேலில் உள்ள மொத்த மக்கட்தொகையில் 20% என இருக்கும் பாலஸ்தீனியக் குடிமக்களின் கட்சிகள் மரபார்ந்த முறையில் அவர்களின் வாக்குகளினால் 10% பெற்று 12 ஆசனங்களை பெற்றுள்ளன. நெத்தெனியாகு இப்பொழுது மிகத் தீவிர வலதுசாரிப் பிரிவான அவரது லிகுட் கட்சி பிற குடியேறியவர், மதவாதக் கட்சிகளுடன் இணைந்து போகும்வகையில் ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும். இவை பாலஸ்தீனியர்களுடன் உடன்பாடு குறித்த எந்த முயற்சியையும் தகர்த்துவிட்டன. அதேபோல்தான் மத்தியவாதக் கட்சிகளும். இவை அனைத்தும் வரவிருக்கும் சிக்கன வரவு-செலவுத் திட்டத்தில் தங்கள் சொந்த சமூகத் தளத்திற்கு விலக்குகளை நாட முற்பட்டுள்ளன. நெத்தெனியாகு லாபிட்டின் யெஷ் அதித் மற்றும் ஒருவேளை லிவ்னி ஹடுனாவுடன் பேச்சுக்களையும் ஒரு நடைமுறையில் செயல்படக்கூடிய கூட்டணியை ஒன்றாக இணைப்பதற்காக வலதுசாரிக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துகிறார். லாபிட் இப்பொழுது அரசாங்கத்தை அமைக்கும் அதிகாரத்தில் உள்ளார். நெத்தெனியாகு தேர்தல்கள் முடிந்த உடன் அவரைச் சந்தித்தார். தன்னுடைய பங்கிற்கு லாபிட் நெத்தெனியாகுடன் சேர்ந்து இயங்கத்தயார் எனக்குறிப்புக் காட்டியுள்ளார். இஸ்ரேலின் சவால்களைச் சந்திக்க ஒரே வழி “ஒன்றாக இருப்பதுதான்” என்று கூறியுள்ளார். ஆனால் “இஸ்ரேலுக்கு எது நன்மையோ அது ஒன்றும் வலது நிலைப்பாட்டைக் கொள்வதும் இல்லை, இடது நிலைப்பாட்டை கொள்ளுவதும் இல்லை. இது ஓர் உண்மையான, ஒழுக்கமான மத்தியை இங்கு தோற்றுவிப்பதில்தான் உள்ளது” என்றார். தொழிற்கட்சியின் யசிமோவிச் தானும் “பொருளாதார சமூக அடிப்படையில் ஒரு கூட்டணியை அமைக்க முயற்சிப்பதாகவும், அது சமாதான வழிவகையை முன்னேற்றுவிக்கும்” என்றும் கூறினார். ஆனால் அவர் அவ்வாறு செய்யமுடியுமா என்பது சந்தேகத்திற்கு உரியதுதான். குறைந்தப்பட்சம் இதற்கு அவர் பாலஸ்தீனிய இஸ்ரேலிய வாக்குகளைக் கொண்டுள்ள கட்சிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஆளும் கட்சியும் அதை ஒருபொழுதும் செய்ய விரும்பியதில்லை. “மத்தியவாத” மற்றும் “இடது”கள் அனைத்து அடிப்படை கேள்விகளிலும் ஒத்துப் போகின்றனர். எந்தக்கட்சி அடுத்த கூட்டணி அரசாங்கத்தை இறுதியில் அமைத்தாலும், அவை நெத்தெனியாகுவின் போர்ச் செயற்பட்டிலை ஆதரித்து, இஸ்ரேலின் செல்வந்தர் குழுக்கள் மற்றும் சர்வதேச நிதிய உயரடுக்குகளின் ஆணைகளை இஸ்ரேல்மீது சுமத்தும். ஏற்கனவே இது தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் சமூகநல, பொதுப்பணிகளில் கூடுதல் வெட்டுக்கள் மற்றும் வரிவிதிப்பு உயர்வுகள் ஆகியவற்றால் வறிய நிலையில் தள்ளிவிடும். முதலாளித்துவம் மற்றும் சியோனிசத்துடன் பிணைந்துள்ள கட்சிகளை நம்பியிராமல், இஸ்ரேலிய தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்களை ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளிடம் இருந்தும் விடுவித்துக் கொண்டு சுதந்திரமாக இஸ்ரேலுக்கள் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் மத, இன வேறுபாட்டை காட்டாமலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியப் பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் இருப்பவர்களுடன் ஒன்றுபட வேண்டும். அவர்கள் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவ, ஒரு சோசலிசத் வேலைத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அது வங்கிகள் மற்றும் பெருநிறுவனச் சொத்துக்களை பறிமுதல் செய்து பொருளாதாரத்தை தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல் சமூகத் தேவைகளுக்குப் பூர்த்தி செய்ய வேண்டும். |
|
|