World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Political issues in the fight against the fascist Golden Dawn

பாசிச கோல்டன் டோனுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

Chris Marsden
19 January 2013
Back to screen version
இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏதென்ஸ் நகரில் சின்ட்கமா சதுக்கத்தில் கூடி, பாசிச கோல்டன் டோனுக்கும் Golden (Chrysi Avgi) அது குடியேறியவர்கள், இடது சாரிகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் மீது நடத்தும் தாக்குதல்களுக்கு தம் எதிர்ப்பை தெரிவிப்பர்.

ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள அமைப்புக்கள் உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களை ஒரு முட்டுச் சந்திற்கு தள்ளத்தான் வழிநடத்துகின்றன. இவர்கள் பாசிஸ்ட்டுக்களை வலுப்படுத்தும் ஒரு பொய்யான கொள்கையைத்தான் வளர்க்கின்றனர். அதன் நோக்கம் கோல்டன் டோன் எழுச்சிக்கு முக்கிய பொறுப்பைக் கொண்டவர்களை மீண்டும் உறுதிப்படுத்தி தங்கள் கூட்டையும் இதே கட்சிகளுடன் வலுப்படுத்திக் கொள்வதாகும்.

International Workers' Left (DEA), மற்றும் Xekinima போன்ற ஏராளாமான போலி இடது குழுக்கள் இடது ஐக்கியம்” அல்லது “இடதின் ஓர் ஐக்கியத்திற்கான முன்னணி” போன்றவை பாசிச அச்சுறுத்தல்களுக்கு எதிராக அவசியம் என வலியுறுத்துகின்றன. அவை பயன்படுத்தும் முறையில் இத்தகைய அரசியல் சூத்திரத்தின் சாராம்சம், கோல்டன் டோனுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை சமூக ஜனநாயக PASOK, தொழிற்சங்கங்கள் மற்றும் தீவிர இடது கூட்டணியான சிரிசா போன்றவற்றிற்கு தாழ்த்துவதாகும்.

கோல்டன் டோனின் எழுச்சி என்பது கிரேக்கத்தில் ஒரு சமூக எதிர்ப்புரட்சியை நேரடியச் சுமத்துதல் என்று இக்கட்சிகள் செய்துள்ளதற்குக் கொடுக்கும் விலையாகும், அல்லது சிரிசாவைப் பொறுத்தவரை, கிரேக்க முதலாளித்துவத்தின் பாதுகாவல் அமைப்பாக அதன் பிரதான நோக்கத்தை செயல்படுத்துதல், ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாத்தல் என்பதற்கு கொடுக்கும் விலையாகும்.

PASOK கிரேக்கத்தை 2009ல் இருந்து 2012 வரை ஆண்டது; ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்னும் முக்கூட்டு கோரிய தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒவ்வொரு தாக்குதலையும், கிரேக்க, சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் பெருவணிகங்களின் நலன்களின் பேரில் சுமத்தியது. 2012ல் அதற்கு ஆதரவு சரிந்த போது, PASOK தொடர்ந்து சிக்கன நடவடிக்கைள் தொடரப்படவும், ஆழப்படுத்தவும் வேண்டி, வலதுசாரி புதிய ஜனநாயகம் (ND) பிரதான கட்சியாக கொண்ட ஒரு கூட்டணியில் இளைய பங்காளியாக இருக்க ஒப்புக்கொண்டது.

PASOK  உடன் இடது ஐக்கியம் என்பது புதிய ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவத்துடனும் ஐக்கியம் என்று பொருளாகும். PASOK  தலைவர் எவாஞ்சலோஸ் வெனிஜெலோஸ், புதிய ஜனநாயகத்தின் பிரதம மந்திரி அன்டோனிஸ் சமரஸ் மற்றும் ஜனநாயக இடதின் (சிரிசாவில் இருந்து பிரிந்த கட்சி, அரசாங்கக் கூட்டணியில் மூன்றாம் கட்சியாக இருப்பது) போடிஸ் கௌவெலிஸ் ஆகியோர் எதிர்ப்பைத் தழுவியதியதில் இருந்து தெளிவாகியுள்ளது; “ஜனநாயக சக்திகள், ஜனநாயகத்தைத் தாக்கும் சக்திகளுக்கு எதிராக அரண் போன்ற சுவரை எழுப்ப வேண்டும்என்று கௌவெலிஸ் அறிவித்தார்.

தொழிற்சங்கங்களை பொறுத்தவரை, கடந்த நான்கு ஆண்டுகளாக கிரேக்கத் தொழிலாள வர்க்கம் 19 பொது வேலைநிறுத்தங்கள், கணக்கிலடங்கா பிற வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றை நடத்தியுள்ளது: இவற்றில் நூறாயிரக்கணக்கானவர்கள் தங்கள் வேலைகள், ஊதியங்கள், வாழ்வாதாரங்கள் ஆகியவற்றின் தகர்ப்புகளை எதிர்க்க ஈடுபட்டனர். ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் சலிக்காமல் இந்த முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்த உழைத்துள்ளனர்; அவர்கள் இவற்றை அரசாங்கத்திற்குக் கொடுக்கும் எதிர்ப்பு முறையீடுகள் என்ற எல்லைக்குள் மட்டுப்படுத்தி அல்லது இவற்றை தனிமைப்படுத்தி போராட்டங்களை நசுக்க உதவுவதின் மூலம் பதிலிறுப்புச் செய்துள்ளனர், இதுதான் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின்போது நடந்தது; அது, தொழிற்சங்கங்களின் நெரிக்கும் கட்டுப்பாட்டில் இருந்து தப்பும் அச்சுறுத்தலைக் கொண்டிருந்தது.

தொழிற்சங்கங்கள், சிரிசா மற்றும் போலி இடது அமைப்புக்களுடைய ஆதரவுடன் சிக்கன நடவடிக்கைகள், வறுமையளித்தல், பட்டினிபோடுதல் ஆகியவற்றைக் கொடுத்த தொடர்ச்சியான அரசாங்கங்களை வீழ்த்துவதற்கான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு முயற்சியையும் எதிர்த்துள்ளன; அதே நேரத்தில் தங்கள் கூட்டை PASOK உடன் பேணுகின்றன.

சிரிசா, KKE எனப்படும் கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் Antarsya ஆகியவை சேர்ந்து உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களின் பாதுகாப்பைத் தங்கள் முக்கிய இலக்காக கொண்டிருக்கின்றன.

சிக்கன நடவடிக்கைகளுக்கு தன் விரோதப் போக்கை அறிவித்த வகையில் சிரிசா பிரதான எதிர்க்கட்சியாக வந்துள்ளது. ஆனால் இக்கட்சி குட்டி முதலாளித்துவ அடுக்கு ஒன்றிற்றாகத்தான் பேசுகிறது; அதன் ஒரே கோரிக்கை ஐரோப்பிய ஒன்றியம் பெயரளவிற்குச் சில சலுகைகளை வெட்டுக்களின் நேரம் அளவு குறித்து செய்ய வேண்டும் என்பதாகும்; அதேநேரத்தில் கொள்கையளவில் கிரேக்க முதலாளித்துவத்தை மீட்பற்கு தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை குறைத்தல் என்பதில் உடன்படுகிறது. இதன் முக்கிய செயற்பாடு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன, புரட்சிகர இயக்கம் எதுவும் வெளிப்பட்டுவிடாமல் தடுத்து நிறுத்தவதாகும்.

கடந்த ஜூன் மாதப் பொதுத் தேர்தல்களுக்கு சற்று முன்னதாகக் கட்சியின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் “இன்று கிரேக்கத்தில் பொருளாதார, சமுக, அரசியல் உறுதிப்பாட்டை நம் நாட்டிற்குக் கொடுக்கக் கூடிய ஒரே அரசியல் இயக்கம் சிரிசாதான்” என்று பெருமை பேசினார். “இது யூரோப்பகுதிக்கு நலன்களைக் கொடுக்கும்மற்றும் பொது நாணயத்தை காக்கும்” என்றும் அவர் தொடர்ந்து கூறினார். ND தலைமையிலான கூட்டணி அதன் புதிய சிக்கன நடவடிக்கைகள் உந்துதலை தொடக்கியவுடன், சிப்ரஸ், “அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தூண்டும் நேரமல்ல இது” என்று அறிவித்தார்.

பல மாதங்களாக சிப்ரஸ் ஐரோப்பிய தலைநகரங்களுக்கு பயணித்து ஜேர்மனிய சான்ஸ்ர் அங்கேலா மேர்க்கெல், பிரெஞ்சு ஜனாதிபிதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் இன்னும் பிறருக்கு சிரிசாதான் ஒரே பொருளாதார, சமூக ஒழுங்கிற்கான சக்தி என்றார்.

இந்தப் போலி இடது குழுக்கள் மற்றும் குறிப்பாக சிரிசாவின் அழுகிய சந்தர்ப்பவாதம் ஆகியவற்றால் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக முடக்கப்பட்டுள்ளதால்தான் கோல்டன் டோன் வலிமையைப் பெற முடிந்துள்ளது. வலது சாரி அரசாங்கங்களுக்கு முட்டுக்கொடுத்து மற்றும் வங்கியாளர்களின் ஒன்றியமான ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றிற்கு ஆதரவு கொடுக்கும் பெயரளவிலான “இடதின்” பங்கை பாசிஸ்ட்டுக்கள்  சுரண்டிக்கொள்கின்றனர். அவர்கள் வாடிக்கையாக சிரிசாவை "PASOK மார்க் 2" என்று கண்டிக்கின்றன; மேலும் ஸ்தாப அமைப்புமுறையின் கட்சி என்று கண்டிக்கின்றன அதே நேரத்தில் அதை புரட்சிகர மாற்றீட்டு கட்சி என்றும் காட்டிக் கொள்கிறது. ஒரு சிரிசா அரசாங்கத்தின் வருகை, கோல்டன் டோன், தான் அதிகாரத்திற்கு வருவதற்கு வழி வகுக்கும் என்றும் கருதுகிறது.

ஆளும் கட்சிகளின் தேசியவாதம், வெளிநாட்டவர் குறித்த பயம் ஆகியவற்றில் இருந்தும் கோல்டன் டோன் பலனை அடைகிறது; சமீபத்திய “Xenios Zeus” பிரச்சாரத்தில் இது தெரியவரும்; அது 66,000 சந்தேகத்திற்குரிய சட்டவிரோதக் குடியேறியவர்களைக் கைது செய்து, காவலில் வைத்து பின் நாட்டை விட்டு வெளியேற்றும் இலக்கைக் கொண்டுள்ளது. கோல்டன் டோனின் அதிர்ச்சித் துருப்புக்கள் சீருடை அணியாத பொலிஸ் அதிகாரிகள் பலரைக் கொண்டுள்ளது, ஏதென்ஸ் நகரில் உள்ள பொலிஸ் படையில் பாதிப்பேராவது பாசிசக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

ஸ்தாபகமயப்பட்ட கட்சிகள் எவற்றினதும் “ஜனநாயகச் சான்றுகளை” இச்சூழலில் பயன்படுத்துவது என்பது கொடூரமான மோசடியாகும், ஜனநாயக உரிமைகளின் உண்மையான பாதுகாப்பை காட்டிக் கொடுப்பதுமாகும். கிரேக்கத் தொழிலாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் வணிகர்களின் நடைமுறைச் சர்வாதிகாரத்தின் கீழ் துன்புறுகின்றனர்; அவர்கள் பரந்த வேலையின்மையை சுமத்துவதுடன், அத்தியாவசிய சேவைகளை அழித்தல், வறுமையை திணித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்கள் இப்பொழுது முகங்கொடுக்கும் நிலைமையில் இருந்து மட்டுமன்றி, கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்தும் முடிவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 1930கள், 1940களின் மையப் படிப்பினை, ஜனநாயக முதலாளித்துவம் எனக்கூறப்படும் கட்சிகளுக்கு, பாசிச எதிர்ப்பு “ஐக்கியம்” என்ற பேரில் தொழிலாள வர்க்கம் தாழ்ந்து இருக்க வேண்டும் என்ற ஸ்ராலினிச, சீர்திருத்தவாத கட்சிகளின் கூற்றாகும். இது ஒவ்வொரு நாட்டிலும் பாசிசத்தின் வெற்றிக்கு வகை செய்ததோடு ஐரோப்பாவையும் உலகின் பெரும் பகுதியையும் பேரழிவிற்கு உட்படுத்திய போரில் முடிவுற்றது.

கிரேக்கம் 1936ல் இருந்து இராணுவப் பொலிஸ் சர்வாதிகாரத்தினால் ஆளப்பட்டது; அதன்பின் பாசிச இத்தாலி, பின் நாஜி ஜேர்மனி மற்றும் பல்கேரியா ஆகியவற்றால் படையெடுக்கப்பட்டது. ஆக்கிரமித்தவர்கள் தங்கள் ஒத்துழைப்பாளர்களை முதலாளித்துவப் பிரிவிற்குள் கண்டனர்; அவர்களுள் பலரும் போரில் இருந்து தப்பி முக்கிய அரசியல் மற்றும் தொழில்துறை நபர்களாக வெளிப்பட்டு 1967ல் இருந்து 1974 வரை “கேர்னல்களின் ஆட்சிக்கு” தலைமையைக் கொடுத்தனர்; இது CIA முகவரான கேர்னல் ஜோர்ஜ் பாப்படோபொலோஸ் தலைமையில் நடைபெற்றது.

முதலாளித்துவத்திற்கும் அதன் அரசியல் பாதுகாவலர்களுக்கும் வளங்கப்படும் எந்த நம்பிக்கையும் இன்று அதேபோன்ற பெரும் சோக விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.

கிரேக்கத் தொழிலாளர்களும் இளைஞர்களும், தொழிலாள வர்க்கம் மற்றும் குடியேறியவர்கள் வாழும் பகுதியில் பாதுக்காப்புக் குழுக்கள் அமைப்பது உட்பட, கோல்டன் டோனுக்கு எதிரான போராட்டத்தை, தங்களது சொந்த விதிமுறைகள் மற்றும் வழிவகைகளில் மேற்கொள்ள வேண்டும். அவர்களின் குறிக்கோள் “கிரேக்க ஜனநாயகத்தைக் பாதுகாத்தல்” அல்ல அதாவது கிரேக்க முதலாளிதைதுவத்தை பாதுகாப்பது அல்ல, ஆனால் ஒரு சமூகப் புரட்சி மூலம் உண்மையான ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றை நிறுவுதல் என்பதை நன்கு புரிந்துகொண்டு இதைச் செய்ய வேண்டும்.

ஒரு தொழில்துறை மற்றும் அரசியல் தாக்குதலை தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவும் திசையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்; அந்த அரசாங்கம், வங்கிகள், பெருநிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, வேலைகள், கல்வி, வீடுகள், சுகாதாரப்பாதுகாப்பு ஆகியவற்றை அளிக்கத் தேவையான சமூகப் பொருளாதார வேலைத்திட்டங்களுக்கு கிரேக்கத்தின் வளங்களை பயன்படுத்தும்.

இது தனியே கிரேக்கத் தொழிலாளர்களுடைய பணி மட்டுமல்ல. இப்போராட்டம், முழு நனவுடன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அத்துடன் இணைந்துள்ள அரசாங்கங்களுக்கு எதிராக ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அளவிலாள அரசியல் அணிதிரள்வாக இருக்க வேண்டும்; இது ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்ற வடிவத்தில் தொழிலாளர்களின் அதிகாரத்தை நிறுவ வேண்டும். இத்தகைய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு புதியதும் உண்மையானதுமான சோசலிஸ்ட் கட்சிகள் அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் கட்டமைக்கப்படுவது அவசியமாகும்.