சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan Tamil party legitimises military occupation

இலங்கைத் தமிழ் கட்சி இராணுவ ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்துகின்றது

By M. Aravinthan
7 January 2013
use this version to print | Send feedback

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், தன்னுடைய கட்சி தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தினை முற்றாக வெளியேற்றுமாறு வலியுறுத்தவில்லை, என கடந்த மாத பாராளுமன்ற உரையின்போது முதன் முதலாக தெரிவித்துள்ளார். அவருடைய உரை, தமிழ் கூட்டமைப்பு தன்னை கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துக்குள் முழுமையாக ஒருங்கிணைத்துக்கொள்ள தயாராக இருப்பதற்கான மேலுமொரு அறுகுறியாகும்.

தமிழ் கூட்டமைப்பு, பல தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு கூட்டாகும்: இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆகியன இக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. 2001 அக்டோபரில் தமிழ் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம், 2009 மே மாதம் தீவின் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தில் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படும் வரையும், அது பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் பாராளுமன்ற ஊதுகுழலாக செயற்பட்டு வந்தது.

சம்பந்தன், 2013 வரவு-செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு படைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போதே உரையாற்றியிருந்தார். அரசாங்கம் இன்னுமொரு பெரும் நிதி அதிகரிப்பை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்காக அறிவித்திருந்தது. அதாவது 290 பில்லியன் ரூபா வரை (2.3 பில்லியன் அமெரிக்க டொலர்) 26 சதவீதம் அதிகரித்திருந்தது. கூடுதலான பணம், ஆயுதப்படைகளை பாரமரிக்கவும் மற்றும் பலப்படுத்தவும் சென்றடையவுள்ளன.

சம்பந்தன் பாராளுமன்றத்தில் கூறியதாவது: “நாங்கள் முற்றுமுழுதாக இராணுவத்தினை (வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து) வெளியேற்றுமாறு கோரிக்கை விடுக்கவில்லை. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவர்கள் இருப்பதைப் போன்று, அங்கேயும் அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் யுத்தத்துக்கு முன்னர் எங்கிருந்தார்களோ அந்த எல்லைக்குள் அவர்கள் இருக்க முடியும். அவர்கள் தங்களின் புலனாய்வுகளையும் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். இது ஓரு நியாயமான கடமை.”

புலனாய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது பாதுகாப்பு படைகளின்நியாயமான கடமைஎன பிரகடனப்படுத்துவதனால், தமிழ் கூட்டமைப்பு தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அதன் விளைவுகளையும் அனுமதிக்கின்றது. தசாப்தகால இனவாத யுத்தத்தின் போது, குறிப்பாக நாட்டின் தமிழ் சிறுபான்மையினரை அச்சுறுத்தவும் அடக்குவதற்கும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பிரமாண்டமான பொலிஸ்-அரச இயந்திரத்தை கட்டியெழுப்பின. படைகள், வடக்கு கிழக்கில் உள்ள முன்னாள் யுத்த வலயங்களுக்குள் நிரந்தரமாக குவிக்கப்பட்டன.

சம்பந்தனின் குறிப்புக்கள், தமிழ் கூட்டமைப்பு மேலும் வலது பக்கம் மாற்றம் எடுப்பதையே சுட்டிக்காட்டுகின்றன. முன்னர், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாக காட்டிக்கொண்டிருந்தபோது, தமிழ் கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாதுகாப்பு படைகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று அவ்வப்போது அழைப்பு விடுத்து வந்துள்ளது.

தமிழ் கூட்டமைப்பு தலைவர் டிசம்பர் 7 ஆற்றிய உரை, இராணுவ ஆக்கிரமிப்புக்கும் அதன் அடக்குமுறை நடவடிக்கைக்கும் எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்புக்களுக்கு மறுபக்கமாக அமைந்திருந்தது. நவம்பர் 26 மற்றும் 27ம் திகதிகளில், புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பலியானவர்களை நினைவு கூர்ந்த மாணவர்கள் குழுவைத் தடுப்பதற்காக, இராணுவம் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்தது. சிப்பாய்கள், மாணவர்கள் மீது சரீரத் தாக்குதல் நடத்தியதோடு பல மாணவர்களை தடுத்து வைத்திருந்தனர். தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிக்குமாறு கோரி மாணவர்களும் பல்கலைக்கழக ஆசிரியர்களும் தொடர்ச்சியான எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

சம்பந்தனுடைய சொந்த உரையே இராணுவ ஆக்கிரமிப்பின் விஸ்தீரத்தினை வெளிப்படுத்துகின்றது. வடக்கில் 15 படைப்பிரிவுகள் அல்லது 150,000 இராணுவச் சிப்பாய்கள் நிலை கொண்டுள்ளனர் அதாவது 3 பொது மக்களுக்கு 1 சிப்பாய் வீதம்.  மேலும் 2 படைப்பிரிவுகள் கிழக்கில் நிலை கொண்டுள்ளன. இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 551 வீடுகளை ஆக்கிரமித்துள்ளதுடன் தனியார் காணிகளில் 308 இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக, இராணுவம் வடக்கில் விவசாயச் செய்கைகளுக்காக நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகளை பறிமுதல் செய்துள்ளதுடன் 12,000 ஏக்கரில் இராணுவத்துக்கான 10,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகத்தினை இராணுவம் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது.

பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்கும் வேளையில், யுத்தத்தின் போது அகதிகளான மற்றும் அனைத்தையும் இழந்துள்ள ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கான வீடமைப்பு திட்டம் மற்றும் சேவைகள் போன்ற அடிப்படை வசதிகளைக் கூட வழங்குவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.

சம்பந்தன் தனது உரையில் பிரகடனம் செய்ததாவது:புலிகளை தமிழ் மக்கள் உருவாக்கவில்லை மாறாக தொடர்ந்து ஆட்சிக்கு வந்த நாட்டின் அரசாங்கங்களே உருவாக்கின. புலிகளின் தோற்றத்துக்கு நியாயமான காரணங்கள் இருந்தன. அதனாலேயே அது ஒரு பயங்கரவாத இயக்கமாக ஆகி தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள தலைவர்கள் மற்றும் பொது மக்களையும் கொலை செய்ய ஆரம்பித்திருந்தது.”

நிச்சயமாக, தொடர்ந்து ஆட்சியிலிருந்த அரசாங்கங்கங்களின் தசாப்தக் கணக்கான அடக்குமுறைகளும் உத்தியோகபூர்வ பாகுபாடுகளுமமே தமிழ் இளைஞர்கள் மத்தியில் பகைமையையும் சீற்றத்தையும் உருவாக்கிவிட்டது. அதுவே புலிகள் மற்றும் மற்றைய பிரிவினைவாத ஆயுதக் குழுக்களும் தோன்றுவதற்கு வழியமைத்தது.

எவ்வாறாயினும், புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்புஎன முதன் முலாக குறிப்பிட்டமை, சம்பந்தனின் உரையில் மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும். புலிகள் ஒருபயங்கரவாத அமைப்புஅல்ல, மாறாக, அது தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு முதலாளித்துவ தமிழ் அரசினை நிறுவுவதற்காகப் போராடிய ஒரு குட்டி முதலாளித்துவ தமிழ் தேசியவாத அமைப்பாகும். நிராயுதபாணிகளான முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் மீதான அதன் வன்முறை தாக்குதல்கள், அதன் இனவாத அரசியலின் உற்பத்தியேயாகும். அந்த இனவாத அரசியலினால் அது கொழும்பு அரசாங்கத்தின் மொத்தக் குற்றச் செயல்களுக்கும்சிங்கள் மக்களைபோலியாக குற்றம் சுமத்தியது.

இலங்கை அரசாங்கம் மற்றும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய சக்திகள் பயன்படுத்திக் கொண்டிருக்கும்பயங்கரவாதம்என்ற கலைச்சொற்களை பின்பற்றுவதன் மூலம், தமிழ் கூட்டமைப்பு தன்னை வேண்டுமென்றே புலிகளிடம் இருந்து தூர வைத்துக் கொள்ள முயல்வதுடன் அதன் மூலம் அது தனது அரசியல் நம்பகத் தன்மையை நிரூபிக்கின்றது. குறிப்பாக தமிழ் கூட்டமைப்பு கொழும்பு அரசாங்கத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசாங்கங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை வழங்கும் ஒரு அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கைக்கு சர்வதேச ஆதரவை பெறுவதற்கு முயற்சிக்கின்றது.

இன்று வரை, அமெரிக்கா மற்றும் இந்தியாவும் முரண்பாட்டினை முடிவுக்கு கொண்டு வருவதற்காகஅரசியல் தீர்வைகாணுமாறு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்ற போதிலும், தமிழ் கூட்டமைப்புக்கு ஆர்வமற்ற ஆதரவை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம், அமெரிக்கா, இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தினை சீன உறவில் இருந்து தூர விலக்குவதற்காக, “மனித உரிமைவிடயத்தினை சுரண்டிக் கொள்கின்றது. அமெரிக்க, இந்தியா இரண்டும் இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்துக்கு ஆதரவளித்ததுடன், சரியாக புலிகளின் தோல்வி வெளிப்படையாகும் வரை இராணுவத்தின் யுத்தக் குற்றம் சம்பந்தமாக மௌனம் காத்தன.

அதிகாரப்பகிர்வுக்காக வாஷிங்டன் மற்றும் புதுடில்லியின் ஆதரவைப் பெறுவதற்கு கூட்டமைப்பு எதை வேண்டுமானாலும் செய்யும் என்பதையே சம்பந்தனின் பேச்சு விவரிக்கின்றது. வடக்கில் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்துவதன் மூலம், ஏறத்தாழ பொலிஸ் அரசாக இருக்கப் போகின்ற ஒன்றுக்கு தமிழ் கூட்டமைப்பு சிவில் ஆட்சி என்ற போலித் தோற்றத்தை வழங்கத் தயாராக உள்ளது. நூற்றுக் கணக்கானபுலி சந்தேக நபர்கள்எதுவிதமான விசாரணைகளுமற்று தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற மற்றும் அரசாங்க-சார்பு கொலைக் குழுக்கள் தமது கடத்தல்கள் மற்றும் படுகொலைகளை தொடர்கின்ற ஒரு சூழ்நிலையிலேயே இது இடம்பெறுகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி, அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினைப் போல், உள்நாட்டு யுத்தத்தினை இடைவிடாது எதிர்த்ததுடன் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து ஆயுதப் படைகளை நிபந்தனையின்றியும் உடனடியாகவும் வெளியேற்றுமாறு கோரிய ஓரேயொரு அரசியல் கட்சியாகும். சோசலிச சமத்துவக் கட்சி, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் சிங்கள இனவாதம், புலிகளின் தமிழ் பிரிவினைவாதம் ஆகிய இரண்டையும், அதேபோல் சகல விதமான தேசியவாத வேலைத் திட்டங்களையும் எதிர்ப்பதுடன், ஒரு சோசலிச மற்றும் அனைத்துலக முன்னோக்கின் அடிப்படையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக அரசியல் ரீதியில் போராடி வருகின்றது.

தெற்காசிய ஐக்கிய சோசலிசக் குடியரசுகளுக்கான பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்காகப் போராடுவதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் ஆதரவை அணிதிரட்ட தொழிலாள வர்க்கத்துக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.