World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Indian establishment mourns founder-leader of fascist Shiv Sena

இந்திய ஆளும்வர்க்கம் பாசிச சிவசேனாவின் நிறுவன தலைவருக்கு துக்கம் அனுசரிக்கிறது

By Nanda Wickremasinghe
15 December 2012
Back to screen version

இந்திய அரசியல் மற்றும் வணிக ஆளும்வர்க்கத்தினர் பாசிச சிவசேனாவின் நிறுவனர் தலைவர் பால்தாக்கரே 86 வயதில் இறந்ததை அடுத்து ஒரு அனுதாபம் மிக்க மரணச் சடங்கினை நடாத்தியமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இது இந்து வலதுசாரி மேலாதிக்கவாதப் போக்குடன்  இந்தியாவின் ஆளும் வர்க்கம் தசாப்தங்களாக பிண்ணிப்பிணைந்திருப்பதையும் வெளிப்படையாக எடுத்துக்காட்டியுள்ளதுடன்,  மேலும் கிளர்ந்தெழும் சமூக அதிருப்தியை ஒடுக்க இந்தியாவின் ஆட்சியாளர்கள் வன்முறை மற்றும் சர்வாதிகார வழிமுறைகளைப் பயன்படுத்துவார்கள் என உழைக்கும் மக்களுக்கான ஒரு எச்சரிக்கையையும் உள்ளடக்கியுள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களில் ஒரு மராத்தி மற்றும் இந்து மத பேரினவாதக் கட்சியான சிவசேனா (SS) மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிராவை அடித்தளமாகக் கொண்டுள்ளது. இது நச்சுத்தன்மை வாய்ந்த இந்துத்துவ வகுப்புவாத கருத்தியலை கொண்ட பாரதிய ஜனதாக் கட்சியுடன் (BJP) நெருங்கிய கூட்டணியை வைத்திருகின்றது. ஆனால் சிவசேனா நிறுவப்பட்டபோதும் பின்னர் அதை தொடர்ந்த பல ஆண்டுகளாகவும் காங்கிரஸ் கட்சித் தலைமையின் ஆதரவை பெற்றிருக்கின்றது. நாட்டின் நிதி மற்றும் வர்த்தக மையமாகவும், தொழிலாளர்களின் போர்க்குணத்தின் ஒரு பாரம்பரியமிக்க கோட்டையுமான மும்பாயில், தொழிலாளர்கள் மற்றும் இடதுசாரிகள் அமைப்புக்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்த காங்கிரஸ் சிவசேனாவை பயன்படுத்தியது.

மும்பையின் மத்திய பகுதியிலுள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற்ற அரச ஈமச்சடங்கில் பாராளுமன்றம் இரங்கலைத் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்திய நிறுவனங்களின் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத்தினரும் கலந்துகொண்டு முதலாளித்துவ ஆட்சிமுறைக்கு இந்த பிராந்தியவாத இந்து பேரினவாத அரசியல்வாதியின் ஆதரவின் முக்கியத்துவத்தை பற்றி புகழ்ச்சிமிக்க கருத்துகளை தெரிவித்தனர். மகாராஷ்டிராவின் காங்கிரஸ் முதலமைச்சர் பிரித்விராஜ் சவாண், மகாராஷ்டிராவின் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐ.மு.கூ) அரசாங்கத்தின் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், பாரதிய ஜனதாக் கட்சியின் அதிஉயர் மட்டத்தில் உள்ளவர்கள், முக்கிய நடிக பிரபலங்கள், மேலும் வணிக அதிபர் பில்லியனர் அனில் அம்பானி உட்பட பெருநிறுவனத் தலைவர்கள் தாக்கரேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் சமீபகாலம்வரை இரண்டாவது முக்கிய நபராக இருந்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ”தாக்கரேயின் இறப்பு இந்தியா மற்றும் மகாராஷ்டிரா மக்களுக்கு ஒரு இழப்பு ஆகும்என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். தாக்கரேயின் நச்சுத்தன்மையான பிராந்திய பேரினவாதத்தை நியாயப்படுத்திய பிரதமர் மன்மோகன் சிங், சிவசேனாவின் பலம்வாய்ந்த மனிதனுக்கு மகாராஷ்டிராவின் நலன்கள் குறிப்பாக முக்கியத்துவமானதாகவும், மாநிலத்தின் மக்களிடம் மதிப்புமிக்க ஒரு உணர்வை பதிய வைப்பதற்கு அவர் எப்போதும் போராடினார்”. என்றார்.

சிவாஜி பூங்காவிற்கு கூட்டமாக சென்ற குழப்பமடைந்த மற்றும் நோக்குநிலையற்ற ஏழைகள் தாக்கரேயின் நச்சுத்தன்மையான  பிரச்சாரங்களின் பயனாளிகளாக இருக்கவில்லை. ஆனால் அதனால் பயனடைந்தவர்கள் பணக்கார மற்றும் சலுகைபடைத்தவர்களாகும். இந்திய நிறுவனத் தலைவர்களிடமிருந்தும் தாக்கரேயிற்கு கிடைத்த ஏராளமான பாராட்டுக்களில் இவர்கள் அவர் தமக்கு வழங்கிய சேவைகளை மட்டும் நினைவுகூரவில்லை மாறாக இந்த வார்த்தைஜாலக்காரனும் மற்றும் குண்டருடனான அவர்களின் சொந்த விருப்பத்திற்குரிய கடந்தகால ஞாபகங்களையும் நினைவுகூர்ந்தனர்.

பஜாஜ் வாகன தலைவர் ராகுல் பஜாஜ், பஜாஜ் தொழிற்சாலையின் ஒரு தொழிற்துறையில் ஏற்பட்ட பிரச்சனையின்போது அதை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சிவசேனா மூலம் எவ்வாறு உதவினார் என்றும் மேலும் கூடுதலாக அவருடனான இரவு உணவுவேளைகளில் மற்றும் சில மதிய உணவுகளிலும் முழுமையாக அனுபவித்து நிறையக் கற்றுள்ளேன்என்பதை நினைவுகூர்ந்திருந்தார். மற்றொரு பெரிய வாகன நிறுவன முதலாளியான மஹிந்திராவின் தலைவர் ஆனந்த மஹிந்திரா தாக்கரே மதிக்ககூடிய மற்றும் பயப்படவேண்டிய என இரண்டு நிலையில் இருந்தார் என கூறியுள்ளார்.

இந்திய முதலாளித்துவத்திற்கு தாக்கரேயின் சேவைகளை பாராட்டும் தெளிவான அடையாளமாக மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தால் மும்பையில் தாக்கரேயின் அரச இறுதி ஊர்வலத்தின்போது ஒரு பந்த் (முழுக் அடைப்பு) ஏன் நடத்தப்படவேண்டும் என்று தனது பேஸ்புக் கருத்து தெரிவிக்கும் பகுதியில் கேள்வி எழுப்பியிருந்த இரண்டு இளம் யுவதிகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து ஒரு யுவதியின் மாமனாருக்கு சொந்தமான மருத்துவமனையை சுமார் 2000 சிவசேனாவின் வலுவான கும்பல் தாக்கி சூறையாடியது.

17ம் நூற்றாண்டு மராத்திய போர்வீரன் சிவாஜியின் படையின் மொழிரீதியான அர்த்தத்தை கொண்ட சிவசேனாவின் சித்தாந்த வேர்களை சமயுக்தா மகாராஷ்டிரா (ஐக்கிய மகாராஷ்டிரா) இயக்கத்தில் கண்டுகொள்ளலாம். இவ்வியக்கம் மராத்தி மொழியை அடிப்படையாகவும் மும்பையை (பாம்பே என்று அழைக்கப்பட்டிருந்தது) தலைநகராமாக கொண்டு மகாராஷ்டிராவை ஒரு தனி மாநிலமாக பிரித்துக்கொள்ளும் பிரச்சாரத்தை செய்தது. 1956 இல் நிறுவப்பட்ட சம்யுக்தா மகாராஷ்டிரா குழு 1947 ன் இனவாத பிரிவு மூலமும் ஜனநாயக புரட்சி ஒடுக்கப்பட்டதன் மூலமும் உருவாக்கப்பட்ட இந்திய அரசினுள் பெரும்பான்மையாக மராத்தி மொழி பேசுகின்ற மக்களை ஒன்றிணைக்கும் ஒரு பதாகையின் கீழ் மேம்போக்காக இடது மற்றும் வலதுசாரி சக்திகள் மற்றும் இந்து மகாசபையின் மோசமான வகுப்புவாதிகளை ஐக்கியப்படுத்தியிருந்தது. தாக்கரேயின் தந்தை பிரபோதாங்கர் தாக்கரே சம்யுக்தா மகாராஷ்டிரா குழுவின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.

பிற்போக்குத்தனமாக மராத்தி மொழி மாகாணவாதத்தை ஊக்குவிக்கவும் நியாயப்படுத்தவும் தற்போதைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் இன் ஸ்தாபகர்களான இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின்(சிபிஐ) முக்கிய தலைவர்கள் உட்பட பங்காற்றியுள்ளார்கள்.

மே 1960 இல் மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பின்னர், பால் தாக்கரே தீவிர வலதுசாரி கருத்துக்களை முன்னெடுப்பதற்கு மர்மிக் (Marmik) எனும் மராத்தி வாரப் பத்திரிகையை தொடங்கியிருந்தார். அத் தொடக்கநாள் விழாவுக்காக சிறப்பு விருந்தினராக காங்கிரஸின் உயர்மட்டக் குழு தலைவர் வை.பி.சவான் கலந்துகொண்டிருந்தார். ஆரம்பத்திலிருந்தே மும்பாய் பொருளாதாரத்தின் மீதான குஜராத்தியர்கள் மற்றும் தென் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்பட்டதை தாக்கரே எதிர்த்து வந்தார்.

மகாராஷ்டிராவில் நகர்ப்புற குட்டி முதலாளித்துவ தட்டினரையே அவர்களது மோசமடையும் சமூக நிலைமைக்கான உண்மை காரணமாகிய முதலாளித்துவ ஆட்சி மீதான கோபத்தை, முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக இனவாத மத வெறுப்புக்களை நோக்கியும், ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும் திசைதிருப்ப 1966 இல் தொடங்கப்பட்ட தாக்கரேயின் சிவசேனாவானது சேவை செய்தது.

ஆரம்பத்தில் சிவசேனா தேர்தல்களில் போட்டியிடவில்லை அதற்குப்பதிலாக பொருளாதாரத்தில் விரக்தியுற்ற இளைஞர்களிலிருந்து குண்டர்கும்பல்களை அணிதிரட்டுவதன் மூலம் மும்பை முழுவதிலும் தனது அதிகாரத்தை நிலைநாட்ட முழுமுயற்சியில் ஈடுபட்டது. சிவசேனா தொண்டர்கள் தென்னிந்தியர்களின் மீது தாக்குதல் செய்யவும், தென்னிந்தியர்களின் உணவகங்கள் மற்றும் வர்த்தமையங்களை சூறையாடவும் மேலும் மாரத்தியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நிர்பந்திக்கவும் இலக்குகொண்டு செயற்பட்டனர். கூடவே அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், பேரணிகள் மற்றும் அலுவலகங்கள் மீதான தாக்குதல்களையும் செய்தனர்.

1970 மே இல், தாக்கரே மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டிவிட்டிருந்தார். அதில் 82 பேர்கள் கொல்லப்பட்டார்கள் பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்டன. மீண்டும் 1984 மே இல் பிவாண்தி (Bhiwandhi) யில் அதைப்போன்றதொரு இனவாத பிரச்சாரத்தின் விளைவாக 278 பேர் கொல்லப்பட்டதுடன் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

தாக்கரே, அடோல்ப் ஹிட்லரின் ஒரு அப்பட்டமான ரசிகரும், ஜனநாயகத்தின் வெளிப்படையான எதிரியாகவுமிருந்தார். தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கும்பல்களை கிளப்ப மராத்திய பிராந்தியவாதத்தையும், முஸ்லிம்களுக்கு எதிரான சோவினிசத்தையும் பயன்படுத்தினார். மேலும் இதன் மூலம் அவர் வணிக இல்லங்களின் மற்றும் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்திய  காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவை பாதுகாத்துக்கொள்ள முடிந்தது.

சிவசேனா மராத்தி மொழி பேசக்கூடியவர்களை மட்டும் உறுப்பினர்களாக கொண்டு காம்கர் சேனா (Kamgar Sena - KS) எனும் சொந்த தொழிற்சங்கத்தை அமைத்துக் கொண்டது. இது மராத்தி மொழி பேசுபவர்களை பணியிலமர்த்துவதற்கான அழுத்ததைக் கொடுத்தது. ஸ்ராலினிசவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட தொழிற்சங்கங்களை முறியடிக்க விரும்பிய காங்கிரஸ் நிர்வாகமும் வணிக உயரடுக்கும் காம்கர் சேனாவை ஆதரித்தன.  தொழிலாளர்களுக்கும் குண்டர்களுக்குமிடையில் பகிரங்கமான உடலியல்ரீதியாக மோதல்கள் உருவாகியபோது, காங்கிரஸ் மூலம் தாக்கரேயும் கூட்டாளிகளும் குற்றவியல் வழக்குகளிலிருந்து பாதுகாப்பைபெறும் உத்தரவாதத்தை பெற்றிருந்தனர்.

1975 யூன் மாதம் காங்கிரஸ் பிரதம மந்திரி இந்திராகாந்தியை சிவசேனா ஆதரித்திருந்தது. அப்போது அவர் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி அடிப்படை ஜனநாயக உரிமைகளை அடக்கியதுடன் பத்தாயிரக்கணக்கான தொழிற்சங்கத்தினர்களையும் இடதுசாரிகளையும் மற்ற அரசியல் எதிராளிகளையும் கைதுசெய்திருந்தார். 1977 மற்றும் 1980 இன் தேசிய தேர்தல்களிலும் காங்கிரசை இது ஆதரித்தது.

1982 ஜனவரியில் சம்பள உயர்வு கோரி மும்பையில் 50க்கு மேற்பட்ட ஜவுளி ஆலைகளின் 250,000க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அதை சிவசேனா வெளிப்படையாக எதிர்த்ததுடன் வேலைநிறுத்தத்தை முறியடிப்பதிலும் காட்டிக்கொடுப்பிலும் ஈடுபட்டது. இறுதியாக அந்த வேலைநிறுத்தம் தோற்கடிக்கப்பட்டதுடன் தொடர்ந்த பல ஆண்டுகளில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வேலைகளை இழந்தனர்.

1990 இன் ஆரம்ப காலத்தில் ஸ்ராலினிஸ்டுகளின் ஆதரவுடன் இருந்த நிலைமைகளில் கீழ் நரசிம்மராவ் உடைய காங்கிரஸ் அரசாங்கம் இந்திய முதலாளித்துவ அரசு தலைமையிலான அபிவிருத்தி மூலோபாயத்தைக் கைவிட்டு சமூக செலவினங்களைக் வெட்டி கட்டுப்பாடுகளை நீக்கி ஒரு புதிய தாராளவாத தனியார்மயமாக்கும் திட்டத்தை ஆதரித்திருந்தது. பாரதிய ஜனநாயக கட்சி உட்பட மற்ற இந்து மத பேரினவாத சக்திகளோடு இணைந்து பிற்போக்குவாதத்தை முன்னெடுக்கவும் தொழிலாள வர்க்கத்தை பிரிப்பதற்கு சிவசேனா ஒரு தீவிர இனவாத பிரச்சாரத்தை கையிலெடுத்தது. 1992 டிசம்பரில் இந்த பிரச்சாரம் அயோத்தியில் பாபரி மசூதியை இடித்து தள்ளுவதில் முடிவடைந்தது. இது பிரிவினைக்கு பின்னர் பாரியளவு வகுப்புவாத வன்முறை அலையை தூண்டிவிட்டது. சிவசேனா மும்பையிலும் மகாராஷ்டிராவின் மற்ற பகுதிகளிலும் முஸ்லிம் எதிர்ப்பு இனமோதல்களை தூண்டிவிட்டது. இது மார்ச் 1993 வரை பரவியதுடன் 900 பேர்வரை இதனால் இறந்துள்ளனர்.

1995 மார்ச்சில் மகாராஷ்டிராவில் சிவசேனா முதலமைச்சர் மனோகர் ஜோஷியுடனும் துணை முதலமைச்சர் பாரதிய ஜனநாயக கட்சியின் கோபிநாத் முண்டெயுடனும் சேர்ந்து அரசாங்கத்தை உருவாக்கியது. 1998 இலிருந்து 2004 வரை சிவசேனா டெல்லியில் பாரதிய ஜனநாயக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி (NDA) அரசாங்கத்தில் ஒரு கூட்டாளியாக இருந்துள்ளது. இவ்வரசாங்கம் ராவ் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சந்தைசார்பு பொருளாதார சீர்திருத்தங்களை முன்னோக்கி எடுத்துச்சென்றுகொண்டிருந்தது.

முதலாளித்துவத்திற்கு தொழிலாள வர்க்கத்தை திட்டமிட்டபடி அடிபணியவைப்பதனூடாக மகாராஷ்டிராவில் சிவசேனா ஒரு முன்னணிக் கட்சியாக வருவதற்கு ஸ்ராலினிச சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியன முக்கிய பங்காற்றியுள்ளன. பல பத்தாண்டுகளுக்கு முன்னர், நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தேசிய முதலாளிகளுடன்முற்போக்கான பிரிவுகளுக்கு ஆதரவு என்ற பெயரில் இதுபோன்ற கூட்டுக்களை நியாயப்படுத்தினர். இப்பொழுது அவர்கள் இந்துமத மேலாதிக்கவாத பாரதிய ஜனநாயக கட்சி மற்றும் சிவசேனா அதிகாரத்தை எடுப்பதிலிருந்து தடுப்பது என்ற பெயரில் காங்கிரஸ் கட்சிக்கும் மற்றும் பிராந்தியவாத மற்றும் சாதியவாத கட்சிகளுக்கு ஆதரவை நியாயப்படுத்துகிறது.

அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது 1974 ரெயில் வேலைநிறுத்தத்தை முறியடிப்பதற்கு இந்திராகாந்தி அரசாங்கத்துடன் சிபிஐ பங்குபற்றியது. அதே காலகட்டத்தில் சிபிஎம் பாரதிய ஜனநாயக கட்சியின் முன்னோடியான முக்கிய பாத்திரம் வகித்த ஜன சங் போன்ற காங்கிரஸ் இல்லாத முதலாளித்துவ கட்சிகளுடன் தற்காலிக கூட்டணி அமைத்துக்கொண்டு தொழிலாள வர்க்கத்தை ஜனதா கட்சிக்கு அடிபணியச் செய்தது.

நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறை என முழு அரசியல் ஸ்தாபனத்துடனும் மோதலுக்கு இட்டுச்செல்லுமென்பதால் சிவசேனாவின் குண்டர் வன்முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட இவ்விரு கட்சிகளும் நிராகரித்தன.

ஸ்ராலினிசவாதிகள் தேசிய மற்றும் பிராந்திய மட்டத்தில் முதலாளித்துவ கட்சிகளை அரசியல்ரீதியாக எதிர்ப்பதிலிருந்து தொழிலாள வர்க்கத்தை தடுத்து, முதலாளித்துவ ஆட்சிக்கு தனது சொந்த தீர்வை முன்னெடுப்பதில் தவறிழைத்து சிவசேனா போன்ற வலதுசாரி மற்றும் பாசிச கட்சிகளுக்கும் குட்டிமுதலாளித்துவ பிரிவுகளின் விரக்தியை சுரண்டுவதற்கும் கதவினைத் திறந்துவிட்டுள்ளது.

தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கும் வழிமுறையாக இந்திய முதலாளித்துவ வர்க்கத்தால் எப்படி இனவாதம் மற்றும் இனக்குழு அரசியல் வளர்க்கப்பட்டது என்பதை தாக்கரேயினுடைய அரசியல் பாதை விளக்கமாக எடுத்துக்காட்டுகின்றது. இது காங்கிரஸினுடைய பங்கிற்கு உதாரணமாகவும் உள்ளது. மதச்சார்பின்மைக்கு அரணாக இருப்பதை விட்டு, இந்து வலதுக்கு ஆதரவழித்து அனைத்து உதவிகளையும் செய்தது.