World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

New US drone attacks in Pakistan and Yemen

பாக்கிஸ்தானிலும் யேமனிலும் புதிய அமெரிக்க டிரோன் தாக்குதல்கள்

By Patrick O’Connor
4 January 2013
Back to screen version

2013 இன் முதலாவது அமெரிக்க ஆளில்லா விமான (டிரோன்) தாக்குதல்களை குறிக்கும் வகையில் ஒபாமா நிர்வாகம் இரு தனி ஏவுகணைத் தாக்குதல்களை பாக்கிஸ்தானிலும் யேமனிலும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடத்த உத்திரவிட்டது.

சமீபத்திய தாக்குதல்கள், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகள் திரும்ப இருப்பது மத்திய கிழக்கு முழுவதும் சட்டவிரோத டிரோன் செயற்பாடுகளோடு இணைந்திருக்கும் என்பதைத்தான் நிரூபிக்கின்றன. குறைந்தப்பட்சம் 16 பேர் இவற்றில் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது; இவர்கள் தாலிபன் மற்றும் அல்குவேடா போராளிகள் என்றும் கூறப்படுகிறது; ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றியும் விவரங்கள் இன்னும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன, வாஷிங்டன் வாடிக்கையாக டிரோன் தாக்குதல்களில் குடிமக்கள் கொலை செய்யப்படுவதை மூடி மறைக்கிறது.

புதன் இரவு, கிட்டத்தட்ட 10:40 உள்ளூர் நேரப்படி, பாக்கிஸ்தானிய தாலிபன் தலைவர் மௌல்வி நசீர், முல்லா நசீர் என்றும் அறியப்படுபவர், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டி இருக்கும் பழங்குடிப் பிராந்தியத்தில், தெற்கு வஜீரிஸ்தானில் கொல்லப்பட்டவர்களுள் இருந்தார். சமீபத்திய ஆண்டுகளில் படுகொலையுண்டவர்களில் மிக முக்கியமான நபர்களுள் நசீரும் ஒருவராவார். இவர் வஜீரிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள நான்கு தாலிபன் படைப்பிரிவுகளில் ஒன்றிற்குத் தலைமை தாங்கியிருந்தார்.

தாக்குதல் பற்றிய கூற்றுக்கள் இரண்டு வந்துள்ளன; ஒன்றின்படி அவர் தெற்கு வஜீரிஸ்தானில் மிகப் பெரிய நகரான வானவிற்கு அருகே பயணித்தபோது ஒரு வாகனத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் மற்றொரு தகவல்படி அவர் வானாவிற்கு அருகே ஒரு வீட்டில் தாக்குதலுக்கு உட்பட்டு இறந்தார் என்றும் கூறுகின்றன. மற்றும் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்தும் தகவல்கள் வேறுபடுகின்றன; சில ஆதாரங்கள் கூடுதலான எட்டு அல்லது ஒன்பது பேர் இறந்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன.

நசீரின் மூத்த உதவியாளர்களான அட்டா உல்லா மற்றும் ராபே கான் இருவரும் கொல்லப்பட்டவர்களுள் இருந்தனர் என்பதை பெயரிடப்படாத பாக்கிஸ்தானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த ஆதாரங்கள் நசீரின் தாலிபன் நண்பர்களும் கொல்லப்பட்டனர் எனக் கூறுகின்றன. இவர்களின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது; நசீரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தெற்கு வஜீரிஸ்தானில் பகுதிகளில் சந்தைகளும் கடைகளும் மூடப்பட்டன.

நேற்று மற்றும் இரு டிரோன் தாக்குதல்கள் வடக்கு வஜீரிஸ்தானில் நடத்தப்பட்டு தாலிபன் போராளிகள் எனக் கூறப்படும் நான்கு பேரைக் கொன்றன; இவர்களில் இருவர் உஸ்பெக் குடிமக்கள் ஆவர்; அவர்கள் ஒரு காரில் பயணித்தபோது தாக்குதல் நடைபெற்று அருகில் இருந்த மக்கள் சடலங்களை மீட்க முற்பட்டபோது இரண்டாம் சுற்று டிரோன் ஏவுகணைகள் தாக்குதல் நடைபெற்றது என்று பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதன் விளைவாக இன்னும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனரா என்பது குறித்துத் தெரியவில்லை.

வடக்கு வஜீரிஸ்தானில் இக்கொடுமை நடந்த அன்றே, அரேபியத் தீபகற்பத்தில் அல் குவேடா உறுப்பினர்கள் எனக் கூறப்பட்ட மூவர் தெற்கு யேமன் மாநிலமான அல் பேடாவில் உள்ள ரீடாவில் ஒரு காரில் பயணிக்கையில் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 2 அன்று மூன்று குழந்தைகள் உட்பட 11 குடிமக்கள் அமெரிக்க டிரோன் தாக்குதலில் ரீடாவில்தான் கொல்லப்பட்டனர்.

சமீபத்திய தாக்குதலை ஒரு யேமன் விமானம் நடத்தியது என்று யேமன் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியதை ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டுள்ளது; ஆனால் அவர் கூறியதை அமெரிக்க டிரோன் நடத்தியதைக் கண்ட மக்கள் அக்கூற்றை நிராகரித்தனர். சமீபத்திய நாட்களில் வாஷிங்டன் தொடர்ந்த டிரோன் தாக்குதல்களை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது; அதன் கைக்கூலியான ஜனாதிபதி மன்சூர் அலி ஹடியின் முழு ஆதரவுடன் இது நடத்தப்படுகிறது. (See US drone strikes continue in Yemen .)

பென்டகனின் செய்தித் தொடர்புச் செயலர் ஜோர்ஜ் லிட்டில் மௌல்வி நசீரைக் கொன்ற டிரோன் தாக்குதல் குறித்து நிருபர்களிடம், புகைப்படத்தைத் தவிர்த்துப் பேசினார். அமெரிக்கப் பொறுப்பை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாமல், அவர் கூறினார்: “தகவல்கள் உண்மை என்றால், இது ஒரு கணிசமானதாக்குதல், மிகவும் பயனுடையதாக இருக்கும்; அமெரிக்காவிற்கு மட்டுமின்றி, நம் பாக்கிஸ்தானிய, ஆப்கானிய பங்காளிகளுக்கும்.... இவர் தன் கையில் பெரும் குருதிக் கறையை கொண்டுள்ள ஒரு நபர் ஆவார்.”

ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் யேமனில் தொடர்ந்த குருதி கொட்டலுக்கு உண்மையில் ஜனாதிபதி பாரக் ஒபாமாதான் பொறுப்புக் கொள்ள வேண்டும். வாஷிங்டன் தற்பொழுது நடைமுறையில் சிரிய அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் போராளிக்குழுக்களில் தொடர்பு கொண்டுள்ள அல் குவேடவுடன் நட்புக் கொண்டிருந்தாலும்கூட, “பயங்கரவாதத்தின் மீதான போர்” எனப்படுவது இன்னும் மத்திய கிழக்கு முழுவதும் அதன் இராணுவச் செயற்பாடுகளுக்குப் போலிக் காரணமாகத்தான் உள்ளது.

டிரோன் தாக்குதல்களால் இறந்தவர்கள் குறைந்தப்பட்சம் 2,500 பேராவது இருக்கலாம் என்று நவம்பர் மாதம் நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இது ஒரு கணிசமான குறைமதிப்பீடாகவே இருக்கும்.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட BIJ எனப்படும் புலன் விசாரணை செய்யும் இதழியல் அலுவலகம், ஆகஸ்ட் 2011 ஐ ஒட்டி பாக்கிஸ்தானில் மட்டும் டிரோன் தாக்கதல்களால் 2,347 பேர் கொல்லப்பட்டனர் என்று கணக்கிட்டுள்ளது. இந்த மொத்தத்தில் 175 குழந்தைகள் உட்பட குறைந்தப்பட்சம் 392 சாதாரண குடிமக்கள் உள்ளனர். ஒபாமா நிர்வாகம் குடிமக்கள் இறப்புக்களைக் கணக்கிடுவதில்லை; ஒருதலைப் பட்சமாக ஒரு டிரோனின் இலக்குப் பகுதியில் இருக்கும் அனைத்து ஆண்களையும்போராளிகள்என்று வேறுவிதமாக நிரூபிக்க முடியாத நிலையில் முத்திரையிடுகிறது.

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் இலக்கு கொள்ளுவதில்லை என்ற உறுதிமொழியைக் கொண்ட உடன்பாடு ஒன்றில் பாக்கிஸ்தானிய இராணுவத்துடன் கையெழுத்திட்டுள்ள பாக்கிஸ்தானின் தாலிபன் பிரிவுகளில் ஒன்றிற்கு மௌல்வி நசீர் தலைமை தாங்கினார். வடக்கு வஜீரிஸ்தானில் மற்றொரு போராளிக்குழுவின் தலைவரான ஹபிஸ் குல் பகதூருடன் நசீர் உடன்பாட்டைக் கொண்டிருந்தார்; அந்த அமைப்பும் பாக்கிஸ்தானிய இராணுவத்துடன் சமாதான உடன்படிக்கையை கொண்டிருந்தது.

சில பாக்கிஸ்தானிய இராணுவத் தளபதிகள் இரு நபர்களையும் “நல்ல தாலிபன்கள்” என்று முத்திரையிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு அமெரிக்க நேட்டோ படைகளுக்கு எதிரான செயற்பாடுகளில் கலந்து கொள்ள நசீர் போராளிகளை அனுப்பி வைத்தார்; அதேபோல் பல அல்குவேடா தொடர்புடைய குழுக்களின் உறுப்பினர்களுக்கும் பாதுகாப்புக் கொடுத்தார்; அதே நேரத்தில் அவர் பாக்கிஸ்தானிய இராணுவத்துடனும் ஒத்துழைத்தார். 2009 இராணுவத்தின் தாக்குதல், போட்டி தாலிபன் பிரிவுகளுடன் நடந்தபோது அவர் இராணுவத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்தார். ஒபாமா நிர்வாகத்தின் அழுத்தத்தை ஒட்டி, இஸ்லாமாபாத் அரசாங்கம் அதைத் தொடக்கியிருந்தது.

போட்டி இஸ்லாமியப் போராளிக்குழுக்களின் தலைவர்களால் நசீர் இலக்கு வைக்கப்பட்டார்; அவை பாக்கிஸ்தானிய இராணுவம் மற்றும் அரசாங்க இலக்குகளை குறிவைத்தன. நவம்பர் மாதம் அவர் TTP எனப்படும் டெஹ்ரிக்--தாலிபன் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பித்தார்.

லண்டனின் டெலிகிராப் இன் ரோப் கிரில்லி குறிப்பிட்டார்: “கட்டுப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்று பிற போராளிக்குழுக்கள் போட்டியிடுகையில், இது ஒரு புதிய உறுதியற்ற நேரத்திற்கு கட்டியம் கூறலாம்... அமெரிக்க-பாக்கிஸ்தானிய உறவுகளில் இது என்ன பொருளைக் கொடுக்கும் என்ற பிரச்சினையும் உள்ளது. அவரை ஒன்றும் செய்யாமல் விட வேண்டும் என்பது பாக்கிஸ்தானுடைய நோக்கமாக இருந்திருக்கும்; அரசாங்கத்திற்கு அவர் ஓர் அமெரிக்க இலக்கு என்பது நன்கு தெரியும். எனவே இதன் விளைவு குறித்து வினாக் குறிதான் உள்ளது.”

அமெரிக்க இராணுவ மற்றும் நிதிய உதவியை நம்பியிருக்கும் பாக்கிஸ்தானிய அரசாங்கம் டிரோன் தாக்குதல்களை நாட்டின் இறைமையைத் தாக்குபவை என்று பகிரங்கமாக எதிர்க்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் வாஷிங்டனை அதைத் தொடர அனுமதிக்கிறது. நசீர் கொலை செய்யப்படுமுன் இஸ்லாமாபாத்தின் அரசாங்க, இராணுவ அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டனரா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒபாமா நிர்வாகம் சர்வதேசச் சட்டம் எப்படி இருந்தாலும், தனக்கு அமெரிக்கக் குடிமக்கள் உட்பட எவரையும் உலகில் எங்கும் கொல்லும் உரிமை உள்ளது எனத் தெளிவாக்கியுள்ளது.