World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

GM-Opel: German Left Party leader contacts US ambassador

GM-Opel: ஜேர்மன் இடது கட்சித் தலைவர் அமெரிக்கத் தூதருடன் தொடர்பு கொள்ளுகிறார்

By Dietmar Henning
4 January 2013
Back to screen version

டிசம்பர் 10ம் திகதி ஓப்பல் ஜேர்மனியில் போஹும் நகரில் இருக்கும் தன் துணை ஆலையை மூடப்போவதாக ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, இடது கட்சி தொழிலாளர்களின் எதிர்ப்பை நெரிப்பதற்கு அதன் சேவையை போஹும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கும், IG Metall தொழிற்சங்கத்திற்கும் மற்றும் ஜேர்மன், அமெரிக்க அரசாங்கங்களும் வழங்க முன்வந்துள்ளது.

உத்தியோகபூர்வமாக மூடல் பற்றிய அறிவிப்பு வருவதற்கு ஒரு வாரம் முன்பு, இடது கட்சியின் பாராளுமன்றத் தலைவர், கிரிகோர் கீஸி போஹும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் தலைவரான ரைனர் ஐனென்லை பகிரங்கமாகச் சந்தித்து தொழிற்சங்கங்களின் கொள்கைகளுடன் தன் முழு ஒற்றுமை உணர்வை அறிவித்தார்.

ஆலை மூடப்பட்டபின் இடது கட்சியின் பிரதிநிதி செவிம் டாக்டேலென் ஐரோப்பா முழுவதும் முன்னோடியில்லாத வகையில் சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டுள் ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கலிடம் கருணை காட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

“சான்ஸ்லர் அவர்களே, ஓப்பலை உங்கள் உயர் முன்னுரிமையாக்குக” என்று ஆலை பற்றி ஜேர்மனி பாராளுமன்றத்தில் டாக்டேலன் வலியுறுத்தினார்.

பேர்லினிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஊடாக ஓப்பல் குறித்து ஒபாமா நிர்வாகத்துடன் கீஸி தொடர்பு கொண்டுள்ளார் என்ற தகவல் வெளிப்பட்டுள்ளது. இதை ஒரு விருந்தினர் பத்தியில் கட்சிச் செய்தியேடான Neues Deutschland ல் டிசம்பர் 27 அன்று டக்டெலன் அறிவித்துள்ளார்.

 “கீஸி சரியான ஆரம்ப முயற்சி எடுத்து அமெரிக்க தூதரகத்துடன் தொடர்பு கொள்ள முற்பட்டுள்ளார்; ஏனெனில் GM இன் 25% உரிமை அமெரிக்க அரசாங்கத்திடம் உள்ளது என்று டாக்டேலன் எழுதியுள்ளார். “ஓப்பல் குறித்து அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்துவதற்கு தன் நல்ல உறவுகளைப் பயன்படுத்துமாறு பேர்லின் கோரப்படலாம்” என்றார் டாக்டேலன்.

இது இடது கட்சியின் பங்கு குறித்து நிறையவே கூறுகிறது. ஒபாமா நிர்வாகம் அமெரிக்கக் கார்த்தயாரிப்புத் துறையை “முற்றிலும் மறுசீரமைத்துள்ளது”. இப்பொழுது ஓப்பலில் கடைப்பிடிக்கப்படும் அதே கடுமையான நடவடிக்கைகளான உலகெங்கிலும் தொழிலாளர்களுடைய ஊதியங்கள், சமூகத்தரங்கள் தாக்கப்படுவதற்கு பயன்படுத்தப்படுபவைதான் ஒபாமா நிர்வாகத்தால் கடைப்பிடிக்கப்பட்டது. அமெரிக்க நிர்வாகம் நிதிய தட்டினரின் நலன்களின் பேரில் இயங்கியதே தவிர வாகனத்தொழிலாளர்களின் நலன்களுக்காக அல்ல.

ஒபாமா கார்த்துறைக்காக நியமித்த பணிக்குழு முக்கியமாக வோல் ஸ்ட்ரீட் பெரும்புள்ளிகளைக் கொண்டிருந்தது. சொந்தச் சொத்துக்களைக் கிட்டத்தட்ட 450 மில்லியனுக்குக் கொண்டுள்ள (அமெரிக்க$610 மில்லியன்) நிதி மேலாளரான ஸ்டீவன் ராட்னர்தான் இக்குழுவிற்கும் தலைவராக இருந்தார்.

ஒபாமாவின் பணிக்குழுவின்  முன்முயற்சியில், பல தசாப்தங்கள் கார்த் தொழிலாளர்கள் போராடிப் பெற்றிருந்த சமூக நலன்களை அழிப்பதற்கு அழிக்க வேண்டும் என்பதை அரசாங்க அதிகாரிகள் பிணையெடுத்தலின்போது கட்டாயப்படுத்தினர். உயர்ந்த ஊதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியங்கள், நலனகள், குழந்தைகளுக்கான கல்வி ஆகியவை இதில் அடங்கும். 14 ஆலைகள் மூடப்பட்டன, அதன் அமெரிக்கத் தொழிலாளர் பிரிவு 64,000 தொழிலாளர்கள் எனப் பாதியாகக் குறைக்கப்பட்டது. கார்த்தயாரிப்பை நம்பியிருக்கும் முழு நகரங்கள் வறுமையில் தள்ளப்பட்டன.

புதிதாக நியமிக்கப்படும் தொழிலாளர்களின் ஊதியங்களை GM பாதியாகக் குறைத்தது; மற்ற ஊழியர்களுக்கான ஊதியங்களைப் பல ஆண்டுகளாக அதே நிலையில் தேக்கமடைய செய்துள்ளது. இந்த முழு மூலோபாயத்திற்கும் அமெரிக்கக் கார்த்தொழிலாளர் சங்கத்தின் (UAW) ஆதரவு இருந்தது. இது இப்பொழுது IG Metall தொழிற்சங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்கிறது. ஏனைய விட்டுக்கொடுப்புகளுடன், 2015 வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில்லை என்ற உறுதிமொழியையும் UAW கொடுத்துள்ளது.

அமெரிக்கத் தூரகத்துடன் கீஸி நடத்திய விவாதங்களின் உள்ளடக்கத்தை பற்றி டாக்டேலன் ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால் இடதுகட்சித் தலைவர் ஒருவர் பாராளுமன்றத்திலிருந்து ஒரு சில மீட்டர்கள் தூரத்தில் மட்டுமே வசிக்கும் அமெரிக்கத் தூதரைக் காண முயலவது இது ஒன்றும் முதல் தடவை அல்ல.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் ஒன்றின்படி, கீஸி  அமெரிக்கத் தூதர் பிலிப் மர்பியுடன் பேச்சுக்களை நடத்தினார். மர்பி கோல்ட்மன் சாஷ்ஸில் 23 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தார். அப்பேச்சுவார்த்தைகள் நேட்டோ குறித்த இடது கட்சியின் கொள்கை பற்றியாகும். இடது கட்சி அட்லான்டிக் இராணுவ உடன்பாடு கலைக்கப்பட வேண்டும் எனக் கூறியதைக் கவனத்தில் கொள்ளவேண்டாம் ன்று கீஸி அமெரிக்கத் தூதருக்கு உத்தரவாதம் அளித்திருந்தார்.

மாறாக இத்தகை கோரிக்கைகள் கட்சியின் “இடதுபிரிவு பிரதிநிதிகளை” அமைதிப்படுத்தும் தந்திரோபாயங்கள் ஆகும். அத்தகை கோரிக்கை இல்லாத நிலையில் இடது கட்சியின் சில பிரிவுகள் இன்னும் ஆபத்தான திட்டமான நேட்டோவில் இருந்து ஜேர்மனி விலக வேண்டும் என்பதை எழுப்புவர். நேட்டோ கலைப்பு என்பது ஒருபொழுதும் ஆதரவைப் பெறாது. ஏனெனில் அதற்கு பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் ஒப்புதல் தேவைப்படும். நேட்டோ இருக்கும் வரை இடது கட்சி ஜேர்மனியின் அங்கத்துவத்தன்மைக்கு ஆதரவு தரும் என்று கீஸி மர்பிக்கு உறுதியளித்தார். (பார்க்கவும்: “WikiLeaks and the Left Party”)

முன்னாள் முதலீட்டு வங்கியாளர் மர்பியிடம் கீஸி இப்பொழுது என்ன கூறினார்? GM  நிர்வாகம் குறித்த இடது கட்சியின் குறைகூறல்கள் ஆலையின் மூடலுக்கான எதிர்ப்பைத் திசைதிருப்பும் வடிவமைப்பைத்தான் கொண்டுள்ளன என்றா? UAW வை அது நம்பியது போல் ஜேர்மன் IG Metall மற்றும் மேற்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (DKP) உடைய முன்னாள் உறுப்பினரான போஹும் தொழிற்சாலை தொழிலாளர் குழுத் தலைவர் னென்ல்லின் சேவையை நம்பலாம், இதற்குத் தேவையான அரசியல் மறைப்பு இடது கட்சியால் கொடுக்கப்படும் என்றா?

னென்லும் IG Metall உம் சமீபத்திய ஆண்டுகளில் பலமுறை ஊதிய, வேலை வெட்டுக்களுக்குச் பலமுறை ஒப்புக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் அத்தகைய விட்டுக்கொடுப்புகளை கொடுத்தற்கு கூறப்பட்ட விலை “ஆலையைக் பாதுகாத்து மீட்டல்” என்பதாகும். உண்மையில் தொழிற்சங்கம் கொடுக்கும் ஒவ்வொரு விட்டுக்கொடுப்பும் ஆலை மூடப்படுவதை ஒரு படி முன்னேதான் கொண்டுவந்தது.  2005 ஆரம்பத்தில் போஹும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கு தலைவர் என்ற பதவியை ய்னென்ல் எடுத்துக் கொண்டதில் இருந்து, மொத்த வேலைகளில் 70% அழிக்கப்பட்டுவிட்டன. இப்பொழுது எஞ்சியிருக்கும் 3,300 வேலைகளும் இல்லாதொழிக்கப்பட உள்ளன.

இதற்கிடையில், GM மற்றும் ஓப்பல் இரண்டும் இன்னும் தாக்குதல்களுக்கான தயாரிப்புக்களை நடத்துகின்றன. Der Spiegel ல் வந்துள்ள தகவல் ஒன்றின்படி, வரும் ஆண்டு தன் உற்பத்தியை ஓப்பல் இன்னும் மூடத்தான் உள்ளது. 2013ல் நிறுவனம் ஐரோப்பாவில 845,000 கார்களைத்தான் தயாரிக்கும். இது 2012 சரிவை விட 10% க்கும் மேலான சரிவை ஒத்திருக்கும். ஜேர்மனியில் ஓப்பல் மற்றும் இங்கிலாந்தில் வாக்ஸ்ஹாலிலும் உள்ள ஆலைகள் பாதித் திறனுடன்தான் உற்பத்தி செய்யும். இதன்  பொருள் இன்னும் ஆலை மூடல்கள் மற்றும் பணிநீக்கம் ஆகியவை தவிர்க்க முடியாதவை என்பதுதான்.

ஓப்பலின் திவால்தன்மையும் ஒரு விருப்பத் தேர்வுதான். Frankfurter Allegemeine Zeigung ல் டிசம்பர் 20 வந்துள்ள தகவல்படி, ஓப்பல் தன் ஐரோப்பியத் துணை நிறுவனங்களில் 6 ஐ விற்றுவிட்டது: “ஹங்கேரியில் சேன்ற்கொட்கார்ட்டில் உள்ள இஞ்சின் தயாரிப்பு ஆலை, ஆஸ்திரியாவில் ஆஸ்பெர்னில் மாற்றும் முறை உற்பத்தி ஆலை, இத்தாலியில் டூரினில் இருக்கும் அபிவிருத்தி மையம், போலந்தில் கிளிவைசில் இருக்கும் உற்பத்தி ஆலை, மற்றும் இங்கிலாந்து, ரஷ்யா ஆகியவற்றில் இருக்கும் மற்ற ஆலைகள் ஆகியவை இதில் அடங்கும்.”

அமெரிக்க GM திவால் ஆவதைத் தடுத்துக் காப்பதற்காக இந்த ஐரோப்பியத் துணை நிறுவனங்கள் GM ஆல் ஓப்பலுக்கு மாற்றப்பட்டன. இப்பொழுது  GM திவால்தன்மையை எதிர்கொள்ளவில்லை என்பதால், இந்த மாற்றமும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதன் பொருள் போஹும், ருஸ்ல்ஸ்ஹெய்ம், ஐசனாக், கைசர்ஸ்லௌட்ர்ன் என ஜேர்மனியில் இருப்பவை, மற்றும் ஸ்பெயினில் ஜரகோசாவில் இருக்கும் ஆலை, பிரித்தானியாவில் எல்ஸ்மியர் போர்ட்டில் இருப்பவைதான் எஞ்சியுள்ளன என்பதாகும்.

FAZ  அறிக்கை ஒன்றின்படி, முன்னாள் துணை நிறுவனங்கள் திரும்ப வருதல் என்பது ஓப்பலுக்கு GM கொடுத்துள்ள 2.5 பில்லியன் கடனுக்கான ஒரு நிபந்தனை ஆகும். ஓப்பல் திவாலானால், GM ஐரோப்பாவில் அதன் முக்கிய உற்பத்தி ஆலைகளின் பிரிவுகளை தக்க வைத்துக் கொள்ளும் என்று செய்தித்தாள் கூறுகிறது.

2011 இறுதியில், அமெரிக்க வங்கி மோர்கன் ஸ்டான்லி ஏற்கனவே ஓப்பல் திவாலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டது. இதனால் நிறுவனம் அதன் ஓய்வூதியக் கடமைகள் சிலவற்றை வழங்காமல் இருந்துவிட முடியும்.  அவை மொத்தம் 5 பில்லியன் யூரோக்களாக இருக்காலம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஓப்பல் மற்றும் கார்த்தொழில் முழுவதும் வேலைகளை பாதுகாப்பதற்கு ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயம் தேவைப்படுகிறது. வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நலன்கள் ஓப்பலின் மற்றும் GM நிர்வாகத்தின் முக்கிய கூட்டுக்கள், வங்கிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்ளுக்கு எதிராக நடத்தப்படும் ஒரு போராட்டத்தின் மூலம்தான் பாதுகாக்கப்படமுடியும். இதற்கு ஜேர்மனி, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் இருக்கும் அனைத்து ஆலைகளின் தொழிலாளர் பிரிவினரின் ஐக்கியம் தேவைப்படுகின்றது.

ஒவ்வொரு வேலையையும் பாதுகாத்தல் என்பதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்படுவது ஒரு ஆரம்பக்கட்டமே ஆகும். இவ் அணிதிரள்வு முக்கிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளைத் தேசியமயப்படுத்தி அவற்றின் உடைமைகளை கைப்பற்றி எடுத்துக் கொண்டு, முழுச் சமுதாயத்தின் நலனுக்கா உற்பத்தியை மறு சீரமைக்க வேண்டும்.

இடது கட்சியின் தலையீடு இத்தகைய ஒரு வளர்ச்சியைத் தடுப்பதைத்தான் துல்லியமாகக் கொண்டுள்ளது. மாறாக வேலைகளைப் பாதுகாப்பதற்கான தீவிர போராட்டங்கள் உருவாவதை தடுப்பதற்கு அது ஜேர்மனிய அமெரிக்க அரசாங்கங்களிடம் தவறான எதிர்பார்ப்புக்களைத் தூண்டிவிடுகிறது. அதே நேரத்தில் கார்த்துறைத் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கங்களுடன் நெருக்கமாக  ஒத்துழைக்கிறது.