World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany arms the Persian Gulf monarchies

ஜேர்மனி பாரசீக வளைகுடா முடியாட்சிகளுக்கு ஆயுதங்களை வழங்குகிறது

By Johannes Stern
25 February 2013

Back to screen version

கடந்த ஆண்டு ஜேர்மனி, அரபு வளைகுடா முடியரசுகளுக்கு அதன் ஆயுத ஏற்றுமதிகளை இருமடங்குக்கும் மேல் அதிகரித்தது. அல்ஜீரியாவும் 2011 விடக் கூடுதலான பாதுகாப்பு சாதனங்களைப் பெற்றது. இது பாராளுமன்றத்தில் இடது கட்சி எழுப்பிய ஒரு கேள்விக்கு பொருளாதார அமைச்சரகத்தின் பதிலிலிருந்து வெளிவந்தது என Süddeutsche Zeitung பத்திரிகை கடந்த வாரம் தகவல் கொடுத்துள்ளது.

2012ல் 1.42 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய ஆயுத ஏற்றுமதிகள் வளைகுடா ஒத்துழைப்புக் குழு நாடுகளுக்கு வழங்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது. அங்கு முந்தைய ஆண்டு இந்த ஏற்றமதிகள் 570 பில்லியன் யூரோக்கள்தான் இருந்தன. 1.24 பில்லியனில், மிக அதிக பங்கு சவுதி அரேபியாவிற்கு சென்றது. இது முந்தைய ஆண்டைவிட 9 மடங்கு அதிகம் ஆகும். பஹ்ரைன் மற்றும் கட்டாருக்கான ஏற்றுமதி உரிமங்கள் முறையே 4.3, 17.6 மில்லியன் யூரோக்கள் என உயர்ந்தன.

அல்ஜீரியாவிற்கான ஆயுத ஏற்றுமதியைப் பொறுத்தவரை அவை கிட்டத்தட்ட 20 மில்லியன் யூரோக்கள் என ஆயின. 2011ல் இவை 217 மில்லியன் யூரோக்களாகவும், 2012ல் 287 மில்லியன் யூரோக்களாகவும் உயர்ந்தன.

பொருளாதார அமைச்சரகத்தின் கருத்துப்படி இப்புள்ளிவிவரங்கள் 2012ல் வெளியிடப்பட்ட ஆயுத ஏற்றுமதி உரிமங்களைப் பற்றிய ஆரம்பஆய்வை அடித்தளமாக கொண்டவை. சரியான எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதியில் அரசாங்கத்தின் ஆயுதங்கள் ஏற்றுமதி அறிக்கையில் வெளியிடப்படும். அவை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டுக் கடைசியில், சவுதி அரேபியா நூற்றுக்கணக்கான பாக்சர்-“Boxer”- கவசப் போக்குவரத்து வாகனங்கள் வாங்குவதற்கும், 30 “டிங்கோ-“Dingo”-  கவசக் முன்கண்காணிப்பு வாகனங்களையும் ஜேர்மனியில் இருந்து வாங்கவிரும்புவதாக உத்தியோகபூர்வமாக கோரியிருந்தது. இன்னும் சமீபத்தில், ஜேர்மனியச் செய்தி ஊடகம் சவுதி முடியாட்சி ஜேர்மனியின் ரோந்துப் படகுகளை 1.5 பில்லியன் யூரோக்கள் மதிப்பிற்கு வாங்க விரும்புவதாகத் தெரிவித்தது. 2011ல் ஜேர்மனி  “லியோபார்ட் 2” “Leopard 2” டாங்கிகள் 200 இனை சவுதி அரேபியாவிற்கு வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய வகையில் ஜேர்மனி வளைகுடா நாடுகளுக்கு ஆயுதம் வழங்குதலை பாரியளவில் அதிகரிப்பதானது ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பூகோள-மூலோபாய நலன்களை பிரதிபலிக்கிறது. இது தன் மூலப் பொருட்களுக்கான தேவையை பூர்த்திசெய்துகொள்ள அதிகரித்தளவில் இராணுவ ஆக்கிரோஷத்துடன் நடந்து கொண்டிருப்பதுடன் மற்றும் தனது போட்டியாளர்களுக்கு எதிராக தன் நலன்களையும் சுமத்துகிறது.

கடந்த வாரம் நிதிய நாளேடான Handelsblattமூலப் பொருட்களுக்கான ஆய்வுப் பயணம்: ஜேர்மனியின் புதிய போக்குஎன் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. இது ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் புதிய கொள்கையை எடுத்துக்கூறியது. இந்தக் கட்டுரை ஜேர்மனிய தொழில்துறை மற்றும் அரசாங்கமும்மூலப்பொருட்களைப் பெறுதல் ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் மூலோபாயக் கருத்துஎன்று ஒப்புக் கொண்டுள்ளன. அவற்றைப் பெறுவதில்பாதுகாப்பு அமைப்புகள், இராணுவக் கொள்கைக்களுக்கு தேவையானவையும் அடங்கும் என்று நாளேடு எழுதியது. Handelsblatt உலகில் மிகஅதிக எண்ணெய் வளங்களை கொண்டுள்ள சவுதி அரேபியாவிற்கான ஆயுத விற்பனையை இப்பின்னணியில் எடுத்துக்காட்டியுள்ளது.

சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலின் பார்வையில், ஜேர்மனிய நலன்கள் ஏற்கனவே சவுதி அரேபியா போன்ற எண்ணெய் வளம் நிறைந்த மூலோபாயத்தின் வகையில் முக்கிய பிராந்தியங்களுக்கு ஆயுத ஏற்றுமதிகள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன என அது எழுதியது. “விவாதத்திற்குரிய லியோபார்ட்-2” மற்றும் பாக்சர் டாங்கிகளும் ரோந்துப் படகுகளும் சவுதி அரேபியாவிற்கு விற்கப்பட்டவை இப்பின்னணியில் காணப்படவேண்டும். “மேர்க்கெலின் கோட்பாட்டின்படி நெருக்கடி வரும் காலத்தில் இராணுவத்தை அனுப்பும் கட்டாயம் வருவதற்கு முன்னதாக ஜேர்மனியின் மூலோபாயப் பங்காளிகளுக்கு அரசியல்ரீதியாக மட்டுமின்றி ஆயுதசக்தியின் மூலமும் ஆதரவு கொடுக்கப்பட வேண்டும்.

ஜேர்மன் இராணுவத்தை ஓர் உலகரீதியாக போரிடும் சக்தியாக மறுகட்டமைக்கும் பாதுகாப்பு மந்திரி தோமஸ் டி மஸியர், இந்தக் கோட்பாட்டை குதர்க்கத்துடன்  தலையீட்டிற்கு பதிலாக வலுப்படுத்துதல்என்று குறிப்பிட்டார். வாராந்த செய்தி ஏடான Der Spiegel இற்கு கடந்த நவம்பர் மாதம் கொடுத்த நேர்காணலில் அவர் ஓரளவு கௌரவமான இருக்கும் அரசாங்கங்கள் வலுவற்ற நாடுகளின் பாதுகாப்புப் படைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். இதனால் அவர்கள்  தங்கள் பாதுகாப்பை தமது கைகளில் எடுத்துக் கொள்ள முடியும்என்று குறிப்பிட்டார்.

டு மஸியர் கூறுவது அரசாங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதைத்தான் ஜேர்மனிய முதலாளித்துவம் அதன் மூலோபாய நலன்களின் பாதுகாப்பிற்கு மையமாகக் கருதுகிறது என்பதாகும். வளைகுடா நாடுகள் ஜேர்மனியின் மூலப்பொருட்களுக்கான முக்கிய ஆதாரங்கள் என்பது மட்டுமல்லாது அவை எகிப்து, துனிசியப் புரட்சிகளுடன் ஆரம்பித்த அரபு உலகில் புரட்சிகரப் போராட்டங்களைக் கட்டுப்படுத்தவதிலும் மற்றும் அப்பிராந்தியத்தில் ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கைக் கொண்டுள்ளன.

தூக்கிலிடுதலும், சித்திரவைதையும் அன்றாட நிகழ்வுகளாக உள்ள அரைநிலப்பிரபுத்துவ அல் -சௌத் முடியாட்சி பொலிஸ் வன்முறை மூலம் தங்கள் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான அனைத்து எதிர்ப்புக்களையும் நசுக்குகின்றது. பஹ்ரைனில் அல்-கலிபா அரசு மிகத்தீவிர மிருகத்தன முறைகளை கடந்த இரு ஆண்டுகளில் வெகுஜன எதிர்ப்புக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தியுள்ளது. கட்டார் முதலில் லிபியாவிற்கு எதிரான நேட்டோ குண்டுத் தாக்குதலுக்கு ஆதரவு கொடுத்ததுடன், இப்பொழுது மேற்கு நடத்தும் சிரியாவின் பஷர் அல் அசாத் ஆட்சிக்கு எதிரான போரில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான போர்த்தயாரிப்புக்களிலும் வளைகுடா நாடுகள் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைத், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் அடங்கிய வளைகுடா ஒத்துழைப்புக் குழு 1981ல் ஈரானியப் புரட்சிக்கு நேரடி பிரதிபலிப்பாக நிறுவப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் ஈரானுக்கு எதிரான மேற்கத்தைய சக்திகளின் போர்த் தயாரிப்புக்களின் ஒரு பகுதியாக வளைகுடா நாடுகள் நவீன இராணுவத் தொழில்நுட்பங்களை தொடர்ந்து பெறுகின்றன.

சவுதி அரேபியாவிற்கு அது ஆயுதங்கள் விற்பனையை ஈரானுக்கு எதிரான போர்த்தயாரிப்புக்கள் என்ற காரணம் கூறி ஜேர்மனிய அரசாங்கம் நியாயப்படுத்துகிறது. Tagesthemen செய்தி நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், சான்ஸ்லர் மேர்க்கெல் இடம் சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றமதி குறித்து கேட்கப்பட்டபோது, ஜேர்மனி சில வளைகுடா நாடுகளுடன் மூலோபாயப் பங்காளித்தனத்தை கொண்டிருப்பதாகவும், அதற்குக் காரணம் ஈரானிய அணுச்சக்தித் திட்டம்மிகத் தீவிர அச்சுறுத்தல் எனக் கருதப்படுவதால்என்றார்.

ஈரானுக்கு எதிரான போர் பிராந்தியம் முழுவதும் பெரும் மோதலைத் தூண்டும் என்பதுடன், தெஹ்ரானுக்கு ஆதரவு தரும் ரஷ்யா, சீனாவுடன் ஆயுத மோதல் என்னும் ஆபத்தையும் கொண்டுள்ளது. இது மூன்றாம் உலகப் போர் குறித்த ஆபத்துக்களுக்கு சான்றாகும்.

கடந்த நூற்றாண்டில் மனிதகுலத்தை இரு உலகப் போர்களில் ஆழ்த்திய ஜேர்மனிய இராணுவவாதத்தின் மறுஎழுச்சி ஜேர்மனிய மக்களின் பரந்த அடுக்குகளால் எதிர்க்கப்படுகிறது. இப்பின்னணியில் எதிர்க்கட்சிகள் ஆதரவற்ற ஆயுத ஏற்றுமதிகளில் இருந்து தங்களை ஒதுக்கிக் கொள்ள முற்படுகின்றன.

இந்த ஆண்டு மத்திய தேர்தல்களில் சான்ஸ்லர் பதவி வேட்பாளராக உள்ள சமூக ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பீர் ஸ்ரைன்புரூக், என் தலைமையின் கீழ் வரும் சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சி அரசாங்கம் ஆயுத ஏற்றுமதிகளை நிறுத்திவிடும்என்று கூறுகிறார்.

இது முற்றிலும் போலித்தனமாகும். கடைசியாக ஆட்சி செலுத்திய சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சிக் கூட்டணி அரசாங்கத்தின் சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD) மற்றும் பசுமைவாதக் கட்சியின் வெளியுறவு மந்திரி ஜோஷ்கா பிஷ்ஷர் இருவரும் கொசொவோ மற்றும் ஆப்கான் போர்களுக்கு ஆதரவு கொடுத்து மட்டுமல்லாது மேர்க்கெல் அரசாங்கத்தைப் போலவே, அந்த அரசாங்கமும் மத்திய கிழக்கிற்கு ஆயுதங்களைக் கொடுத்தது. அதில் துருக்கிக்கு நூற்றுக்கணக்கான லியோபர்ட்போர் டாங்கிகள், சவுதி அரேபியாவிற்கு 1,200 டாங்கு எதிர்ப்பு ஆயுதங்கள், இஸ்ரேலுக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவை அடங்கும்.

சமூக ஜனநாயக கட்சியினதும் மற்றும் பசுமைக் கட்சியினதும் போருக்கான அடிப்படை ஆதரவு எதுவும் மாறிவிடவில்லை. கடந்த வாரம்தான் அவை அரசாங்கக் கட்சிகளுடன் சேர்ந்து, பிரெஞ்சுப் படையெடுப்பிற்கு ஆதரவு கொடுக்க 330 ஜேர்மனிய துருப்புக்களை அனுப்ப ஆதரவாக வாக்களித்தன.

ஆயுத ஏற்றுமதிகள் பற்றிய இடதுகட்சியின் விமர்சனமும் இதேபோல் ஜேர்மனியின் போர்க் கொள்கைக்கு ஆதரவு கொடுத்த தங்கள் பங்கில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் இழிந்த முயற்சிதான்.

ஜேர்மன் முதலாளித்துவத்தின் மற்ற கட்சிகளைப் போலவே, இடது கட்சியும் சிரியாவிற்கு எதிரான கொலைக்காரப் போருக்கு ஆதரவு கொடுத்துள்ளது. இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கத்தைய சார்புடைய கிளர்ச்சிக்குழுக்கள் பஷர் அல் அசாத் ஆட்சியை அகற்றி, அதன் கைப்பாவை அரசாங்கத்தை நிறுவ ஒரு பயங்கரவாதப் போரை ஒழுங்குசெய்துள்ளன. கடந்த ஆண்டுக் கடைசியில், சிரியாவிற்கு எதிரான போருக்கு ஆதரவு தெரிவிக்கும் அறிக்கை ஒன்றில் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி, பசுமைவாதக் கட்சிகளின் அரசியல்வாதிகளுடன்  சேர்ந்து இடது கட்சியும் கையெழுத்திட்டது. இடது கட்சி ஆதரவு தரும் சிரிய எதிர்த்தரப்புக் கட்சிகள் முக்கியமாக வளைகுடா நாடுகளிடம் இருந்து ஆயுதங்களையும் நிதியையும் பெறுகின்றன.

மத்திய பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வளைகுடா நாடுகளுடன் ஒத்துழைப்பதும், அவற்றிற்கு படைகளைக் கொடுத்து ஆதரவளிப்பதும், தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை ஆகும். ஜேர்மனியில் போருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக வெகுஜன எதிர்ப்புக்கள் வெடித்தவுடன், ஆளும் வர்க்கம் தாம் முற்றுமுழுதாக ஆயுதபாணியாக்கிய வளைகுடா முடியாட்சிகள் பயன்படுத்தும் அதே மிருகத்தனத்துடன் அவற்றையும் அடக்கும்.