தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Lessons of the New York City school bus strikeநியூ யோர்க் நகரப் பள்ளிப் பேரூந்து வேலைநிறுத்தத்தின் படிப்பினைகள்
Jerry White use this version to print | Send feedback உறுப்பினர்கள் வாக்கெடுப்பு என்ற பாசாங்கு கூட இல்லாமல், நியுயோர்க்கில் ஒரு மாத காலம் நீடித்த 9,000 பள்ளிப் பேரூந்து பஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடித்துக் கொள்வது என்ற ஒன்றிணைந்த போக்குவரத்து தொழிற்சங்கம் (Amalgamated Transit Union -ATU) மற்றும் பிற நகரத் தொழிற்சங்கங்களினது முடிவானது தொழிலாளர்கள் மீது ஒரு தோல்வியை ஏற்படுத்தியது. இது புளூம்பேர்க் நிர்வாகத்திற்கு அதனுடைய தொழிலாள வர்க்க விரோதச் செயற்பட்டியலை தொடர்வதற்குத்தான் ஊக்கமளிக்கும். நகரத்தின் பில்லியனர் மேயருடன் நான்கு வாரங்களுக்கு மேல் போராடியதற்குப் பின்னர், ATU ஆனது ஒருதலைப்பட்சமாக நிபந்தனையற்று சரணடைந்ததால் தொழிலாளர்கள் பெரும் கோபம் அடைந்துள்ளனர். இது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் கால் பகுதிக்கும் மேலானவர்களை ஜூன் மாதம் வேலை இழப்புக்களை எதிர்கொள்ள வைக்கும். பாதுகாப்பற்ற மற்றவர்கள் பள்ளிப் பேரூந்து ஒப்பந்தக்காரர்கள் கோரும் 20 சதவிகித சம்பள வெட்டுடன், சுகாதாரப் பாதுகாப்பு குறைப்புக்கள் மற்றும் நீண்டகால வேலைகள், சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பாதுகாப்புக்கள் ஆகிய எஞ்சியுள்ளவைகளையும் அகற்றும். மூன்று தசாப்தங்களில் முதல் தடவையாக, மாணவர்கள் போக்குவரத்தை போட்டிக்குரிய ஏலத்திற்குத் திறந்துவிட்டு, தற்பொழுதுள்ள தொழிலாளர்களை அகற்றி, அவர்களுக்குப் பதிலாக தற்காலிக பகுதிநேரத் தொழிலாளர்களை வறுமை மட்டச் சம்பளங்களில் நியமிக்க பள்ளிப் பேரூந்து நிறுவனங்களுக்கு மேயர் பச்சை விளக்கை காட்டியுள்ளார். நாட்டில் அதிக மக்கள் வாழும் நகரத்திலும், நிதி மூலதனத்தின் மையத்திலும் நடந்த போராட்டமானது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் நிலவும் வர்க்க இயக்கவியலை முழுமையாக நன்கு வெளிப்படுத்தியது. ஒரு புறம் பள்ளிப் பேரூந்து சாரதிகள், வீட்டுப் பெண்கள், இயந்திரம் திருத்துபவர்கள் என இருந்தனர். அதாவது அவர்களில் பலரும் குடியேறிய தொழிலாளர்கள், ஒற்றைத் தாய்மார்கள், உலகின் மிகச் செலவுடைய நகரத்தில் தப்பிப் பிழைப்பதற்கு போதுமானதைச் சம்பாதிப்பவர்களாக இருப்பவர்கள் ஆவர். ஆனால் எல்லா இடங்களிலும் இருக்கும் உழைக்கும் மக்களின் பாராட்டையும் அனுதாபத்தையும் அவர்களின் உறுதிப்பாடு வென்றெடுத்துக்கொண்டது. இது தொழிலாள வர்க்கத்திற்கு தங்களுடைய வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீது நடத்தப்படும் இடையறாத் தாக்குதல்களை எதிர்த்துப் போராட இதைத்தவிர வேறு வழி இல்லை என்னும் பெருகிய உணர்வாக வெளிப்பட்டது. மறுபுறத்தில் சொந்தச் சொத்துக்களாக மட்டும் 26 பில்லியன் டாலர்கள் மதிப்பிடப்பட்டுள்ளதை வைத்திருக்கும் மேயர் மைக்கேல் புளூம்பேர்க் இருக்கிறார். அதாவது ஒரு பள்ளி வாகன சாரதியின் சராசரி ஆண்டு வருமானத்தைப் போல் 700,000 மடங்கு அதிகமாக இவரிடம் இருக்கிறது. பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் குற்றச்செயல், பேராசை இவைகளின் எடுத்துக்காட்டாகத்தான் மேயர் இருக்கிறார். பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்குகள் பெரு மந்த நிலைக்கு பின்னர் மோசமான பொருளாதார கரைப்பை ஏற்படுத்தியபின், தொழிலாள வர்க்கத்தை ஏழ்மை மற்றும் அடிமை போன்ற நிலைகளுக்கு தள்ளுவதற்கு உறுதிகொண்டிருக்கின்றன. வேலைநிறுத்த தொழிலாளர்கள், போராட்ட காலத்தில் முழுப் பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்குடனும் தாம் மோதிக்கொண்டிருக்கின்றோம் என்பதை அதிகரித்தளவில் உணர்ந்துள்ளனர். அதே நேரத்தில் பங்குச் சந்தைகளும் பெருநிறுவன இலாபங்களும் பெரிதும் உயர்ந்துவிட்ட நிலையிலும் கூட, முழுப் பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பும் தொழிலாளர்களின் சமூக உரிமைகள் கொடுக்கப்படக்கூடியவைகள் அல்ல என்று வலியுறுத்துகின்றன. புளூம்பேர்க் நியூஸ், முர்டொக் சாக்கடை ஊடகத்திலிருந்து வெளிவேட தாராளவாத நியூ யோர்க் டைம்ஸ் வரை பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகங்களானது வேலைநிறுத்தம் செய்தவர்களை அவதூறுக்கு உட்படுத்தியதுடன், அவர்களுடைய போராட்டங்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டன. இதற்கிடையில், நகரசபையானது நூற்றுக்கணக்கான பொலிசாரை களத்திற்கு அனுப்பிவைத்து வேலைநிறுத்தம் செய்பவர்களை தடுப்பரண்களுக்குள் தள்ள முற்பட்டதுடன் அவர்களுடைய மறியல் பாதையில், வேலைநிறுத்தத்தை உடைக்க செயற்படும் பேருந்துகளை நிறுத்த முற்பட்டால், கைது செய்யப்படுவார்கள் என்றும் அச்சுறுத்தியது. வேலைநிறுத்தத்தை தோற்கடிப்பதில் மிக முக்கிய பங்கை ATU மற்றும் பிற தொழிற்சங்கங்களும் மேற்கொண்டன. அதேபோல் நகரசபை அதிகாரிகள், பொலிஸ் மற்றும் பள்ளி பஸ் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோரும் வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்த வேண்டுமென்றே உணர்மையுடன் முனைந்ததுடன், பட்டினி போட்டு தொழிலாளர்களை பணிய வைக்கவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அணிதிரள்வுக்காக போராடுவதையும் தடுத்தனர். ஆரம்பத்திலிருந்தே, ATU ஆனது எத்தகைய வேலைநிறுத்தத்திற்கும் எதிர்ப்பைத்தான் காட்டியது. ATU இற்கும் பள்ளிப் பேரூந்து ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையேயுள்ள நீண்டகால உறவை உடைக்கும் அச்சுறுத்தலை புளூம்பேர்க் விடுத்தபின்தான் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. தேசிய தொழிலாளர் உறவுகளுக்கான குழுவானது (National Labor Relations Board) இது சட்டரீதியானது என அறிவித்த பின்னரும்கூட வேலைநிறுத்தம் ஆரம்பித்து சில நாட்களுக்குள்ளேயே, ATU மற்றும் நியூ யோர்க் நகர மத்திய தொழிலாளர் சபையும் (New York City Central Labor Council) வேலைநிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரத் தயார் எனக் கூறின, அத்தோடு தொழிலாளர்களை ஒப்பந்தம் இன்றி மீண்டும் வேலைக்கு அனுப்பத்தயார் என்று கூறியதுடன், புளூம்பேர்க் மற்றும் பஸ் ஒப்பந்தக்காரர்களுடன் சேர்ந்து தொழிலாளர் செலவுகளை வெட்டுவதற்கு ஒத்துழைக்கத் தயாராகவும் இருந்தன. தொழிற்சங்கத்திலிருந்து தகவல் எதுவும் இல்லாமலும், பொருளாதார அழிவை எதிர்நோக்கி, அற்பமான வேலைநிறுத்த ஊதியம் பெற்றுக்கொண்டும் மருத்துவ நல உதவிகளும் இல்லாமலும் தொழிலாளர்கள் நகரத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மறியல்களை நடத்தவிடப்பட்டனர். இத்தனிமைப்படுத்தலை தொழிலாளர்கள் முறியடிக்க, நேரடியாகப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முறையீடு செய்ய முற்பட்டபோது, ATU அவர்களைத் தடுத்துவிட்டது. ஒரே பெரிய ஆர்ப்பாட்ட எதிர்ப்பாக, பெப்ருவரி 10 அன்று ப்ரூக்லின் பாலத்திலிருந்து நகரவை மன்றத்திற்கு அணிவகுப்பு ஞாயிறன்று மிகக் குறைந்த தாக்கத்தைத்தான் கொடுக்கும் என கருதி நடைபெற்றது. அதே நேரத்தில் தொழிற்சங்கங்களில் உறுப்பினராகவுள்ள நியூயோர்க் நகர 1.3 மில்லியன் தொழிலாளர்களை அணிதிரட்ட ஏனைய தொழிற்சங்கங்கள் எதையும் செய்யவில்லை. அவை கிட்டத்தட்ட 300,000 ஆசிரியர்கள், தீயணைப்புப் படையினர், போக்குவரத்து மற்றும் காலாவதியாகிவிட்ட ஒப்பந்தத்தின்கீழ் உழைப்பவர்களும், அடுத்த வேலை நீக்கத்தை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் பிற சிறு நகரசபை தொழிலாளர்களையும் கொண்டுள்ளன. ATU, ஆசிரியர் ஐக்கியக் கூட்டமைப்பு, போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் மற்றும் பிற தொழிற்சங்கங்களின் தலைவர்கள் விரும்பாதது, பெருநிறுவன மற்றும் அரசியல் ஸ்தாபனத்துடன் அவர்கள் கொண்டிருக்கும் ஆழமான, நெருக்கமான பிணைப்புக்களை அச்சுறுத்தும் சக்திவாய்ந்த தொழிலாள வர்க்க இயக்கம்தான். வெளிப்படையாக பள்ளிப் பேரூந்து சாரதிகளை செலவு வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கு கொள்வதும், புளும்பேர்க் மற்றும் கவர்னர் ஆண்ட்ரூ குவோமா ஆகியோரால் ஆதரவும் கொடுப்பதும், UFT மற்றும் இன்னும்பிற தொழிற்சங்கங்களின் நேரடியான பங்களிப்புடன் பள்ளிகளைத் தனியார்மயமாக்கல் திட்டங்களும் இவற்றில் உள்ளடங்கியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே, அதிக ஊதியம் பெறும் தொழிற்சங்க அதிகாரிகள் தங்கள் “பதவிகளை பாதுகாத்துக்கொள்ள” அனுமதித்து மற்றும் அதேபோல் சந்தாப் பணம் குறைவாக இருந்தாலும் பள்ளி பஸ் தொழிலாளர்களிடமிருந்து அதை வசூலிக்கும் உரிமையையும் புளும்பேர்க் அனுமதித்தால் அது நியூயோர்க் நகரத்தின் லோங் ஐலண்ட்டையும் இன்னும் சுற்றியுள்ள பகுதிகளிலும் செய்ததுபொல் வேலைகளையும் அதனுடைய உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரங்களையும் கைவிட்டுவிட விரும்புவதை ATU தெளிவாக்கி இருந்தது. வேலைநிறுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட விதமானது எந்த அளவிற்கு தொழிற்சங்க அமைப்பு தொழிலாளர்களை இந்த அமைப்புக்களுக்குள் பொறியில் மாட்டியது போல் வைத்துள்ளது என்பதின் உருவகமாக இருந்தது. ஒரு கூட்டமோ, வாக்கெடுப்போ இன்றி, ATU இன் உள்ளூர் 1181 தலைவர் மைக்கேல் கார்டியலோ மற்றும் சர்வதேசத் தலைவர் லாரி ஹான்லியும் உறுப்பினர்களுக்கு ஒரு 45 நிமிட தொலைவழித்தொடர்பு அழைப்புக் கூட்டத்தில் அறிவித்ததையடுத்து நிறைவேற்றுக் குழு வேலைநிறுத்தத்தைக் கைவிட்டது. அதற்கு முன்னால், சர்வதேச ATU ஆனது வேலைநிறுத்தத்தை முடிப்பதற்கு ஒரு “அரசியல் மறைப்பாக” இருக்க ஜனநாயகக் கட்சியின் மேயர் பதவி வேட்பாளர்களிடமிருந்து அறிக்கைகளை நாடியது. புளூம்பேர்க்கின் தொழிலாளர்களுக்கான அழைப்பாக எழுதப்பட்ட கடிதத்தில் ஒப்பந்தம் ஏதும் இன்றி வேலைக்குத் திரும்பவேண்டும் என்று விடுத்த அழைப்பில் ஜனநாயக கட்சியினரும் சேர்ந்துகொண்டார்கள், தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், “பள்ளி பஸ் போக்குவரத்து முறை மற்றும் ஒப்பந்தங்களை” அடுத்த ஜனவரியில் பரிசீலனை செய்வதாகவும், அதே நேரத்தில் “வரி செலுத்துபவர்களுக்கு வரிப் பொறுப்பாக இருக்கும்” என்றும் கூறினார்கள். இதற்கிடையில் வேலையை இழக்க இருக்கும் 2,300 தொழிலாளர்களுக்கு உறைபனி போன்ற நிலைதான் இது; அதே நேரம், புதிய ஏலங்களைக் கொடுத்துள்ள நிறுவனங்களுடன் “போட்டித்திறனில்” இருக்க கோரப்படுவதாவது எஞ்சியிருக்கும் தொழிலாளர்களும் மிருகத்தன சம்பளங்கள் மற்றும் நல வெட்டுக்களை தனியார் பஸ் ஒப்பந்தக்காரர்களிடமிருந்து முகங்கொடுப்பதாகும். ஒபாமா, ஆளுனர் குவோமோவிலிருந்து கீழ் வரை ஜனநாயகக் கட்சியினர் நிதிய உயரடுக்கை பாதுகாப்பதிலும், தொழிலாள வர்க்கத்தை தாக்குவதிலும் “சுயேட்சையான” புளூம்பேர்க் மற்றும் குடியரசுக் கட்சியினரைப் போல்தான் செயற்படுகின்றனர். தொழிற்சங்க அமைப்பானது இந்த எதிரிகளுக்கு ஆதரவு கொடுக்கிறது. அதற்குக் காரணம் தொழிலாள வர்க்கத்தின் மீது ஆளும் வர்க்கத்தின் ஆணைகளை சுமத்துவதற்கு குடியரசுக் கட்சியினரை விட, ஜனநாயகக் கட்சியினர் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை நம்பியுள்ளதேயாகும். ஒரு நூற்றாண்டு காலமாக போராடி வென்ற ஒவ்வொரு சமூக உரிமையையும் அழித்துவிடுகின்ற தாக்குதலை முகங்கொடுக்கையில், தொழிலாள வர்க்கம் அதனுடைய சொந்த அரசியல் மூலோபாயத்தை முன்வைக்க வேண்டும். இது ஒன்றும் இன்னும் அதிக பெரு வணிக அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதல்ல. மாறாக தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளால் வாங்கவும் விற்கப்படுவதிலிருந்து சுதந்திரமாக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட பலத்தினை தொழிற்துறை மற்றும் அரசியல் போராட்டத்திற்காக புதிய அமைப்புக்களின் மூலம் அணிதிரட்டுவதாகும். நிதியத் தன்னலக்குழு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொருளாதார வாழ்வை இலாப நோக்கத்திற்கு என்று இல்லாமல் மனிதத் தேவைகளுக்கு மறுஒழுங்கு செய்யும் இந்த இயக்கத்தின் நோக்கம் ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தை நிறுவுதலாக இருக்க வேண்டும். நியூ யோர்க் நகரசபைப் பள்ளி பேரூந்து தொழிலாளர்களின் போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை. இக்காட்டிக் கொடுப்பின் படிப்பினைகள் நன்கு உள்வாங்கிக் கொள்ளப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய தலைமைதான் அவசர தேவையாக உள்ளது என்பதை நிரூபித்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்த வேலைநிறுத்தத்தில், உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் தொழிலாளர்களுக்கான ஒரு குரலாகவும் அவர்களுடைய போராட்டத்திற்கு ஒரு முன்னேற்றப் பாதையையும் கொடுத்து வந்தன. புரட்சிகர வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கினால் எதிர்வரவிருக்கும் போராட்டங்களை ஆயுதபாணியாக்க தேவையான புதிய தலைமையை கட்டியமைக்கும் பணியில் இணைத்துக்கொள்ள, பள்ளிப் பேரூந்து தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அழைப்புவிடுகிறது. எங்களை தொடர்புகொள்ள இங்கு அழுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகின்றோம். |
|
|