World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Ten years since the global protests against war in Iraq

ஈராக்கிய யுத்தத்திற்கு எதிரான உலக எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று பத்து ஆண்டுகள்

Joseph Kishore
20 February 2013


Back to screen version

கடந்த வாரம் ஈராக்கிற்கு ஏதிரான போரை எதிர்ப்பதற்கான பரந்த சர்வதேச ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. பெப்ருவரி 15-16, 2003ல் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் உலகின் முக்கிய நகரங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்ப்புக்களில் பங்குபெற்றனர்.

ரோமில் வரலாற்றிலேயே மிகப் பெரிய போர் எதிர்ப்பு அணிவகுப்பு நகரத்தின் மக்கள் தொகையையும் விடக்கூடுதலாக கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்களை பங்குபற்றுதலை ஈர்த்துக்கொண்டது. ஒன்றரை மில்லியன் மக்கள் மாட்ரிட் அணிவகுப்பில் பங்குபெற்றனர்; ஒரு மில்லியன் மக்கள் லண்டனில் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர். அமெரிக்காவில் 200 நகரங்களுக்கும் மேலானவற்றில், நியூ யோர்க் உட்பட, மொத்தம் 400,000 மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்த ஆர்ப்பாட்டங்களினது பதட்டத்தையும் வியப்பையும் தரக்கூடிய முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்ததாவது, இந்த எதிர்ப்புக்கள் “உலகில் இன்னும் இரண்டு பெரும் சக்திகள் இருப்பதை நினைவுபடுத்துகின்றன, ஒன்று அமெரிக்கா மற்றயது உலக மக்களுடைய கருத்து.” இதன்மூலம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமைக் கருவியான  ஒற்றைத்துருவ நிலை என்று அழைக்கப்படுவது அதாவது சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப்பின் உலக அரங்கில் தடையற்ற ஆக்கிரமிப்பை அமெரிக்க ஆளும் வர்க்கம் மேற்கொள்ளலாம் என்னும் சுதந்திரமான கனவானது மனிதகுலத்தின் மாபெரும் வெகுஜன எதிர்ப்பினால் அச்சுறுத்தப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்புக்களின் பத்தாவது ஆண்டு நிறைவின் முக்கியத்துவத்தைப் பரிசீலிக்கையில், உடனடியாக எழும் வினா இதுதான்: போர் எதிர்ப்பு இயக்கம் இன்று எங்கே உள்ளது?

ஏனெனில் இந்தப் பத்து ஆண்டுகள், அமெரிக்க தலைமையின் கீழ் மிகப்பெரும் இராணுவவாதத்தின் விரிவாக்கம் நடப்பதை கண்ணுற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிய போர்களை தொடர்ந்து ஒபாமா நிர்வாகத்தின் கீழ் லிபிய அரசாங்கம் அகற்றப்பட்டதுடன், பஷர் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றுவதற்கும் அமெரிக்க நலன்களுக்கு இன்னும் வளைந்து கொடுக்கும் அரசாங்கத்தை நிறுவுவதற்கும் சிரியாவில் உள்நாட்டுப்போர் வாஷிங்டனால் நடத்தப்படுகிறது; இதில் சிரியாவின் நட்பு நாடான ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக அதைத் தனிமைப்படுத்தும் முயற்சியும் நடைபெறுகிறது. இதற்கிடையில் சிரியா ஒரு புதிய கட்டத்தில் நுழைகிறது; அதாவது “கிளர்ச்சியாளர்கள்” என்று அழைக்கப்படுவோர்களுக்கு அமெரிக்கா நேரடியாக ஆயுதம் கொடுப்பதை பரிசீலிக்கிறது.

அதே நேரத்தில், ஒபாமாவின் வெள்ளை மாளிகையானது ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், யேமன் மற்றும் சோமாலியில் டிரோன் (ஆளில்லா விமானம்) போர்முறைத் திட்டத்தைப் பரந்த அளவில் விரிவாக்கம் செய்துள்ளது. உலகில் எந்த இடத்திலும், அமெரிக்கக் குடிமக்கள் உட்பட, தான் எவரையேனும் “பயங்கரவாதி”எனக் கருதினால், அவரைப் படுகொலை செய்யும் உரிமையும் தனக்கு உண்டு என்றும் அறிவித்துள்ளது. சீனாவை தனது முக்கிய புவி-அரசியல் போட்டி நாடாகக் கருதுவதால், சீனாவை இலக்கு கொள்ளும் முயற்சியாக கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக்கில் “இயக்க மையத்தையும்”  செயல்படுத்தி வருகிறது;

இதில் அமெரிக்கா மட்டும் தனியாக இல்லை. பிரான்ஸும் மாலியில் தலையிடுவதில் முன்னிலை வகிக்கிறது; ஜேர்மன் செய்தி ஊடகமானது ஜேர்மனியின் இராணுவவாதம் ஜேர்மனியின் தொழில்துறை நலன்களை வரவிருக்கும் “ஆதாரவளங்களுக்கான போர்களில்” முன்னேற்றும் வகையில் விரிவாக்கப்பட வேண்டும் என்று கூச்சலிடுகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த வெகுஜன உணர்வு எங்கும் காணாமல்போய்விடவில்லை. இருப்பினும் இந்த எதிர்ப்புக்களுக்கு தலைமை தாங்கிய அமைப்புக்கள் இந்த உணர்வை மூச்சடைக்கச் செய்ய முறையாக உழைத்துள்ளன; அத்தோடு அவைகளை அரசியல் ஸ்தாபனத்திற்குள் திருப்பிவிட முயல்கின்றன.

இது குறிப்பாக அமெரிக்காவில் உண்மையாகும்; அங்கு ஒபாமா நிர்வாகத்தின் அணுகுமுறையினால், தாராளவாத மற்றும் “இடது” சக்திகள் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டுவிட்டது மட்டும் இல்லாமல், அதனுடைய ஆர்வம் மிக்க ஆதரவாளர்களாகவும் மாறிவிட்டன.

உதாரணமாக, சிஐஏ இயக்குனர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளவரும் ஒபாமாவின் “கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலை” உருவாக்கிய முக்கிய சிற்பியும், அமெரிக்க குடிமக்கள் நீதித்துறைக்குப் புறம்பாக கொலைசெய்யப்படலாம் என்னும் கருத்தை இயற்றியவருமான ஜோன் பிரன்னனை சமீபத்திய வாரங்களில் நேஷன் இதழ் ஆதரித்துள்ளது. மேலும் Fahrenheit 9/11 என்ற போர் எதிர்ப்பு ஆவணப் படத்தை 2004ல் வெளியிட்டபோது பெரும் வரவேற்பைப் பெற்றவரான “இடது” திரைப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் மூர், சித்திரவதையை பெருமைப்படுத்தும் படமான Zero Dark Thirty என்னும் படத்தை இயக்கிய தாராளவாத Kathryn Bigelow என்பவரைப் பாராட்டியுள்ளார். 

சர்வதேச சோசலிச அமைப்பு (ISO) போன்ற குழுக்களானது, சிஐஏ ஆதரவுடைய நடவடிக்கைகள் சிரியாவில் நடப்பதற்கும் அல் கெய்டா தொடர்புடைய சக்திகளுடன் ஒன்றுபட்டு செயற்படுவதையும் “மக்கள் இயக்கம்” என்று சித்தரிக்கப் பெரிதும் முயல்கின்றன. இவைகள் ஒபாமா நிர்வாகத்தை இன்னும் நவீன ஆயுதங்களை ஏகாதிபத்திய சார்பு “கிளர்ச்சியாளர்களுக்கு” அளிக்காததற்குக் குறைகூறுகின்றன. ஈரானில் “பசுமைப் புரட்சிக்கும்” லிபியாவில் நவ காலனித்துவ செயற்பாட்டிற்கும் அவர்களுடைய ஆதரவைத் தொடர்ந்து கொடுத்துவருகின்றன.

ஏகாதிபத்திய ஸ்தாபனத்துடன் “இடது” ஒருங்கிணைப்பு என்பது ஒரு சர்வதேச நிகழ்வுப்போக்காகும். பிரித்தானியாவிலுள்ள சோசலிச தொழிலாளர் கட்சியானது 2003ல் லண்டனில் போர் எதிர்ப்பிற்கு அழைப்புவிடுத்த யுத்தத்தை நிறுத்து கூட்டணியில் (Stop the War Coalition) முக்கிய பங்கைக் கொண்டிருந்தது, சிரிய “கிளர்ச்சியாளர்களுக்கு” வலுவான ஆதரவாளர்கள் அமைப்பில் இதுவும் ஒன்றாகும். 2003 ஆண்டு மிகப்பெரிய எதிர்ப்பின் களமாக இருந்த இத்தாலியில், கம்யூனிஸ்ட் ரிபௌண்டேஷனானது 2006 ஆண்டில் ஆளும் கட்சியாக மாறி, ஆப்கானிஸ்தானில் இராணுவ பிரசன்னத்தை இத்தாலி செய்வதற்கு வாக்களித்து ஆதரவளித்தது. ஆஸ்திரேலியாவில் சோசலிச மாற்றீடு (Socialist Alternative) சமீபத்தில் இடதின் “துடை நடுங்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பைக்” கண்டித்தது.

இந்த அரசியல் போக்குகளின் ஏகாதிபத்திய முகாமை நோக்கிய நகர்வு என்பது அடிப்படை வர்க்கப் பிரச்சினைகளுடன் இணைந்துள்ள அரசியல் ஒழுங்குமுறைகளில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடாகும்.

கடந்த அரை நூற்றாண்டில் “போர் எதிர்ப்பு இயக்கம்” எனப் பொதுவாக அழைக்கப்படுபவைகளின் முக்கியமான அரசியல் போக்கின் வளர்ச்சியாக இது இருக்கிறது. 1960களில் அது வெளிப்பட்டபோது, இந்த இயக்கம் தீவிர மத்தியதர வர்க்கப் பிரிவுகளுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. வியட்நாம் போருக்கு எதிராக கணிசமான பங்கைக் கொண்டிருந்த அமைப்புக்களான ஜனநாயக சமூகத்திற்கான மாணவர்கள் (Students for a Democratic Society) மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியானது (SWP-அமெரிக்கா) போர்ப் பிரச்சனையை அரசியல் போராட்டத்திலிருந்து பிரித்து, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக அணிதிரள்வதை தடுக்கவும் முற்பட்டன. அவைகள் போருக்கு எதிரான இயக்கத்தை தனியான எதிர்ப்புப் பிரச்சினைதான் என வலியுறுத்தி ஜனநாயகக் கட்சி நோக்கு நிலைக்குத்தான் வசதியளித்தன.

வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்தின் முடிவு முக்கியத் திருப்புமுனையைக் குறித்தது. அடுத்த தசாப்தங்களில், குறிப்பாக 1990களில், இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய சமூகத் தட்டுக்கள் வலதிற்குத் தீவிரமாகத் திரும்பின. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின், இந்தச் செயற்பாடுகள் மனித உரிமைகள் வடிவமைப்பில் செயல்படுத்தப்பட்டபோது, போருக்கு அறநெறி எதிர்ப்பு என்பது போருக்கு ஆதரவு என மாறியது. 1990களில் கிளின்டன் நிர்வாகக் காலத்தில் நடைபெற்ற, யூகோஸ்லாவியாவை நேட்டோ உடைத்ததற்கு முன்னைய போரெதிர்ப்பு “இடதின்” கணிசமான பிரிவுகளால் ஆதரவளிக்கப்பட்டது.

சமீபத்திய காலமானது இப்போக்கில் ஒரு புதிய கட்டத்தைக் கண்டுள்ளது. 2003 ஆண்டு ஈராக் போர் எதிர்ப்புக்கள் ஏதாவது ஒருசிதைவிற்கு உள்ளாகியுள்ளது. 2003ல் உலக சோசலிச வலைத் தளம் எழுதியது போல், அவற்றின் அளவு மற்றும், அதனுடைய உலகளாவிய பண்பு இவைகளின் காரணமாக போர் எதிர்ப்புக்களானது முக்கிய வரலாற்று நிகழ்வைப் பிரதிபலித்தது. “ஆழமானதும் தொடர்புபடுத்த முடியாததுமான அரசியல், சமூக மற்றும் அறநெறிப் பிறழ்வுகளினால் ஆளும் வர்க்கங்கள் மற்றும் அவர்களின் செய்தி ஊடகப் பிரச்சாரகர்களும் மக்களிடமிருந்து பிரிந்திருப்பதை இவ் அணிதிரள்வுகள் அம்பலப்படுத்தியுள்ளது” என்று நாம் கூறினோம்.

போர் எதிர்ப்புக் கொள்கைக்கான வெகுஜனங்களின் விடையிறுப்பிற்கு, மத்தியதர வர்க்க “இடதுகளானது” விரைவாக எதிர்ப்புக்களை முடிப்பதன் மூலம் விடையிறுத்தது. மார்ச் 2003 ஆண்டுப் படையெடுப்பிற்குப் பின், எதிர்ப்பு உணர்வை ஜனநாயகக் கட்சிக்குப் பின் தொடர்ந்த தேர்தல்களில் அவைகள் திசை திருப்பியது, இது ஒபாமா 2008ல் தேர்ந்தெடுக்கப்பட்டதில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

ஓர் அமைப்பின் வர்க்க நோக்குநிலையானது அதனுடைய வெளியுறவுக் கொள்கையில்தான் மிகத் தெளிவான வெளிப்பாட்டைக் காண்கிறது. ஏகாதிபத்திய ஆதரவிற்கு துணைநிற்றல் என்பது ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அமைப்பிற்கு பகைமைப் போக்காக இருக்கிறது.

2003 ஆண்டு ஆர்ப்பாட்டங்களின் முக்கியத்துவம் இன்னும் அதனுடைய குறிக்கோளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் வர்க்கப் போராட்டமானது மாபெரும் தீவிரமடைதலைக் கண்டுள்ளது; பெருநிறுவன-நிதிய உயரடுக்கின் நலன்களைச் செயற்படுத்துவதற்கு, உலகெங்கிலும் அரசாங்கங்கள் முதலாளித்துவ நெருக்கடிக்கு விடைகாண மிருகத்தனச் சிக்கன நடவடிக்கைகளைக் கையாள்கின்றன.

இராணுவவாதமும், தொழிலாள வர்க்கத்தின் மீதான போரும் ஒரே வர்க்கக் கொள்கையின் இரு பக்கங்கள்தான் என்பதை ஒருவர் காணமுடியும், இவைகள்தான் முதலாளித்துவ அமைப்புமுறையின் திவாலுக்கான இரு உற்பத்திப்பொருட்கள் ஆகும். எனவேதான் போருக்கான எதிர்ப்பு என்பது வெளிப்படையான தொழிலாளர் வர்க்க இயக்கம் ஒன்றின் மூலம்தான் முன்னோக்கி நகர்த்தப்படமுடியும்.