சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German industry, government planning for resource wars

ஜேர்மன் தொழில்துறையும் அரசாங்கமும் மூலப்பொருட்களுக்கான போர்களுக்கு திட்டமிடுகின்றன

By Peter Schwarz
20 February 2013

use this version to print | Send feedback

ஓராண்டிற்கு முன் அதன் பங்குதாரர்களுக்கும் பெருநிறுவன அங்கத்தவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூலப்பொருட்களின் விநியோகத்தை பாதுகாக்க முக்கிய ஜேர்மனிய தொழிற்துறை நிறுவனங்கள் மூலப்பொருட்களுக்கான கூட்டு (Resource Alliance -Rohstoffallianz) எனப்பட்டதை ஆரம்பித்தன. இந்த இலக்கை அடைவதற்கு அது இராணுவ வழிமுறைகளின் பயன்பாட்டுக்கு அழைப்பு விடுகிறது.

திங்களன்று ராய்ட்டர்ஸுக்குக் கொடுத்த பேட்டியில் Resource Alliance உடைய மேலாளர் டியர்க் பாஷ்கேர்ட், ஒரு மூலோபாயச்சார்புடைய வெளிநாட்டுப் பொருளாதார, பாதுகாப்புக் கொள்கை தேவை, அதுதான் ஜேர்மனிய வணிகத்திற்கு மூலப் பொருட்கள் வழங்குதலை உறுதிப்படுத்தும் என்று கூறினார்.

இத்தகைய கொள்கை சுதந்திரமானதும் வெளிப்படையானதுமான பாவனைப்பொருட்களின் சந்தை என்னும் நோக்கத்தினால்  வழிகாட்டப்பட வேண்டும் என்றாலும், மிக அண்மையில் அவ்வாறு நேரும் என்ற கருத்தைக் கொள்வது எம்மையே ஏமாற்றிக்கொள்வதாகி விடும் என்றார் பாஷ்கேர்ட். நிகழ்வுகள் துரதிருஷ்டவசமாக முற்றிலும் எதிர்த்திசையில் நகர்கின்றன. எனவே ஜேர்மனி நம் ஐரோப்பிய ஒன்றிய, நேட்டோ பங்காளிகளுடன் இணைந்து வெளிநாட்டுப் பொருளாதார, பாதுகாப்பு விவகாரங்களில் கூடுதல் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பாஷ்கேர்ட் முடிவுரையாகக் கூறினார்.

பாதுகாப்பு விவகாரங்களில் பொறுப்பை எடுத்துக் கொள்வது என்பது இராணுவ நடவடிக்கைகளை மறைமுகமாக காட்டும் பெயராகும். அது ஒரு இராணுவக் கூட்டான நேட்டோ பற்றிய குறிப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது மூலப்பொருட்களுக்கான  போர்களுக்கு பாஷ்கேர்ட் அழைப்பு விடுகிறார்.

வணிக நாளேடு Handelsblatt, மூலப்பொருட்களுக்கான போர்கள் வருவதை நாம் காண்போமா? என்று நேரடியாகக் கேள்வி எழுப்பியதற்கு பாஷ்கேர்ட் உறுதிப்படுத்தி விடையிறுத்து, வரலாற்று முன்னுதாரணத்தையும் மேற்கோளிட்டார். பல மோதல்கள் அவற்றின் ஆரம்பத்தை மூலப்பொருட்களுக்கான மோதலில்தான் கொண்டிருந்தன என்பதை வரலாறு காட்டுகிறது.... மூலப் பொருட்களின் விநியோகம் என்பதுதான் மொத்த பொருளாதாரத்திற்கும் மற்றும் ஒரு நாட்டின் நலனுக்கும் அடித்தளம் ஆகும். அதனால் பூகோளஅரசியல் முக்கியத்துவம் உள்ளது. என்றார் அவர். Handelsblatt முக்கிய பிரச்சினையை வெளிப்படையாக முன்வைத்தது. பாஷ்கேர்ட் உடனான நேர்காணல் பற்றிய நீண்ட தலையங்கம் ஒன்றில் அது தொழிற்துறை மூலப் பொருட்களை அடைவதில் மேலும் கூடுதலான அரசாங்க மற்றும் இராணுவ ஈடுபாட்டை காண விரும்புகிறது. ஆசிரியத் தலையங்கம் குறிப்பிடத்தக்க தலைப்பான மூலப் பொருட்களுக்கான ஆராச்சிப்பயணம்; ஜேர்மனியின் புதிய பாதை என்பதைக் கொண்டிருந்தது.

தொழிற்துறையின் இக்கோரிக்கை அரசியல் வட்டங்களினால் செவிமடுக்கப்படுகிறது என்று Handelsblatt விளக்கியுள்ளது. அரசாங்கத்தை பொறுத்தவரை, மூலப் பொருட்கள் மீதான கட்டுப்பாடு ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையில் ஒரு மூலோபாயப் பிரச்சினை. தற்பொழுதுள்ள மூலப் பொருட்கள் பங்காளித்தனம் போதுமானது அல்ல. பாதுகாப்பு மற்றும் இராணுவ அமைப்புகளும் தேவைப்படுகின்றன. என்பதை எளிதாகக் கற்பனை செய்துகொள்ளலாம்.

Handelsblatt உடைய கருத்துப்படி, மூலோபாயத் தொழிற்துறையின் நலன்களை இராணுவ பாதுகாப்பு தொழில்நுட்ப நலன்களுடன் ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்பாளரை சான்ஸ்லர் நியமிக்க விரும்புகிறார். அவர் மூலப் பொருட்கள் விநியோகத்தை பாதுகாக்க  பங்களிக்கவேண்டும். சவுதி அரேபியா போன்ற ஜேர்மனியின் மூலோபாயப் பங்காளிகளுக்கு நெருக்கடி காலத்தில் தன் சொந்தப் படையினரை அனுப்பும் கட்டாயத்திற்கு முன் ஆயுதங்கள் குறித்த தொழில்நுட்பத்தின் மூலம் ஆதரவு கொடுக்கப்பட வேண்டும். ஆயுதப்படைகள் தங்கள் புதிய பங்கான மூலோபாய நலன்களுக்கு பாதுகாவலர்கள் என்பதற்கு நன்கு தயாரிப்புக்களைக் கொள்ள வேண்டும். 2011 பாதுகாப்புக் கொள்கை வழிகாட்டி நெறிகளை Handelsblatt மேற்கோளிடுகிறது; அது இயற்கை மூலப்பொருட்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றை கிடைக்க செய்தல் என்பது பாதுகாப்பு மற்றும் இராணுவக் கொள்கை நலனுக்கு மிகவும் முக்கியமானது. என்று அறிவிக்கிறது.

இந்தக் குவிப்பு முற்றிலும் புதிதல்ல. 1990களின் நடுப்பகுதியில், பாதுகாப்புக் கொள்கை வழிகாட்டி நெறிகள் ஜேர்மனிய ஆயுதப் படைகள் உடைய முக்கிய பணிகள் தடையற்ற உலக வணிகத்தை தக்கவைத்தல், மூலோபாய மூலப்பொருட்கள் கிடைத்தலை தக்க வைத்தல் என்று வரையறுத்தது. இந்த நோக்குநிலை ஜேர்மனிய இராணுவத்தை தனது பிராந்திய பாதுகாப்பில் இருந்து சர்வதேசத் தலையீட்டு சக்தியாக மாற்றுவதற்குப் பாதை அமைத்தது.

உத்தியோகபூர்வ பிரச்சாரத்தில், பால்கன்கள், ஆப்கானிஸ்தான் இன்னும் பிற இடங்களில் இராணுவப் பணிகள் பயங்கரவாதத்தின் மீதான போர் அல்லது அதனுடைய ஒரு பகுதியான மனிதாபிமான அடித்தளத்தில்  நியாயப்படுத்தப்பட்டன. ஆனால், அரசாங்கமும் பெருவணிகமும் இப்பொழுது அத்தகைய நடவடிக்கைகளின் உண்மை நோக்கங்களுக்கு பொதுமக்கள் கருத்தை இணக்கப்படுத்த விரும்புகின்றன.

ஜனவரி 31ம் திகதி Süddeutsche Zeitung பத்திரிகைக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில், ஜேர்மனியப் பாதுகாப்பு மந்திரி தோமஸ் டு மஸியர் எதிர்காலத்தில் நேரடி இராணுவத் தலையீட்டின் தேவையைக் கூறுவதற்கு, வேறுவித நியாயப்படுத்துதல் கண்டறியப்பட வேண்டும் என்றார். சர்வதேச இராணுவ நடவடிக்கைகள் யதார்த்தமானவை என விளக்கப்பட வேண்டும், நியாப்படுத்தப்படுதல் பரிதாபகரமாகத் தோன்றக்கூடாது என்றார்.

ஒரு இராணுவத் தளபதியின் மகனும் நீண்டகால இராணுவ தலைமை அதிகாரியுமான டு மஸியரின் இயக்கத்தின்கீழ் இராணுவத்தின் மாற்றம் விரைவாக முன்னேறி வருகிறது. முன்கண்காணிப்பு, போக்குவரத்துத் திறன்கள் மற்றும் விரைவில் நிலைப்படுத்தக்கூடிய போரிடும் துருப்புக்கள் ஆகியவை விரிவாக்கப்படுகின்றன. இவற்றைத்தவிர, ஜேர்மன் இராணுவம் ஆயுதம் தாங்கிய ஆளில்லா டிரோன்கள் மற்றும் இரு கூட்டு ஆதரவுக் கப்பல்களையும் அடைய விரும்புகிறது. இவை ஒரு மூத்த அதிகாரியின் கருத்துப்படி, அரசியல் விருப்பத்தை எடுத்துக்காட்ட பொருத்தமானவை. அதாவது எதிராளிகளையும்  போட்டி நாடுகளையும் அச்சுறுத்தும்.

இதற்கிடையில் ஜேர்மனி பெருகிய ஆக்கிரோஷத்துடன் ஏகாதிபத்தியப் போர்களில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளது. 2003இல் ஈராக்கை பொறுத்தவரை பேர்லின் சில தயக்கங்களைக் காட்டியபோதும்,   பின்னர் 2011 இல் லிபியப் போரின்போதுகூட சில தயக்கங்களைக் காட்டியபோதும், இப்பொழுது அது மாலியில் பிரெஞ்சுத் தலையீட்டிற்கு முழு ஆதரவு கொடுப்பதுடன் சிரியாவிற்கு எதிரான போர்த் தயாரிப்புக்களுக்கும் ஆதரவைக் கொடுக்கிறது.

இந்த நிகழ்வுகளின் பின்னணியில் குறிப்பாக சீனாவுடன் மூலப் பொருட்களுக்கான தீவிரப் போராட்டம் உள்ளது. கடந்த கோடைக்காலத்தில் Resource Alliance தலைவர் Business Week இதழில் பின்வருமாறு அறிவித்தார்: சீனா அநேகமாக எல்லா பொருட்களிலும் 40% நுகர்கிறது என்பதைக் கருதுகையில், அதன் தேவைகள் தொடர்ந்து வியத்தகு முறையில் பெருகும் என்பதால், இடைப்பட்ட காலம் குறித்து எனக்குக் கவலையாக உள்ளது. சீனா என்பது எல்லாவற்றையும் உறுஞ்சி இழுக்கும் ஒன்றாக உள்ளது. முன்பு அது இருக்கவில்லை. இப்பொழுது நாம் ஜேர்மன் தொழிற்துறைக்கான விநியோகங்களின் பாதுகாப்பு குறித்துத் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

ஜேர்மன் பெருவணிகம் சீனாவுடன் மூலப் பொருட்களுக்காக  விடுக்கும் அழைப்பு ஜேர்மனிய வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது. முதல் உலகப் போரில் ஜேர்மனியின் நோக்கங்களான பிரான்ஸ், பெனிலக்ஸ் நாடுகள் மற்றும் ஆபிரிக்காவினை பரந்தளவில் இணைத்துக்கொள்வது என்பது வணிக, அரசியல், இராணுவத்தின் முக்கியமானவர்களின் சிந்தனைகளில் இருந்த திட்டங்களை தேவைகளைத் அடித்தளமாகக் கொண்டிருந்தன என்று 1961ம் ஆண்டு வரலாற்றாளர் பிரிட்ஸ் பிஷ்ஷர் முதல் உலகப் போரில் ஜேர்மனியின் நோக்கங்கள் என்ற மகத்தான நூலில் எழுதியுள்ளார்.

இதே வணிக வட்டங்கள்தான் அப்பொழுது ஹிட்லருக்கு ஆதரவு கொடுத்தன. ஏனெனில் அவருடைய உலகத்தை வெற்றிகாண வேண்டும் என்னும் திட்டங்களும் கிழக்கில் உயிர்வாழ்க்கைக்கான இடம் -Lebensraum“”- அவர்களுடைய மூலப் பொருட்கள், சந்தைகளின் விரிவாக்கத் தேவையுடன் ஒத்துப் போயின. அதேபோல் அவர் ஒழுங்மைந்திருந்த தொழிலாளர் இயக்கத்தையும் அழித்தார்.

இன்று முதல் மற்றும் இரண்டாம் உலப் போரை ஆதரித்த பல நிறுவனங்கள் அல்லது அவற்றின் பின்தோன்றல்களில் Resource Alliance இன் புரவலர்களும் உறுப்பினர்களும் உள்ளடங்குவர். இவற்றுள் இரசாயன நிறுவனங்களான BASF, Bayer ஆகியவை இகழ்வுற்ற IG Farben இல் இருந்து வெளிப்பட்டவை. எஃகு பெருநிறுவனம் ThyssenKrupp எனப்படுவது Thyssen மற்றும் Krupp இன் இணைப்பு நிறுவனமாகும். இரண்டுமே நாஜிக்களுக்கு முதலிலேயே ஆதரவு கொடுத்தவையாகும். Volkswagen Group ஹிட்லரின் முன்முயற்சியால் நிறுவப்பட்டது. வாகனத்தயாரிப்பு நிறுவனம் BMW இன் முக்கிய பங்குதாரர்கள் Qandt குடும்பம் தங்கள் சொத்துக்களின் பெரும் பகுதியை, நாஜிக்களின் கொள்கையான ஆரியமயமாக்குதல், கட்டாயத் தொழில் இன்னும் பிற நாஜிக் குற்றங்களினால் பெற்றுக்கொண்டவை.

அதன் வலைத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் Resource Alliance, ஜேர்மன் தொழில்களின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஹான்ஸ்-பீட்டர் கைட்டலால் 2010 இறுதியில் மூலப் பொருட்கள் சந்தையிலுள்ள வளர்ச்சிகளை ஆராய்வதற்கும் தொழில்துறை கொள்ளக்கூடிய பிரதிபலிப்புகளை ஆராயவும் நிறுவப்பட்டது. இதன் உயரதிகாரி டியர்க் பாஷ்கேர்ட் முன்பு E.ON என்னும் ஜேர்மனியின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவங்களில் ஒன்றின் குழுவில் முக்கிய மேலாளராக பணியாற்றியவராவார்.

ஜேர்மன் அரசாங்கத்துடன் Resource Alliance நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. பொருளாதார மந்திரி பிலிப் ரோஸ்லரின் சார்பில் இது ஆதரவுத் திட்டம் ஒன்றை நிர்வகிக்கிறது. அது நிறுவனங்களுக்கு நிபந்தனைகளுக்குட்பட்ட, திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய கடன்களை உலகம் தழுவிய முக்கிய மூலப் பொருட்களான ஆன்டிமனி, பெரிலியம், கோபால்ட், ப்ளூர்ஸ்பர், காலியம், ஜேர்மனியம், கிராபைட், இன்டியம், மக்னீசயம், நியோபியம், பிளாட்டினக்குழு உலோகங்கள், அபூர்வ மண்கள், டான்டெலம் மற்றும் டங்க்ஸ்டன் போன்றவற்றின் அபிவிருத்திக்கு கொடுக்கிறது.

ஜேர்மன் தொழில்துறை மீண்டும் தன் மூலப் பொருட்களின் தேவைக்காக பகிரங்கமான ஏகாதிபத்தியப் போருக்கு அழைப்பு விடுகிறது என்பது ஜேர்மனியிலும் உலகின் பிற பகுதியிலும் இருக்கும் உழைக்கும் மக்களால் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இது உலகப் பொருளாதார மற்றும் பூகோள அரசியல் மோதல்களுடைய வளர்ச்சியின் கூர்மையான வெளிப்பாடாகும். தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டுவதன் மூலம் ஏகாதிபத்தியவாதிகள் நிராயுதபாணியாக்கப்படாவிட்டால், இது தவிர்க்க முடியாமல் ஓர் உலகப் போரை நோக்கித்தான் செல்லும்.