World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka’s constitutional crisis: The way forward for workers

இலங்கை அரசியலமைப்பு நெருக்கடி: தொழிலாளர்களுக்கு முன்னோக்கிய பாதை

By the Socialist Equality Party (Sri Lanka)
30 January 2013

Back to screen version

நாட்டின் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை குற்றஞ்சாட்டி பதவி விலக்க ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ எடுத்த நடவடிக்கை, எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதாகும் என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கின்றது. அரசாங்கம் வாழ்க்கைத் தரத்தினை மேலும் மோசமாக சீரழிக்க செயற்படும்போது, அது தொழிலாளர்களின் மற்றும் கிராமப்புற ஏழைகளின் எந்தவொரு எதிர்ப்பின் மீதும் பாய்ந்து விழத் தயாராகின்ற நிலையில், அரச இயந்திரத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை இறுக்குகிறது.

தனது அரசாங்கத்தின் திவிநெகும அபிவிருத்தி மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த்தைத் தொடர்ந்தே, இராஜபக்ஷ இந்த மாதம் பண்டாரநாயக்கவை நீக்குவதற்காக நடவடிக்கை எடுத்தார். இனவாத பாகுபாட்டை எதிர்க்கவே இந்த மசோதாவை வரைந்ததாக அரசாங்கம் கூறிக்கொண்ட போதிலும், அதன் உண்மையான நோக்கம், மாகாண சபைகளிடம் இருந்து பொருளாதார அதிகாரங்களை நீக்கி, அதை தேசிய அரசாங்கத்தின் கைகளில் குவிப்பதே ஆகும்.

நீதிமன்ற உத்தரவு, பாராளுமன்ற நடைமுறை மற்றும் அடிப்படை சட்ட நடைமுறைகளை மீறியே பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணைக்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். அரசாங்கத்தின் சொந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட, குற்றச்சாட்டுக்கள் என்னவென்றே தெரியாமல் குற்றப் பிரேரணைக்கு ஆதரவளித்தனர் -அவர்கள் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்திட்டனர். பாராளுமன்ற சபாநாயகரும் ஜனாதிபதியின் சகோதரருமான சமல் இராஜபக்ஷ, பிரேரணையை ஏற்றுக்கொண்டு புனையப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆராய ஒரு பாராளுமன்ற தெரிவுக் குழுவை நியமித்தார்.

பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், அத்தகைய விசாரணை தொடரக் கூடாது என்று உத்தரவிட்டது. சமல் இராஜபக்ஷ உயர் நீதிமன்ற முடிவையும் அரசியலமைப்பையும் சாதாரணமாக மீறியதுடன் மக்களின் இறைமை அரசாங்க கட்டுப்பாட்டிலான- பாராளுமன்றத்திலேயே தங்கியிருக்கின்றது எனப் பிரகடனம் செய்தார்.

அரசாங்கத்துக்கும் உயர் நீதிமன்றத்திற்கும் இடையேயான விட்டுக்கொடுப்பற்ற நிலையானது, அரசாங்கத்தின் உறவினர் நெருக்கம் சம்பந்தமாகவும், அதேபோல் அமெரிக்கவை விட சீனா நோக்கி திரும்பியிருக்கின்றமை பற்றியும் ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் கூர்மையான வேறுபாடுகளைப் பிரதிபலிக்கிறது. பாராளுமன்றத்தை ஒரு இறப்பர் முத்திரையாக தரங்குறைத்து, அரசியலமைப்பை அலட்சியம் செய்கின்ற ஜனாதிபதியின் ஆளும் குழுவானது தொழிலாள வர்க்கத்துடன் ஒரு ஆபத்தான மோதலுக்கு களம் அமைக்கின்றது என கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் பிரிவுகள் மேலும் மேலும் கவலைகொண்டுள்ளன

இரக்கமின்றி முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கின்ற நீதிமன்றங்கள், தொழிலாளர்களின் மற்றும் ஏழைகளின் நண்பன் அல்ல. ஆயினும், எந்தவொரு எதிர்ப்பையும் பொறுத்துக்கொள்ள முடியாத இராஜபக்ஷ, ஒட்டுமொத்த நீதித்துறையையும் தன்னடக்கத்துக்கு கொண்டுவரும் ஒரு வழிமுறையாக பண்டாரநாயக்கவை அகற்றினார். புதிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், முன்னாள் சட்டமா அதிபரும், ஒரு அரசாங்க சட்ட ஆலோசகரும் மற்றும் ஒரு நம்பகமான ஜனாதிபதியின் விசுவாசியுமாவார். பண்டாரநாயக்க மீதான குற்றத் தீர்மானம் பொலிஸ்-அரச ஆட்சியை நோக்கிய மற்றொரு வெளிப்படையான நடவடிக்கை ஆகும்.

எதேச்சதிகாரமான கைதுகள், விசாரணை இன்றி தடுத்து வைத்தல் மற்றும் சித்திரவதை, அத்துடன் சட்டத்துக்கு புறம்பான கொலைகளை நிலைநாட்டிய, ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட நீண்டகால இனவாத யுத்தமே தற்போதைய பொலிஸ்-அரச இயந்திரத்தின் தோற்றுவாயாகும்.

2009ல் பிரிவினைவாத தமிழீழ
விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின்னர், இராஜபக்ஷவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரியுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துகின்ற நிலையில், அவர் சர்வாதிகார ஆட்சி முறைகளை நாடுகின்றார். இராஜபக்ஷ அரசாங்கமானது மீண்டும் மீண்டும் வேலைகள், சேவைகள் மற்றும் வாழ்க்கை தரம் மீதான தாக்குதல்களை எதிர்த்து தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் செய்யும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தை மேலும் மேலும் பயன்படுத்தி வந்துள்ளது.

அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்து கட்சிகளும் யுத்தத்தை ஆதரித்ததோடு இராணுவத்தின் யுத்த குற்றங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கும் பொறுப்பாளிகளாவர். ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.), 1983ல் போரைத் தொடங்கியதோடு 60,000 மரணங்களுக்கு காரணமான 1989-91ம் ஆண்டுகளில் நடந்த கிராமப்புற இளைஞர்கள் மீதான கொலைப்படைத் தாக்குதல்களுக்கும் பேர் போனதாகும். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ), இராணுவத்தின் முன்னணி ஆதரவாளராக இருந்தது. அது 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை ஆதரித்ததுடன் 2006ல் போரை மீண்டும் தொடக்குவதற்கு அவரைத் தூண்டியது.

இப்போது இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத வழிமுறைகளை எதிர்ப்பவை போல் பாவனை செய்யும் இந்த கட்சிகள் மீது தொழிலாள வர்க்கம் எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது. குற்றப் பிரேரணைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த சட்ட மற்றும் நீதித்துறை அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களும், ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை தரத்தை பாதுகாப்பதற்கு இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு பரந்த அரசியல் போராட்டத்தையும் தடுக்க ஆரம்பத்தில் இருந்தே முயன்று வந்தன.

எதிர்ப்புக்களின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மை, ஜனநாயக உரிமைகளுக்காக எந்தவொரு உறுதியான போராட்டத்தையும் முன்னெடுக்க முதலாளித்துவ மற்றும் உயர் மத்தியதர வர்க்கம் இயல்பிலேயே இலாயக்கற்றுள்ளதை பிரதிபலிக்கின்றது. அவர்கள் முதலாளித்துவ ஸ்தாபனத்தினுள் தமது இன்றியமையாத நலன்களை மற்றும் சொந்த சலுகைகளை பாதுகாப்பது பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொடூரமான வழிமுறைகளை பற்றி கவலைகொள்வதை விட, உழைக்கும் மக்கள் போராட்டத்துக்குள் நுழைந்துவிடுவர் என்பதையிட்டே அதிகம் பீதியடைந்துள்ளனர்.

முன்னாள் இடது அமைப்புக்களான நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.) மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் (USP) மிகவும் நயவஞ்சகமான பாத்திரத்தை ஆற்றின. இந்த குழுக்கள் ஜனநாயகத்தின் பாதுகாவலனாக வலதுசாரி யூ.என்.பீ.யை வெட்கமின்றி ஊக்குவிக்கின்றன. அவர்கள் வெளிப்படையாக முதலாளித்துவ கட்சிகளுக்கு தொழிலாளர்களை கீழ்ப்படுத்துவது மற்றும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதை தடுப்பதில் முக்கிய அச்சாணியாக செயற்படுகின்றன.

குற்றப் பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதத்தின்போது, ஐக்கிய சோசலிச கட்சி தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, ஆர்ப்பாட்க்காரர்கள் மத்தியில் கூறியதாவது: "நாங்கள் ஜனநாயகத்தை வெற்றிகொள்ள எங்கள் உயிர்களை தியாகம் செய்ய வேண்டும். இடது மற்றும் வலதில் உள்ள அனைவரும், இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்." ஐ.சோ.க. மற்றும் நவசமசமாஜ கட்சியும் யூ.என்.பீ. உடன் மட்டுமன்றி தாயக மக்கள் முன்னணி மற்றும் புதிய சிஹல உறுமய போன்ற சிங்கள பேரினவாத கட்சிகளுடனும் வெளிப்படையாக கூட்டணி வைத்துள்ளன.

டெய்லி மிரர் பத்திரிகைக்கு எழுதிய நவ சம சமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த தலைவர்கள் பற்றிய மாயைகளை முன்னிலைப்படுத்தினார்: பிரதம நீதியரசர் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்தவர்களின் எதிர்ப்புடன் சேர்த்து, தொழிற்சங்கங்களின் வெகுஜனப் போராட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புப் போராட்டங்களும் இடம்பெற்றதன் காரணமாக மஹிந்தவின் திட்டம் குறுகிப் போயிருக்கலாம்,” என அவர் எழுதினார். இந்த எதிர்ப்புகள் பிசுபிசுத்துப் போன நிலைமையிலும் கூட: "யூ.என்.பீ. எடுத்த இந்த வழிமுறைகளை பற்றி நினைக்கும் போது, ஒரு தாரான்மைவாத ஜனநாயகக் கட்சியால் எதிர்ப்பில் எங்களுடன் இணைந்து அந்தளவு செல்ல முடியும் என்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்", என அவர் எழுதினார்

யூ.என்.பீ., நீதித்துறை மற்றும் தொழிற்சங்கங்களிலும் உள்ள நவ சம சமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி போன்ற போலி இடதுகள் பரப்பும் அழிவுகரமான மாயைகளை தொழிலாள வர்க்கம் நிராகரிக்க வேண்டும்.

பிரதம நீதியரசர் எதேச்சதிகாரமான முறையில் பதவி நீக்கப்பட்டமை, இராஜபக்ஷ அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கு எதிராக சர்வாதிகார நடவடிக்கைகளை பயன்படுத்த தயங்கப் போவதில்லை என்ற ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும். உலகம் முழுவதும் உள்ள ஆளும் வர்க்கங்கள், நிதி மூலதனத்தின் சிக்கன திட்டத்தை அமுல்படுத்த அதிக அளவில் அடக்குமுறை நடவடிக்கைகளை நாடுகின்றன. கிரேக்கத்தின் ஏதென்ஸில், வேலை நிறுத்தம் செய்யும் சுரங்கப்பாதை தொழிலாளர்களை அரசாங்கம் இராணுவச் சட்டத்தின் கீழ் வைத்திருப்பதோடு, அவர்களின் எதிர்ப்பை வன்முறையில் தகர்த்து அவர்களை மீண்டும் பலவந்தமாக வேலைக்கு அனுப்புவதற்காக பொலிஸை அனுப்பியுள்ளது. எகிப்தில், ஜனாதிபதி மொஹமட் முர்ஸி சர்வதேச நாணய நிதியத்தின் சந்தை சார்பு கொள்கைகளை திணிக்க தயாராகின்ற நிலையில், அரசாங்க-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக, மூன்று நகரங்களில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கான ஒரு சர்வதேச புரட்சிகர மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக ஒரு நிலையான போராட்டத்தை முன்னெடுக்கும் வல்லமை படைத்த ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே. ஆயினும், ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகள் மற்றும் அதைச் சார்ந்தவர்களில் இருந்து தொழிலாளர்கள் சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே அதை சாதிக்க முடியும். அவ்வாறு செய்வதன் மூலம் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை வழிநடத்த முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி, இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை தரத்தைப் பாதுகாக்க, வேலைத் தளங்கள் மற்றும் அயல் பிரதேசங்களிலும் சுயாதீன நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு அழைப்பு விடுக்கின்றது. தற்போதைய இனவாத மற்றும் ஜனநாயக விரோத அரசியலமைப்புக்கு எதிராக சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம்களுமாக அனைத்து மக்களதும் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட, மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு உண்மையான அரசியலமைப்பு நிர்ணய சபையை கூட்ட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி கோருகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு இயக்கத்தை உருவாக்குவதற்கு தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களும் பரந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என பிரேரிக்கின்றது. முதலாளித்துவ ஆட்சிக்கு மாற்றீடாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகவும், தெற்காசியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சோசலிச குடியரசு ஒன்றியங்களின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிக்க சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது.

இந்த வேலைத் திட்டத்தை ஆதரிக்கும் அனைவரையும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக உருவாக்குமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.