World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Fifteen Years of the World Socialist Web Site: 1998-2013

உலக சோசலிச வலைத் தளத்தின் பதினைந்து வருடங்கள்: 1998-2013

David North, Chairman of the International Editorial Board
14 February 2013

Back to screen version

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) என்ற தினசரி வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு இன்று பதினைந்தாவது ஆண்டு தினமாகும். பிப்ரவரி 14, 1998 தொடங்கி வாரத்திற்கு ஐந்து நாட்களும், அதன் பின் 1999 ஏப்ரல் முதலாக வாரத்திற்கு ஆறு நாட்களும் உலக சோசலிச வலைத் தளம் தவறாது வெளிவந்திருக்கிறது. இவ்வெளியீட்டின் முதல் பல மாதங்களுக்கு, நாளாந்த வாசகர் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக இருந்தது. பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் WSWS உலகின் மிகப் பரவலாக வாசிக்கப்படும் இணைய அடிப்படையிலான சோசலிச வெளியீடாகத் திகழ்கிறது.

உலக சோசலிச வலைத் தளமானது அன்றாடம் சுமாராக 40,000 முதல் 50,000 வரையான தனிநபர்களால் கணினி மூலமாக அணுகப்படுகிறது. வாசகர் எண்ணிக்கை பல நாட்களில் கணிசமான அளவு அதிகமாவதும் இருக்கிறது. வாசகர் எண்ணிக்கையை விடவும் முக்கியமானது பூகோளரீதியாக பரந்துபட்ட இடங்களில் இருந்து வாசிக்கப்படுவது தான். ஒவ்வொரு கண்டத்திலும் இருக்கும் ஏராளமான நாடுகளில் இருந்து WSWS அணுகப்பட்டு வருகிறது. 19 மொழிகளுக்குக் குறையாத மொழிகளில் கட்டுரைகளை பதிவிடும் உலக சோசலிச வலைத் தளம், உண்மையாக ஒரு சர்வதேச வெளியீடாகத் திகழ்கிறது

உலக சோசலிச வலைத் தளத்தின் வெளியீடு இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் தொடங்கி இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் முதல் இரு தசாப்தங்கள் வரை தளர்ச்சியின்றி தொடர்ந்து வருகிறது. அதன் முதலாமாண்டில் அதாவது 1998 ஆம் ஆண்டில் 1,540 கட்டுரைகள் தளத்தில் பதிவிடப்பட்டன. 2012 ஆம் ஆண்டில் இக்கட்டுரைகளின் எண்ணிக்கை 4,580 ஐத் தொட்டிருக்கிறது. WSWS இன் இணைய ஆவணக் காப்பகத்தில் இப்போது சுமார் 45,000 கட்டுரைகள் வரை இருக்கின்றன. இது பெருமை கொள்ளத்தக்க எண்ணிக்கையாகும். ஆயினும் மிகப் பரந்த வகையில் பல்தரப்பட்ட விடயங்கள் குறித்தும் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கிறது என்பதே உண்மையில் அசாதாரணமானதாகும்.

கடந்த 15 வருடங்கள் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி தொடர்ச்சி பெற்றதும் தீவிரமடைந்ததுமான ஒரு காலகட்டமாக இருந்திருக்கிறது. 9/11, அதனைச் சூழ்ந்த ஏகாதிபத்தியபயங்கரவாதத்தின் மீதான போர்”, நவ-காலனித்துவத்தின் மீளெழுச்சி, அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேசரீதியாகவும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சிதைவு, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் பெருகும் குரோதத்தை மையமாகக் கொண்ட சர்வதேச பூகோள-அரசியல் பதட்டங்களின் அதிகரிப்பு, 1997 இல் ஆசியச் சரிவில் தொடங்கி ஒரு தசாப்தம் கழித்து வோல் ஸ்ட்ரீட் பொறிவில் உச்சம் பெற்றதான உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளின் வரிசை, 2008 பொறிவுக்கு பதிலிறுப்பாக முதலாளித்துவ வர்க்கத்தினால் செயல்படுத்தப்படும் நாளுக்குநாள் மிருகத்தனம் அதிகரித்துச் செல்லும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள், எகிப்தில் புரட்சியின் வெடிப்பு மற்றும் உலகளாவிய முதலாளித்துவ சமூக-எதிர்ப்புரட்சிக்கு போர்க்குணமிக்க தொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஆரம்பகட்ட வெளிப்பாடுகள் ஆகியவை நிர்ணயகரமான அரசியல் நிகழ்வுகளாகவும் சமூகப் பொருளாதார நிகழ்போக்குகளாகவும் இருந்திருக்கின்றன.

இந்த அத்தனை நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுப்போக்குகளும் உலக சோசலிச வலைத் தளத்தால் ஒப்பில்லாத துல்லியத்துடனும் நுட்பமான பார்வையுடனும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன, பகுத்தாயப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்பதை வெளியிடவும் பதிவு செய்யவும் இது முனைந்தது என்பது மட்டுமல்ல, மார்க்சிச இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாத பகுப்பாய்வின் ஒப்பீடற்ற கருவிகளைப் பயன்படுத்தி, நடப்பதன் பின்னால் இருக்கும் உண்மையை வெளிக் கொண்டுவருவதற்கும் இது முனைந்து வந்திருக்கிறது. அதாவது, முதலாளித்துவத்தின் கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் வரலாறு, அதனால் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சிக்கு காரணமாவது மற்றும் அதன் தடுக்கமுடியாத விளைபொருளாக இருக்கக் கூடிய உலக சோசலிசப் புரட்சி ஆகியவை குறித்த ஒரு நனவுடன் இது நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்திருக்கிறது.

தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக சோசலிச வர்க்க நனவினை அபிவிருத்தி செய்வது என்பது தான் உலக சோசலிச வலைத் தளம் வெளிவந்த முதல் நாளிலிருந்தே அதன் நோக்கமாக இருந்து வந்திருக்கிறது. நாளாந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகள் மீது இடைவிடாத கவனக்குவிப்பு இதற்கு அவசியமாக இருந்திருக்கிறது. ஆனால் உலகெங்கும் இருக்கும் அதன் ஆசிரியர் குழு மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த கட்டுரையாசிரியர்களின் பணி என்பது வெறுமனே அரசியல் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுடன் மட்டுப்பட்டு நின்று விட்டதல்ல. கடந்த 15 ஆண்டுகளில் WSWS கலை மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகளில் பரவலாக எழுதியிருக்கிறது. திரைப்படங்கள், இசை, கலை மற்றும் இலக்கியம் குறித்த அதன் கட்டுரைகளில் ஒரு சமகால சோசலிச சமூகத்தின் அத்தனை அம்சங்களையும் நோக்கிய ஒரு வெகுமுக்கியமான புரட்சிகர மனோநிலையை விவரிப்பது பிரிக்கவியலாமல் இணைந்ததாய் இருந்திருக்கிறது. விஞ்ஞான ஆராய்ச்சியின் பல துறைகளிலும் நடந்திருக்கக் கூடிய முக்கியமான அபிவிருத்திகளை WSWS மிகக் கவனத்துடன் பின்பற்றி வந்திருக்கிறது, இயற்கையையும் சமூகத்தையும் சடவாதரீதியாகப் புரிந்து கொள்வதை ஊக்குவிப்பதற்கு இந்த முன்னேற்றங்கள் வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதை வரவேற்றிருக்கிறது.

அதன் 15 ஆண்டு கால பிரசுரப் பாதையில், உலக சோசலிச வலைத் தளம் சர்வதேச புரட்சிகர சோசலிசத்தின் அங்கீகாரமிக்க குரலாக இருந்து வந்திருக்கிறது. உலகெங்கிலும் பெரும் நெருக்கடியும் மனிதத் துயரமும் நிலவுகின்ற காலத்தில் நடந்தேறுகின்ற நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதற்கும், உருக்குலைந்து காட்டுமிராண்டித்தனத்தில் மூழ்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு செயலற்றுப் போன முதலாளித்துவ உலகிற்கு ஒரு உண்மையான முற்போக்கு, என்பதாலேயே புரட்சிகர, மாற்றினைக் காண்பதற்கு முனைந்து கொண்டிருக்கும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தவிர்க்கமுடியாத அரசியல் மற்றும் புத்திஜீவித்தன வழிகாட்டியாகவும் இது சேவை செய்திருக்கிறது

15 வருடங்களாக தனது அன்றாட வெளியீட்டை சாத்தியமாக்கிய உலக சோசலிச வலைத் தளத்தின் பெரும் வலிமை எங்கே தங்கியிருக்கிறது? மிக உயர்ந்த தரத்திலான அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பகுப்பாய்வு மற்றும் வருணனைகளை (இவை காலத்திற்குத் தாக்குப் பிடித்து நின்றதை காப்பக ஆவணங்களின் மீதான ஒரு ஆய்வு உறுதிப்படுத்தும்) வெளிக்கொண்டுவருவது WSWSக்கு எவ்வாறு சாத்தியமாயிற்று?

புரட்சிகர மார்க்சிச இயக்கத்தின் மகத்தான தத்துவார்த்த மற்றும் அரசியல் மரபுகளில் தான் WSWS இன் வேலை நனவுடன் வேரூன்றியிருக்கிறது என்ற உண்மையில்தான் WSWS இன் வலிமையும் நம்பகத்தன்மையும் முற்றிலும்  முதன்மையாகவும் தங்கியிருக்கின்றது. சர்வதேச சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திய பல பத்தாண்டு காலப் போராட்டத்தின் விளைபொருளே WSWS ஆகும். WSWS இன் வெளியீட்டை ஆரம்பித்தபோது அனைத்துலகக் குழுவின் நிதியாதாரம் மிகக் குறைவானதாய் இருந்தது. இருப்பினும் அரசியல் மற்றும் புத்திஜீவித்தன மூலதனத்தின் விடயத்தில், நமது உலக இயக்கத்தின் வள ஆதாரங்கள் ஒப்பிட முடியாததாகவும் ஏறக்குறைய எல்லையற்றதாகவும் இருந்தது. உலக நிகழ்வுகள் மீதான WSWS இன் பகுப்பாய்வில் அதன் சர்வதேச ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் முதலாளித்துவம் மீதான மார்க்சிச ஆய்வாளர்களின் நீடித்திருக்கும் தன்மை கொண்ட விஞ்ஞானபூர்வ அடித்தளங்களையும் உலக சோசலிசப் புரட்சியின் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான மூலோபாய ஆசிரியர்களான விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல் சிந்தனைகளையும் கொண்டு வர முடிந்தது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னர், சோசலிசம் இறுதி மரணத்தை எட்டி விட்டதென்றும் முதலாளித்துவம் தவிர்க்கவியலாத வரலாற்று வெற்றியைக் கண்டிருக்கிறது என்றும் பிரகடனம் செய்த பிற்போக்குத்தனமான முதலாளித்துவ வெற்றிக்களியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்ததற்கு இடையிலான ஒரு சமயத்தில் தான் உலக சோசலிச வலைத் தளம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. வரலாறு குறித்த அந்த பொய்யான கருத்தை ஏற்றுக் கொண்ட குட்டி-முதலாளித்துவ தீவிரசிந்தனையாளர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காததாக இருந்தது. ஆனால் லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலைகளில் வேரூன்றியதாக இருந்த அனைத்துலகக் குழு, பல பத்தாண்டுகளாக, ஸ்ராலினிசத்தின் பிற்போக்குத்தனமான பாத்திரம் குறித்து வலியுறுத்தி வந்தது என்பதோடு சோவியத் ஒன்றியத்தின் உடைவையும் முன்கணித்திருந்தது. தோல்வியடைந்தது ஸ்ராலினிசமும், அதனுடன் மார்க்சிச-விரோத தேசியவாத சந்தர்ப்பவாதத்தின் அத்தனை வடிவங்களும் தான்

உலக சோசலிச வலைத் தளம் விவாதத்திற்குரியதும் மற்றும் தனது நிலைப்பாட்டில் தெளிவானதுமாகும். அது தனது புரட்சிகர நோக்கங்களை இரகசியமாக வைத்திருக்கவில்லை. சீரழிந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ சமுதாயத்தை சீர்திருத்துவதல்ல அதன் நோக்கம், அது சாத்தியமற்றதும் கூட. WSWS உண்மையைப் பேசுகிறது என்பதாலேயே, அது புரட்சிகரமானதாக இருக்கிறது. மார்க்சிச விரோதம் மற்றும் சோசலிச விரோதத்தின் அத்தனை வடிவங்களையும் புத்திஜீவித்தன ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் கண்டனம் செய்வதில் WSWS ஒளிவுமறைவற்றதாகவும், சமரசமற்றதாகவும், தயவுதாட்சண்யமற்றும் செயல்படுகிறது.

அனைத்துலகக் குழுவானது, உலக சோசலிச வலைத் தளத்தை ஆரம்பிப்பதற்கான அதன் திட்டத்தை 1990களில் விவரித்தபோது அது கூறியதைப் போல, ஒரு புதிய புரட்சிகர எழுச்சிக்கு சாதகமாய் அமையக் கூடிய மூன்று காரணிகளை அது இனங்கண்டது.

முதலாவது, சமகால முதலாளித்துவத்தின் அடிப்படையான முரண்பாட்டை, அதாவது உற்பத்தி சக்திகளின் சர்வதேசரீதியான அபிவிருத்திக்கும் ஒருங்கிணைப்புக்கும் மற்றும் முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறையின் பொருளாதாரரீதியான காலாவதியான தன்மைக்கும் இடையிலான மோதலை தவிர்க்கவியலாமல் தீவிரப்படுத்தக்கூடிய முதலாளித்துவ  பூகோளமயமாக்கலின் பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகள்.

இரண்டாவதாக, முதலாளித்துவத்தின் உலகளாவிய விரிவாக்கத்தில் இருந்து சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கையும் அதனாடாக அதன் புரட்சிகர ஆற்றலும் தீவிரமாக வளர்ந்து பெருகியதை நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு (ICFI) கவனத்தில் கொண்டது.

மூன்றாவதாக, உலக முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை வரலாற்றில் முன்கண்டிராத அளவுக்கு மூலோபாயரீதியாக ஒருமைப்படுத்துவதை சாத்தியமாக்கத்தக்க குறிப்பாக இணையம் சம்பந்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்பத்தின் எழுச்சி.

உலக சோசலிச வலைத் தளத்தின் வெற்றியானது 1998 இல் அது தொடங்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்த பகுப்பாய்வை ஊர்ஜிதப்படுத்துகிறது.

கடந்த 15 வருடங்களில், WSWS ஒப்பில்லாத அரசியல் வரலாற்றை ஸ்தாபித்திருக்கிறது. இந்த முக்கியமான தினத்தைக் கொண்டாடும் விதமாக, இந்த வலைத் தளத்திற்குள்ளாக அதன் பரந்த காப்பகத்தில் வாசித்துப் பயனடைவதில் வாசகர்களுக்கு உதவக் கூடிய சிறப்பு காட்சி வரிசைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். முதலாம் வரிசையில் வெகுமுக்கியமான பதிவுகள் மீதான காலவரிசையிலான ஒரு திறனாய்வு இருக்கும். கடந்த பதினைந்து வருட காலத்தில் நடந்த மாபெரும் நிகழ்வுகளுக்கு WSWS இன் பிரதிபலிப்பை ஆய்வு செய்ய வாசகர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்நிகழ்வுகளை இந்தத் தளம் சரியாக ஆய்வு செய்திருக்கிறதா, தொழிலாள வர்க்கத்திற்கான அதன் அரசியல் பொறுப்புகளை சரியாக பூர்த்தி செய்திருக்கிறதா என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ள முடியும்

பிந்தைய காட்சிவரிசைகள் கடந்த 15 வருடங்களில் WSWS கட்டுரைகள் விவாதித்த குறிப்பான விவாதப் பொருட்கள் மற்றும் பிரச்சினைகளை இன்னும் விரிவாய் வழங்குகிறது.

இந்த ஆண்டுதினத்தை நாம் கொண்டாடுவதன் பகுதியாக, சமூகம், அரசியல் மற்றும் கலாச்சாரம் குறித்த உங்களது கண்ணோட்டங்களில் WSWS எத்தனை தூரம் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது என்பது பற்றிய கருத்துகளைச் சமர்ப்பிக்க எமது வாசகர்களை நாங்கள் அழைக்கிறோம். ஒரு புதிய புரட்சிகரத் தொழிலாள வர்க்க இயக்கம் முன்கண்டிராத சக்தி மற்றும் சர்வதேச வீச்சுடன்  வளருவதற்கு ஒரு மிக வலிமையான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளத்தை கடந்த 15 ஆண்டு காலத்தில் உலக சோசலிச வலைத் தளம் உருவாக்கித் தந்திருக்கிறது.