தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The police state implications of Obama's assassination programஒபாமாவின் படுகொலை திட்டத்தின் போலீஸ் அரச தாக்கங்கள்Joseph
Kishore use this version to print | Send feedback அமெரிக்க குடிமக்களைப் படுகொலை செய்வது குறித்து மற்றும் அது முன்வைக்கும் வாதங்களின் அடிப்படையில் நடத்தப்படும் செயல்கள் குறித்தும், ஒபாமா நிர்வாகத்தினால் சமீபத்தில் கசிய விடப்பட்ட “வெள்ளைத் தாள்”என்பது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தினரால் மிகத் தீவிர எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகள் பெரும் ஆபத்திற்கு உட்பட்டுள்ளன. அமெரிக்க ஆளும் வர்க்கம், சட்டமற்ற நிலை மற்றும் வன்முறையில் ஆழ்ந்திருப்பதானது சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது. ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்புக்கள் ஆகியவற்றின் மீது நிர்வாகத்தின் நேரடித் தாக்குதல்—ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக, இரகசியமாக அமெரிக்க மக்களைக் கொலை செய்ய உத்தரவிடுவதற்கான “உரிமையை” உறுதிப்படுத்துவது—ஐயத்திற்கு இடமின்றி பெரிய குற்ற விசாரணைக்கு காரணத்தை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய குற்ற விசாரணையை சந்திக்காமல், அதையொட்டிப் பதவியிலிருந்து அகற்றப்படுவதைத் தடுக்கும் வகையில் ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்த ரிச்சார்ட் நிக்சனின் குற்றங்கள், ஒபாமாவின் தடையற்ற நிர்வாக அதிகாரங்கள் என்னும் உறுதிப்பாட்டிற்கு எதிராக மங்கிப் போய் நிற்கின்றன. நீதித்துறையின் போலித்தன சட்டபூர்வ வாதங்களைக் கொண்ட அறிக்கையானது, புஷ் நிர்வாகத்தின் இழிந்த சித்திரவதை பற்றிய அறிக்கையை நினைவிற்கு கொண்டுவருவதுடன், கீழ்க்கண்ட கருத்துக்களைக் கொண்ட நிலையில் இருக்கிறது: ஜனாதிபதியும் இராணுவ-உளவுத்துறைக் கருவியும், தங்கள் உள்துறை விவாதங்களை மட்டுமே முற்றிலும் அடிபடையாகக் கொண்டு அல் கெய்டா அல்லது அதனுடன் “தொடர்புடைய சக்திகளில்” ஒரு முக்கிய உறுப்பினர் என அவர்கள் முடிவெடுக்கும் எந்த அமெரிக்க குடிமகனையும் படுகொலை செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். இந்த அதிகாரத்திற்கு புவியியல் எல்லைகள் ஏதும் கிடையாது, இது எந்தவகையான காங்கிரஸ் அல்லது நீதிமன்றக் கண்காணிப்பிற்கும் உட்பட்டதும் இல்லை. வெள்ளை மாளிகை மற்றும் அதனுடைய இராணுவ, உளவுத்துறை ஆலோசகர்கள் நீதிபதிகளாகவும், நடுவர்களாவும், தூக்கிலிடுபவர்களாகவும் செயல்படுகின்றனர். முழு ஆவணமும் இரட்டைப் பேச்சுடைய போலி நயத்தன்மை இவற்றைத்தான் கொண்டுள்ளது. உதாரணமாக அழிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் “தவிர்க்க முடியாத வன்முறைத் தாக்குதல் அச்சுறுத்தலை” காட்டுபவர்கள் என்று கூறிவிட்டு, “தவிர்க்க முடியாத” என்பதற்கு பொருளை அதன் எதிரிடையானதைக் கூறுகிறது. அரசாங்கத்திற்கு குறிப்பிட்ட நடவடிக்கையை திட்டமிடுவதற்கு எந்த ஆதாரமும் தேவை இல்லை; அல்லது உடனடி வருங்காலத்தில் ஏதேனும் நடக்கும் என்ற நிலைப்பாடும் தேவையில்லை. இறுதியில், ஜனநாயக உரிமைகளின் மையத்தானக் கருத்துக்கள் எதுவும் மிஞ்சவில்லை. முறையான சட்டவழிவகை கொள்கை—13ம் நூற்றாண்டின் வேர்களை கொண்ட, அமெரிக்க அரசியலமைப்பின் ஐந்தாம் திருத்தமான எந்தத் தனிநபரின் “வாழ்க்கை, உரிமை, சொத்து ஆகியவை முறையான சட்டவழிவகையின்றிப் பறிக்கப்படமாட்டாது” -- என்பது ஒதுக்கப்பட்டுவிட்டது. சர்வாதிகார அதிகாரங்கள் பற்றிய இத்தகைய உறுதிப்பாடுகள் நியாயப்படுத்தப்படுவது —தேசிய பாதுகாப்பு மற்றும் போரின் தேவைகள் (இதைப் பொறுத்தவரை, “பயங்கரவாதத்தின் மீதான உலகப் போர்”)— ஹிட்லரில் இருந்து பினோசே வரை ஒவ்வொரு இராணுவ மற்றும் பாசிச ஆட்சியினால் வலியுறுத்தப்படுவதைப் போன்றதுதான். ஆயினும்கூட அரசியல் நடைமுறை அல்லது செய்தி ஊடக நடைமுறையிலிருந்து எந்தக் குறிப்பிட்ட எதிர்ப்பையும் இந்த வளர்ச்சிகள் தூண்டிவிடவில்லை. அமெரிக்கத் தாராளவாதத்தின் முக்கிய செய்தித்தாளான நியூ யோர்க் டைம்ஸ் இதை எதிர்கொண்டுள்ள விதம் குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமானது. புதனன்று வெளியிட்ட ஒரு தலையங்கத்தில் டைம்ஸ் நிர்வாகம் அரசியலமைப்பு தடைகளுக்குக் கொண்டிருக்கும் இழிவுணர்வின் மறைக்கப்படாத தன்மை குறித்து வருந்தி, அமெரிக்க குடிமக்கள் உட்பட கொலை நிகழ்வுகளுக்கான நடவடிக்கைகளுக்கு ஒரு சட்டபூர்வ பூச்சைக் கொடுக்கிறது. “ஒரு சிறப்பு [அதாவது, இரகசிய] நீதிமன்றம் இத்தகைய உணர்வுபூர்வ விவாதங்களை கையாளத் தேவை, தொலைபேசி ஒட்டுக் கேட்பதற்கு அமைக்கப்பட்டது போல்” என்று கூறுகிறது. வேறுவிதமாகக் கூறினால், வரம்பற்ற உள்நாட்டு உளவு வேலைக்கு இரகசிய FISA நீதிமன்றம் அனுமதி வழங்குவது போல, அரசாங்க கொலைகளுக்கு ஒரு நட்சத்திர அறை முத்திரையிட இருக்க வேண்டும். நீதித்துறைக்குப் புறம்பான படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று டைம்ஸ் அழைப்புவிடவில்லை; அதேபோல் ஒபாமாவும் அவருடன் இணைந்து செயல்படுபவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தெரிவிக்கவில்லை. “விவாதத்திற்கு இடமுள்ளது” என்ற தலைப்பில் டைம்ஸ் ஆன்லைனில் வெளியிட்டுள்ள ஒரு பிரிவில், செய்தித்தாள் படுகொலைக் கோட்பாடு குறித்துப் பல கருத்துக்களை அளிக்கிறது; இவற்றில் பெரும்பாலானவை அதற்கு ஆதரவாக உள்ளன. வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் சட்டக் கூடத்திலுள்ள சாய்கிருஷ்ணப் பிரகாஷ் (மற்றும் அமெரிக்கத் தலைமை நீதிமன்றத்தின் நீதிபதி கிளாரன்ஸ் தோமஸின் முன்னாள் எழுத்தர்), வெள்ளைத் தாளிலுள்ள சட்டபூர்வ வாதங்கள் “மிக அதிமகானவை” என்று அறிவிக்கிறார். பெப்பர்டைன் பல்கலைக்கழகத்தின் கிரெகோரி மக்நீல் (முன்னாள் குவாண்டநாமோ பேயின் இராணுவக் குழுக்களுக்கு புஷ் நிர்வாகத்தில் உயர்மட்ட ஆலோசகராக இருந்தவர்), “போர்க்கால இலக்கு வைக்கும் முடிவுகள் அரசியல் கிளைகளுக்கு கொடுக்கப்படுகின்றன, இவை தேர்ந்தெடுக்கப்படுபவை அல்ல; மேலும் பொறுப்புக்கூற வேண்டிய தேவையில்லாத நீதிபதிகளிடமும் கொடுக்கப்படுகின்றன” என்று வலியுறுத்துகிறார். திட்டம் பற்றிய குறைகூறல்களை டைம்ஸ் அளித்துள்ளமையானது மங்கிய தன்மையை கொண்டுள்ளன. அமெரிக்க குடி உரிமைகள் சங்கத்தின் ஜமீல் ஜாபர் நிர்வாகத்திற்கு தனியே இத்தகை நடவடிக்கைகளை செய்யும் உரிமை கொடுக்கப்படக்கூடாது, ஏனெனில் அது “தவறு செய்யக்கூடும்” என்று கூறியுள்ளார். இவைதான் உத்தியோகபூர்வ “விவாதங்கள்”. அமெரிக்க குடிமக்கள் உட்பட ஜனாதிபதி உத்தரவிடும் படுகொலைகளுக்கு அமெரிக்க தாராளவாத நடைமுறை ஏற்றுக் கொடுக்கும் ஆதரவு, பல தசாப்தங்களாக நீடித்துவரும் வலதிற்கும் அதிகமாகச் செல்லும் பாதையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் விளைவு ஆகும். ஜனநாயகக் கட்சியின் சமூகச் சீர்திருத்தம் குறித்த உறுதிப்பாடு அனைத்தையும் கைவிட்டுவிட்டதால் அது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவைக் கொடுக்கிறது—இது ஈரான் கான்ட்ரா ஊழல் 1980களை மூடிமறைத்ததில் இருந்து தொடங்குகிறது; வலதுசாரி ஆட்சிமாற்ற முயற்சி இதில் அடங்குகிறது; 1990களில் கிளின்டன் மீதான பெரிய குற்றவிசாரணை Starr விசாரணை என்ற வடிவத்தில் இருந்தது; 2000 இல் தேர்தல்கள் திருடப்பட்டதில் இருந்தது; 9/11க்குப் பின் செயல்படுத்தப்பட்ட ஏராளமான பொலிஸ் அரச நடவடிக்கைகளிலும் 2000 ம் ஆண்டுகளில் பொய்களின் அடிப்படையில் தொடக்கப்பட்ட போர்களிலும் இருந்தது. இப்பொழுது, ஒபாமா நிர்வாக வடிவத்தில், ஜனநாயகக் கட்சியும் மத்தியதர வர்க்கத்தின் உயரடுக்கு தாராளவாதக் குழுவும் (நிர்வாகத்தின் உறுப்பினர்களையும் சுற்றி இருப்பவர்களையும் கொண்டது) உள்நாட்டிலும் வெளிநாட்களிலும் குற்றம் சார்ந்த கொள்கைகளை செயல்படுத்துகிறது; இவை புஷ் நிர்வாகம் செயல்படுத்தியதைவிடவும் அதிகமாகச் செல்கின்றன. இது ஒன்றும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதையோ அல் கெய்டாவிற்கு எதிரான பிரச்சாரத்தை ஒட்டியோ விளக்கப்படவில்லை. இந்த சிந்தனைப் போலிக் கருத்துக்களுக்குப் பின் ஆழ்ந்த, அரசியல் மற்றும் சமூக வழிவகைகள் உள்ளன. அமெரிக்கக் குடிமக்களை நீதித்துறைக்குப் புறம்பாகப் படுகொலை செய்யும் கொள்கை வெளிநாடுகளில் இராணுவவாதம் மற்றும் அமெரிக்காவிற்குள் ஜனநாயகத்தை அழித்தல் என்பவற்றிற்கு இடையேயுள்ள பிரிக்க முடியாத தொடர்பைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தன்னுடைய சரிந்துவரும் பொருளாதார நிலைப்பாட்டை முகங்கொடுக்கும் வகையில், அமெரிக்க ஆளும் உயரடுக்கு தன் உயர்ந்த இராணுவ சக்தியை பயன்படுத்தி தன் உலக மேலாதிக்கத்தை தக்கவைக்க முயல்கிறது. குறிப்பாக சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்கா ஒன்றன்பின் ஒன்றாக பல போர்களை நடத்தி வருகிறது. இவற்றை தொடர்ந்து டிரோன் மூலம் படுகொலைகளும் நிகழ்த்தப்படுகின்றன. அமெரிக்க முதலாளித்துவத்தின் சரிவும் அதே நேரத்தில் பெருகிய முறையில் ஒட்டுண்ணித்தனத்தைக் கொண்ட நிதியப் பிரபுத்துவத்தின் கைகளில் மேலும் செல்வக் குவிப்புடன் தொடர்கிறது; இந்த வழிவகை 2008 ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி தோன்றியதிலிருந்து அதிகரித்துத்தான் போய்விட்டது. ஆளும் வர்க்கமானது வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூகநலத் திட்டங்கள் ஆகியவற்றின் மீது முடிவிலாத் தாக்குதலானது வெகுஜன எதிர்ப்பை தோற்றுவித்துள்ளன என்பதை நன்கு அறியும். ஒரு பொலிஸ் அரச வடிவமைப்பை கட்டமைப்பது வெகுஜன சமூகப் போராட்டங்கள் என தவிர்க்க முடியாமல் வரவிருப்பதற்கு எதிராக இயக்கப்படும். அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள்ளும், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவற்றில் அது கொண்டுள்ள அரசியல் பிரதிநிதிகள் இடையேயும் ஜனநாயகத்திற்கான உண்மையான தளம் கிடையாது. ஜனநாயக உரிமைகள், பெருகிய முறையில் நிதியப் பிரபுத்துவத்துடன் இயைந்திருக்கவில்லை; அது தளம் கொண்டிருக்கும் சமூக அமைப்பு முறையான முதலாளித்துவத்துடனும் இயைந்திருக்கவில்லை. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதும் அனைத்து சமூக, அரசியல் உரிமைகளை பாதுகாப்பது என்பதும் சுயாதீனமான அரசியல் அமைப்பிலும் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதிலும்தான் தங்கியுள்ளது. |
|
|