World Socialist Web Site www.wsws.org |
Iranian president publicly accuses rivals of corruptionஈரானிய ஜனாதிபதி போட்டியாளர்களை பகிரங்கமாக ஊழல்வாதிகள் எனக் குற்றம் சாட்டுகிறார்
By Peter
Symonds ஓர் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி, அமெரிக்கத் தலைமையிலான இறுக்கும் பொருளாதாரத் தடைகள் மற்றும் தொடரும் அமெரிக்க இஸ்ரேலிய இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரானிய ஜனாதிபதி மஹ்முது அஹ்மதிநெஜட்டிற்கும் நாட்டின் பாராளுமன்றத்திற்கும் இடையே கடந்த வார இறுதியில் மீண்டும் வெளிப்படையாக அரசியல் மோதல் வெடித்தது. இப்பகிரங்க மோதலானது யூன் மாதம் 14 திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஈரானிய அரசாங்கத்தை உடைத்துக்கொண்டிருக்கும் கசப்பான மோதல்களுக்கான இன்னொரு அடையாளமாகும். ஞாயிறன்று அஹ்மதிநெஜட் தன்னுடைய தொழில்துறை மந்திரி அப்டொல்ரேசா ஷேகோலாஸ்லமி மீதான அரசியல் குற்றச்சாட்டை அகற்றுவதற்கும் மற்றும் மற்றொரு ஜனாதிபதியின் நண்பரான சயீத் மோர்டாசவியை ஈரானிய சமூக நல அமைப்பிற்குப் பொறுப்பாளராக நியமித்ததற்காவும் பாராளுமன்றத்திற்கு சமூகமளித்தார். மோர்டாசவி தெஹ்ரானின் முன்னாள் தலைமை வழக்குத்தொடுனராக இருந்தபோது கைதிகள் சித்திரவதை, இறப்பிற்கு பொறுப்பு என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருடைய பதவியில் இருந்து தற்காலிகமாக பதவியகற்றப்பட்டிருந்தார். பதட்டமான நிகழ்வுகளுக்கு மத்தியில் அஹ்மதிநெஜட் இரகசியமாகப் படம் பிடிக்கப்பட்டிருந்த ஒளிப்பதிவுநாடா ஒன்றைப்போட்டுக் காட்டினார்: இது பாராளுமன்றத் தலைவர் அலி லரிஜனி மற்றும் அவருடைய சகோதரர் பஜேல் இருவரும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை உட்குறிப்பாகக் காட்டியது. இது பஜேல் மோர்ட்டாவியைச் சிந்தித்து அலி லிரிஜானி ஒரு வணிக உடன்பாட்டிற்கான ஆதரவிற்கு ஈடாக இலஞ்சம் கேட்க முற்பட்டதைக் காட்டுவதாகக் கூறப்பட்டது. இந்த உடன்பாட்டில் ஒரு நிறுவனம் முன்னாள் தலைமை வக்கீலுடன் தொடர்புடையது. “மாண்பு மிகு அவைத்தலைவர் சரியெனக் கருதினால், நாங்கள் 24 அல்லது 25 மணி நேரப் பதிவுநாடாக்களை உங்களிடம் கொடுக்கிறோம்” என்று அஹ்மதிநெஜட் கூறினார். லரிஜானி ஜனாதிபதி “மாபியா மாதிரியான செயல்களில்” ஈடுபடுகிறார், “சமூகத்தின் நேர்மையை ஊழலாக்கும் செயல்களை புரிகிறார்”, என்று குற்றம் சாட்டி அவர் பதில் கூற அனுமதிக்கவும் இல்லை. ஜனாதிபதி அகன்றவுடன், பாராளுமன்றம் 192 வாக்குகளுக்கு 56 என்ற கணக்கில் ஷேகொலெஸ்லமியை அகற்ற வாக்களித்தது. இவர் அஹ்மதிநெஜட்டின் இரண்டாம் பதவிக்காலத்தில் பதவிநீக்கம் செய்யப்படும் ஒன்பதாவது மந்திரியாவார். நாட்டின் அரசியலமைப்பின்படி, அமைச்சரவை அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் அகற்றப்பட்டால், முழு அமைச்சரவைக்கும் மறு ஒப்புல் கொடுப்பதற்கு ஒரு பாராளுமன்ற வாக்கெடுப்பு தேவையாகும். மோர்ட்டாசவி கைதுடன் பகிரங்க மோதல் நேற்றும் தொடர்ந்தது. 1979க்குப்பின் ஒரு ஈரானிய ஜனாதிபதி முதல் தடவையாக மேற்கொள்ளும் எகிப்து பயணத்திற்குப் புறப்படுமுன், அஹ்மதிநெஜட் நீதித்துறையையும் தாக்கி, அது “நாட்டின் நீதிமன்றமாக இருக்க வேண்டுமே ஒழிய, ஒரு குடும்பத்தின் தனி அமைப்பாக இருத்தல் கூடாது” என்றார். அலி லரிஜானியின் சகோதரர்களுள் ஒருவரான சதீக் ஈரானின் நீதித்துறைக்குத் தலைவர் ஆவார். இத்தகைய பகிரங்க மோதலே ஈரானிய ஆளும் உயரடுக்கின் பழைமைவாத பிரிவு என அழைக்கப்படுவதற்குள் இருக்கும் தீவிர பிளவுகளை உயர்த்திக் காட்டுகிறது. இது நாட்டின் ஜனாதிபதிக்கும் நாட்டின் மிக்குயர் தலைவர் அயோதொல்லா அலி காமேநையிக்கும் இடையே உள்ள பிளவு ஆகும். மிக்குயர் தலைவர் 2005ல் அஹ்மதிநெஜட்டை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தாலும், மீண்டும் 2009ல் மேற்கத்தைய ஆதரவுடைய பசுமை இயக்கத்தினர் என்று அழைக்கப்படுபவர்களால் புதிய தேர்தலைக்கட்டாயமாக நடத்த வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியபோது, தீவிர வேறுபாடுகள் வெளிப்பட்டு, ஆழமடைந்துவிட்டன. ஆட்சி அணுச்சக்தி திட்டத்தைத் தொடர உத்திகளைக் கையாண்டு மற்றும் கடுமையான பொருளாதாரத் தடைகளை தவிர்க்க முயல்வதுடன் அமெரிக்க அல்லது இஸ்ரேலிய தாக்குதலையும் தவிர்க்க முற்படும்போது வெளியுறவுக் கொள்கையில், அஹ்மதிநெஜட் உறுதிகுலைந்து, நம்பகத்தன்மை இல்லாதவர் என அதிகமாக கருதப்படுகிறார். ஈரானின் அணுச்சக்தித் திட்டங்களை கடுமையாகப் பாதுகாத்து அமெரிக்க அச்சுறுத்தல்களை கண்டித்தபோதும், அஹ்மதிநெஜட் ஒரு சிக்கல் வாய்ந்த உடன்பாட்டை அக்டோபர் 2009ல் கையெழுத்திட்டு ஈரானின் சேமிப்புக் கிடங்கில் உள்ள யுரேனிய அடர்த்தியை அணுச்சக்தி எரிபொருள் கோல்களுக்காக நாட்டை விட்டு வெளியே அனுப்ப ஒப்புக் கொண்டார். இந்த உடன்பாடு உடைந்துபோனது. இதற்கு ஓரளவு காரணம் காமேநையின் ஆதரவாளர்களின் எதிர்ப்பாகும். அவர்கள் அமெரிக்க “நம்மை ஏமாற்ற முயல்கிறது” என்று குற்றம் சாட்டினர். பொருளாதாரக் கொள்கையை பொறுத்தவரை, அஹ்மதிநெஜட் திறமையற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஏழைகளை ஏமாற்றும் ஜனரஞ்சகவாதி என்றும் கூறப்படுகிறார். மிக்குயர் தலைவர் காமேநையுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள தலைவர் அலி லரிஜானி தலைமையிலான பாராளுமன்றத்திடமிருந்து 2010ல் இருந்து இவர் எரிபொருள், உணவு, நீருக்கு மிக அதிக உதவி நிதிகள் கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் தொடர்ந்த எதிர்ப்பைத்தான் முகங்கொடுத்துள்ளார். அனைத்துப்பிரிவுகளும் சிக்கன நடவடிக்கைகளுக்கு உடன்பட்டுள்ளன. ஆனால் அஹ்மதிநெஜட்டின் எதிர்ப்பாளர்கள் விலையுயர்வை ஒட்டி அவருடைய திட்டங்களான மட்டுப்படுத்தப்பட்ட நேரடி நிதியுதவியை வறியவர்களுக்குக் கொடுப்பதை குறைகூறியுள்ளனர். அஹ்மதிநெஜட்டும் அவருடைய ஆதரவாளர்களும் மிக்குயர் தலைவர் காமேநையின் அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்துவதற்காகவும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளனர். காமேநை அரசியலமைப்பின்படி அரசாங்க விவகாரங்களில் இறுதிக் கருத்தைக் கூறும் தகுதி உடையவர், குறிப்பாக வெளியுறவு, இராணுவக் கொள்கைகளில். புரட்சிகரப் பாதுகாப்புப் படைத்தலைவர் ஜெனரல் அலி ஜபாரி பகிரங்கமான அஹ்மதிநெஜட்டின் பிரிவை 2010ல் “மாறுபட்ட போக்கு” என்று முத்திரையிட்டார். இத்தகைய கருத்து அவர்களின் தேர்தலில் நிற்கும் திறனை அச்சுறுத்துகிறது. காமேநை உடைய ஆதரவாளர்கள் கடந்த மார்ச்மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் தெளிவான பெரும்பான்மையை பெற்றனர். நீதித்துறையையும் பாராளுமன்றத்தையும் அஹ்மதிநெஜ்ட்டின் கொள்கைகளுக்கு வெறுப்பு ஊட்டவும், அவர் நியமித்தவர்களை அகற்றவும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். தேர்தலுக்குப் பின் பாராளுமன்றம் அஹ்மதிநெஜட்டை அவருடைய நியமனங்கள் பற்றி நெடிய வினாக்களுக்கு உட்படுத்தியது. அதேபோல் அவருடைய பொருளாதாரக் கொள்கைகள், காமேநையுடனான அழுத்தம் நிறைந்த உறவுகள் குறித்தும் வினாக்கள் எழுத்தன. இவை ஜனாதிபதியை அவமானப்படுத்தும் வெளிப்படையான நோக்கத்துடன் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்கத் தலைமையிலான பொருளாதாரத் தடைகள் எண்ணெய் ஏற்றுமதிகள் மற்றும் நாட்டின் நாணய மதிப்பைப் பெரிதும் சரியச் செய்தன. பாராளுமன்றம் மீண்டும் கேள்விகள் கேட்கப்படும் என அச்சுறுத்தியது. அவைத்தலைவர் அரசாங்கத்தைக் கண்டித்து மோசமான நிர்வாகம் தான் ஈரானின் பிரச்சினைகளில் 80%க்குக்காரணம் என்றும் ஜனாதிபதியின் “றொபின் ஹுட் வழிவகைகள்” உதவில்லை என்றும் கூறினார். உத்தியோகபூர்வ பணவீக்கம் 23.5%த்தை எட்டியவுடன் உதவித் தொகைகள் அகற்றப்படுவதின் இரண்டாம் கட்டம் தாமதிக்கப்படலாம் என்றும் அழைப்பு விடுத்தார். அதே நேரத்தில் மற்றொரு பகிரங்க அவமானமாக, நீதித்துறைத் தலைவர் சதீக் லரிஜானி தெஹ்ரானின் எவின் சிறைக்கு அஹ்மதிநெஜட் செல்லும் முயற்சிகளை தடுத்து நிறுத்தினார். அச்சிறையில் ஜனாதிபதியின் உயர்மட்ட உதவியாளர் அலி அக்பர் ஜவன்பெகர் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அஹ்மதிநெஜட் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்தபோது அவர் செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். ஜவன்பெகர் “இஸ்லாமிய நெறிகளுக்கு எதிரான வெளியீடுகளை” வெளியிட்டதற்காக தண்டனை பெற்று ஆறு மாதக் காலம் சிறையில் தள்ளப்பட்டார். இறுதியில் காமேநை தலையிட்டு பாராளுமன்றம் இரண்டாம் முறையாக ஜனாதிபதி கேள்விக்கு உட்படுத்தப்படுவதைத் தடுத்து, ஜனாதிபதித் தேர்தல்கள் வரவிருக்கும் நேரத்தில் கூடுதல் ஒற்றுமையை காட்டுமாறு அழைப்பு விடுத்தார். இத்தலையீடு அஹ்மதிநெஜட்டைக் பாதுகாப்பதற்கு அல்லாமல் ஆட்சியில் இன்னும் பிளவைத் தவிர்ப்பதற்காகவாகும். ஏனெனில் அத்தகைய பிளவு தொடர்ந்து பணிநீக்கங்கள், உயரும் வேலையின்மை, அடிப்படைப் பொருட்களின் விலைகள் பெரிதும் உயர்தல் ஆகியவற்றை முகங்கொடுக்கும் தொழிலாளர்களின் எதிர்ப்பைத் திறந்துவிடும். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தேர்தல்களை பயன்படுத்தி மேற்கின் நலன்களுடன் இன்னும் பிணைந்து இருக்கும் ஆட்சியை இருத்துவதற்கு பசுமைப் புரட்சி என அழைக்கப்பட்டதின் இரண்டாம் பதிப்பை தூண்ட முயலாமல் இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த கவலையை காமேநை கொண்டுள்ளார் என்பது தெளிவு. மிக்குயர் தலைவரும் அவருடைய ஆதரவாளர்களும் இன்னும் அதிக நம்பகமான நபரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதில் உறுதி கொண்டு, அஹ்மதிநெஜட் அல்லது சீர்திருத்தவாதிகள் எனப்படுவோர் நியமிக்கும் வேட்பாளர்களைத் தடுக்க விரும்புகின்றனர் எவரும் இன்னமும் தம் வேட்புத் தன்மையை அறிவிக்கவில்லை. ஆனால் அலி லரிஜானி நிற்பார் என்பது அநேகமாக உறுதியாகத் தெரிகிறது. அஹ்மதிநெஜட் அரசிலமைப்பின்படி மூன்றாம் பதவிக்காலம் தேர்தலில் நிற்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருடைய வேட்பாளர் ஒருவர் போட்டியில் இருப்பார். 2009ம் ஆண்டு பசுமை இயக்கத்தை வழிநடத்திய சீர்திருத்தவாத வேட்பாளர்கள் எனக்கூறப்பட்ட இருவரான மீர் ஹொசைன் முசாவி மற்றும் மெஹ்தி கரௌபி இல்லத் தடுப்புக் காவலில் உள்ளனர். பாதுகாப்புக் குழுவின் [Guardian Council] ஊடாக காமேநை தேர்தல் மீது இறுக்கமான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார். அந்த அமைப்பு ஜனாதிபதிப் பதவிக்கான வேட்பாளர்களை தணிக்கைசெய்து “சுதந்திரத் தேர்தல்கள்” என்று சீர்திருத்தவாதப் பிரிவினர் விடுத்துள்ள அழைப்பை நிராகரித்துள்ளது. அதே நேரத்தில் அஹ்மதிநெஜட்டின் ஆதரவாளர்களை முக்கிய பதவியில் இருந்து அகற்ற முற்படும் பாராளுமன்றத்தின் முயற்சிகள் அவருடைய பிரிவு தேர்தலின்போது இப்பதவிகளை பாவித்து அதன் வேட்பாளருக்கு ஆதரவளிக்காமல் உறுதிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது. வெடிப்புத் தன்மை நிறைந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் எழுப்பிய முறையில், அஹ்மதிநெஜட் ஒரு போராட்டம் இன்றித் தான் போவதாக இல்லை என்பதை அடையாளம் காட்டியுள்ளதுடன், மேலும் இப்பிளவுகளை மூடிய கதவிற்குப்பின் வைக்கவும் என்னும் காமேநையின் அழைப்பையும் மறைமுகமாக சவாலுக்கு உட்படுத்துகிறார். இது நாட்டின் மோசமடையும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி, மற்றும் அமெரிக்கத் தாக்குதலின் அச்சுறுத்தல்கள் ஆகியவை தேர்தலுக்குமுன் ஆளும் வட்டங்களுக்குள் இருக்கும் அரசியல் கொந்தளிப்பை அதிகப்படுத்தத்தான் செய்யும். |
|