World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Eighty years since Hitler’s coming to power

ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எண்பது ஆண்டுகள்

Peter Schwarz
2 February 2013

Back to screen version

எண்பது ஆண்டுகளுக்கு முன், ஜனவரி 20, 1933ல் ஜனாதிபதி போல் வொன் ஹின்டன்பேர்க் நாஜிக்களுடைய தலைவரான அடோல்ஃப் ஹிட்லரை ஜேர்மனிய சான்ஸ்லராக நியமித்தார். அதைத் தொடர்ந்த 12 ஆண்டுகளில் ஹிட்லரின் ஆட்சி அதற்கு முன்னதாக மனிதகுலமே கண்டிராத குற்றங்களை இழைத்தது. அது ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தொழிலாளர் இயக்கத்தை நொருக்கி, நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு உட்படுத்தி, ஐரோப்பாவை தூண்டுதல் இல்லாத ஆக்கிரோஷப் போர்களால் அழித்ததோடு மில்லியன் கணக்கான யூதர்கள், ரோமாக்கள் இன்னும் பிற சிறுபான்மையினரையும் கொன்று குவித்தது.

ஜனவரி 30, 1933 ஒரு வரலாற்றுத் திருப்புமுனை ஆகும். அதற்கு முன்பு காட்டுமிராண்டித்தனமும், யூத எதிர்ப்பும் பொருளாதார, கலாச்சார பிற்போக்குத்தனத்தின் தன்மைகள் என்று கருதப்பட்டன. ஆனால் 1933ம் ஆண்டு, ஒரு நாட்டின் உயரடுக்கு, அதுவும் பொருளாதார, கலாச்சார அளவில் உயர்ந்த வளர்ச்சி உடைய ஒரு நாடு அதிகாரத்தை ஒரு காட்டுமிராண்டித்தன, யூத எதிர்ப்பாளரிடம் ஒப்படைத்தது; அவருடைய கட்சியோ சமூகத்தின் கழிவுகளில்தான் தங்கியிருந்தது.

இத்தகைய நிகழ்வுக்கான மூலகாரணம் ஜேர்மனிய, சர்வதேச முதலாளித்துவத்தின் தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளிலேயே இருந்தன. முதல் உலகப் போரின் விளைவுகள் மற்றும் 1929ம் ஆண்டு ஆரம்பித்த உலகப் பொருளாதார நெருக்கடி தொழிலாள வர்க்கம் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை அழிவுக்குள்ளாக்கியது. ஜேர்மன் சமுதாயம் ஆழ்ந்து பிளவடைந்திருந்த்துடன் ஜனநாயகம் பெயரளவிற்குத்தான் இருந்தது. நெருக்கடி கால சட்டங்கள் மற்றும் ஜனாதிபதியின் மந்திரிசபைகளினால் உயிர்தப்பியிருந்த வைமார் குடியரசு ஒரு சமூக வெடிப்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

இச்சூழ்நிலையில், ஹின்டன்பேர்க் அரசாங்க அதிகாரத்தை ஹிட்லரிடம் ஒப்படைக்க முடிவெடுத்தார். தொழிலாளர் இயக்கத்தை நொருக்குவதற்கு நாஜிக்கள் தேவைப்பட்டனர். அவர்களுக்கு குட்டிமுதலாளித்துவத்தின் நம்பிக்கையிழந்த அடுக்குகள் மற்றும் லும்பன் பாட்டாளி வர்க்கத்திடமும் பெரும் ஆதரவு இருந்தது. இதை அவர்கள் முறையாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தொழிலாளர் இயக்கத்திற்கு எதிராக அணிதிரட்டினர். தொழிலாளர் இயக்கத்தை உடனடியாக அழிப்பது என்பது ஜேர்மனிய வணிகம் கோரிய போர்த்தயாரிப்பிற்கான முன்னிபந்தனை ஆகும்.

ஹின்டன்பேர்க்கின் முடிவிற்கு இராணுவத்தின் தலைமைகள், பெருவணிகம் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் ஆதரவு இருந்தது. ஹிட்லர் அதிகாரத்தை வெற்றிகொள்ளவேண்டிய அவசியம் இருக்கவில்லை. அது ஆளும் உயரடுக்கால் அவருடைய கைகளில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஜேர்மனியர்கள் பெரும்பாலானோர் ஹிட்லருக்கு ஆதரவு கொடுத்தனர் என்பது அப்பட்டமான பொய்யாகும்.

அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன் நடந்த கடைசித் தேர்தலில், 1932 நவம்பரில் நடைபெற்றதில், இரண்டு முக்கிய தொழிலாளர் கட்சிகள், சமூக ஜனநாயகக் கட்சி (SPD), மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி (KPD), இரண்டும் ஹிட்லரின் NSDAP கட்சியை விட அரை மில்லியன் வாக்குகள் கூடப் பெற்றிருந்தன. தொழிலாளர்கள் நாஜிக்களை வெறுத்தனர். அவர்கள் ஹிட்லருக்கு எதிராக வாக்களித்தது மட்டுமின்றி அவரோடு போராடவும் விரும்பினர். ஆனால் அவர்களுடைய தலைவர்கள் அத்தகைய போராட்டத்தை நடத்தும் திறனற்று இருந்தது நிரூபிக்கப்பட்டது.

1918-19 ல் பாட்டாளி வர்க்கப் புரட்சியை நசுக்கிய சமூக ஜனநாயகக் கட்சி, தொழிலாளர்களை அணிதிரட்டும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. கட்சி, அரசுக்குப் பின்னே அடைக்கலாம் நாடியது; நாஜிக்களை அதுதான் அடக்க முடியும் எனக் கருதியது. பொலிஸ், இராணுவம் மற்றும் 1932 ரைஸ்டாக் தேர்தலில் அது ஆதரவளித்திருந்த ஹின்டன்பேர்க் ஆகியோரின் மீது பிரமைகளை ஊக்குவித்தது. ஆனால் ஒன்பது மாதங்களின் பின்னர், ஹின்டன்பேர்க் ஹிட்லரை சான்ஸ்லராக நியமித்தார்.

சமூக ஜனநாயகக் கட்சியின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த தொழிற்சங்கங்கள் ஒருபடி மேலேயே சென்றன. ஜேர்மனிய தொழிற்சங்கங்களின் பொதுக் கூட்டமைப்பு (ADGB) புதிய ஆட்சிக்கு தன் விசுவாசத்தை அறிவித்து, சுவாஸ்திகா சின்னத்தின் கீழே மே 1, 1933 அன்று ஊர்வலமும் நடத்தியது. இவை அனைத்தும் எப்பயனும் தரவில்லை. மே 2ம் தேதி நாஜிக்கள் தொழிற்சங்க தலைமையகத்தை தாக்கினர்.

ஹிட்லரை நிறுத்துவதற்கான திறவுகோல், 1919ம் ஆண்டு சமூக ஜனநாயக கட்சியின் வலதுபுற திருப்பத்திற்கு விடையிறுப்பாக நிறுவப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கைகளில் இருந்தது. ஆனால் ஸ்ராலினுடைய செல்வாக்கின் கீழ், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி KPD- ஒரு பேரழிவு தரும் கொள்கையைத்தான் தொடர்ந்தது. தேசிய சோசலிஸ்ட்டுக்களுக்கும் சமூக ஜனநாயக வாதிகளுக்கும் இடையே அது வேறுபாட்டை காண மறுத்தது. பிந்தையவர்களை சமூக பாசிஸ்ட்டுக்கள்என அறிவித்தது. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, நாஜிக்களுக்கு எதிராக சமூக ஜனநாயக கட்சியுடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கைக்கு கண்டிப்பாக மறுத்துவிட்டது.

அத்தகைய ஐக்கிய முன்னணிக்காக லியோன் ட்ரொட்ஸ்கியும் அவரைப் பின்பற்றுபவர்களும் தளராமல் போராடினர், ஸ்ராலினிஸ்ட்டுக்களினால் துன்புறுத்தப்பட்டனர். ஸ்ராலினிச கொள்கை ஒரு அதிதீவிர இடது வடிவமைப்பை எடுத்துக் கொண்டது; ஆனால் உண்மையில் அது, சமூக ஜனநாயக கட்சி  தலைமையை அம்பலப்படுத்தி, சமூக ஜனநாயக தொழிலாளர்களை வென்று ஹிட்லரை கடுமையான முறையில் எதிர்த்தல் ஆகிய எந்தப் போராட்டத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிப்பதை மறைத்தது.

சமூக ஜனநாயகக் கட்சியை ஒரு புரட்சிக் கட்சியாக மாற்ற கம்யூனிஸ்ட் கட்சியிடம் எந்தக் கொள்கையும் கிடையாது.” என்று ட்ரொட்ஸ்கி மே 1933ல் எழுதினார். “ஆனால் அது அதன் இலக்காகவும் இல்லை. பாசிசத்தை வலுவிழக்க செய்யும் பொருட்டு, இயன்ற அளவிற்கு சீர்திருத்தவாதம், பாசிசம் இவற்றிற்கு இடையே உள்ள முரண்பாட்டைப் பயன்படுத்துவது முக்கியம் ஆகும்; அதே நேரத்தில் தொழிலாளர்களை சமூக ஜனநாயகத் தலைமையின் திறனற்ற தன்மை குறித்தும் அம்பலப்படுத்தி சீர்திருத்த வாதத்தை வலுவிழக்கச் செய்ய வேண்டும். இந்த இரு பணிகளும் இயற்கையாகவே ஒன்றாக இணைந்தது. கம்யூனிச அகிலத்தின் அதிகாரத்துவத்தின் கொள்கை முற்றிலும் எதிரிடையான விளைவிற்குத்தான் வழிவகுத்தது; சீர்திருத்தவாதிகளின் நிபந்தனையற்ற சரணடைவு, பாசிசத்தின் நலன்களுக்கே அன்றி கம்யூனிஸ்ட்டுக்களின் நலன்களுக்கு அல்ல என்று ஆகியது. சமூக ஜனநாயக தொழிலாளர்கள் தங்கள் தலைவர்களுடன் நின்றனர், கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் தங்களிடத்தும், தங்கள் தலைமையிடத்தும் நம்பிக்கையை இழந்தனர்.

ஜேர்மனிய தொழிலாள வர்க்கத்தின் பேரழிவுத் தோல்வியில் இருந்து ட்ரொட்ஸ்கி தொலைதூரவிளைவுடைய முடிவுகளை எடுத்தார். அதுவரை ட்ரொட்ஸ்கியின் தலைமையில் வழிநடத்தப்பட்ட இடது எதிர்ப்பு, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கம்யூனிச அகிலம் ஆகியவறின் அரசியல் மறுதகவமைப்பிற்காக போராடியது. ஆனால் கம்யூனிச அகிலம், ஜேர்மனியப் பேரழிவில் இருந்து எந்தப் படிப்பினையையும் எடுத்துக் கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து, மற்றும் தன்னுடைய உறுப்பினர்களிடையே ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உடைய பேரழிவுக் கொள்கைகள் குறித்து விவாதங்களையயும் தடுத்தபின், அத்தகைய மறுதகவமைவு இனி ஏற்பட வாய்ப்பில்லாமல் போயிற்று.

பாசிசம் என்னும் இடியினால் உலுப்பப்படாத ஒரு அமைப்பு அதையொட்டி அது இறந்துவிட்டது, எதுவும் அதைப் புதுப்பிக்க முடியாது என்பதைத்தான் நிரூபிக்கிறது. இதை வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் கூறுவது தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் எதிர்காலத்திற்கு எமது நேரடிக் கடமை ஆகும்என்று ட்ரொட்ஸ்கி பிரகடனப்படுத்தினார். கம்யூனிச அகிலத்தினை சீர்திருத்துவது இனி பணியல்ல, புதிய கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஒரு புதிய அகிலத்தையும் கட்டமைப்பதுதான் பணி.

மத்திய வாதக் குழுக்களிடம் இருந்து ட்ரொட்ஸ்கி கடுமையான எதிர்ப்பைப் பெற்றார்: அவை ஸ்ராலினிசம் பற்றிய அவருடைய விமர்சனங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டன; ஆனால் ஒரு புதிய அகிலத்தை நிறுவதுல் என்பது கனியாத செயல் என அறிவித்தன. அத்தகைய நடவடிக்கை புரட்சிகர இயக்கத்தின் ஒரு புதிய எழுச்சியின் அடித்தளத்தின் மூலம்தான் முடியும் என அவர்கள் வாதிட்டனர்.

அத்தகைய வாதங்களை ட்ரொட்ஸ்கி உறுதியாக நிராகரித்தார். “மார்க்சிஸ்ட்டுக்கள் ஒன்றும் விதிவசவாதிகள் அல்லர். வரலாற்று நிகழ்வுப்போக்கு தங்கள் முன்வைத்திருக்கும் கடமைகளை அதன் மீதே அவர்கள் இறக்கி வைப்பதில்லை. ....ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட, எஃகு போன்ற புரட்சிகரக் கட்சி இல்லை என்றால், ஒரு சோசலிசப் புரட்சி என்பது நினைத்தும் பார்க்கப்பட முடியாதது.” என்று அவர் எழுதினார்

மீண்டும் இச்சொற்கள், ஒரு எரியும் உடனடி முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடி, 2008 நிதிய நெருக்கடியில் இருந்து மிக மோசமாகிவிட்டது, செயற்பட்டியலில் வெடிக்கும் தன்மையுடைய வர்க்கப் போராட்டங்களை இருத்துகிறது. எகிப்து, கிரேக்கம், போர்த்துக்கல், மற்றும் ஸ்பெயினில் தொழிலாளர்கள் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அரசியல் தாக்குதல்கள் என்று அவர்களுடைய அரசாங்கங்கள் நடத்துவதற்கு எதிராக அன்றாடம் எழுச்சி செய்கின்றனர். இதை எதிர்கொள்ளும் வகையில் அரசாங்கங்கள் சர்வாதிகார வழிவகைகளை மேற்கொள்கின்றன; கிரேக்கத்தில் கோல்டன் டோன், பிரான்சில் தேசிய முன்னணி, ஹங்கரியில் ஜோபிக் போன்ற பாசிச அமைப்புக்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கின்றன.

ஏராளமான போலி இடது அமைப்புக்கள், தொழிற்சங்கங்களுடன் இணைந்து தங்களால் இயன்ற அளவிற்கு தொழிலாளர்களின் போராட்டங்களை ஒரு முட்டுச் சந்திற்குள் வழிநடத்தி, முதலாளித்துவ ஆட்சியை பாதுகாப்பதற்கு செயல்படுகின்றன. இன்றைய மிக அவசரமான பணி தொழிலாளர்களின் ஆட்சிக்காக சர்வதேச அளவில் தொழிலாளர்களை அணிதிரட்டி, சோசலிச சமூகத்தைக் கட்டமைப்பதற்கான ஒரு போராட்டத்தில் ஈடுபட வைப்பதுதான். அத்தலைமை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலும் அதன் பிரிவுகளான  சோசலிச சமத்துவக் கட்சிகளிலும் பொதிந்துள்ளது