World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The stock market bubble

பங்குச் சந்தைக் குமிழி

Andre Damon
1 February 2013

Back to screen version

பொருளாதார மந்த நிலையின் ஐந்தாவது ஆண்டிலும், 2008 இலிருந்து உலகப் பொருளாதாரம் மிக மோசமான வேகக்குறைப்பு நிலையிலும், உலகப் பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் மூன்று பெரிய பங்குக் குறியீடுகளானது 2007 ஆண்டு அளவிலான உயர்ந்த ஒரு சில சதவிகிதப் புள்ளிகளில் அல்லது அதே அளவிலான உயர்வுகளை அடைந்திருக்கின்றன. இந்நிலையானது பொருளாதாரம் தேக்கம் அடைந்திருந்தும், 2009 இலிருந்து முதல் காலாண்டில் சுருக்கம் அடைந்துகொண்டிருக்கின்றபோதிலும் புதனன்று இந்த குறியீடுகள் வெளியிடப்பட்டன.

ஒரு உடைந்துகொண்டு செல்லும் நிலையிலுள்ள அரசுகளாக ஐரோப்பா உள்ளது; கிரேக்கமும் ஸ்பெயினும் பெருமந்தநிலைக்குப் பின் காணப்படாத நிலைமையில் உள்ளன. ஜேர்மனி ஒரு தீவிர வேகக்குறைப்பு நிலையில் இருக்கிறது. பிரித்தானியாவின் பொருளாதாரம் கீழ்நோக்கிய சரிவு ஏற்பட்டதிலிருந்து இப்பொழுது 3.3 சதவிகிதத்தைக் காட்டிலும் சிறியதாகப் போய்விட்டது. ஆனால் FTSE 250 குறியீட்டு அளவு இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்றுமதிகள் குறைந்துவிட்ட நிலையிலும் சீனா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகியவைகள் பொருளாதார வளர்ச்சிக்குக் குறைந்த குறியீட்டு நிலையைத்தான் காட்டுகின்றன. ஆயினும் உலகப் பங்குகளின் விலைகள் கடந்தாண்டு மட்டும் பத்திலிருந்து 20 சதவிகிதம் உயர்ந்துவிட்டன.

ஏற்றமிகு நிதியச் சந்தைகளும் பொருளாதாரத் தேக்கமும் என முரண்பட்டிருக்கும் நிகழ்வுகள் உண்மையில் மிக நெருக்கமாகத் தொடர்புள்ளவைகள். சந்தையில் தொடர்ந்து ஏற்றம் என்பது ஆரோக்கியத்திற்கான அடையாளம் அல்ல. மாறாக உலக முதலாளித்துவ அமைப்புமுறையில் நோய்வாய்ப்பட்ட நிலையின் குறிப்பிட்ட வெளிப்பாடு ஆகும்.

உலகின் ஆளும் வர்க்கங்கள், வரலாற்றுரீதியான உற்பத்தித் திறன் மற்றும் முதலீட்டு நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், சொத்தின் மதிப்புக்களை உயர்த்துவதன் மூலம் அதைச் சமாளிக்க முயல்கிறது. அவ்வாறே தங்களுடைய சொந்த வருமானங்களையும் அதிகப்படுத்துகிறது. இதனால் வரலாற்றில் முன்னோடியில்லாத வகையில் செல்வ மறுபகிர்வு நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, நிதிய அமைப்புமுறைக்குள் பாரிய ரொக்கம் உட்செலுத்துதலை அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு மற்றும் பிற மத்திய வங்கிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு என்பது தற்பொழுது 85 பில்லியன் டொலர்கள் மதிப்புடைய அடைமான ஆதரவுடைய பத்திரங்களையும் கருவூலப் பத்திரங்களையும் ஒவ்வொரு மாதமும் வாங்குகிறது. அரசாங்கக் கடனையும், வங்கிகள் வைத்துள்ள அறவிடமுடியாக் கடன்களையும் வாங்குவதற்கு பிரதானமாக நோட்டுக்கள் அச்சிடப்படுகின்றன. மத்திய வங்கிக்கூட்டமைப்பு கொண்டுள்ள மொத்தச் சொத்துக்கள் 3.01 ட்ரில்லியன் டொலர்களாக உயர்ந்துவிட்டன.  இது 2008 இல் அது கொண்டிருந்ததைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் ஆகும்.

உலகின் அனைத்து முக்கிய மத்திய வங்கிகளும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஜூலை மாதத்தில், ஐரோப்பிய மத்திய வங்கியானது அதனுடைய அடிப்படையான வட்டி வீதத்தை யூரோவின் வரலாற்றிலேயே மிகவும் குறைந்த மட்டத்திற்குக் குறைக்க முற்பட்டது. உலகின் ஆறு மிகப் பெரிய வங்கிகளின் இருப்புக்கள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துவிட்டன; அதாவது 2012ல் இவை 14 டிரில்லியன் யூரோக்களாக உயர்ந்துவிட்டன.

மத்திய வங்கிகளின் நடவடிக்கைகளை, வெகுஜனச் செய்தி ஊடகத்தில் வேலையின்மை, பிற சமூகத் தீமைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் என்பவைகளாக எப்பொழுதும் விளக்கப்படுத்தப்படுகின்றன. உண்மையில், இவற்றின் மைய நோக்கம் நிதிய ஊக வணிபத்திற்குக் கிட்டத்தட்ட வரம்பற்ற பணத்தை அளிப்பதாகும்.

இக்கொள்கை சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் மீதான நேரடித் தாக்குதலுடன் நேரடியாகப் பிணைந்துள்ளது. ஏராளமான ரொக்கத்தை வைத்திருக்கும் பெருநிறுவன, நிதிய உயரடுக்களானது சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியங்கள் மற்றும் கௌரவமான ஊதியங்களுக்கு பணம் இல்லை என வலியுறுத்துகின்றன. ஒவ்வொரு அடிப்படை உரிமையும் வங்கிக்கு தொடர்ந்து பணம் பாய்வற்காக அகற்றப்படுகிறது. வறுமை, வேலையின்மை மற்றும் இல்லாமை நிலைமைகள் இவற்றின் விளைவாக மில்லியன் கணக்கான மக்கள் தள்ளப்படுகின்றனர்.

ஊதியங்களையும் வாழ்க்கைத் தரங்களையும் தகர்த்தல் என்பது மத்திய வங்கிகளின் கொள்கையான நீடித்த பணவீக்கப் பாதிப்பினால் இன்னும் கூடுதலான விளைவுகளையும் கொண்டுள்ளது. மற்றய சூழ்நிலைகளில், ஏராளமாகப் பணத்தை அச்சடிப்பது என்பது மிகப் பெரிய பணவீக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் வீழ்ச்சியடையும் ஊதியங்கள், சரியும் முதலீடு ஆகியவைகள் பணப்பாய்ச்சல் பொருட்களுக்குள் என்று இல்லாமல் சொத்து மதிப்புக்களின் திசையில் செலுத்தப்படுகின்றன.

முன்னோடியாக ஒபாமா நிர்வாகத்தால் 2009ல் கார்த் தொழிலை மறுகட்டமைக்கையில் உருவாக்கப்பட்ட ஊதியங்கள் திட்டமிட்டமுறையில் குறைக்கப்பட்டிருப்பது பெருநிறுவன இலாபங்களுக்கு பாரிய ஏற்றத்தைக் கொடுத்துள்ளது. அவைகள் இப்பொழுது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகப் பெரும் சாதனையை ஈட்டியுள்ளன. ஆயினும் இந்த இலாபங்கள் மீண்டும் முதலீடு செய்யப்படவில்லை. அமெரிக்கப் பெருநிறுவனங்கள் கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டொலர்கள் ரொக்கத்தைக் கொண்டுள்ளன; இவைகள் பெருமளவில் சந்தைகளுக்குள் செலுத்தப்படுகின்றன.

இந்த முழு வழிவகையும் முற்றிலும் உறுதி குலைப்பதாக இருக்கிறது. ஆளும் வர்க்கம் ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொன்றிற்குத் தடுமாறி விழுகிறது; ஒரு நெருக்கடிக்கான இதன் விடையிறுப்பு அடுத்த நெருக்கடிக்கு அரங்கு அமைக்கிறது. பொருளாதாரம் தேக்கம் அடைந்துள்ளது, ஆனால் ஒரு புதிய ஊகக் குமிழி வெடிக்கும் அச்சறுத்தலில் உள்ளதுஇது ஒரு நிதியச் சரிவைக் கட்டவிழ்த்துவிடக்கூடும். அது 2008 நெருக்கடியைக் கூடப் பெரிதும் மறைத்துவிடக்கூடும். அளவிற்கு மீறி ஈடுபட்டுள்ள நிலையில், ஆளும் வர்க்கம் அதே நேரத்தில் குழப்பத்தில் இருப்பது போலவும் தோன்றுகிறது; அது செயல்படுத்தும் நடவடிக்கைகள் பெருகிய முறையில் தற்காலிகமாகச் சமாளிப்பது என்றுதான் உள்ளன.

அதே நேரத்தில் உலகப் பொருளாதாரத்தில் ரொக்கம் உட்செலுத்தப்படுவதானது உலக நாணயப் பரிமாற்ற முறையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, நாணயப் போர்கள், போட்டித்தன்மை நாணயமதிப்புக் குறைவு ஆகியவற்றிற்கு எரியூட்டியுள்ளது. இம்மாதம் ஜப்பான் அதன் பண விநியோகத்தை அதிகரிக்கும் திட்டங்களை அறிவிக்கும் சமீபத்திய பொருளாதாரமாக மாறிவிட்டது; இது யென்னின் மதிப்பைக் குறைத்து அந்நாட்டின் ஏற்றுமதிகளுக்கு ஊக்கம் அளிப்பதற்கு எனக் காணப்படுகிறது. சர்வதேச நாணய அமைப்புமுறையில் முறிவு, பின் வணிகப்போர் நடவடிக்கைகளுக்கு அதையொட்டித் திரும்புதல் என்று பெருமந்த நிலைக்காலத்தில் அரசாங்கங்களின் நடவடிக்கைகளாக இருந்தவைகள் மீண்டும் வந்துவிட்டன.

மனித குலத்தை எதிர்கொண்டிருக்கும் சமூக, வரலாற்றுப் பேரழிவானது ஒரு அருவமான பொருளாதார நெருக்கடியின் விளைவு அல்ல. இந்த நெருக்கடி வர்க்க நலன்களின் தலையீட்டினால் வந்துள்ளது; இந்த வர்க்க நலன்கள் உறுதியான நடவடிக்கைகளில் வெளிப்பாட்டைக் காண்கின்றன. மத்திய வங்கிகள் மற்றும் அரசாங்கங்களுக்கும் பின்புலத்தில் ஒரு நிதிய உயரடுக்கின் நலன்கள் நிலைகொண்டுள்ளன; சமூகத்தின் எஞ்சிய பகுதியுடன் அது கொண்டுள்ள உறவு அடிப்படையில் ஒட்டுண்ணித்தன்மை வாய்ந்ததாகும்.

நெருக்கடிக்குத் தீர்வானது அரசியல் வடிவத்தை எடுக்க வேண்டும். ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கம் தனது திட்டத்தால் எதிர்கொள்ள வேண்டும். இந்த வேலைத்திட்டத்தின் மையத்தில் முன்னேற்றப் பாதைக்கான ஒரே வழி சமூகம் முழுவதும் மாற்றப்படுதல் என்பதன் மூலம்தான் முடியும் என்ற புரிதல்  இருக்க வேண்டும்; சமூகம் புதிய அடித்தளத்தில் இருத்தப்பட வேண்டும்.

இந்தச் சமூக ஒட்டுண்ணிகளின் அரசியல் பிடியை உடைத்தெறியும் திறனுடைய ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம்தான். பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளையும் பகுத்தறிவான முறையிலும் சமத்துவத்தின் அடிப்படையிலும் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதற்கும் பொருளாதாரத்தை மறுஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தால் தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்க போராட வேண்டும்.