World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US preparations for cyber war against China

சீனாவிற்கு எதிராக சைபர் போருக்கு அமெரிக்காவின் தயாரிப்புக்கள்

Peter Symonds
23 February 2013

Back to screen version

அமெரிக்கச் செய்தி ஊடகத்துடன் இணைந்து செயற்படுகின்ற ஒபாமா நிர்வாகமானது சீனாவிற்கு எதிரான அதனுடைய ஆக்கிரோஷப் பிரச்சாரத்திற்கு ஒரு புதிய முன்னணியைத் திறந்துள்ளது. ஏராளமான கட்டுரைகள், குறிப்பாக நியூ யோர்க் டைம்ஸில், கடந்த வாரம் சீன இராணுவமானது அமெரிக்கப் பெருநிறுவனங்களின் கணனிகளில் ஊடுருவல் மேற்கொண்ட தொடர்பை அம்பலப்படுத்துவதாகக் கூறுவதுடன், மின்சார வலையமைப்பு போன்ற முக்கிய அமெரிக்க உள்கட்டுமானத்திற்கு முக்கியமாக சைபர் போர்முறையினால் ஆபத்து என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளன.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட டைம்ஸ் கட்டுரையானது சைபர் பாதுகாப்பு நிறுவனமான மான்டியன்ட் தயாரித்த, ஆதாரமற்றதும், தனக்குப் பயன்படும் கூற்றுக்களைக் கொண்டதுமான அறிக்கை ஒன்றை அடிப்படையாகக் கொண்டதாகும்; இதில் ஷாங்காயைத் தளமாகக் கொண்ட ஒரு சீன இராணுவப் பிரிவுதான் அமெரிக்காவில் அதிநவீன சைபர் தாக்குதல்களுக்குப் பொறுப்பு என்று குற்றம்சாட்டியுள்ளது. (See: US uses hacking allegations to escalate threats against China)  அமெரிக்காவிலுள்ள பிற செய்தி ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் இதைப் பின்பற்றித் தொடர்ந்து இதேபோல் கூறின; பகுப்பாய்வாளர்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் முன்னாள், தற்போதைய அதிகாரிகளிடமிருந்தும் “சீனாவின் சைபர் அச்சுறுத்தல்” குறித்து ஏராளமான கருத்துக்கள் வெளிவந்தன. இவைகள் அனைத்துமே சீனப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகளின் மறுப்புக்களை கிட்டத்தட்ட பொருட்படுத்தவேயில்லை.

இது புதனன்று ஒபாமாவின் “அமெரிக்க வர்த்தக இரகசியங்கள் திருட்டைக் குறைப்பதைக் குறித்த நிர்வாகத்தின் மூலோபாய” ஆவணத்தை வெளியிட அரங்கு அமைத்தது; முறையாக இது சீனாவைக் குறிப்பிடவில்லை என்றாலும், சீனாவின் சைபர் உளவைப் பற்றிய கூற்றுக்களுக்கு பல உதாரணங்களை மேற்கோளிட்டது. இதில் அமெரிக்காவின் விடையிறுப்பாக “நீடித்த, ஒருங்கிணைக்கப்பட்ட ராஜதந்திர அழுத்தங்களை” தாக்குதல் நடத்தும் நாடுகளின் மீது மேற்கொள்ளப்பட வேண்டியவைகள் குறித்து பரந்த அர்த்தத்தில் இந்த ஆவணத்தில் அடங்கியிருந்தன; அத்துடன் உட்குறிப்பாக “வர்த்தகக் கொள்கைக் கருவிகள்” மூலம் பொருளாதாரப் பதிலடி கொடுக்கப்படும் என்ற அச்சுறுத்தலும் இருந்தது.

அமெரிக்க அரசாங்கத்தின் தலைமை வக்கீலான எரிக் ஹோல்டர் “அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பு நலன்களுக்கு கணிசமான, உறுதியாகப் பெருகும் அச்சுறுத்தல்” குறித்து எச்சரித்தார். அரச துணைச் செயலாளரான ரோபர்ட் ஹோர்மட்ஸ் என்பவர் அமெரிக்கா “தன் அக்கறைகள், வர்த்தக இரகசியத் திருட்டுக் குறித்து பல முறை கவலைகளை எழுப்பியுள்ளதுடன், மிக மூத்த உயர்மட்ட சீன அதிகாரிகளிடம் பலவகைகளிலும் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது” என்றார்.

ஒரு உலகளாவிய சைபர் அச்சுறுத்தல் என சீனாவை அரக்கத்தனமாகச் சித்தரிக்கப்படுவது நன்கு திட்டமிட்டு செய்யப்படும் செயல்முறைகளைத்தான் தொடர்கிறது: இது புதிய ஆக்கிரமிப்புச் நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு அச்சம் மற்றும் வெறுப்பு இவைகள் நிறைந்த பொதுச் சூழலைத் தோற்றுவிக்கும் நோக்கம் கொண்டது. இம்முறை இது சைபர் போர்முறை சூழல் வடிவில் உள்ளது. 2009ல் ஒபாமா பதவிக்கு வந்ததிலிருந்து, சீனாவை வலுவிழக்கச் செய்வதும், தனிமைப்படுத்துவதற்காகவும் அத்தோடு அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை குறிப்பாக ஆசியாவில் மறு உறுதிப்படுத்தவும் ஒரு பரந்த பொருளாதார, மூலோபாயத் தாக்குதலை  ஆரம்பித்திருந்தார்.

சீனா சைபர் திருட்டை நடத்துகிறது என்னும் குற்றச்சாட்டுக்கள் ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவில் பொருளாதார நிலைப்பாடும் அதனுடைய பசிபிக் கடந்த பங்காளித்தனம் (TPP) என்னும் உடன்பாட்டின் மூலம் இணைந்து நிற்கிறது; இந்த ஒரு புதிய பன்முக வர்த்தக உடன்பாடானது, சீனாவின் இழப்பில் அமெரிக்க வர்த்தகத்திற்கு ஏற்றம் கொடுப்பதை நோக்கம் கொண்டது. TPP உடைய முக்கிய கூறுபாடாக இருப்பது அறிவுசார் சொத்து உரிமைகளைப்” பாதுகாத்தல் ஆகும்; ஏனெனில் அமெரிக்கப் பெருநிறுவனங்களின் இலாபங்கள் மிக அதிகமாக அவற்றின் சந்தைகள் மீது கொண்டுள்ள ஏகபோக உரிமையிலிருந்து அதாவது இலட்சனைப் பெயர்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் வருகின்றன. சைபர் உளவு பற்றியக் குற்றச்சாட்டுக்கள் சீனாவிற்கு எதிரான புதிய வர்த்தகப் போர் நடவடிக்கைகளுக்குப் போலிக் காரணமாக மாறப்போகிறது.

ஆனால், சீன-எதிர்ப்புப் பிரச்சாரத்தின் மிகக் கெடுநோக்குடைய கூறுபாடு சீனாவிற்கு எதிரான போருக்கு அமெரிக்காவின் தயாரிப்பு ஆகும். “ஆசியாவில் இயக்கு மையம்” என்ற பதாகையில், ஒபாமா நிர்வாகமானது தற்பொழுது அது கொண்டுள்ள ராஜதந்திர, மூலோபாயத் தாக்குதலின் தொலைவிளைவையுடையதாக இருக்கும் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்துடனான இராணுவ உடன்பாடுகளானது இன்னும் நெருக்கமான மூலோபாயப் பங்காளித்தனங்கள், பிணைப்புக்கள் என்று குறிப்பாக இந்தியா, வியட்நாமிடம் கூட விரிவுபடுத்தவும் மற்றும் சீனா, பர்மா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவுகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளன.

“ஆசியாவில் இயக்கு மையம்” என்னும் ஒபாமா திட்டமானது அமெரிக்கத் தூண்டுதலின் பேரில், ஏற்கனவே தென் சீனக்கடல் மற்றும் கிழக்கு சீனக் கடற்பகுதியில் கடல் மோதல்களை ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகியவை சீனாவிற்கு எதிராக ஏற்படுத்தி அழுத்தம் கொடுத்து தமது பிரதேசங்களாக உரிமைகொண்டாடுவது நிகழ்ந்திருக்கின்றன. இந்த மூலோபாய நீர்நிலைகள் பற்றிய கவனக்குவிப்பு தற்செயல் நிகழ்வு அல்ல; ஏனெனில் அவை மத்திய கிழக்கு, மற்றும் ஆபிரிக்காவிலிருந்து அதனுடைய மூலப் பொருட்கள் மற்றும் எரிசக்தி இறக்குமதிகளுக்கு நம்பியிருக்கும் கப்பல் பாதைகளைக் கொண்டவையாகும். ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசியா, இன்னும் பிற பிராந்தியங்களிலும் புதிய இராணுவத் தளங்களுக்கான உடன்பாடுகளை அமெரிக்கா நிறுவிக் கொண்டிருக்கிறது; இது ஒரு மோதல் அல்லது யுத்தம் என்று வந்தால் சீனாவின் முக்கிய விநியோகங்களை நசுக்கும் ஆற்றல் உடையது.

பாரிய அமெரிக்கப் போர் இயந்திரத்தின் முக்கிய கூறுபாடாக சைபர் போர்முறையை பென்டகன் கருதுகிறது; இதன் அபிவிருத்திக்காக கணிசமான வளங்களை, குறிப்பாக ஒபாமா நிர்வாகத்தின் கீழ் கொடுத்துள்ளது. மே 2010ல் பென்டகன் அதனுடைய புதிய சைபர் கட்டுப்பாட்டு நிலையத்தை, தேசியப் பாதுகாப்பு அமைப்பின் (NSA) இயக்குனர்  ஜெனரல் கீத் அலெக்சாந்தரின் கீழ் நிறுவியுள்ளது; இது ஏற்கனவே இருக்கும் NSA வின் பெரும் சைபர் வளங்களையும் அமெரிக்க இராணுவத்தினுடைய வளங்களையும் பயன்படுத்துகிறது.

சீனா சைபர் உளவை மேற்கொள்கிறது என்னும் அமெரிக்கக் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை. பிற அமெரிக்க நிறுவனங்களுள்ளும், வெளிநாட்டுக் கணனி முறைகள் மற்றும் வலைமைப்புக்கள் என உலகம் முழுவதும் பெரிய அளவில் NSA மின்னணு உளவு மற்றும் ஊடுருவலில் ஈடுபடுகிறது. சந்தேகத்திற்கிடமின்றி, முக்கிய இலக்குப் பட்டியலில் சீனா இருக்கிறது. இந்த வாரம் சீனப் பாதுகாப்பு அமைச்சரகத்தின் மீதான பல சைபர் தாக்குதல்கள் உட்பட, குறைந்தபட்சம் சீனாவிலிருக்கும் 14 மில்லியன் கணனிகள் 73,000 வெளிநாட்டைத் தளமாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் ஊடுருவலுக்கு உட்பட்டன என்று சீன வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

ஆக்கிரோஷ, சட்டவிரோத சைபர் நாசவேலையை ஈரானின் அணுச்சக்தி நிலையங்கள் மற்றும் உள்கட்டுமானங்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே நடத்தியுள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து கொண்டு, அது ஈரானின் நாடன்ஸ் யுரேனிய அடர்த்தி ஆலையில் பயன்படுத்தப்படும் எரிவாயு மைய நீக்கிகளின் மின் மையக் கட்டுப்பாடுகளை Stuxnet வோர்ம் தாக்குதலுக்கு உட்படுத்தியதால், நூற்றுக்கணக்கான கருவிகள் கட்டுப்பாட்டை இழந்து தன்னைத்தானே அழித்துக் கொள்ள வைத்தது. இந்தக் குற்ற நடவடிக்கையானது இன்னும் மரபு வழிமுறையுடன் சேர்த்து நடத்தப்பட்டது— அதாவது இஸ்ரேலால் செய்யப்பட்ட ஈரானிய அணுச்சக்தி விஞ்ஞானிகளைப் படுகொலை செய்தல் மற்றும் இன்னும் பிற நாச வேலைகளாகும்.

பென்டகனின் சைபர் ஆற்றல்கள் “சீன அச்சுறுத்தலுக்கு” எதிரான பாதுகாப்பிற்குத்தான் முற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். உண்மையில், 2010ல் சைபர் போர்முறைத் தலைமையை ஜெனரல் அலெக்சாந்தர் எடுத்துக்கொள்கையில், தன்னுடைய கொள்கையை ஆயுதப் படைகளின் துணைக் குழு மன்றத்திற்கு கோடிட்டுக் காட்டினார். அதாவது சீனாதான் “மேற்கத்தைய உள்கட்டுமானத்தின் பல தாக்குதல்களுக்குக் காரணம்” என்ற கருத்தைத் தெரிவித்த பின், அவர் அமெரிக்கா மீது திட்டமிட்ட முறையான தாக்குதல் நடத்தப்பட்டால், “இத்தாக்குதல்களின் ஆதாரத்தை நாடிப் பிடித்து அழிக்க முயல்வேன்” என்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், நியூ யோர்க் டைம்ஸால் விபரிக்கப்பட்டதை “ஆவணத்திற்காக ஒரு வெளிப்படையான பரிந்துரை ஆலோசனைச் சொற்களாக்கியது அதாவது சைபர் போர்முறைத் தாக்குதலுக்கான ஆற்றல்களாக’, ஒரு எதிரியின் கணனி வலையமைப்புக்கள், பிற உயர் தொழில்நுட்ப இலக்குகளை அழித்தல், மறுத்தல், ஏமாற்றுதல், மோசடி செய்தல் அல்லது கைப்பற்றுதல் ஆகிய ஆயுதங்களை பயன்படுத்துவது உட்பட” அமெரிக்க விமானப் படை வெளியிட்டது. இதே கட்டுரை பென்டகனின் ஆராய்ச்சிப் பிரிவான பாதுகாப்பு நவீன ஆராய்ச்சி திட்ட நிறுவனத்தைக் (Defence Advanced Research Projects Agency) குறிப்பிட்டு, அது ஏராளாமான தனியார் ஒப்பந்தக்காரர்களை திட்டம் X ல் பங்கு பெறவும், சைபர் போர்முறையை  புரிந்துகொள்ளவும், திட்டமிடவும், நிர்வகிக்கவும் புரட்சிகர தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிகாட்டியது பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

இந்த வார “சீன சைபர் அச்சுறுத்தல்” குறித்த பிரச்சாரமானது சீன இராணுவ, சிவிலிய இலக்குகளின் மீதான சைபர் தாக்குதலை ஏற்கனவே முன்னேறிய நிலையில் இருக்கும் அமெரிக்கத் தயாரிப்புக்களை முடுக்கிவிட நியாயங்களை அளிக்கிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒபாமாவின் “ஆசியாவில் இயக்கு மையம்” தோற்றுவித்துள்ள அழுத்தங்கள் பெருகிய நிலையில், சைபர் போர்முறையில் அமெரிக்காவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளானது வெளிப்படையான இராணுவ மோதலை இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தும்.