World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan budget imposes deeper austerity measures

இலங்கை வரவு செலவுத் திட்டம் ஆழமான சிக்கன நடவடிக்கைகளை திணிக்கின்றது

By Saman Gunadasa
28 November 2013

Back to screen version

 நாட்டின் நிதி அமைச்சராக இருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, கடந்த வியாழக்கிழமை 2014ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் செல்வந்த தட்டினருக்கு அதிக சலுகைகளை வழங்கிய அதேவேளை, உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மீது மேலும் தாக்குதல்களை அறிவித்தார்.

இந்த வரவு-செலவுத் திட்டம், பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து உழைக்கும் மக்களின் சமூக நிலைமைகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டது என இராஜபக்ஷ போலியாக அறிவித்தார். உண்மையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டளைப்படி, அரசாங்கம் மீண்டும் பற்றாக்குறையை குறைக்கின்றது. இதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது பொருளாதார நெருக்கடியின் சுமைகளை திணிக்கின்றது.

இந்த வரவு-செலவுத் திட்டம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவீதமாக உள்ள வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை, அடுத்த ஆண்டு 5.2 சதவீதமும் 2015ல் 4.5 சதவீதமாகவும் மற்றும் 2016ல் 3.8 சதவீதமகவும் குறைக்கும். 2009ல், சென்மதி நிலுவை நெருக்கடியை தவிர்ப்பதன் பேரில் 2.6 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாகப் பெறுவதற்கு ஈடாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 10 சதவிகிதமாக இருந்த பற்றாக்குறையை பாதியாகக் குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியது.

இராஜபக்ஷவின் சமீபத்திய வரவு-செலவுத் திட்டம், கிலோவுக்கு 2 முதல் 27 ரூபாய் வரை என, பல அடிப்படை உணவு பொருட்களின் இறக்குமதிக்கு விசேட பண்ட இறக்குமதி வரியொன்றை விதித்தது. இந்த நீண்ட பட்டியலில் உப்பு, சர்க்கரை, கருவாடு, காய்கறி எண்ணெய்கள், பருப்பு, பட்டாணி, பச்சை பயிறு, பாஸ்தா, சூப்கள், தானியங்கள், தயிர், வெண்ணெய் மற்றும் மாகரினும் அடங்கும். இராஜபக்ஷ இந்த தீர்வை உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் என வஞ்சகத்தனமாகக் கூறிய போதிலும், இதன் பிரதான விளைவு விலைவாசி அதிகரிப்பே ஆகும். வரவு-செலவுத் திட்டத்துக்கு முன்னரே, போக்குவரத்து கட்டனம் 7 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீமெந்து, அலுமினியம் மற்றும் உருக்குப் பொருட்கள் உட்பட கட்டிட பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி பாவனையாளர்களுக்கான தொலைத் தொடர்பு வரி, மிகப்பெருமளவில் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஒரு விசேட 15 சதவீத பெறுமதி சேர் வரி பல்பொருள் அங்காடிகள் மீதும் திணிக்கப்பட்டுள்ளது.

இது விலை உயர்வை சுமத்தும் அதே வேளை, இராஜபக்ஷ அரசாங்க ஊழியர்களுக்கு, ஏழு ஆண்டு ஊதிய முடக்கத்தை பேணிவருகின்றார். இந்த தொழிலாளர்களுக்கு மாதாந்த வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 1,200 ரூபா ($ US9) அற்பத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வெறும் 400 முதல் 600 ரூபா கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சமாந்தரமான அதிகரிப்புக்களை செய்யுமாறு இராஜபக்ஷ தனியார் துறையினரிடம் கேட்டுக்கொண்ட போதும், கடந்த காலத்தில் போல், இந்தக் கோரிக்கை பெருமளவில் நிராகரிக்கப்படும்.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் கிராமப்புற ஆதரவு தளத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில், விவசாயிகளின் பங்களிப்புடன் அவர்களுக்கு ஓய்வூதிய திட்டமொன்றை அறிவித்தார். தாம் எந்த இலாபமும் பெறாததனால், விவசாயிகள் எந்த பங்களிப்பும் செய்யாதிருந்த நிலையில், இத்தகைய முந்தைய திட்டங்கள் பொறிந்து போயின. இப்போது உர மானியத்தில் ஒரு கிலோகிராமுக்கு ஐந்து ரூபா வெட்டுவதன் வழியாக மறைமுகமாக விவசாயிகள் மீது இந்த பங்களிப்பு சுமத்தப்படவுள்ளது.

இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவைக்கான ஒதுக்கீடு சற்றே அதிகரிக்கப்பட்டு, முறையே 68 மற்றும் 117 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டு போலவே இந்த நிதி முழுமையாக விடுவிக்கப்படாமல் போகலாம். நாட்டின் நீண்ட கால உள்நாட்டு போர் 2009ல் முடிவுக்கு வந்தும் கூட, இராணுவத்துக்கு 253 பில்லியன் ரூபாய்கள் பிரமாண்டமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை தொடர்ந்தும் விரிவுபடுத்துவதோடு அதன் கொடூராமனா சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் விரோதத்தை நசுக்குவதற்கும் தயாராகி வருகிறது.

516 பில்லியன் ரூபா வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை, புதிய கடன்கள் மூலம் சரிசெய்யப்படவுள்ளது. இது இப்போது சுமார் 6.63 டிரில்லியன் ரூபாய், அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதம் ஆக உள்ள நாட்டின் மொத்த கடனுடன் சேரும். பண பற்றாக்குறையில் உள்ள அரசாங்கம், உயர் வட்டி விகிதங்களுடன் உள்ளூரிலும் வெளிநாட்டிலும் மேலும் மேலும் கடன்கள் பெறுகின்றது. இவை தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் மீது புதிய தாக்குதல்களை தொடுப்பதன் மூலம் செலுத்தப்படும்.

இந்த மாதம் கொழும்புக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் நவோயுகி ஷினோஹரா (Naoyuki Shinohara), அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கிய போதிலும், உலகளாவிய பொருளாதார மந்தநிலையும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கட்டம் கட்டமாக நெருக்கடியை தளர்த்தும் கொள்கைகளும், இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று எச்சரித்தார். அவர், 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சி என்ற இலங்கை மத்திய வங்கியின் மதிப்பீட்டுக்கு மாறாக, சர்வதேச நாணய நிதியத்தின் வளர்ச்சி கணிப்பை இந்த ஆண்டு 6.4 சதவீதமாக குறைத்தார். 2013 ஜனவரி முதல் செப்டம்பர் வரை, இலங்கை ஏற்றுமதி 0.3 சதவீதம் சற்றே அதிகரித்துள்ளது.

தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீது விலை உயர்வை சுமத்தும் அதே வேளை, இராஜபக்ஷ வர்த்தகர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு மற்றொரு சுற்று சலுகைகளை அறிவித்ததுள்ளார். ஆடம்பர பேனாக்கள், கழுத்து டை மற்றும் போக்கள், மீன் உறைவாக்கி மற்றும் கடல் உந்துவிசை இயந்திரங்கள் உட்பட மீன்பிடி உபகரணங்களுக்கும் பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, பெரும் செல்வந்தர்களுக்கு ஒரு போனஸ் கொடுப்பனவாக, இராஜபக்ஷ பந்தய கார்கள் மீது ஒரு 300 சதவீதம் வரியை நீக்கினார். இந்த வரவு-செலவு திட்டம், 2014ல் கொழும்பு பங்கு பரிவர்த்தனைக்கு தங்களுடைய பங்குகளை பட்டியலிடும் நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு 50 சதவீதம் வரி விடுமுறை அளித்ததுள்ளது.

ஆழ்ந்த சமூக பிளவின் அரசியல் விளைவுகள் குறித்து ஆளும் தட்டுக்களின் பதட்டத்தை வெளிப்படுத்திய ஐலண்ட் பத்திரிகையின் வெள்ளியன்று ஆசிரியர் தலையங்கம்: "வீதிகளில் பெருந்தொகையான ஆடம்பர வாகனங்களில் சென்று, சிலர் வெறுப்படைகின்ற வகையில் தமது செல்வத்தை வீம்பாக காட்சிப்படுத்துகின்ற நிலையில், அரசாங்கம் ஏன் சாதாரண பொது மக்களின் இழப்பில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான மறைமுக வரிகளை சார்ந்து இருக்கிறது என்பதை ஒருவரால் வெறுமனே புரிந்து கொள்ள முடியாது," எனத் தெரிவித்துள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கு அத்தகைய கவலைகள் கிடையாது. அது "2014 வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒழுக்கத்திற்கு தொடர்ந்து அர்ப்பணிப்பு காட்டப்பட்டுள்ளதை பாராட்டுகிறது." தேசிய வர்த்தக சம்மேளனத்தின் படி, "சிறிதோ பெரிதோ வரவு-செலவுத் திட்டம் ஒரு முற்போக்கான ஆவணம்."

இராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இருந்து அரசாங்கத்தின் நிதி கட்டுப்பாட்டை பலாத்காரமாக கைப்பற்றி வைத்துள்ளார். வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடு ஆவணத்தில் உள்ள உட்பிரிவுகள், பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் நிதியை மாற்றுவதற்கு திறைசேரி செயலாளரை அனுமதிக்கின்றன. இதன் அரசியல்யாப்புத் தன்மை உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டபோதும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அவருக்கு நெருக்கமான பிரதம நீதியரசரினால் ஒப்புதலளிக்கப்பட்டது.

எதிர் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் வரவு-செலவுத் திட்டம் பற்றிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை ஆகும். கிட்டத்தட்ட அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் இராஜபக்ஷவுக்கு பிரேரணைகளை கையளித்ததோடு, அவரது அரசாங்கம் வருமானத்தை அதிகரித்து வாழ்க்கைக்குத் தேவையான ஊதியத்தை வழங்கவுள்ளது என்ற பொய்யை பரப்பின. இப்போது இந்த தலைவர்கள், எப்போதும் அடையப்பட முடியாத தங்கள் "கோரிக்கைகளை" புறக்கணித்துவிட்டதாக புலம்புகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பீ.) தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் பேசியபோது, "அரசாங்கத்தின் 2014 வரவு-செலவுத் திட்டம், ஜனத்தொகையில் 99 சதவீதத்தினரை வறுமையில் தள்ளியுள்ள அதே வேளை, வெறும் 1 சதவீதத்தினரான அதி செல்வந்தர்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளது,” என்றார். இந்த பெரும் வணிக கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிச்சயமாக அதையே செய்யும். 2002-04ல் பிரதம மந்திரியாக விக்கிரமசிங்க இருந்தபோது, வாழ்க்கை தரத்தை ஆழமாக சீரழித்த "புத்துயிர் பெறும் இலங்கை" என்றழைக்கப்படும், யூ.என்.பீ.யின் பரந்த சந்தை சார்பு திட்டத்தை மேற்பார்வை செய்தார்.

எதிர் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.), வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக கொழும்பிலும் மற்றும் நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. வரவு-செலவுத் திட்டத்துக்கு முன், ஜே.வி.பீ.யின் தொழிற்சங்க தலைவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்று, தமது உறுப்பினர்களில் இருந்து எந்தவொரு எதிர்ப்பையும் அடக்கினர். இப்போது அவர்கள் அதே நோக்கத்துக்காக, அதாவது அரசாங்கத்துக்கும் அதன் சிக்கன வரவு-செலவுத் திட்டத்திற்கும் எதிரான எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் தடுப்பதற்கும் கலைத்துவிடுவதற்கும், ஆர்ப்பாட்டங்களுக்கு அழைக்கின்றனர். ஜே.வி.பீ. 2004ல், சர்வதேச நாணய நிதியத்தின் சந்தை சார்பு கட்டளைகளை திணித்த, இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு கூட்டணி அரசாங்கத்தில் பங்காளியாக இருந்தது.

முழு அரசியல் ஸ்தாபனமும் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்த தயாராக உள்ளது. தொழிலாளர்களுக்கு தமது உரிமைகளை காக்க சோசலிச கொள்கைகளுடன் ஆயுதபாணியாக்கப்பட்ட ஒரு புதிய புரட்சிகர தலைமை அவசியம். அவர்கள் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்துக்காக போராட, அனைத்து முதலாளித்துவ கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் அடிவருடிகளிடமும் இருந்து சுயாதீனமாக அணிதிரள வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த முன்னோக்குக்காகப் போராடுகின்றது.