World Socialist Web Site www.wsws.org |
Japanese PM revives militarist traditions ஜப்பானிய பிரதம மந்திரி இராணுவவாத பாரம்பரியங்களைப் புதுப்பிக்கிறார்
Peter Symonds ஜப்பானிய யுத்தத்தில் இறந்தவர்களுக்கான இழிபெயர் பெற்ற யாசூகூனி நினைவு மண்டபத்திற்கு (Yasukuni Shrine) ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயின் நேற்றைய விஜயமானது, ஏற்கனவே அப்பிராந்தியத்தில் ஆழ்ந்த பதட்டங்களைத் தூண்டிவிட்டுள்ள ஜப்பானிய இராணுவவாதத்தை மீண்டும் புதுப்பிப்பதை நோக்கிய மற்றொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக உள்ளது. ஜப்பானின் காட்டுமிராண்டித்தனமான யுத்தகால ஆட்சிக்கு உட்பட்டிருந்த சீனா மற்றும் தென் கொரியா இரண்டுமே, உடனடியாக அந்த விஜயத்திற்கு கண்டனம் தெரிவித்தன —ஜூனிசிரோ கொய்ஜூமிக்குப் (Junichiro Koizumi) பின்னர் அப்போதைய பிரதம மந்திரியாக அபே முதன்முறையாக 2006இல் அந்த நினைவிடத்திற்கு சென்றிருந்தார். யாசூகூனி கல்லறை வெறுமனே ஒரு யுத்த நினைவிடம் மட்டமல்ல, மாறாக 1930'கள் மற்றும் 1940'களின் ஜப்பானிய இராணுவவாதத்தின் ஒரு முக்கிய சின்னமாகவும் அது அமைந்துள்ளது. ஒரு கூட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு உள்ளான "முதல்நிலை" (Class A) யுத்த குற்றவாளிகள் உட்பட யுத்தத்தில் இறந்த பல ஜப்பானியர்களையும் அடையாளப்படுத்தும் விதமாக அது அமைந்துள்ளது. எரியூட்டும் அதன் குணாம்சத்தில், அபே'யின் யாசூகூனி விஜயமானது, ஜேர்மனியில் ஓர் அரசியல் தலைவர் நாஜி தலைவர்களின் கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்த முடிவெடுத்தால் எவ்வாறு இருக்குமோ அதற்கு ஒத்தவிதத்தில் உள்ளது. அபே'இன் விஜயம் அவரது தாராளவாத ஜனநாயக கட்சி (LDP) அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து ஒரு வருடத்தைக் குறித்தது. “ஜப்பான் ஒருபோதும் மீண்டும் ஒரு யுத்தத்தை நடத்தாது என்ற உறுதிமொழியை" புதுப்பிக்கவே அவர் அந்த நினைவுமண்டபத்திற்கு சென்றதாக அவர் எரிச்சலூட்டும் விதமாக விவரித்தார். ஆனால் அவரது அரசாங்கம் தான் கடந்த ஆண்டின் போது இந்த தசாப்தத்தில் முதல்முறையாக இராணுவ செலவினங்களை அதிகரித்தது, கிழக்கு சீன கடலில் சர்ச்சைக்குரிய சென்காயு/தியாவு தீவுகளின் மீது சீனாவுடன் பதட்டங்களைத் தூண்டி உள்ளது, மற்றும் ஜப்பானை சீனாவிற்கு எதிராக அமெரிக்க யுத்த தயாரிப்புகளுக்குள் இன்னும் நெருக்கமாக இணைத்துக் கொண்டுள்ளது. யுத்த-எதிர்ப்பு உணர்வுகளை, குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்குள் ஆழமாக வேரூன்றியுள்ள உணர்வுகளை எதிர்கொள்ளும் பொருட்டு தேசியவாதத்தை தூண்டி விடுவதற்கான ஒரு தொடர் பிரச்சாரத்தின் பாகமாக அபே'யின் விஜயம் அமைந்துள்ளது. கடந்த டிசம்பரில் பதவியேற்பதற்கு சற்று முன்னர் Bungei Shunju இல் வெளியான ஒரு கட்டுரையில், “யுத்தத்திற்கு பிந்தைய வரலாற்றில் இருந்து"—அதாவது இராணுவத்தின் யுத்த குற்றங்கள் எதையும் ஒப்புக் கொள்வதில் இருந்து—"ஜப்பானை விடுவிக்கும் போராட்டத்தில்" அவர் இருப்பதாக அபே அறிவித்தார். இந்த சித்தாந்த பிரச்சாரமானது, ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு அதன் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைப் பின்தொடரும் யுத்தத்தை நடத்த உதவும் வகையில் அந்நாட்டின் யுத்தத்திற்குப் பிந்தைய அரசியலமைப்பு கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதோடு பிணைந்துள்ளது. அபே'யின் விஜயம் குறித்து டோக்கியோவில் உள்ள அமெரிக்க தூதரகம் அதன் "மனக்கசப்பை" வெளிப்படுத்தி உள்ள போதினும், ஜப்பானிய இராணுவவாதத்தின் மீள்-எழுச்சியை ஊக்குவிப்பதற்கான முதன்மையான பொறுப்புறுதி ஒபாமா நிர்வாகத்தையே சாரும். 2006-2007இல் பிரதம மந்திரியாக அபே அவரது முதல் பதவி காலத்தின்போது, அவருக்கு முன்னர் பதவியில் இருந்த கொய்ஜூமியின் கீழ் சீன உறவுகளில் இருந்த சிக்கல்களை, அதாவது குறைந்தபட்சம் யாசூகூனி நினைவு மண்டபத்திற்கு கொய்ஜூமினின் விஜயத்தின் விளைவால் ஏற்பட்ட சிக்கல்களைச் சீர்படுத்த முனைந்தார். இருந்த போதினும், கடந்த நான்கு ஆண்டுகளில், சீனாவிற்கு இராஜாங்கரீதியில் குழிபறிக்கும் மற்றும் அதை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் நோக்கில், ஒபாமா அவரது "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" நடத்தி உள்ளார். இது அமெரிக்க கூட்டாளிகளை, குறிப்பாக ஜப்பானை, சீனாவிற்கு எதிராக இன்னும் கூடுதலாக ஆக்ரோஷ நிலைப்பாட்டை எடுக்க ஊக்குவித்துள்ளது. 2010இல் பிரதம மந்திரி யூகியோ ஹடோயாமாவை நீக்குவதில் ஒபாமா நிர்வாகம் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தது, அவர், அமெரிக்காவுடன் கூட்டணியை உறுதிப்படுத்திய அதேவேளையில், சீனாவுடன் நெருக்கமான தொடர்புகளை மேற்கொள்ள முனைந்திருந்தார். ஹடோயாமாவிற்குப் பின்வந்தவர்களான ஜப்பான் ஜனநாயக கட்சியின் நியோடோ கன் மற்றும் யோஷிஹிகோ நோடா இருவருமே பெய்ஜிங்கிற்கு எதிராக, குறிப்பாக சர்ச்சைக்குரிய சென்காயு/தியாவு தீவுகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தனர். செப்டம்பர் 2010இல் அந்த பாறை குன்றுகளை நோடா "தேசியமயப்படுத்தினார்", அது சீனாவுடன் மோதலை தீவிரப்படுத்தியதோடு, கடந்த ஆண்டு தேர்தலில் அபே மற்றும் அவரது வலதுசாரி LDP வெற்றி பெறுவதற்குக் கதவைத் திறந்து விட்டது. அந்த சர்ச்சைக்குரிய தீவுகளையும் உள்ளடக்கி சீனா கிழக்கு சீன கடலில் ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை ஸ்தாபித்து கடந்த மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்ட போது மீண்டும் பதட்டங்கள் மூண்டன. அமெரிக்கா உடனடியாக அணுஆயுதம் ஏந்தக்கூடிய B-52 யுத்த விமானங்களை முன்னறிவிப்பின்றி அந்த மண்டலத்திற்குள் பறக்கவிட்டு சீன அதிகாரத்திற்கு சவால் விடுத்தது. ஜப்பானும் அதே நடைமுறையை அதன் சொந்த யுத்த விமானங்களைக் கொண்டு நடைமுறைப்படுத்தியது. சீனா வளைத்துப்பிடிக்கும் விமானங்களைப் பறக்கவிட்டு விடையிறுப்பு காட்டியது, இவை அங்கே ஒரு தவறான மதிப்பீடோ அல்லது பிழையோ ஒரு மோதலைத் தூண்டிவிடக்கூடிய அபாயத்தை உயர்த்தின. அதற்கு பிந்தைய வாரங்களில், ஓர் அமெரிக்க யுத்த கப்பல் ஆத்திரமூட்டும் விதத்தில் சீன கடற்படை ஒத்திகையை இரகசியமாக கண்காணித்த நிலையில், அமெரிக்க மற்றும் சீன கப்பல்களுக்கு இடையே தெற்கு சீன கடலில் ஏற்படவிருந்த ஒரு மோதல் மிக அருகாமையில் தவிர்க்கப்பட்டது. முதலாம் உலக யுத்தம் தொடங்கியதன் நினைவாண்டு நெருங்கி வருகின்ற வேளையில், ஒரு நூறு ஆண்டுகள் கடந்த பின்னரும் உலகம் இன்றும் அதேபோன்ற நடுக்கமூட்டும் ஒப்புமையைத் தாங்கி உள்ளது. அப்போது, உலக முதலாளித்துவத்தின் ஓர் ஆழ்ந்த நெருக்கடிக்கு இடையில், பிரதான சக்திகள் பெரும் ஆபத்து வாய்ந்த இராஜதந்திர சதி விளையாட்டுக்களில், ஆத்திரமூட்டல்களில் மற்றும் இராணுவ தலையீடுகளில் ஈடுபட்டிருந்தன, அவை ஒரு "யுத்த அபாயம்" மாற்றி மற்றொன்றை உருவாக்கி வந்தன. இறுதியில், பார்வைக்கு மிகச் சிறிய ஒரு சம்பவம்—ஆஸ்திரிய அரச வாரிசின் படுகொலை—இந்த பூகோளத்தை எந்த பிரதான சக்திகள் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்பதைத் தீர்மானிக்க ஓர் ஈடிணையற்ற இரத்தக்களரிக்குள் திருப்பிப் போட்டது. ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர், உலகம் யுத்தத்திற்குள் இன்னும் பரந்த விதத்தில் மீண்டும் இழுக்கப்பட்டது. பெருமந்த நிலைமையால் ஆசியாவில் ஜப்பானிய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது, அது ஆளும் வர்க்கத்திற்குள் மூர்க்கத்தனத்தை தூண்டிவிட்டது. 1931இல் மான்சூரியா ஆக்கிரமிப்பு மற்றும் 1937இல் ஒட்டுமொத்தமாக சீனா மீது ஆக்கிரமிப்பு ஆகியவற்றோடு ஜப்பானிய மேற்தட்டு காலனித்துவ ஆக்கிரமிப்பு யுத்தங்கள் மூலமாக அந்த நெருக்கடியைக் கடந்துவர முயன்றது. முடிவாக, ஆசியாவில் மேலாதிக்க சக்தியாக மாற விரும்பிய ஜப்பானிய அபிலாஷைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தலையாய மோதலுக்கு இழுத்து வரப்பட்டது, அது 1941இல் பசிபிக் யுத்த வெடிப்பிற்கு இட்டு சென்றது. இன்று 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடியின் வெடிப்பிற்கு ஐந்தாண்டுகளுக்கு பின்னர், உலக முதலாளித்துவ அமைப்புமுறை மந்தநிலைமையிலும் வீழ்ச்சியிலும் பின்னிப் பிணைந்து நிற்கிறது. கடந்த மூன்று தசாப்தங்களில், ஆசியா உலகளாவிய போட்டியாளர்களின் கவனத்தை ஈர்த்து, உலகின் மலிவு உழைப்பு களமாக மாறி உள்ளது. அனைத்திற்கும் மேலாக அப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மேலாதிக்கத்தை தக்கவைக்க அதன் இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒப்பீட்டளவிலான வீழ்ச்சியை சரிக்கட்ட நோக்கம் கொண்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலமாக, வாஷிங்டன் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை இன்னும் ஆக்ரோஷமாக ஊக்கப்படுத்தி உள்ளதோடு, அது ஒரு பிரதான சக்தியாக அதன் வட்டத்திற்குள் வராமல் தடுக்கவும் தீவிரமாக உள்ளது. ஜப்பான், சீனா மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் யுத்தத்திற்கு தயாராகி வருகின்ற வேளையில், மீண்டும் அவை நச்சுதன்மை மிக்க தேசியவாத சுவாலைகளைத் தூண்டிவிட்டு வருகின்றன. ஏற்கனவே இரண்டு உலக யுத்தங்களை உருவாக்கி உள்ள இந்த சமூக அமைப்புமுறையை இல்லாதொழிப்பதே இந்த யுத்த உந்துதலை தடுப்பதற்கான ஒரே கருவியாகும். ஒரு நூற்றாண்டிற்குப் பழமையான முதலாளித்துவம் அதன் அதே அடிப்படை முரண்பாடுகளால்—அதாவது உலகளாவிய பொருளாதாரம் மற்றும் காலங்கடந்த தேசிய-அமைப்புமுறைக்கு இடையேயும் மற்றும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும், உற்பத்திக் கருவிகளின் தனியார் சொத்துடைமைக்கும் இடையே—நொருங்கிப் போயுள்ளது. ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சீன, ஜப்பானிய, அமெரிக்க மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலமாக, இந்த இலாபகர அமைப்புமுறையை தூக்கியெறியும் ஒரே சமூக சக்தியாக இருப்பது சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். |
|