World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Deadly train fire highlights poor safety conditions on Indian Railways

மரணகரமான இரயில் தீவிபத்து இந்திய இரயில்வேயின் மோசமான பாதுகாப்பு நிலைமைகளை எடுத்துக்காட்டுகிறது

By Deepal Jayasekera
30 December 2013

Back to screen version

அரசுக்கு சொந்தமான இந்திய இரயில்வேயின் மோசமான பாதுகாப்பு நிலைமைகளை எடுத்துக்காட்டும் விதமாக, சனியன்று காலை தென்னிந்தியாவில் நிகழ்ந்த ஒரு இரயில் தீ விபத்து குறைந்தபட்சம் 26 பயணிகளின் உயிர்களைப் பறித்தது. தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் இருந்து மேற்கத்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள நந்டெட்டிற்குப் பயணித்த ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரண்டு ஏசி பெட்டிகளில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள புட்டபர்தி எனும் சிறிய நகருக்கு அருகில், தீப்பிடித்தது.

அந்த பெட்டிகளின் கதவுகளைத் திறக்க முடியாததால், பலர் உள்ளே சிக்கி புகைமூட்டத்தில் மூச்சுத்திணறி இறந்தனர்.

காலை 3:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டபோது அந்த இரண்டு பெட்டிகளிலும் அறுபத்தி ஏழு பயணிகள் இருந்தனர், ஏறத்தாழ அவர்களில் அனைவருமே உறங்கிக் கொண்டிருந்தனர். ஒரு பெண் பயணியின் அலறல் சத்தம் கேட்டு விழித்த பயணிகள், நெருப்பும் கரும்புகையும் பெட்டிகள் முழுவதும் பரவி வந்ததால் அதிர்ந்து போய் வெளியேற ஒரு வழியைக் காணும் முயற்சியில் ஜன்னல்களை உடைத்தனர். ஓடிய இரயிலில் இருந்து குதித்து பலர் தங்கள் வாழ்வைக் காப்பாற்றிக் கொண்டனர், ஆனால் அதன் விளைவாக ஒரு டஜனுக்கும் மேலானவர்கள் அதில் படுகாயமுற்றனர்.

இரயிலில் இருந்த பயணச்சீட்டு பரிசோதகர் அவசர உதவி பிரேக்கைப் பிடித்து இழுத்த பின்னர், இரயில் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், அவரும், இரயில் ஓட்டுனரும் மற்றும் பல பயணிகளும் சேர்ந்து தீ பரவாமல் இருக்க அந்த ரெயிலின் இதர பெட்டிகளை இந்த இரண்டு பெட்டிகளில் இருந்து கழற்றிவிட்டனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, கதவை திறந்துவிட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களைத் தேடும் பொருட்டு அந்த கரும்புகைக்குள் வழி ஏற்படுத்தினர். உயிரிழந்தவர்களின் மத்தியில், உயிருக்கு போராடி கொண்டிருந்த சுமார் ஒரு டஜன் பயணிகளை அவர்கள் மீட்டனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஒரு மின்கசிவால் அந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பநிலை அறிக்கைகள் குறிப்பிடுவதாக ரயில்வே மந்திரி மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் டைரக்டர் ஜெனரல் ஆஃப் பொலிஸ் B. பிரசாத ராவ் கூறியுள்ளனர். பாதுகாப்பு குறித்த அவர்களின் சொந்த அலட்சிய போக்கிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப அதிகாரிகள் ஒரு பலியாட்டைத் தேடக்கூடும் என்று எடுத்துக்காட்டும் ஒரு நகர்வில், ஒரு மின்கசிவால் அந்த தீவிபத்து ஏற்பட்டதென்பது கண்டறியப்பட்டால், அதற்கு பொறுப்பானவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று கார்கே எச்சரித்தார்.

சனியன்று விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட கார்கே மக்கள் கோபத்தைத் தணிக்கும் ஒரு முயற்சியாக, உயிரிழந்தவர்களின் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 500,000 ரூபாய் (சுமார் 8,000 அமெரிக்க டாலர்) நஷ்ட ஈடாக வழங்கப்படும் என்று அறிவித்தார். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் 100,000 ரூபாய் நஷ்டஈடு பெறுவார்கள் மற்றும் காயமடைந்த ஏனையவர்கள் ரூபாய் 50,000 பெறுவார்கள்.

அந்த தீவிபத்தை விசாரிக்க ரயில்வே ஆணைய சேர்மேன் அருணேந்திர குமார் மற்றும் (மின்துறை) உறுப்பினர் குல்பூஷண் தலைமையில் கார்கே ஒரு விசாரணை குழுவை நியமித்தார். இதுபோன்ற விசாரணைகள் அடிக்கடி நிகழ்கின்றன, ஆனால் பொதுவாக ரயில்வே பாதுகாப்பில், அதன்மூலமாக மேற்கொண்டு விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கும் விதத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யபடுவதில்லை, ஏனென்றால் அத்தகைய விசாரணைகளின் பரிந்துரைகள் நிராகரிக்கப்படுகின்றன மற்றும்/அல்லது அரசு அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில்லை.

சனியன்று நடந்த அந்த ரெயில் தீவிபத்திற்கான காரணம் என்னவாக இருந்த போதினும், ஒருவேளை இரயிலில் தானியங்கி தீவிபத்து எச்சரிக்கை ஒலியமைப்பு அமைக்கப்பட்டு இருந்திருந்தால், உயிரிழந்தவர்களில் அனைவரையும் இல்லாவிட்டாலும் கூட, பெரும்பாலானவர்களைக் காப்பாற்றி இருக்க முடியும். மீண்டும் மீண்டும் தீவிபத்துக்கள் நிகழ்ந்து வந்திருக்கின்ற போதினும் இந்திய இரயில்வே அதிகாரிகள் அவர்களின் பெரும்பாலான நீண்டதூர ரெயில்களில் அதுபோன்ற உபகரணங்களை பொருத்த தவறி உள்ளனர். இந்த ஆண்டில், ஓடும் பயணிகள் ரெயிலில் அங்கே குறைந்தபட்சம் ஐந்து தீவிபத்து சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. வெறும் 18 மாதங்களுக்கு முன்னர், சென்னையில் இருந்து புது டெல்லிக்கு செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட ஒரு தீவிபத்தில் 32 பேர் கொல்லப்பட்டனர். நவம்பர் 2011இல், ஹௌராஹ்-டெஹ்ராடூன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் ஏற்பட்ட ஒரு தீவிபத்தில் 7 பேர் உயிருடன் எரிந்து போனார்கள். ஏப்ரல் 2011இல் மும்பை-டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ், மத்திய பிரதேசத்தின் வழியாக பயணித்துக் கொண்டிருந்தபோது, அதில் மூன்று பெட்டிகளில் தீப்பிடித்து கொண்டது.

இந்தியன் இரயில்வே அதன் ராஜதானி, சதாப்தி, கரீப் ரத் மற்றும் தொரோந்தோ ரெயில்களின் அனைத்து குளிரூட்டப்பட்ட பெட்டிகளிலும் தானியங்கி தீவிபத்து தடுப்பு எச்சரிக்கை ஒலியமைப்பை அமைக்க அதன் திட்டங்களை அறிவித்துள்ள போதினும், இதுவரையில் அவை வெறுமனே இரண்டு ராஜதானி ரெயில்களில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. இது ஏனென்றால் சாதாரண பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான அதன் சொந்த திட்டங்களையும் கூட வெட்டும் நிலைமைக்கு இந்திய இரயில்வே மீது நிதியியல் அழுத்தங்கள் உள்ளன.

இரயில்கள் தடம் புரள்வது மற்றும் மோதிக் கொள்வது உட்பட, விபத்துக்கள் இந்திய இரயில்வேயில் சாதாரணமாக உள்ளன. இத்தகைய விபத்துக்களில் பெரும்பாலானவை மோசமான பராமரிப்பால் ஏற்படுகின்றன. அரசு மற்றும் இரயில்வே அதிகாரிகள் போதுமான நிதி ஒதுக்கீடுகளை வழங்காமையால் இவை உருவாக்கப்படுகின்றன. கடந்த மாதம் தான், நவம்பர் 15இல், மஹாராஷ்டிராவில் நாசிக்கில் ஒரு இரயில் தடம் புரண்டதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் காயமுற்றனர்.

அடிக்கடி நிகழும் தீவிபத்துக்கள் மோசமான பராமரிப்பைக் குறித்து காட்டுகின்றன,” என்ற தலைப்பில் சென்னையை மையமாக கொண்ட தி ஹிந்து நாளிதழின் ஒரு கட்டுரை குறிப்பிட்டது: “[இந்திய] இரயில்வே மிக வெளிப்படையாக கடந்த கால விபத்துக்களில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை. ...”

துன்பியலான விதத்தில், 2012-13இன் போது நிகழ்ந்த தீவிபத்துக்களுக்கான காரணங்கள் பெரும்பாலும் இரயில்வேயின் நிதிப் பற்றாக்குறையின் பாகமாக ஏற்பட்டதாக உள்ளன, அது தோற்றப்பாட்டளவில் அதன் கைகளை விரித்து விட்டது.”

ஹிந்து நாளிதழ் அறிக்கையின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் அரசுக்கு சொந்தமான இரயில்வே பாதுகாப்பு முறைமைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 65இல் இருந்து 79 சதவீதத்திற்கு இடையில் மட்டுமே செலவிட்டுள்ளது.

முந்தைய ரெயில் விபத்துக்கள் மற்றும் தீவிபத்துக்களைப் போலவே, இந்திய அரசாங்கங்கள் பெரு வர்த்தகங்களுக்கும் பணக்காரர்களுக்கும் வரிச் சலுகைகளை வழங்கி வருகின்ற நிலையில் மற்றும் பொதுச் சொத்துக்களை கிடைத்த விலைக்கு விற்று வருகின்ற நிலையில் அடிப்படை இரயில்வே பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் முதலீடு செய்ய அவை தவறி இருப்பதையே சனியன்று நிகழ்ந்த பரிதாபகரமான சம்பவம் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.