தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
A cruel Christmas gift: Jobless benefits cut off for 1.3 million Americans ஒரு குரூரமான கிறிஸ்துமஸ் அன்பளிப்பு: 1.3 மில்லியன் அமெரிக்கர்களுக்கு வேலையின்மை சலுகைகள் வெட்டப்படுகிறது
Kate Randall and Barry Grey Use this version to print| Send feedback கிறிஸ்துமஸிற்கு வெறும் மூன்று நாட்களுக்குப் பின்னர், 1.3 மில்லியன் அமெரிக்கர்களுக்கு விரிவாக்கப்பட்ட வேலைவாய்ப்பின்மை சலுகைகள் இன்றோடு முடிவுக்கு வரும். நீண்டகால வேலையின்மையில் இருப்பவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்குமான இந்த குரூரமான வருமான வெட்டானது, தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒபாமா நிர்வாகத்தின் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் வெறுப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த நகர்வு மில்லியன் கணக்கான வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்களை மற்றும் அவர்களின் குடும்பங்களை வறுமைக்குள் தள்ள அச்சுறுத்துகிறது. யுத்தத்திற்குப் பிந்தைய அமெரிக்க வரலாற்றில், வேலையின்மை அளவுகள் தற்போதிருக்கும் அளவிற்கு உயர்ந்தளவில் இருக்கும்போது, விரிவாக்கப்பட்ட வேலைவாய்ப்பின்மை சலுகைகள் ஒருபோதும் வெட்டப்பட்டதில்லை. 2014இல், மேலதிகமாக 3.6 மில்லியன் தொழிலாளர்கள் அவர்களின் அரசு வேலைவாய்ப்பின்மை சலுகைகளை இழந்து ஒன்றுமில்லாமல் விடப்படுவார்கள்.இத்தகைய சலுகைகளைத் தங்களின் முழு ரொக்க வருமான ஆதாரமாக சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களை கணக்கில் எடுத்துப் பார்த்தால், அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 5 சதவீத மக்கள் இத்தகைய நிதிய வெட்டுக்களின் விளைவாக வறிய நிலைமையை முகங்கொடுக்க நேரிடும். வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினரின் ஒப்புதலோடு இந்த மாத தொடக்கத்தில் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட வரவு-செலவு திட்ட உடன்படிக்கையில் இந்த விரிவாக்கப்பட்ட சலுகைகள் புதுப்பிக்கப்படாமல் விடப்பட்டன. விரிவாக்கப்பட்ட வேலைவாய்ப்பின்மை சலுகைகளின் மொத்தச் செலவு, ஒட்டுமொத்த பெடரல் செலவில் 1 சதவீதத்திற்கும் குறைவாக, 2014இல் 25 பில்லியன் டாலராக இருந்திருக்கக்கூடும். வேலையின்மை சலுகைகள் காலாவதியாவதை அனுமதித்த அதே காங்கிரஸ் 2014'க்கான இராணுவ செலவுகளுக்கு அண்ணளவாக 633 பில்லியன் டாலருக்கு ஒப்புதல் வழங்கி திசம்பர் 19இல் வாக்களித்தது, இந்த பணம் அமெரிக்க மக்களால் அதிகளவில் எதிர்க்கப்படும் ஆப்கானிஸ்தான் யுத்த நிதி செலவுகளை நோக்கி செல்லும் மற்றும் இன்னும் மேலதிகமாக இரத்தந்தோய்ந்த இராணுவ தலையீட்டிற்கான வாஷிங்டனின் தயாரிப்புகளை நோக்கி செலவிடப்படும். இரண்டு ஆண்டு வரவு-செலவு திட்டத்தின் மீது குடியரசு கட்சியினருடன் நடந்த அவர்களின் பேரங்களில் வேண்டுமென்றே பெடரல் சலுகை திட்டத்தை நீடிப்பதை தவிர்த்து விட்டு, ஒபாமாவும் மற்றும் காங்கிரஸில் உள்ள ஜனநாயக கட்சியினரும் போலித்தனமாக விரிவாக்கப்பட்ட சலுகைகளுக்கான ஆதரவாளர்களாக காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் அத்திட்டத்தை மீண்டும் தொடர்வதற்கான ஒரு மசோதாவை சமர்பித்துள்ளதோடு,புத்தாண்டிற்குப் பின்னர் வெகு விரைவாக ஒரு வாக்கெடுப்பிற்கும் அழைப்பு விடுத்துள்ளனர். நிர்வாகத்தின் ஆதரவுடனான அந்த மசோதா, நிறைவேற்றப்பட்டால், அது அத்திட்டத்தை வெறுமனே மூன்று மாதங்களுக்கு நீடிக்கும். மேலும் மந்தநிலைமையின் தொடக்கத்தில் இருந்து நிறைவேற்றப்பட்ட முந்தைய நீடிப்புகளைப் போலவே, எந்தவொரு நீடிப்பும் ஐயத்திற்கிடமின்றி பண உதவியைச் சார்ந்திருக்கும் வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு, சலுகையைப் பெறுவதற்கான தகுதி மற்றும் காலவரையறை மீதான கூடுதல் கட்டுப்பாடுகளை உட்கொண்டிருக்கும். அனைத்திற்கும் மேலாக, வேலையின்மை பண உதவிக்காக ஏதாவது நீடிப்பு செய்யப்பட்டால் அதனால் உண்டாகும் செலவுகளைச் சரிகட்ட ஏனைய சமூக திட்டங்களில் ஒருவேளை கட்டாயமாக வெட்டுக்கள் செய்யப்படலாம். உத்தியோகபூர்வமாக மந்தநிலைமையின் நான்காண்டுகளுக்கும் மேலாக ஆன பின்னரும்,அதிகரித்துவரும் வறுமை மற்றும் விரிவடைந்து வரும் சமூக சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடாக அமெரிக்கா உள்ளது. ஆனால் நிதியியல் செல்வந்த தட்டைப் பொறுத்த வரையில், விஷயங்கள் முன்னர் இருந்ததை விடவும் சிறப்பாக உள்ளன. "Big Rally Pumps Up Wall Street Bonuses” என்ற களிப்பு நிறைந்த தலைப்போடு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாயன்று ஒரு முதல் பக்க கட்டுரையை பிரசுரித்தது. இந்த ஆண்டு டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 24 சதவீதத்திற்கு உயர்ந்திருக்கின்ற நிலையில்,முதலீட்டு வங்கிகளுக்கான ஆண்டு ஈட்டுதொகை 6 சதவீதம் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மற்றும் பங்குச்சந்தை வர்த்தகர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 12 சதவீதம் கூடுதலாக சம்பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் அனுமானிக்கப்பட்டு இருப்பதாக அந்த செய்தியிதழ் விவரித்தது. பெரும்பான்மை அமெரிக்கர்களின் நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்து செல்கின்றன. அமெரிக்க மேயர்களின் கூட்டமைப்பால் கண்டறியப்பட்ட ஓர் ஆய்வு அது ஆய்வு செய்த 25 நகரங்களில் 83 சதவீதம் பகுதிகளுக்கு அவசரகால உணவு தேவைகள் அதிகரித்திருப்பதாகவும், அதேவேளையில் வீடற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 64 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் சமீபத்தில் கண்டறிந்தது. இந்த நிலைமைகளுக்கு ஆளும் மேற்தட்டின் பதில், அமெரிக்காவின் சமூக பாதுகாப்பில் கொஞ்ச நஞ்சம் என்ன எஞ்சியுள்ளதோ அதை இன்னும் ஆழமாக தூண்டாடுவதாக உள்ளது. நவம்பர் 1இல், பொதுவாக உணவு மானிய கூப்பன்கள் என்றழைக்கப்படும் ஊட்டச்சத்து துணை உதவி திட்டத்திற்கு (Supplemental Nutrition Assistance Program - SNAP) பெடரல் அரசு மூன்று ஆண்டுகளில் 11 பில்லியன் டாலர் வெட்டுக்களை நடைமுறைப்படுத்த தொடங்கியது. இத்தகைய வெட்டுக்கள், அத்திட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக, ஒருவருடைய ஒரு நேர சாப்பாட்டில் 1.40 டாலருக்கு சற்று குறைவாக மானியங்களைக் குறைத்ததோடு, 47.7 மில்லியன் மக்களுக்கான பிரதி மாத உணவில் இரண்டு நாட்களுக்கு சமமான உணவையும் வெட்டியது. காங்கிரஸில் உள்ள ஜனநாயக கட்சியினரும் மற்றும் குடியரசுக் கட்சியினரும் தற்போது உணவு மானிய கூப்பன் திட்டத்தில் மேலும் கூடுதலாக வெட்டுக்களைச் சுமத்துவதன் மீது பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர். இந்த மாதம் எட்டப்பட்ட வரவு-செலவு திட்ட உடன்படிக்கை "ஒதுக்கீடுகளில்" நிறைய வெட்டுக்களைக் கொண்டுள்ளது. அது மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை பாதிக்கும் வகையில், பரந்த விதத்தில் பல அரசுத்துறை மற்றும் சமூக திட்டங்களில் நூறு பில்லியன் கணக்கான டாலர்களை வெட்டி உள்ளது. அது புதிய பெடரல் தொழிலாளர்கள் அவர்களின் சம்பளத்தில் இருந்து ஓய்வூதிய நிதிக்குள் செலுத்தும் தொகையை அதே விகிதத்திற்கு உயர்த்தி உள்ளது, அது டெட்ராய்ட் நகர திவால்நிலை மூலமாக டெட்ராய்ட் தொழிலாளர்களின் ஓய்வூதியங்களை கொள்ளையடித்த மாதிரியில் ஆழ்ந்த தாக்குதல்களுக்கு களம் அமைத்துள்ளது. ஒரு சிறிய நிதியியல் மேற்தட்டிற்கு முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு செல்வ வளம் எரிச்சலூட்டும் விதமாக அதிகரித்து வருகின்ற நிலையில் வறுமையின் அதிகரிப்பானது வெறுமனே பொதுவான பொருளாதார போக்குகளின் விளைவுகள் அல்ல. அது அமெரிக்க பெருநிறுவன-நிதியியல் பிரபுத்துவத்திற்கு சார்பாக ஒபாமா நிர்வாகத்தால் மற்றும் பெடரல் ரிசர்வால் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்கூட்டியே உத்தேசிக்கப்பட்ட கொள்கைகளின் விளைவாகும். நீண்டகால வேலையின்மை சலுகைகளைக் காலாவதியாக அனுமதித்த வரவு-செலவு திட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றிய இரண்டொரு நாட்களுக்குப் பின்னர், பெடரல் ரிசர்வ் அதன் வட்டிவிகித வரம்பை பூஜ்ஜிய அளவிற்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 2015 வரையில் தொடர்ந்து வைத்திருக்க போவதை அறிவித்தது. அதே நேரத்தில், அது ஒவ்வொரு மாதமும் நிதியியல் சந்தைகளுக்குள் பில்லியன் கணக்கான டாலர்களை, ஏதோ சிறிதளவிற்கு குறைத்து கொண்டு, வரவிருக்கின்ற மாதங்களில் இருந்து தொடர்ந்து பாய்ச்சுவதற்கு உறுதியளித்தது. பங்குகளின் மதிப்பை புதிய சாதனை மட்டங்களுக்கு உயர்த்தியதன் மூலமாக, வங்கிகளும் நிதியியல் அமைப்புகளும் தோற்றப்பாட்டளவில் இலவச கடன்களுக்கு வழங்கப்பட்ட இந்த உத்திரவாதத்தை வோல் ஸ்ட்ரீட் கொண்டாடியது. தொழிலாள வர்க்கத்தின் மீதான கொடூர தாக்குதலும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு பொது நிதிகளைப் பாய்ச்சுவதும் ஒரே ஆளும் வர்க்க மூலோபாயத்தின் இரண்டு பக்கங்களாகும், செல்வ வளத்தை அடியிலிருந்து மேல் மட்டத்திற்கு இன்னும் பாரியளவில் மறுபங்கீடு செய்வதே அதன் நோக்கமாகும். முதலாளித்துவ வர்க்கம் அதனால் முடிந்த மட்டிற்கு சமூக செல்வ வளத்தின் ஒவ்வொரு துளியையும் பிடுங்கி எடுப்பதற்கான அதன் பேராசைமிக்க உந்துதலில் வரம்பே இல்லாமல் இருக்கிறது. பொது கல்வி, முதியோர் மற்றும் வறியோருக்கான மருத்துவ பராமரிப்பு, ஓய்வூதியங்கள், குழந்தைத் தொழிலாளர்முறை மீதான கட்டுப்பாடுகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள், சுற்றுச்சூழல் நெறிமுறைகள், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகள், அரசு அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் என கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு சமூக தேட்டங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. என்ன கட்டவிழ்ந்து வருகின்றதென்றால் ஒருவிதமான ஒரு சமூக எதிர்புரட்சியாகும். ஒபாமா வெள்ளை மாளிகையால் தரகு வேலை செய்யப்பட்ட ஒரு "சீர்திருத்தம்"—மலிவுகட்டண மருத்துவ பராமரிப்பு சட்டம் (Affordable Care Act)—ஏற்கனவே பரந்த பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கான மருத்துவ சேவைகளைக் குறைக்க மற்றும் பங்கீடு செய்யும் ஒரு திட்டமாக அம்பலப்பட்டு போயுள்ளது, அதேவேளையில் அது காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் இலாபங்களை ஊக்குவித்துள்ளது. பெரும் செல்வ வளத்திற்கான ஆளும் மேற்தட்டின் தணியாத உந்துதலுக்காக அல்ல, உழைக்கும் மக்களின் நலன்களின் அடிப்படையில் ஒரு வேலைதிட்டத்தை செயல்படுத்தும் மற்றும் அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுக்கும் நோக்கில், தொழிலாள வர்க்கம் திருப்பி தாக்குதல் செய்ய வேண்டுமானால், அது ஒரு அரசியல்ரீதியாகவும் மற்றும் புரட்சிகரமாகவும் அணிதிரட்டப்பட வேண்டியது அவசியமாகும். முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அதன் இரண்டு பெருவர்த்தக கட்சிகளின் ஒட்டுமொத்த கட்டமைப்பிற்கு சவால்விடுப்பதன் மூலமாக மட்டுமே வேலைகள், கல்வி, மருத்துவ பராமரிப்பு, ஓய்வூதியங்கள், வீட்டுவசதி மற்றும் கலாச்சாரத்தை அணுகும் உரிமைகள் என அவர்களின் சமூக உரிமைகளைத் தொழிலாளர்களால் பாதுகாக்க முடியும். ஒரு சோசலிச வேலைத்திட்டத்தால் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய அரசியல் இயக்கம், தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைகளின் அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கமைக்க அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். |
|
|