தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா India: Frame-up trial of Maruti Suzuki auto workers continues இந்தியா: மாருதி சுஜுகி வாகனத்துறை தொழிலாளர்கள் மீதான பொய் வழக்கு விசாரணை தொடர்கிறது
By Kranti Kumara Use this version to print| Send feedback வாகன உற்பத்தியாளர், ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கம் மற்றும் பொலிஸிற்கு இடையே செய்யப்பட்ட ஒரு சூழ்ச்சியின் விளைவாக, கொலை உட்பட ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் ஒரு நீண்ட பட்டியலை முகங்கொடுத்திருக்கும் நூற்று நாற்பத்தி ஏழு மாருதி சுஜுகி தொழிலாளர்கள், டிசம்பர் 20'இல் வெள்ளியன்று அவர்களின் அடுத்த நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக உள்ளனர். பழிவாங்கப்பட்ட இந்த தொழிலாளர்கள் வடமாநிலமான ஹரியானாவில் உள்ள மிகப் பெரிய தொழிற்துறை பகுதியில் அமைந்திருக்கும் மாருதி சுஜுகி இந்தியா நிறுவனத்தின் (MSI) மானேசர் கார் அசெம்பிளி ஆலையில் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருந்தனர், அவர்கள் மிருகத்தனமாக வேலைவாங்கும் அதிகாரத்திற்கு எதிராகவும் மற்றும் மிகக் குறைந்த-ஊதிய ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்துவதற்கு எதிராகவும் ஒரு போர்குணமிக்க போராட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். ஜூலை 2012'இல் நிர்வாகத்தால் தூண்டிவிடப்பட்ட தகராறின் போது, MSI'இன் ஒரு மனிதவளத்துறை மேலாளர் கொல்லப்பட்டதன் மீது தொழிலாளர்கள் அனைவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். 2012 ஆகஸ்ட்-செப்டம்பரில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் நிறுவன அதிகாரிகளின் விருப்பத்தின் பேரிலும் மற்றும் அவர்களின் முன்னிலையிலும் போலீஸால் காட்டுமிராண்டித்தனமாக சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். (பார்க்கவும்: India: Jailed Maruti Suzuki workers subjected to torture”) நிறுவன-ஆதரவிலான முந்தைய தலையாட்டி சங்கத்திற்கு எதிராக ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சுயாதீனமான தொழிற்சங்கமான MSWU'இன் ஒட்டுமொத்த தலைவர்கள் உட்பட பன்னிரென்டு தொழிலாளர்களை தண்டனைக்கு முன்னுதாரணமாக ஆக்க குறிப்பாக விசாரணையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரின் மீதும் திட்டமிட்ட படுகொலைக்கான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதேவேளையில் மற்ற 135 தொழிலாளர்களும் படுகொலைக்குத் துணையாய் இருந்தவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். கொலை முயற்சி, கலவரத்தில் ஈடுபட்டமை, “கட்டுப்பாடின்றி ஒன்றுகூடியமை," மற்றும் அனுமதி மறுக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உட்பட இதர குற்றச்சாட்டு பட்டியலையும் அனைத்து தொழிலாளர்களும் முகங்கொடுத்துள்ளனர். ஜூலை 2012'இல் கொல்லப்பட்ட அந்த மேலாளரின் மரணம் குறித்து, இது நாள் வரை அங்கே பாரபட்சமற்ற விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை. மாறாக தொழிலாளர்களைத் துன்புறுத்தவும் மற்றும் MSWU'ஐ நசுக்கவும் மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கம் அந்த தகராறை கைப்பற்றியது. MSI நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பெயர் பட்டியல் அடிப்படையில் ஏறக்குறைய 150 தொழிலாளர்களைக் கைது செய்ததற்கு கூடுதலாக, அந்த கார் உற்பத்தியாளர் தொழிலாளர்களை கழித்தொழிப்பதற்கும் அரசாங்கம் ஆதரவளித்தது. 2012 செப்டம்பரில், 500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 2000 ஒப்பந்த பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். MSWU தலைவர்கள் அனைவரும் சிறையில் இருக்கின்ற நிலையில், தங்களின் போராட்டத்தை தொடர்ந்து நடத்த ஏனைய தொழிலாளர்கள் MSWU'இன் ஒரு தற்காலிக குழுவை அமைத்துள்ளனர். தொழிலாளர்கள் மீதான சித்திரவதைகள் குறித்து விசாரிக்க மறுத்தும், மற்றும் அவர்களுக்கு பிணையளிக்க மறுத்தும், நீதிமன்றங்கள் ஏற்கனவே தொழிலாளர்கள் மீதான அவற்றின் விரோதத்தைக் காட்டி உள்ளன, அதன்மூலமாக அவர்களின் குடும்பங்களை ஆழ்ந்த வறுமைக்குள் தள்ளி உள்ளன. ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அச்சுறுத்துவதற்காக, இந்த தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை முன்னுதாரணமாக அமைக்க காங்கிரஸ் கட்சியின் ஹரியானா அரசாங்கம், பொலிஸ் மற்றும் நீதிமன்றங்கள் தீர்க்கமாக உள்ளன, தங்கள் உரிமைக்காக போராடியது மட்டும் தான் இந்த தொழிலாளர்களின் ஒரே குற்றமாகும். தங்களின் இலாபங்களுக்காக நிறுவனங்கள் சார்ந்துள்ள கொடூரமான வேலையிட நிலைமைகள் மற்றும் குறைந்த கூலிகளுக்கு தொழிலாளர்களை கீழ்படிய செய்வதில் அரசாங்கமும், அரசும் தங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டு அனைத்தையும் செய்யும் என்பதை குர்காவ்-மானேசர் தொழிற்சாலை வளாகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு (இவற்றில் பல வெளிநாட்டுக்கு சொந்தமான பன்னாட்டு நிறுவனங்களாகும்) உத்தரவாதம் அளிக்கவே இவ்வாறு செய்யப்பட்டு வருகிறது. சான்றாக, மானேசர் MSI ஆலை தொழிலாளர்கள் ஒவ்வொரு 45 வினாடிகளுக்கும் ஒரு கார் உற்பத்தி செய்ய ஈவிரக்கமற்ற அழுத்தத்தின் கீழ் உள்ளனர். தொழிலாளர்கள் முகங்கொடுத்து வரும் கொடுமையான துன்பங்களைக் குறித்து MSWUஇன் இடைக்கால குழுவின் ஓர் உறுப்பினர் மஹாவீர், அண்மையில் தொலைபேசி மூலம் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய போது, உருக்கமாக விவரித்தார். சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலைமை குறித்து விவரிக்குமாறு கேட்ட போது அவர் கூறியதாவது: "தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆரம்பத்தில் 2012இல் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போது தொழிலாளர்கள் மீது பொலிஸ் மூன்றாம் தர சித்ரவதை நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், மிக சமீபத்தில் அது போன்ற சித்ரவதைகள் இல்லை. இருந்த போதினும், தொழிலாளர்களைச் சிறையில் அடைத்து வைத்தும் மற்றும் நெருங்கிய உறவினரின் இறுதி மரியாதையில் கலந்து கொள்வது போன்ற முக்கிய குடும்ப பிரச்சினைகளுக்கு கூட ஒரு குறைந்த கால அவகாசத்தில் வெளியே விடாமல் நிர்வாகம் அவர்களை மனரீதியாக சித்ரவதை செய்கிறது. யாரேனும் நோய்வாய்பட்டால் முறையான மருத்துவ சிகிச்சை கொடுக்கப்படுவதில்லை. மேலும், மருத்துவ சிகிச்சைக்காக கூட ஒரு குறுகிய கால பிணை பெறுவது மிக மிக சிரமமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், சிறையில் ஒரு தொழிலாளி காச நோயால் பாதிக்கப்பட்டார், அதன் பின்னர் அவருக்கு சிகிச்சைக்காக ஆறு மாதம் பிணை வழங்கப்பட்டது. இந்த ஆறு மாதங்கள் முடிய உள்ளன, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார்,” என்றார். இதற்கிடையில், மானேசர் கார் ஆலையின் உள்ளே, தொழிலாளர்களை தொடர்ந்து அச்சுறுத்த பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளதோடு, கண்மூடித்தனமான வேலையிட ஆட்சிமுறை குறைவின்றி தொடர்கிறது. மஹாவீர் விவரிக்கையில், “தொழிற்சாலையில் இப்பொழுது வேலை செய்து வரும் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை இன்னும் கடுமையாக உள்ளது," என்றார். "தொழிற்சாலையில் 24 மணி நேரமும் பொலிஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்கள் மிரட்டி பயமுறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குரலை உயர்த்தினால், சிறையில் அடைக்கப்படுவார்கள் மற்றும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது. அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பொலிஸால் மிரட்டப்பட்டுள்ளனர்.” இதுமட்டுமின்றி நிர்வாகம் யாரை "தொந்திரவு தருபவர்களாக" கருதுகிறதோ அந்த தொழிலாளர்களை ஏனைய மாநிலங்களில் உள்ள கார் ஆலைகளுக்கு மாற்றம் செய்வதன் மூலமாக தொழிலாளர்களின் போர்குணத்தை உடைக்க முயன்றுள்ளது. மஹாவீர் கூறுகையில், "முந்தைய போராட்டங்களோடு சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்காக, அவர்கள் ஆறு மாதங்களுக்கு இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஒரிசா மற்றும் பீகார் போன்ற ஏனைய பல மாநிலங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்,” என்றார். மாருதி சுஜுகி தொழிலாளர்கள் மீதான வேட்டைக்கு ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் அதன் தொழிற்சங்க கருவிகளும் உடந்தையாய் இருந்து வருகின்றன. மானேசர்-குர்காவ் தொழிற்துறை வளாகத்தில் பெரியளவில் இருப்பைக் கொண்டிருந்த போதினும், சிபிஐ (எம்) மற்றும் சிபிஐ'இன் தொழிற்சங்க அங்கங்களான முறையே CITU மற்றும் AITUC, MSIஇல் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் அவற்றின் சக கூட்டாளிகளின் ஆதரவுக்காக அல்ல, மாறாக அந்த ஒட்டுமொத்த பகுதியிலும் நிலவும் அடிமை-உழைப்பு நிலைமைகளுக்கு எதிராக அவை தொழிலாளர்களை ஒன்றுதிரட்ட ஒரு விரலைக் கூட உயர்த்தவில்லை. இத்தகைய உபயோகமற்ற மற்றும் வெற்று வார்த்தையில் ஆதரவு காட்டும் தொழிற்சங்க கருவிகளை மஹாவீர் விமர்சித்தார்: “குர்காவ் மற்றும் கெய்தால் போன்ற அருகிலுள்ள நகரங்கள் உட்பட ஹரியானாவில் CITU மற்றும் AITUC நிறைய கிளைகளைக் கொண்டுள்ளன. ஆனால் இதுவரையில் ஆதரவளிக்கிறோம் என்ற வெற்று வாக்குறுதிகளைத் தவிர, நிதியுதவி மூலமாகவோ அல்லது மனிதவள உதவிகளாகவோ அவர்கள் உதவவில்லை. பணவீக்கம் மற்றும் இன்னும் இதர பிறவற்றைக் குறித்து அவர்கள் கோரிக்கைகளை உயர்த்தி உள்ளனர், ஆனால் பாதிக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்கள் குறித்து முற்றிலும் அவர்கள் எந்த கோரிக்கையையும் எழுப்பவில்லை. கெய்தாலில் உள்ள CITUஇன் உள்ளூர் கிளை ஒருமுறை சில சிறிய பேரணிகளை நடத்தியது, மாருதி சுஜூகி தொழிலாளர்களை விடுவிக்க வேண்டுமென்பதும் அதிலிருந்த கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது, ஆனால் அது அவ்வளவு தான், வேறெந்த நிதி அல்லது மனிதவள உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை,” என்றார். ஸ்ராலினிச சங்கங்கள் மீது விமர்சனத்தைக் கொண்டிருந்த போதினும், அவற்றின் மற்றும் அதேபோல பல்வேறு மாவோயிஸ்ட் மற்றும் போலி-இடது குழுக்களின் அரசியல் செல்வாக்கின் கீழ் MSWU காங்கிரஸ் அரசாங்கம் மற்றும் நீதிமன்றங்களிடம் முறையீடுகளைச் செய்ய—அதாவது அவர்களைப் பழிவாங்குவதில் கருவியாக இருந்துள்ள முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் அரசு அமைப்புகளிடமே முறையிட—அவற்றின் சக்திகளை ஒன்று குவித்துள்ளன. MSI தொழிலாளர்களாலும் மற்றும் அவர்களின் குடும்பங்களாலும் தைரியமும் விடாபிடிமானமும் காட்டப்பட்டிருந்தாலும் கூட, இந்த தவறான முன்னோக்கு MSI தொழிலாளர்களை ஒரு அரசியல் முட்டுச்சந்திற்குள் இட்டு சென்றுள்ளது. அக்டோபர் 27இல் அது மிக வெளிப்படையாக இருந்தது, அப்போது MSWUஇன் இடைக்கால குழுவால் மாநில தொழில்துறை மந்திரியின் வீட்டிற்கு ஒரு பேரணி செல்ல அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததில் வெகு வெகு குறைவான மக்களே கலந்து கொண்டனர். எவ்வாறிருந்த போதினும் அக்டோபர் 27 நடவடிக்கை பிசுபிசுத்து போனதை பொலிஸின் நடவடிக்கையால் அவ்வாறு ஆனதாக கூறி மஹாவீர் விவரித்தார், இவ்விதத்தில் MSWUஇன் இடைக்கால குழு அரசாங்கம்-அரசு-நிறுவனத்தின் நயவஞ்சக கூட்டில் இருந்தும் மற்றும் ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் அலட்சியத்திலிருந்தும் இன்னும் நிறைய அரசியல் படிப்பினைகளைப் பெற வேண்டி இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. உலக முதலாளித்துவத்திற்கு இந்தியாவை ஒரு மலிவு-உழைப்பு உற்பத்தியாளராக மாற்றும் மற்றும் அவர்களின் அவலநிலைமைக்கான ஆளும் வர்க்கத்தின் உந்துதலுக்கு அவை தான் ஆதரவளித்துள்ளன. மஹாவீர் கூறினார், “முந்தைய ஒரு போராட்ட சம்பவத்தில் நடத்தப்பட்ட தடியடி பிரயோகத்திற்கு எதிராக மற்றும் தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டதற்கு எதிராக அந்த அக்டோபர் 27 போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டம் பொய் வழக்குகளை நீக்க கோரிக்கை விடுப்பதற்காக நடத்தப்பட்டது. தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் ஏனைய சில தொழிற்சங்க ஆதரவாளர்களையும் கொண்டு ஒரு பெரிய போராட்டம் நடத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம், ஆனால் பொலிஸ் மற்றும் உள்ளூர் நிர்வாகம் போராட்ட தேதிக்கு முன்னதாக ஒடுக்குமுறை சட்டம் பிரிவு 144ஐ கொண்டு பிடியை இறுக்கிவிட்டது. அதன் விளைவாக, உண்மையில் திட்டமிட்ட விதத்தில் எங்களால் போராட்டத்தை நடத்த முடியாமல் போனது,” என்றார். அவர்களின் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்து செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள் என்று கேட்டபோது, மஹாவீர் பின்வருமாறு பதிலளித்தார்: “தொழிலாளர்கள் மீதான அநீதிக்கு எதிராக போராடவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஹரியானாவின் நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக ஒரு 'பாத யாத்திரை' (நடைபயணம்) செல்வது உட்பட பல்வேறு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளோம். ஹரியானாவின் வெவ்வேறு நகரங்களில் அடிக்கடி பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கூட மிக விரைவில் பேரணிகள் நடத்த முயற்சிப்போம். (காங்கிரஸ் தலைமையிலான) மத்திய அரசிடமிருந்து நீதி கோரி டில்லிக்கு நடைபயணம் செல்ல உள்ளோம்,” என்றார். WSWS மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்தியதைப் போல, இந்தியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர் வர்க்கத்தின் தொழில்துறைரீதியிலான மற்றும் ஒரு சுயாதீனமான அரசியல் ஐக்கியத்திற்காக அவர்களின் போராட்டத்தை நிலைநிறுத்துவது மட்டுமே மாருதி சுஜூகி தொழிலாளர்கள் முன்னால் இருக்கும் ஒரே வழியாக உள்ளது. கழித்தொழிக்கப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் மற்றும் அவர்களின் மீது ஜோடிக்கப்பட்டவைகளுக்கு எதிரான போராட்டமானது இந்தியா முழுவதிலும் உள்ள ஒப்பந்த தொழிலாளர் முறை, வேலைகளை வேகப்படுத்துதல், மற்றும் கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிரான ஒரு தொழிலாள வர்க்க எதிர்-தாக்குதலை அபிவிருத்தி செய்வதோடு இணைக்கப்பட வேண்டும், மேலும் தொழிலாளர்களின் உரிமைகள் தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான ஓர் அரசியல் போராட்டத்தில் மற்றும் ஒட்டுமொத்த இலாப அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமே பாதுகாக்கப்பட முடியும் என்ற புரிதலால் உயிரூட்டப்பட வேண்டும். |
|
|