World Socialist Web Site www.wsws.org |
European Left selects Tsipras as lead candidate in European elections ஐரோப்பிய இடது சிப்ரஸை ஐரோப்பிய தேர்தல்களில் முன்னணி வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறது
By Christoph Dreier ஐரோப்பிய இடதின் (European Left -EL) நான்காம் மாநாடு மாட்ரிட்டில் கடந்த வார இறுதியில் நடந்தது. கட்சிகளின் கூட்டணி அடுத்த ஆண்டு மே மாத ஐரோப்பிய தேர்தல்களுக்கு ஒரு கூட்டுத் திட்டத்தை விவாதித்து, சிரிசாவின் (கிரேக்க தீவிர இடது கூட்டணி) தலைவரான அலெக்சிஸ் சிப்ரஸை அதன் முக்கிய வேட்பாளராகவும் தேர்ந்தெடுத்துள்ளது. ஐரோப்பிய இடதினை உருவாக்கும் முயற்சியில் உள்ள 25 கட்சிகள் நீண்டகாலமாக முதலாளித்துவ ஒழுங்கை பாதுகாப்பதில் நீண்ட பாரம்பரியத்தை கொண்டவை. அநேகமாக இவை அனைத்தும் ஸ்ராலினிச வேர்களைக் கொண்டவை. கிழக்கு ஐரோப்பாவில் அவை முன்னாள் அரசாங்கக் கட்சிகளிடம் இருந்து வெளிப்பட்டவை; அவை தொழிலாள வர்க்கத்தை பல தசாப்தங்களாக அடக்கி வைத்தனர், பின்னர் முதலாளித்துவத்தை மீண்டும் அறிமுகப்படுத்தினர். மேற்கில் அவை இரண்டாம் உலகப்போரில் இருந்து ஒவ்வொரு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்முயற்சியையும் காட்டிக் கொடுத்தனர். சமூகத் தாக்குதல்கள் போர் ஆகியவற்றிற்கு காரணமான பல அரசாங்கங்களில் இருந்தனர் இன்னும் உள்ளனர். முதலாளித்துவ ஒழுங்கு மற்றும் அரசாங்கத்துடன் இவை ஐரோப்பிய ஒன்றியத்தையும் (EU) அதன் நிறுவனங்களையும் பாதுகாத்தனர். .சிப்ரஸை தேர்ந்தெடுத்ததின் மூலம் ஐரோப்பிய இடதுகள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் குறிப்பிடத்தக்க வகையில் நட்பு கொண்டுள்ள ஒருவரைத் தேர்ந்தெடுத்துள்ளது; அவர் அடுத்த ஆண்டு கிரேக்க அரசாங்கத்தின் தலைவராக விரும்புகிறார். அவ்வாறு நடந்தால், கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும், அரசாங்க கடனை கொள்கையளவில் ஏற்கும் என்று அவர் அறிவித்துள்ளார். ஐரோப்பிய பிணை எடுப்பின் நிபந்தனைகளை அவர் நிராகரிக்க விரும்பவில்லை; அவையோ முன்னோடியில்லாத அளவிற்கு கிரேக்கத்தில் சமூகப் பேரழிவை தூண்டியுள்ளன; அவற்றை மறு பேச்சுக்களுக்கு உட்படுத்தத்தான் விரும்புகிறார். சிப்ரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன ஆணைகளைச் செயல்படுத்தும் தன் உறுதிப்பாட்டை தெளிவாக்கியுள்ளார்; இது, அவரது நியமனத்தைத் தொடர்ந்து Euractive வலைத் தளத்திற்கு கொடுத்த பேட்டியில் உள்ளது. அதில் அவர் ஐரோப்பிய சமூக ஜனநாயகவாத கட்சிகளுக்கு ஒத்துழைக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார். இக்கட்சிகள் கன்சர்வேடிவ்களுடன் தங்கள் கூட்டணிகளைத் தொடரலாமா என்பதை முடிவெடுக்க வேண்டும்; அல்லது அவை “அரசியல் திசையை மாற்றி, தீவிர இடதுடன் கூட்டிற்கு செயல்பட வேண்டுமா” என்று சிந்திக்க வேண்டும். சமூக ஜனநாயகவாதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர். கிரேக்கத்தில், சமூக ஜனநாயக PASOK மக்கள் மீது கடுமையான ஆணைகளைத் தீவிர மிருகத்தனத்துடன் சுமத்தியுள்ளது. ஜேர்மனியில் சமூக ஜனநாயகவாதிகள் (SPD) அங்கேலா மேர்க்கெலின் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்துடன் (CDU) கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது; அது அப்பட்டமாக “வரவு-வெலவுத் திட்ட ஒருங்கிணைப்பு பாதுகாக்கப்பட வேண்டும்” என்று கூறுகிறது. இக்கட்சிகளுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கையில், சிப்ரஸ் அவர் நிலைப்பாடு குறித்து ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக்கியுள்ளார்: ஐரோப்பிய ஒன்றிய முகாமில், வங்கிகள், பெருநிறுவனங்களில் –இவை ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்களை வறுமையில் தள்ளுகின்றன. இக்கொள்கைகளை ஓரளவிற்கு மூடி மறைக்க மாநாடு முற்பட்டது. பெரும்பாலான விவாதங்களும் தீர்மானங்களும் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் வடிவமைப்பிற்குள் அடையப்படமுடியது என்பதை அறிந்தே விவாதித்தனர்; எந்த நாட்டு அரசாங்கத்தில் அவர்கள் நுழைந்தாலும் அவை விரைவில் கைவிடப்படும். மாநாட்டில் தன்னுடைய உரையில், சிப்ரஸ் ஐரோப்பிய ஒன்றியத்தை இன்னும் “மனிதாபிமானமாக்கலாம்” என்ற சீர்திருத்தங்கள் குறித்துப் பல கருத்துக்களை பட்டியல் இட்டார். இவற்றில் வணிக, மூலதன வங்கிகள் பிரிவினை, ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து உறுப்பு நாடுகளுக்கு நேரடிக்கடன்களுக்கு வசதி, மற்றும் வரி உறைவிடங்களை அகற்றுதல் ஆகியவை அடங்கும். சிப்ரஸ் தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு “ஐரோப்பியக் கடன் மாநாட்டில்” கடன்களை குறித்து எழுத விரும்புகிறார்; இதையொட்டி கடன்களில் பாக்கி இருப்பவை கொடுக்கப்பட வேண்டியது உறுதிசெய்யப்படும். பிரதிநிதிகள் ஏற்றுள்ள அரங்கு இதேபோன்ற கருத்துக்களை, இன்னும் தெளிவற்றமுறையில் கொண்டுள்ளது. கோரிக்கைகளில் “குடிமக்கள் தணிக்கை” கடன் பற்றியதும், “முறையற்ற கடன்”, “அது மறுகட்டமைக்கப்படல்” அகற்றப்பட வேண்டும் என்பதும் அடங்கும். “ஜனநாயகக் கூறுபாடுகள் நிதி மீது கட்டுப்பாடு கொள்வது மறுபடியும் நிறுவப்பட வேண்டும்” என்று அது அறிவிக்கிறது. இக்கோரிக்கைகள் உட்குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதன் பிணை எடுப்பு ஆட்சிமுறையையும் அங்கீகரிக்கின்றன. ஐரோப்பிய இடதுகள் பிரஸ்ஸ்ல்ஸின் சிக்கன ஆணைகளை முறிப்பது குறித்து கவலைப்படவில்லை, மாறாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்களை சீர்திருத்தத்திற்கு உரியவை என அளிப்பதிலும் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளுக்கு குறைவான விரோதப் போக்கு கொள்ளும் திறனை உடையதாகவும் அளிக்க முற்படுகிறது. உண்மையில், கண்டம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மைத் தன்மையை அனுபவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் அயர்லாந்து, கிரேக்கம் இன்னும் பிற தெற்கு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வரலாற்றுத் தன்மை வாய்ந்த சமூகத் தாக்குதல்களை செய்துள்ளது. கிரேக்கத்தில் ஊதியங்கள் 40% குறைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வேலைகள் அழிக்கப்பட்டன. ஐரோப்பா முழுவதும், ஐரோப்பிய ஒன்றியம் கட்டுப்பாட்டை அகற்றுதல், தனியார்மயமாக்குதல், குறந்த ஊதியங்களை செயல்படுத்துதல் இவற்றிற்குத்தான் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பாவிற்குள் தேசியப் பூசல்களை குறைக்கவில்லை மாறாக தீவிரப்படுத்தியுள்ளது, பாசிச சக்திகள் வளர ஊக்கம் கொடுத்துள்ளது. ஐரோப்பிய சக்திகள் கடந்த 20 ஆண்டுகளில் நேட்டோ நடத்திய ஒவ்வொரு இராணுவ செயலிலும் பங்கு பெற்றன. ஆரம்பத்தில் இருந்தே ஐரோப்பிய ஒன்றியமும் அதற்கு முந்தைய அமைப்புக்களும் கண்டத்தின் மிகச்சக்தி வாய்ந்த முதலாளித்துவ நலன்களின் கருவிகளாகத்தான் இருந்தன. இச்சான்றின் பின்னணியில் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் குறித்த மக்களின் பெருகிய சீற்றமும் ஐரோப்பிய இடதை ஐரோப்பிய ஒன்றியத்தை மூடிமறைப்பதை பெருகியமுறையில் கடினமாக்குகின்றன. இச்சமூக எதிர்ப்பை கட்டுப்படுத்த, மாநாடு ஐரோப்பிய ஒன்றியத்தை இன்னும் வலுவாக முன்பைவிட விமர்சிக்க முற்பட்டது. அரங்கில் பிரதிநிதிகள் “அரசியல் ஆவணம்” ஒன்றை ஏற்றனர்; அது ஆனால் தனிப்பட்ட கட்சிகளை கட்டுப்படுத்தாது. உதாரணமாக இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார-நிறுவன கட்டுமானம் பெரிய முதலாளித்துவத்தின் நலன்களை பிரத்தியேமாக பாதுகாக்கத்தான் தோற்றுவிக்கப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளனர். எனவே “ஒரு புதிய ஐரோப்பா நிறுவப்படுதல் தேவை”, “அதன் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் அமைப்புக்கள்” புதிதாக வரையறுக்கப்பட வேண்டும். இறுதியில் அது “முதலாளித்துவம் மனிதாபிமான மயப்படுத்தப்பட முடியாது” என்றும் கூறுகிறது. ஆனால் இதில் இருந்து எந்த முடிவும் எடுக்கப்பட முடியாது. “அரசியல் ஆவணம்” ஐரோப்பிய ஒன்றியம் கலைத்தல் வேண்டும் என்று கூறவில்லை; மாறாக இன்னும் கூடுதலான கடன் மாநாடுகள், ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து வேறுபட்ட கொள்கை உடையதைக் கூட்ட வேண்டும் என்றுதான் சொல்கின்றன. வெளியுறவுக் கொள்கையை பொறுத்தவரை வருங்காலப்போர் ஒன்றிற்குத் தூண்டுதல் உள்ளது. ஆவணம் கூறுகிறது: “ஐரோப்பிய ஒன்றியம் சுய உறுதிப்பாட்டிற்கு பாடுபடும் மக்கள் அனைவருக்கும் வலுவான நட்பு அமைப்பு ஆகும்.” பிரிக்கப்பட்ட சைப்ரஸ் உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது; இதை ஐரோப்பிய இடது கிரேக்க முதலாளித்துவத்தின்கீழ் ஒன்றுபடுத்த விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றியம் துருக்கிமீது அழுத்தம் கொடுக்க வேண்டும், 1974ல் இருந்து அதன் வடக்கை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்று அரசியல் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச அளவில் சமாதானத்தை “சர்வதேச சட்டப்படி நடப்பதை உறுதிபடுத்துவதின் மூலம்தான்” அடையமுடியும். சமீப ஆண்டுகளில் நடந்த ஒவ்வொரு ஏகாதிபத்தியப் போரும், ஆப்கானிஸ்தானத்தில் இருந்து ஈராக், லிபியா, சிரியா வரை அத்தகைய வாதங்களால் நியாயப்படுத்தப்படுகின்றன. பெயர் எப்படி இருந்தாலும், ஐரோப்பிய இடது என்பது வலது சாரிக் கட்சிகளின் ஒரு கூட்டாகும், நீண்டகால வரலாறான தொழிலாளர்களின் விழைவுகளை அடக்கி வைத்தலைக் கொண்டுள்ளது. கிழக்கு ஐரோப்பிய உறுப்பு அமைப்புக்கள் – SDS என்னும் செக் ஜனநாயகக் குடியரசுக் கட்சி, PAS எனப்படும் ருமேனிய சோசலிச உடன்பாட்டுக்கட்சி, PCRM எனப்படும் மோல்டோவா குடியரசின் கமயூனிஸ்ட் கட்சி – அனைத்தும் ஸ்ராலினிச அரசாங்கக் கட்சிகளில் தங்கள் மூலத்தை கொண்டிருந்தன. இன்று அவை மிக வலதுசாரிக் கூறுபாடுகளுடன் பிணைவதில் மன உளைச்சல் ஏதும் காட்டவில்லை. WSWS நிருபர் ஒருவர் PAS தலைவரிடம், பாசிஸ்ட்டுக்களுடன் அவர்கள் கூட்டு ஆர்ப்பாட்டங்களை பற்றிக் கேட்டபோது அவர், “எங்களைப் போலவே அவர்களும் நினைக்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார். மேற்கு ஐரோப்பாவில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) பல தசாப்தங்கள் முதலாளித்துவ அரசாங்கத்தை ஆதரித்த நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது. அவர்கள் 1936 பொது வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்தனர், 1945ல் டு கோல் அரசாங்கத்தில் சேர்ந்ததோடு எதிர்ப்பாளர்களின் ஆயுதங்களையும் களைய வைத்தனர், 1968ல் பொது வேலைநிறுத்தத்தை விற்றனர், இறுதியில் மித்திரோன், ஜோஸ்பன் அரசாங்கங்களில் விசுவாசப் பங்காளிகளாக பணியாற்றினர். கிரேக்கத்தின் சிரிசா ஸ்ராலினிசத்தின் யூரோ கம்யூனிச பிரிவில் இருந்து வெளிப்பட்டது. 1992ல் அவர்கள் மாஸ்ட்ரிச் உடன்பாட்டிற்கு ஆதரவு கொடுத்தனர்; அப்பொழுது முதல் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆர்வத்துடன் வளர்த்துள்ளனர். டேனிஷ் சிவப்பு-பசுமைக் கூட்டணி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 70,000 ஆசிரியர்களை வெளியேற்றிய Thorning-Schmidt அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கிறது. இந்த போக்குகள் அனைத்தும் ஜேர்மனிய இடது கட்சியில் ஒன்றுபட்டுள்ளன. அவை பங்கு பெற்றுள்ள மாநில அரசாங்கங்களில் இடது கட்சி அதன் மிகத்தீவிர இரக்கமற்ற தன்மையை தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகனை தாக்குவதின் மீது காட்டுவதில் தேர்ந்துள்ளது. கடந்த வார இறுதி மாநாடு, இடது சொற்றொடர்கள் மூலம் இத்தகைய பிற்போக்குத்தன அரசியலை மறைக்கவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புதுப்பிக்கப்பட்ட தன்மையை வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தது. |
|